பரம்பொருள் ஒன்று. ஆனால் அதை வெவ்வேறு வடிவில் ஈடுபாட்டுடன்/ பக்தியுடன் வழிபட்டு, இறுதியில் முதிர்ந்த பற்றற்ற ஞானநிலை அடையலாம். அவரவர்கள் மனதால், சொல்லால், உடல் உறுப்புகளால், செய்யும், நல் / தீய செயல்களுக்கேற்ப, இது ஒரு பிறவியிலோ, பல பிறவியிலோ நடக்கலாம்.
-பாஸ்கர்

இறைவன் ஒருவன் தான் என்று இதை நான் உறுதி செய்துகொள்ளலாமா? உங்களுக்கு ஒரு இறைவன் எனக்கு ஒரு இறைவன் என்று இறைவன் பல என்பது பிழைதானே?
-அன்புடன் புகாரி

உருவ வழிபாட்டையும் அதைச் சார்ந்த நம்பிக்கைகளையும் இழிந்துரைக்க, இந்த பரம்பொருள் ஒன்று என்ற ஒரு வாக்கியத்தைப் பயன்படுத்தாமல் இருந்தால் சரி. ஏனென்றால் உருவ வழிபாடு ஈடுபாட்டுடனான பக்தியை வளர்க்கும், அப்படி வழிபடும் தேவதைகளும் கடவுளால் உருவானவை, அந்த வழிபாட்டையும் கடவுள் தனக்கே உரியதாக ஏற்றுக் கொள்கிறார் என்பதும் இந்து சமயத்தின் ஆணிவேரான கோட்பாடு. இதுவே எதிலும் கடவுளைக் காணும்/ ஆராதிக்கும் சுதந்திரத்தையும் வழங்குகிறது.
-பாஸ்கர்

நான் உருவ வழிபாட்டை விமரிசனம் செய்யவில்லை. அது அவரவர் விருப்பம் நம்பிக்கை. அதனால் யாருக்கும் எக்கேடும் இருப்பதாய் நான் உணரவில்லை. இறைவன் ஒருவன் தானா என்பதுதான் என் கேள்வி. அவனை எப்படி வேண்டுமாலும் யார் வேண்டுமானாலும் வர்ணனை வரையறை செய்து கொள்ளட்டும் வணங்கட்டும் நம்பிக்கையில் சிறந்து விளங்கட்டும். அதனால் ஏதும் கேடில்லை.

இறைவன் பல என்றதும் உலக அமைதியில் கீறல் விழுகிறதோ என்று ஐயுறுகிறேன். உன்னைப் படைத்த கடவுள்தான் என்னையும் படைத்தான் என்றால் அதில் ஓர் இணக்கத்திற்கான நூல் தென்படவில்லையா? அதுதானே உண்மை என்றும் தெளிய முடியவில்லையா? நான் இணக்கம்தேடிப் போராடுபவன்!
-அன்புடன் புகாரி

இந்து மதக் கோட்பாட்டில் இந்த இணக்கத்திற்கு எந்தத் தடையும் இல்லை. அல்லாவும், ஏசுவும் பரம்பொருளின் வேறுபெயர்கள் என ஏற்பதில் தவறேயில்லை, அதேபால் சிவனும், திருமாலும் பரம்பொருளின் வேறுபெயர்கள் என்று ஏற்பதிலும் தடையேதுமில்லாமல் இருக்குமானால் இணக்கத்திற்கு தடையேதுமில்லை.
-பாஸ்கர்

அல்லா = இறைவன். அரபு மொழியில் அல்லா. தமிழ் மொழியில் இறைவன். அவ்வளவுதான்.

சிவனும் திருமாலும் பரம்பொருள் என்ற ஓர் இறைவன் இல்லையா? பின்புலமாய் தசாவதாரக் காட்சிகள் கண்முன் வருகிறது. இந்து மதத்திற்குள்ளேயே இறைவன் ஒருவனே என்ற கொள்கை இல்லையா?
-அன்புடன் புகாரி

இருக்கிறது. அந்த ஏதுமற்ற நிலையை அடைய/உணர, எந்த உருவத்தில்/ பெயரில் உங்களால் அசைக்கமுடியா ஈடுபாட்டை/பக்தியை செலுத்த முடியுமோ, அதைச் செய்யலாம் என்ற வழிகாட்டுதலும் / சுதந்திரமும் சேர்த்து வழங்கப் பட்டுள்ளது.
-பாஸ்கர்

ஒன்று என்பதே இறுதி என்பது நன்று. அதைத் துவக்கத்திலேயே சொல்லிவிடுகிறது இஸ்லாம்.

ஒன்று என்பதை உணர்ந்துகொண்டால் விரோதங்கள் மனிதர்களுக்கு இடையில் இல்லை.

அசைக்கமுடியா பக்தி என்பதும் சிறப்பு. மிக அவசியம் ஆனதும் கூட. ஆனால் அது மற்றதன்மீதான வெறுப்பாய் ஆகிவிடக் கூடாது.

ஒரே இறைவனின் பிள்ளைகள் என் தாய் வேறு என்று சண்டை போட்டால் இறை கொள்கையே அர்த்தமற்றதாகப் போய்விடும். இறைவனே இல்லை என்ற நிலைக்குத்தான் தள்ளப்படுவோம்
-அன்புடன் புகாரி

மற்றதன் மீதான வெறுப்பு, மனதால் தொடங்கும் தீய செயல். இந்து சமயக் கோட்பாட்டின்படி தீய செயல்கள் ஏதுமற்ற பரம்பொருளை அடைவதற்குத் தடை. ஆனால் தன் நம்பிக்கைகள் மீது குறிவைத்து எறியப்படும் இழிந்துரைகளை கேட்கும்,போது முற்றும் துறந்த ஞானநிலை அடையாத மனது வெகுண்டெழுகிறது.
-பாஸ்கர்

இழிந்துரைகள் தூண்டல்கள். இறைநம்பிக்கையாளர்கள் அதில் சிக்கிவிடக்கூடாது. சிக்கினால் அவர்கள் வென்றுவிடுவார்கள், நல்லவர்கள் நாம் தோற்போம்
-அன்புடன் புகாரி

No comments: