நான் மதவாதி
என்றான் இவன்
நான் பகுத்தறிவு வாதி
என்றான் அவன்
எனக்கோ
இரண்டுமே புரியவில்லை

மதவாதி என்றால் யார்?

ஒரு மதத்தில் பிறந்ததால் அதை ஏற்று, வேறு மதத்தினரைக் கண்டாலே சிவந்து சிறுத்து வெடித்து வெறுப்பவன் பெயர்தான் மதவாதியா?

என்றால் அவன் மதவாதி அல்ல மத வியாதி.
ஆம் அவனுக்குப் பீடித்திருப்பது மத வியாதிதான்

அந்த வியாதி தொற்றிப் பரவக்கூடியது. பரவிப் பரவி உலகையே அழித்து முடித்துவிடும் கொடூர வியாதி அது.

பகுத்தறிவு வாதி என்றால் யார்?

பகுத்தறியாதவன் மனிதனா? ஆகவே மனிதன் என்றாலே பகுத்தறிபவன் என்றுதான் பொருள். அதனால்தான் மனிதர்களுக்கு ஆறு அறிவு சொல்லப்படுகிறது. அந்த அறிவில் ஏற்றம் இறக்கலாம் இருக்கலாம் ஆனால் பகுத்து அறியவே தெரியாத மனிதன் ஒருவன் இருக்கவே முடியாது.

ஆகவே பகுத்தறியாதவன் மனிதனா? அப்படி மனிதனே அல்லாத மிருகத்தைப் பற்றி புழுக்களைப் பற்றி கற்களைப்பற்றி நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது?

அந்தக் காட்டுமிராண்டியால் அல்லது அறிவிலியால் ஆகும், ஆகப்போகும் துன்பங்கள் துயரங்கள் வாழ்க்கை என்ற அற்புதப் பயிரை அழித்துத்தான் முடிக்குமில்லையா?

நீ எந்த மதத்தில் வேண்டுமானலும் இரு. ஆனால் எல்லா மதங்களையும் நேசிப்பவனாய் இரு. மதத்தில் இருந்தாலும் இல்லாவிட்டால் நிச்சயமாக நீ சிறந்த பகுத்தறிவுவாதியாய் இரு. பகுத்தறிவிற்கு ஏற்பில்லாத எதையுமே எக்காரணத்திற்காகவும் எந்த மதத்திலும் ஏற்காதே.

உலகை நல்ல ஆன்மிகத்தால் சிறந்த பகுத்தறிவால் நிறை அது உனக்கும் உன் சந்ததிக்கும் எல்லாம் தரும் இனிமையே வாழ்வாய் மலரும்.

#மதவாதியும்_பகுத்தறிவும்

No comments: