கண்ணாடிகள்

உன் வார்த்தைகள்
உன் முகம் காட்டும்
கண்ணாடிகள்

அறிவழிந்த பொழுதுகளின்
மடிகளில் அமர்ந்துகொண்டு
இன்றைய உன்னை
இன்றே பார்த்தால்
உனக்கு அழகாகத் தெரியலாம்

நாளை உன்னை
நீயே பார்க்க நேர்ந்தால்
அதன் விகாரத்தில்
நசுக்கப்பட்டு
வெடித்து அழத் தோன்றும்

உன்
முக அழுக்குகளை
அகற்று முதலில்

உலகக் கண்ணாடிமுன்
நிற்கலாம் பிறகு

சளி வழியும் மூக்கோடும்
பீளை மூடிய விழியோடும்
வாநீர் உரிந்த வாயோடும்
நீ செல்லவேண்டியது
அறிவென்னும்
ஒப்பனையறைக்குத்தான்

அடிக்கடி
உன் முகம்பார்

உன் முகத்தின் கோரங்கள்
உன் விழிகளுக்குத்
தெரிந்தால்
நீ காப்பாற்றப்படுவாய்

அடடா அழகென்று
அக்கண உணர்வுக் கொதிப்பில்
நீ ரசித்துவிட்டால்
உன்னைக் காப்பாற்ற
பின் ஒருநாளும்
உனக்கு
ஆகாமல் போகக்கூடும்

இதயம் என்பது
நீ
அன்றாடம் சேமிக்கும்
சொற்களின் உண்டியல்

விகாரங்களெல்லாம்
அதனுள் விழுந்த
செல்லாக் காசுகள்

செல்லாக் காசுகளையே
செலவிட நினைத்தால்
நீ வாங்கப் போவது
அவமானங்களைத்தான்

கண்ணாடிகள்
ஒருநாள் உடையலாம்

உடைந்தால் அவற்றின்
ஒவ்வொரு சில்லும்
உன் முகத்தை இன்னும்
விகாரமாகவே காட்டும்

முகத்தைத்
துடைத்துக்கொள்ள
இனியாவது
உன் விரல்களுக்குப்
பாடம் எடு

சின்னச் சின்ன
மரணங்களுக்கு
உன்னை விலைபேசி
விற்றுவிடாதே

4 comments:

சாந்தி said...

உன் வார்த்தைகள்
உன் முகம் காட்டும் கண்ணாடிகள்

நிஜம்.



அறிவழிந்த பொழுதுகளின் மடிகளில் அமர்ந்துகொண்டு
இன்றைய உன்னை இன்றே பார்த்தால்
உனக்கு அழகாகத் தெரியலாம்
நாளை உன்னை நீயே பார்க்க நேர்ந்தால்
அதன் விகாரத்தில் நசுக்கப்பட்டு வெடித்து அழத் தோன்றும்

அதே அதனால் எப்போதும் வேரில் உறுதியாக ஆழமாக இருந்தால் வார்த்தை கவனமாகவே வந்திடும் எச்சூழ்நிலையிலும்.. எதிரியிடத்தும்..



உன் முக அழுக்குகளை அகற்று முதலில்
உலகக் கண்ணாடிமுன் நிற்கலாம் பிறகு

சளி வழியும் மூக்கோடும் பீளை மூடிய விழியோடும்
வாநீர் உரிந்த வாயோடும் நீ செல்லவேண்டியது
அறிவென்னும் ஒப்பனையறைக்குத்தான்

அடிக்கடி உன் முகம்பார்
உன் முகத்தின் கோரங்கள் உன் விழிகளுக்குத் தெரிந்தால்
நீ காப்பாற்றப்படுவாய்

அடடா அழகென்று அக்கண உணர்வுக் கொதிப்பில்
நீ ரசித்துவிட்டால் உன்னைக் காப்பாற்ற
பின் ஒருநாளும் உனக்கு ஆகாமல் போகக்கூடும்

அருமை.. தகுதியற்ற பாராட்டுகள் இவ்வேலையை எளிதாய் செய்திடும்..



இதயம் என்பது
நீ அன்றாடம் சேமிக்கும் சொற்களின் உண்டியல்
விகாரங்களெல்லாம் அதனுள் விழுந்த செல்லாக் காசுகள்
செல்லாக் காசுகளையே செலவிட நினைத்தால்
நீ வாங்கப் போவது அவமானங்களைத்தான்

சிறப்பான சொல்லாடல்.



கண்ணாடிகள் ஒருநாள் உடையலாம்
உடைந்தால் அவற்றின் ஒவ்வொரு சில்லும்
உன் முகத்தை இன்னும் விகாரமாகவே காட்டும்

முகத்தைத் துடைத்துக்கொள்ள
இனியாவது உன் விரல்களுக்குப் பாடம் எடு
சின்னச் சின்ன மரணங்களுக்கு
உன்னை விலைபேசி விற்றுவிடாதே

உறுதி..

சீனா said...

அன்பின் புகாரி

நல்ல கவிதை - மிகவும் இரசித்தேன் - சின்னச் சின்ன மரணங்கள் - ம்ம்ம்ம் - பொறுமை தேவை

பூங்குழலி said...

>>>>அடடா அழகென்று அக்கண உணர்வுக் கொதிப்பில்
நீ ரசித்துவிட்டால் உன்னைக் காப்பாற்ற
பின் ஒருநாளும் உனக்கு ஆகாமல் போகக்கூடும்<<<

நச்சென்று சொன்னீர்கள் புகாரி

>>>இதயம் என்பது
நீ அன்றாடம் சேமிக்கும் சொற்களின் உண்டியல்
விகாரங்களெல்லாம் அதனுள் விழுந்த செல்லாக் காசுகள்
செல்லாக் காசுகளையே செலவிட நினைத்தால்
நீ வாங்கப் போவது அவமானங்களைத்தான்<<<

அருமை

>>>சின்னச் சின்ன மரணங்களுக்கு
உன்னை விலைபேசி விற்றுவிடாதே<<<

அருமை

புன்னகை மன்னன் said...

தனி மனித ஒழுக்கம்...

அழகான கவிதை ஆசான்...