நான் என்ன செய்ய வேண்டும் நீங்களே சொல்லுங்கள்?

என்னிடம் ஒரு கனித்தோட்டம் இருந்தது. சுவைமிகுந்த அந்தக் கனித்தோட்டத்தில் எலித்தொல்லை மெல்ல மெல்ல அதிகரித்து வந்தது. கிட்டத்தட்ட எல்லா கனிகளையும் எலிகள் குதறியெடுத்து எதற்குமே ஆகாதவைகளாக்கின.
என்ன செய்வதென்றே தெரியாமல் திண்டாடியபோது, ஒரு பெரியவர் ஒரு வேட்டைநாயை கொண்டுவந்து என் கனித் தோட்டத்தில் காவலுக்கு விட்டார்.

வேட்டைநாயின் வலிமையை உரக்கச் சொல்லி எலிகளுக்கு மிகுதியாய் பயங்காட்டினார். எலியின் அத்தனைக் காதுகளிலும் ஓங்கி ஒலிக்கும்படி கட்டளைகளாகவே சொன்னார். அவ்வளவுதான் எலிகள் ஓடி ஒளிந்துவிட்டன.
தோட்டமும், கனிகளும், இலைகளும், பாத்திகளும் எழில் கொள்ளத் தொடங்கின. கனிகளின் வாசம் நாசியை நிறைத்தது. அந்த ஊரே கனிகளைப் புசித்து செழித்து வாழ்ந்தது.
ஓடிப் பதுங்கிய எலிகள் மெல்ல மெல்ல எட்டிப் பார்த்தன. அட இந்த ஒற்றை நாய் நம்மை என்ன செய்துவிடும் என்ற தைரியம் கொண்டன. ஆனாலும் என்மீதும் பெரியவர்மீதும் வேட்டைநாயின் மீதும் அனைத்துக் காவல் கட்டுப்பாடுகளின் மீதும் உள்ள பயம் முழுவதும் போய்விடவில்லை எலிகளுக்கு.
அப்போதுதான், ரகசியமாய் அந்த வெறிகொண்ட எலிகள் சில கனிகளை கடித்துவிட்டு ஓடிப்போய் பதுங்கிக்கொண்டன. வேட்டை நாய்தான் அந்தக் கனிகளைக் கடித்ததுபோன்ற பெரிய பல் அச்சுகளை உருவாக்கிவிட்டு மறைந்துகொண்டன.
இப்போது நாயின்மீது பழிவந்தது. வந்தவர் சென்றவர் நின்றவர்கள் எல்லாம் இது நாய் கடித்த அச்சுபோல்தானே இருக்கிறது என்று ஆய்வே செய்து வெளியிட்டனர்.

நாயைக் கண்டிக்கத் தொடங்கினர். நாயை வெறுக்கத் தொடங்கினர். நாயைக் கொன்றுபோடலாம் என்றுகூட பரிந்துரைத்தனர்.
இவை அனைத்தையும் கண்ட சில கனிமரங்கள் மட்டும் கண்ணீர் வடித்தன. செய்வதறியாது நின்றன. ஒருநாள் நடு இரவில் இந்தச் சூழலைச் சாதகமாக்கி எலிகள் பெருங்கூட்டமாய் வந்து நாயை நடக்கவும் முடியாத அளவிற்கு கடித்துக் குதறி முழுவதும் ஊனப்படுத்திவிட்டன.
இப்போது கனிகளெல்லாம் எலிகளின் கொண்டாத்தில். கனிமரங்களின் கண்ணீர் எவர் மனங்களையும் தொடாத நிலையில்.

நானோ திகைத்து நின்றேன். ஓ இந்த எலிகள்.... என்று இமைகளே இல்லாமல் போகும் அளவிற்கு விழிகளை விரித்து அப்படியே உட்கார்ந்துவிட்டேன்.
இனி ஒரு வேட்டைநாயல்ல எத்தனை வேட்டைநாய்கள் வந்தாலும் என்ன செய்வதென்று எலிகளுக்குத் தெரியும். எலிகளுக்கு உதவ பருந்துகள் உண்டு கழுகுகளும் உண்டு.

இனி பெருத்துப் பெருத்து அனைத்தையும் அழித்து முடிக்கப்போகும் எலிகளால் ஆனதே இந்த உலகு என்பதில் யாருக்கும் எவருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் வேண்டாம்!

வக்கிரம் பிடித்த மனிதர்கள் தீய செயல்களில் ஈடுபட்டு மனித வாழ்க்கையை அழிக்க, அறம் கொண்டு மதங்கள் இறைவனின் பெயரால் வக்கிரங்களை அழிக்கப் போராட, முதலில் பதுங்கிய எலிகள் பின் சூழ்ச்சிகள் செய்து படைதிரட்டிப் பாய்ந்து அறம் கூறும் மதங்களையே நஞ்செனக் கூறி வக்கிரத்தை உக்கிரமாக்க, உலகே அறமிலாச் சேற்றில் மூழ்கிக் கிடக்கும் கொடும் நாசக் காலம் இது.

Comments

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்