நேற்று தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல்விருது விழா வழக்கம்போல நன்றாக நடந்தது. பழைய முகங்கள் சில புதிய முகங்கள் பல என்று காண முடிந்தது. ஓரிருவரைத் தவிர ஏனையோருக்கு நேரில் வந்து பரிசு பெறும் வாய்ப்பு கைகூடியிருக்கவில்லை.

(1)
நீச்சல்காரன் என்ற புனைபெயருடைய ராஜாராமன் என்ற இளைஞர் தமிழ்க் கணிமை விருது பெற்று தந்த சொற்பொழிவு மிகவும் இயல்பாக இருந்தது. ஒரு பள்ளிமாணவன் ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்வதுபோன்றதொரு தொனியில் இருந்தது. எனக்குப் பிடித்திருந்தது. முகநூலிலும் https://www.facebook.com/neechalkaran?fref=ts வலைப்பூவிலும் http://www.neechalkaran.com/ இருக்கிறார்.

தமிழில் இவர் போன்றவர்களின் வளர்ச்சியே மிக மிக அவசியம். அந்தவகையில் நான் இவரையும் இவர்போன்று உருவாகின்ற அனைவரையும் முதன்மையானவர்களாக நிறுத்தி வாழ்த்துகிறேன்.

இவ்வேளையில் என் நினைவில் முத்து நெடுமாறன் வந்துபோகிறார். உலகின் முதல் கூகுள் தமிழ்க் குழுமமான என் அன்புடன் குழுமம் வந்துபோகிறது. 1999 முதலான என் கணித்தமிழ் வந்துபோகிறது. இன்னும் ஏராளமானோர் வந்துபோகிறார்கள். நான் அதனுள்ளேதான் வாழ்ந்துகிடக்கிறேன்.

(2)
தமிழ் விக்கிப்பீடியா சேவைக்காக மயூரநாதனுக்கு இயல்விருது வழங்கப்பட்டது. அவரின் உரையை அவர் சற்றே இறுக்கமானதாய் அவைக்குத் தேவையான அரியவற்றை சட்டென வழங்குவதாய் இருந்திருக்கலாம். அவரிடம் நிறைய செய்திகள் இருந்தும் வழங்குவதில் பயிற்சி இல்லை என்றே தோன்றியது.

தமிழில் உறுதி செய்யப்படவியலாத இப்படியான விக்கிப்பீடியா இடுகைகள் அவசியம்தான். பல்வகைத் துறை அறிஞர் கூட்டம் இதன் தரத்தில் நின்று உரம்சேர்க்க வேண்டி ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

(3)
அமெரிக்காவில் மருத்துவராய் நாற்பதாண்டுகளுக்கும் மேல் வாழும் டாக்டர் திருஞானசம்பந்தம் என்பவரின் பேச்சு சுவாரசியம் மிகுந்ததாகவும் பலன் நிரம்பியதாகவும் இருந்தது. ஹார்ட்வர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்குத் தேவையான 6 மில்லியன் டாலர்களில் அரை மில்லியனை தனியே இவர் மட்டுமே கொடுத்தவர். இவர் நண்பர் இன்னொரு அரை மில்லியனைக் கொடுத்திருக்கிறார்.

தமிழுக்கு உயர் பீடங்கள் அவசியம்தான். இதன் பலன் எந்த வகையில் தமிழின் முன்னேற்றத்திற்கு வழியமைத்துத் தரும் என்பதைப் பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.

(4)
முனைவர் மு. இளங்கோவனின் சிறப்புரை நன்றாக இருந்தது. கிடைத்த சில நிமிடங்களில் தொல்காப்பியனைத் தொட்டுக் காட்டினார். கணிமைப் பரிசுபெற்ற ராஜாராம் போன்றவர்களுக்கு உந்துதலாய் இருப்பதாக ராஜாராமே சொல்லிப் போனது அவருக்கான பெரிய பாராட்டு. அவர் தொல்காப்பியன் என்ற ஒருமுனை தொட்டதோடு நில்லாமல் இன்றைய கணினி முனையையும் தொட்டுப் பேசி இருக்கலாம் என்று தோன்றியது. பேசக்கூடியவரிடம் எதிர்பார்ப்பது பிழையில்லையே.

இவர்போன்றவர்கள், பழைமைக்கும் புதுமைக்கும் பாலமாக, தமிழிக்கு நிறையபேர் வந்து சேரவேண்டும். தமிழ் பழமையோடு நின்றுவிடக்கூடாது, புதுமை புதுமை என்று நிறமிழந்தும் போய்விடக்கூடாது

(5)
முனைவர் ப்ரெந்தா பெக் சிறப்பு விருதினைப் பெற்று உரையாற்றினார். பலரும் கனடிய உடையில் வந்திருக்க இவரோ அழகாகச் சேலை கட்டி வெள்ளையோ வெள்ளை நிறத்தில் உள்ள தமிழ்ப்பெண்ணாகவே வந்திருந்தார். சில வரிகளில் தெளிவாகப் பேசினார். தமிழுக்கு இவர் போன்றவர்கள் வருவது இன்று நேற்றில்லை. தமிழ் அச்சில் வருவதற்கும், அகராதி தொகுத்ததற்கும் என்று நிறைய பணிகளை அயல்நாட்டவர் தமிழ்மீது பற்றுகொண்டு செய்திருக்கிறார்கள். சட்டென்று எனக்கு வீரமாமுனிவர் நினைவில் வருகிறார்.

இவர் போன்றவர்கள் இன்னும் இன்னும் ஏராளமாகத் தமிழுக்கு வந்த வண்ணம் இருக்க வேண்டும். அது தமிழ் வளர்ச்சிக்கு முக்கியமானதாய் இருக்கும்

(6)
தமிழிலிருந்து ஆங்கிலம் (கல்யாண் ராமன்) ஆங்கிலத்திலிருந்து தமிழ் (வி. டி. ரத்னம்) என்று மொழிமாற்றம் செய்தவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

மொழிமாற்றச் சேவைகள் தமிழ் வளர்ச்சிக்கான மிகப் பெரிய தூண்கள். தமிழை ஆங்கிலத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் வரும்போதுதான் வெட்டிப் படைப்புகள் ஓய்ந்து உச்சப்படைப்புகள் ஒளிரத் தொடங்கும்.

(7)
இந்த அவையில் மூத்தப் பெரும் படைப்பாளி அசோகமித்திரன் அவர்களுக்கு விருது வழங்கியது சிறப்பு. தமிழை உலகத் தரத்துக்கு உயர்த்திப் பிடித்து எழுதியவர்களுள் இவரும் ஒருவர்.

தமிழுக்கு இப்படி பெயர் சொல்லும் பிள்ளைகள் நிறைய வரவேண்டும்.

(8)
இன்னும் சிலருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்

(9)
குறைகள் ஏதும் இருந்தனவா என்று யாரும் கேட்காதீர்கள். குறைகள் இல்லாமல் இல்லை ஆனால் நிறைகளையே பேசுவோமே என்று உள்ளம் சொல்கிறது.

இன்னும் எத்தனை எத்தனைபேர் தமிழ்த் தொண்டில் பிறந்ததுமுதலே இருக்கிறார். ஏன் பொதுநிலையில் நின்று அவர்கள் பக்கம் எல்லாம் இலக்கியத் தோட்டம் பூக்களைச் சொரிவதில்லை என்று எனக்குப் புரிவதே இல்லை. குறுகிய வட்டத்திலேயே சுழல்வதாகவே நான் காண்கிறேன். அது என் அறியாமையாகக் கூட இருக்கலாம். எனக்கு அறிவுரை சொல்ல எவரேனும் ஒரு தகுதியானவர் என்னிடம் விரைவில் வருவார் என்று நம்பிக்கையோடு நான் இதை நிறைவு செய்கிறேன்

(10)
அதற்குமுன் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் அச்சாணி எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களுக்கு என் வழமை மாறாத பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

No comments: