*இன்று டிசம்பர் ஒன்று எங்கள் திருமண நாள்*

கவிஞரே, இப்படிக் காதல் மழையாய்ப் பொழிகிறீர்களே உங்கள் திருமணம் காதல் திருமணம்தானே? என்று சிலரும் நீங்கள் கூட காதல் திருமணம் செய்யவில்லை என்றால் வேறு யார்தான் செய்திருக்க முடியும்? என்று சிலரும் என்னை எப்போதும் கேட்பார்கள்.

என் திருமணம் காதல் திருமணம் தான்.

ஆனால் இந்தக் காதல் நிச்சயத்திற்குப் பின்தான் நெஞ்சில் பச்சை குத்திக்கொண்டு படபடவென்று துள்ளிக்குதித்துக்கொண்டு நயாகராவுக்கே நீர் வழங்கும் ஊற்றாய் பொங்கி எழுந்தது.

அதுவரை நான் என் மனைவியைக் கண்டதே இல்லை.

இருபது வயதின் இறுதியில் முதன்முதலாக சவுதி அரேபியா சென்றவன் இருபத்தி மூன்று வயதில் ஒன்றரை மாத விடுப்பெடுத்து முதன் முதலாக ஊர் வந்து நின்றேன். அம்மாவின் மரபீரோவில் நான் ஏதோ காகிதங்களை உருட்டிக்கொண்டிருக்கும்போது, ஒரு சிறிய புகைப்படம் என் கண்ணில் பட்டது. அது ஒரு பதினைந்து வயது பெண்ணின் கறுப்பு வெள்ளைப் புகைப்படம்.

எடுத்துப் பார்த்து, அம்மா இது யார் என்று கேட்டேன். என் பதினைந்து வயது கடைக்குட்டித் தம்பி குதூகலத்தின் உச்சத்தில் உற்சாக மேட்டிற்கும் குறும்புப் பள்ளத்துக்குமாய் குதித்துக் குதித்துக் கூக்குரலிட்டான், ’அம்மா அண்ணனே எடுத்துருச்சு அண்ணனே பாத்துருச்சு’.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகுதான் அறிந்துகொண்டேன், என் மூன்றாவது தம்பி எனக்காக தன் நண்பனின் சகோதரியைப் பெண்பார்த்து வைத்திருந்த கதையை. ஆனால் பேச்சை என்னிடம் ஆரம்பிக்க அனைவரும் அஞ்சி இருந்தார்கள்.

ஏனெனில் எனக்குத் திருமணம் இப்போது வேண்டவே வேண்டாம், சவுதியை முடித்துக்கொண்டு ஊருக்கே வந்ததும்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று திட்டவட்டமாகச் சொல்லி இருந்தேன்.

எனக்கெல்லாம் ’அன்பே நீ அங்கே நான் இங்கே வாழ்ந்தால் இன்பம் காண்பது எங்கே’ என்று வலைகுடாப் பாலைப்பாடல் சிச்சுவேசன் எல்லாம் ஒத்துக்காது.

பிறகென்ன நாளும் பொழுதும் இரவும் பகலும் அம்மாவின் பாசத் தொல்லைதான். எனக்கோ உடம்பு சரியில்லை உயிரோட இருக்கும்போதே உனக்கொரு கல்யாணத்தைப் பண்ணி நான் என் கண்ணோடு பாக்குறேண்டா.

உனக்கு உடம்பு சரியில்லேன்னா மருந்து சாப்பிடு அதுக்கு ஏன் எனக்கு ராணி கோணியையெல்லாம் கட்டி வைக்கப் பார்க்குறே. எனக்கு எப்போதுமே இந்த நகைச்சுவை உணர்வு கூடவே பிறந்த மருந்து. பெண்ணின் பெயர் ராணி என்றழைக்கப்படும் யாஸ்மின்.

இறுதியாகச் சொன்னேன், அம்மா தம்பிகளே உங்களுக்காக நிச்சயதார்த்தம் வேண்டுமானால் செய்துகொள்கிறேன். அதை ஒரு திருமணம்போலச் செய்யலாம். ஆனால் கல்யாணம் மட்டும் முடியவே முடியாது. இரண்டு வருடங்கள் கழித்துத்தான்.

அப்போது எனக்கு வயது 23 என் மனைவிக்கு வயது 15. எப்படி?

இன்றும் தஞ்சை மாவட்ட முஸ்லிம் வீடுகளில் இப்படியான விடலையர் திருமணங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் நான் என் 25ம் வயதில்தான் 17 வயது ராணியைக் கைப்பிடித்துக் கைகொடுத்தேன்.

என் காதல் ஒருதலைக் காதலும் இல்லை இருதலைக் காதலும் இல்லை இரண்டும் கலந்த தனித்தலைக் காதல். எப்படி என்கிறீர்களா?

நிச்சயம் செய்த நாளிலும் என் மனைவியை யாரும் என் கண்ணில் காட்டவில்லை. அதன்பின் நான் சவுதியில் ஈராண்டுகள் கன்னாபின்னாக் கனவுகளோடு இருந்திருக்கிறேன். அப்போதும் என் மனைவியை என்னோடு தொலைபேசியில்கூட உரையாட அனுமதிக்கவில்லை.

அதுமட்டுமல்ல சின்னச் சின்னக் கவிதை வாழ்த்துக்களாய் பல கடிதங்கள் அனுப்பினேன். இருவரிச் சிறுமடல் தொடங்கி இருநூறு வரி பெருங் கடிதம்வரை எழுதி அனுப்பினேன். ஒன்றுக்குமே பதில் இல்லை.

எல்லாமே ஆழ்கிணற்றில் இட்ட மணல் துகள்களாய்க் காணாமல் போயின. இரண்டு காதுகளையும் இருநூறு காதுகளாக்கி எத்தனைதான் கூட்தீட்டிப் பிடித்திழுத்து வைத்திருந்தாலும் கிணற்றில் விழும் சத்தம்கூட கேட்கவில்லை.

என்றால் இது ஒருதலைக் காதல்தானே?

ஆமாம் என்கிறீர்களா, அதுதான் இல்லை. அங்கே என் மனைவி அவளது சொந்தக் கனவுகளில் என்னை நினைத்துக் காணாமல் போய்க்கொண்டிருந்திருக்கிறாள். ஆக அவளும் காதலிக்கிறாள் நானும் காதலிக்கிறேன்.

என்றால் இது இருதலைக்காதல்தானே?

ஆமாம் என்கிறீர்களா? அதையும் நான் ஏற்கமாட்டேன். ஏனெனில், பாக்கல பழகல பேசல ஒரு கடிதத் தொடர்புகூட இல்ல புகைப்பட முகத்தைத்தவிர மனவோட்டம் விருப்பு வெறுப்பு என்று வேறு எதுவுமே தெரியல. அப்புறம் என்ன காதல்? ஆகவே இது ஒருவகைத் தனித்தலைக் காதல்தானே?

அவ்வகைத் தனித்தலைக் காதலில் நான் எழுதிய ஒரு புலம்பல் கவிதைதான் இது:

*எழுது ஒரு கடுதாசி*

நேத்துவர எம்மனச
      நெலப்படுத்தி நானிருந்தேன்
பாத்துவச்ச தாய்தம்பி
      பருசமுன்னு சொன்னாங்க

வேத்துவழி தெரியாம
      விழுந்தேன் நான் வலைக்குள்ள
ஊத்தாட்டம் எம்மனசு
      ஒன்னெனப்பா பொங்குதிப்போ

பாழான எம்மனசு
      பனியே ஒன் வசமாயி
நாளாவ நாளாவ
      நீ நடக்கும் நெலமாச்சி

மாளாத கனவாச்சி
      மங்காத நெனப்பாச்சி
தாளாத தனிமையில
      தீராத ஆசையில

வாடாத மருக்கொழுந்தே
      வத்தாத தேனூத்தே
போடேண்டி கடுதாசி
      பொல்லாத மனசமாத்தி

போடாட்டி எம்மனசு
      புண்ணாகிப் போகூன்னு
மூடாத முழுநிலவே
      மச்சினனத் தூதுவிட்டேன்

ஆடாத மனசோட
      அசையாத மொகத்தோட
போடாம கடுதாசி
      புதிராக இருந்துட்டே

வாடாத எம்மனசும்
      வாடிப்போய்க் கெடக்குதடி
கூடாத காரியமா
      குத்தமுன்னு யாருசொன்னா

தாத்தா சொன்னாரா
      தாய்மாமஞ் சொன்னாரா
பூத்த புதுப் பூவாட்டம்
      போட்டாவக் கொடுத்தாங்க

கூத்தாத் தெரியலியா
      கூடாது கடிதமுன்னா
வேத்தாளு ஆனேனா
      வீணாயேன் மறுத்தாங்க

யாருவந்து கேட்டாங்க
      ஏம்பரிசம் போட்டாங்க
ஊரயெல்லாங் கூட்டிவச்சி
      ஒன்னெனப்பக் கொடுத்தாங்க

நீரயள்ளி எறைச்சாக்கா
      நெலம் ஈரம் ஆவாதா
தூரநாடு வந்ததால
      தொலையுதுன்னு போவாதா

தேர இழுத்தும் இப்போ
      தெருவசந்தங் காணலியே
பூவப் பரிச்சும் இப்போ
      புதுவாசம் வீசலியே

நாளமெல்லப் போக்காத
      நரகத்துல தள்ளாத
யாருநின்னு தடுத்தாலும்
      எழுதமட்டும் தயங்காத

நாந்தான ஒங்கழுத்தில்
      நல்லமல்லி மாலையிடுவேன்..
வாந்தாலும் எங்கூட
      வாடினாலும் எங்கூட

நாந்தானே ஒனக்கூன்ன
      நாடறிஞ்ச சேதிய நீ
ஏந்தாமத் தூங்காத
      எழுது ஒரு கடுதாசி


*

ஒருவழியாகத் திருமணமும் முடிந்து ஓரிரு வருடங்கள் கழித்து நான் என் திருமணத்தை நினைத்து அதன் கதையை இப்படி ஒரு கவிதையாய் எழுதினேன். அந்தக் கவிதைதான் இது:

*கல்யாணமாம் கல்யாணம்*

ஊரலசி உறவலசி
      உண்மையான நட்பலசி
பாரலசிப் பார்த்துவொரு
      பசுங்கிளியக் கண்டெடுத்து

வேரலசி விழுதலசி
      வெளியெங்கும் கேட்டலசி
ஆறேழு உறவோடு
      அணிவகுப்பார் பெண்பார்க்க

மூடிவச்ச முக்காடு
      முழுநிலவோ தெரியாது
தேடிவந்த ஆண்விழிக்கு
      தரிசனமும் கிடையாது

ஆடியோடி நிக்கயிலே
      ஆளரவம் காட்டாமல்
ஓடிப்போய் பாத்தாலோ
      உதைபடவும் வழியுண்டு

பாத்துவந்த பெரியம்மா
      பழகிவந்த தங்கச்சி
நூத்தியொரு முறைகேட்டா
      நல்லழகுப் பெண்ணென்பார்

ஆத்தோரம் அல்லாடும்
      அலைபோல தவிச்சாலும்
மூத்தவங்க முடிவெடுத்தா
      முடியாது மாத்திவைக்க

நாளெல்லாம் பேசிடுவார்
      நாளொன்றும் குறித்திடுவார்
தோளோடு தோள்சேர
      பரிசந்தான் போட்டிடுவார்

ஆளுக்கொரு மோதிரமாய்
      அச்சாரம் அரங்கேறும்
மூளும்பகை வந்தாலும்
       மாறாது வாக்குத்தரம்

முதல்நாள் மருதாணி
       முகங்கள் மத்தாப்ப்பு
பதமாய் அரைத்தெடுத்த
      பச்சையிலைத் தேனமுதை

இதமாய்க் கைகளிலே
      இடுவார் இருவருக்கும்
உதடுகள் ஊற்றெடுக்க
      ஊட்டுவார் சர்க்கரையை

மணநாள் மலருகையில்
      மாப்பிளை ஊர்வலந்தான்
குணமகள் வீடுநோக்கி
      மணமகன் செல்லுகையில்

அனைவரும் வாழ்த்திடுவர்
      அகங்களில் பூத்திடுவர்
புதுமணப் பெண்ணவளோ
      புரையேறித் சிரித்திடுவாள்

வட்ட நிலவெடுத்து
      வடுக்கள் அகற்றிவிட்டு
இட்ட மேடைதனில்
      இளமுகில் பாய்போட்டு

மொட்டு மல்லிமலர்
      மொத்தமாய் அள்ளிவந்து
கொட்டி அலங்கரித்தக்
      குளுகுளுப் பந்தலிலே

சுற்றிலும் பெரியவர்கள்
      சொந்தங்கள் நண்பர்கள்
சிற்றோடை சலசலப்பு
      செவியோரம் கூத்தாட

வற்றாத புன்னகையும்
      வழிந்தோடும் பெருமிதமும்
உற்றாரின் மத்தியிலே
      உட்கார்வார் மாப்பிள்ளை

உண்பதை வாய்மறுக்க
       உறக்கத்தை விழிமறுக்க
எண்சான் உடலினுள்ளே
       எல்லாமும் துடிதுடிக்க

கண்களில் அச்சங்கூட
      கருத்தினை ஆசைமூட
பெண்ணவளும் வேறிடத்தில்
      பொன்னெனச் சிவந்திருக்க

சின்னக் கரம்பற்றச்
      சம்மதமா மணமகனே
மன்னன் கரம்பிடிக்க
      மறுப்புண்டோ மணமகளே

என்றே இருவரையும்
     எல்லோரும் அறியும்படி
நன்றாய்க் கேட்டிடுவார்
     நடுவரான பெரியவரும்

சம்மதம் சம்மதமென
     சிலிர்த்தச் சிறுகுரலில்
ஒப்புதல் தந்துவிட்டு
      ஊரேட்டில் ஒப்பமிட

முக்கியப் பெரியோரும்
      முன்வந்து சாட்சியிட
அப்போதே அறிவிப்பார்
      தம்பதிகள் இவரென்று

சந்தோசம் விண்முட்டும்
      சொந்தங்கள் இனிப்பூட்டும்
வந்தாடும் வசந்தங்கள்
      வாழ்த்துக்கள் கூறிநிற்கும்

முந்தானை எடுத்துமெல்ல
      முந்திவரும் கண்ணீரைச்
சிந்தாமல் துடைத்துவிட்டு
      சிரிப்பாளே பெண்ணின்தாய்

அன்புடன் புகாரி

No comments: