அத்தான் என்ற சொல்தான் மருவி சைத்தான் என்று ஆனதோ என்று வாட்சப்பில் எனக்கு ஒரு வினா வந்தது. நான் இப்படி பதில் எழுதி இட்டேன்.

அத்தான் என்ற சொல் எனக்கு மிகவும் பிடித்த சொல். ஏனெனில் என் துவக்கப்பள்ளிப் பருவத்தில் வந்த திரைப்படங்களில் எல்லாம் மிக கவர்ச்சியாகக் கதாநாயகிகள் அத்தான் அத்தான் என்றுதான் தன் காதலனையும் கணவனையும் அழைப்பார்கள். அது அப்படியே நெஞ்சில் பசுமையாய்ப் படிந்துவிட்டது.

அத்தான் என்று சொல்லும்போது அது சாவித்திரியாய் இருக்கட்டும் அல்லது பத்மினியாய் இருக்கட்டும், ஒரு வெட்கம் காட்டுவார்கள் பாருங்கள், அது காணக் கண்கொள்ளாக் காட்சி. அப்படியான ஒரு வெட்கத்தை இன்று எந்தக் கதாநாயகியிடம் கண்டுவிடப் போகிறீர்கள்?

அத்தான்...என்னத்தான்... அவர் என்னைத்தான்...
எப்படி சொல்வேனடி

மொட்டுத்தான் கன்னிச் சிட்டுத்தான்
முத்துத்தான் உடல் பட்டுத்தான்
என்று தொட்டுத்தான்
கையில் இணைத்தான் வளைத்தான் சிரித்தான் அணைத்தான்
எப்படி சொல்வேனடி

இப்போது அந்த அத்தானைக் கைவிட்ட சைத்தான்கள்

காதல் பிசாசே காதல் பிசாசே
ஏதோ சௌக்கியம் பரவாயில்லை
காதல் பிசாசே காதல் பிசாசே
நானும் அவஸ்தையும் பரவாயில்லை

என்று பாடுகின்றன

இப்போது பழைய பாடல்களையெல்லாம் அப்படியே ரீமிக்ஸ் என்ற பெயரில் புதிதாகக் கொண்டுவருகிறார்கள். இதோ  இனி வரப் போகும் அத்தான் பாட்டு

சைத்தான்
என்ன சைத்தான்
அவர் என்னை சைத்தான்
எப்படி சொல்வேன் சைத்தான்

ஆகவே அத்தான்தான் மருவி சைத்தான் என்று ஆனது நம் இன்றைய நாகரிக வாழ்வில்

பின் குறிப்பு:

அத்தான் சைத்தான் ஆவதும் தேவன் ஆவதும் பெண், பெண்ணாகத்தான் இருக்கிறாளா அல்லது பிசாசாக ஆகிவிட்டாளா என்பதிலும் இருக்கிறது

சங்க இலக்கியத்தில் சைத்தான் என்ற சொல் இருக்கிறதா என்று கூறுவீர்களா என்று வாட்சப்பில் எனக்கு ஒரு வினா வந்தது. எனக்குத் தெரிந்த சைத்தான் குறிப்புகளை இங்கே உங்களுக்காகத் தருகிறேன். குற்றம் குறை கண்டு சொல்லலாம் பிழையே இல்லை.

சாத்தான் என்பது ஹிப்ரு மொழிச் சொல். (Satan). அதன் பொருள் எதிரி. பழைய கிரேக்க மொழியிலும் சாத்தான்தான். அரபு மொழியில் அது சைத்தான். தமிழில் சாத்தான் என்றும் சைத்தான் என்றும் அழைக்கிறோம். சைத்தான் என்றால் பிசாசு என்று பலரும் புரிந்துகொள்கிறார்கள்.

யூதர்களின் நம்பிக்கையில் சாத்தான் என்பவன் எதிரி. இறைவனை வணங்குவதைத் தடுக்கின்ற துரோகி. பாவச் செயல்களைத் தூண்டுபவன்.  மனிதர்களைக் கடுமையாகச் சோதிக்க இறைவனையே தூண்டுபவன்.

கிருத்தவர்களுக்கு சாத்தான் என்பவன் இறைவனுக்கு அடிபணிய மறுக்கும் தீய சக்தி, கெட்டவைகளின் உற்பத்திக் கிடங்கு. இறுதிநாளுக்கான யுத்தத்தில் பங்குபெறும் மகா தீய சக்தி.

குர்-ஆனில் சைத்தானுக்கு இன்னொரு பெயரும் உண்டு. அதன் பெயர் இப்லிஸ். நெருப்பால் உருவானவன். ஆதாம் என்ற முதல் மனிதனை வணங்கச் சொல்லி இறைவன் சைத்தானுக்கு ஆணை இடுகிறான். வணங்க மறுத்ததால் சைத்தான் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டான் என்று குர்-ஆன் சொல்கிறது.

மனிதர்களை இறை வணக்கத்திலிருந்தும், அறச்செயல்களிலிருந்தும் திசை திருப்பும் தீய சக்திதான் சைத்தான். பண்டைய காலத்தில் சைத்தானை மக்கள் வணங்கிக்கொண்டிருந்தார்கள். அது கூடாது என்று குர்-ஆன் சாத்தானுக்குக் கல்லெறியச் சொல்கிறது.

ஒவ்வொரு மனிதனும் சாத்தானின் தூண்டுதல்களில் சிக்கித் தீயவழியில் சென்றுவிடாமல் நல்ல எண்ணங்களை வளர்த்து இறைவனின் வழி செல்ல வேண்டும் என்பதே இஸ்லாத்தின் மையக் கருத்து.

இறுதிநாளில் சைத்தான் நரக நெருப்பில் எறியப்பட்டு அழிக்கப்படுவான். இஸ்லாம்படி சைத்தான்தான் இறைவனை மறுத்த முதல் நாத்திகன். ஆகவே நாத்திகன் என்பவனை இஸ்லாம்படி இறைவன் இல்லை என்று சொல்பவன் என்பதைவிட இறைனின் சொல்லை மறுப்பவன் என்று சொல்வது சரியாக இருக்கும்.

இறைவனை மறுப்பவனும் இறைவன் இல்லை என்பவனும் கிட்டத்தட்ட ஒருவனே என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்துதான்.

சங்க இலக்கியத்தில் சாத்தான் சைத்தான் என்ற சொற்கள் இருக்க வழியில்லை. மதங்களின் வரவுகளுக்குப் பின்னர்தான் இந்த நரகாசுரன், சனி, சைத்தான், சாத்தான் எல்லாம்.

அன்புடன் புகாரி





No comments: