வாட்சப், முகநூல், டிவிட்டர், மற்றும் ஏனைய சமூக வலையாப்பு நண்பர்களே,
நாம் இங்கே நம் கருத்துக்களை முன் வைக்கிறோம். ஒருவர் கருத்து மற்றவருக்கு ஏற்புடையதாய் இருக்கலாம் இல்லாமலும் போகலாம்.
இருக்கும்பட்சத்தில் கவலை இல்லை. ஏற்புடையது இல்லாவிட்டால் அங்கே ஒரு பிரச்சினை இருக்கிறது
அந்த மாற்றுக் கருத்து என்பது கருத்துக்கு மட்டும்தான், நட்புக்கு இல்லை என்றால் பிரச்சினை தீர்ந்துவிடுகிறது.
சமூக வலைத்தளங்களில் உரையாடுபவர்கள் மெல்ல மெல்ல விரோதிகளாய் ஆகிறார்கள் என்று ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது.
அறியாமை மட்டுமே வெறுப்புக்குக் காரணம்.
இந்த உலகை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், நாம் எல்லோருடனும் உரையாட வேண்டும். எல்லோருடைய கருத்தையும் உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.
ஏற்பதை ஏற்று மறுப்பதை மறுத்து பின் ஒரு நாள் உணர வேண்டியதை உணர்ந்து ஏற்று என்று தொடர்ந்து செல்ல வேண்டும்.
அப்படியான அறிதலுக்கும் புரிதலுக்கும் நமக்கு உதவுபவர்கள் நம் நண்பர்கள்தாம். அவர்கள்மீது நாம் வெறுப்பு கொள்வது சரியா என்று சிந்திக்க வேண்டும்.
நம் கையின் ரேகைகள் ஒரே மாதிரி இருக்காது. எண்ணங்கள் மட்டும் ஒரே மாதிரி எப்படி இருக்க முடியும்?
ஆனால் அந்தக் கைகள் குலுக்கிக் கொள்ளக் கூடாது என்று வெறுப்பு கொண்டால், நாம் தெளிந்த நல்லறிவைப் பெறவில்லை என்று பொருள்.
ஆமாம் ஆமாம் என்று சொல்வதற்குத்தான் நமக்கு நட்புகள் வேண்டுமா?
மறுத்து அறிவை வளர்க்க ஆவன செய்யும் நண்பர்கள் விரோதிகளா?
உண்மையில் அவர்கள்தாம் நல்ல நண்பர்கள்.
தனி மனிதக் கீறல் இல்லாமல், எந்தக் கருத்துக்கு இடையிலும் கடும் மோதல்கள் நிகழலாம். ஆனால் அது நட்புக்கு இடையில் மோதல் என்று ஆகிவிடக் கூடாது.
என்னிடம் ஒரு நூறு கருத்துக்கள் இருக்கின்றன என்று கொள்வோம். அந்த நூறில் 80 கருத்துக்களில் நீங்கள் ஒத்துப் போகிறீர்கள். இருபதில் நீங்கள் மாற்றுக் கருத்து கொண்டிருக்கிறீர்கள்.
நான் உங்களை வெறுக்க வேண்டுமா விரும்ப வேண்டுமா?
நீங்கள் தணுஷ் ரசிகர் நான் சிம்பு ரசிகர் என்று சண்டை போடுபவர்கள் இந்த உயர்ந்த தளங்களில் இருத்தல் கூடாது
நீ தணுஷ் புகழ்பாடு நான் சிம்பு புகழ் பாடுகிறேன் ஆனால் இருவரும் கட்டியணைத்து நண்பர்களாய் இருப்போம் என்பதே நல்லறிவு.
அன்புடன் புகாரி
No comments:
Post a Comment