கவிதைகளும் நானும்

ஆயுள் பெரும்பாலையில்
அவ்வப்போது
வாழ்க்கை
கவிதைகளாய்த்
துளிர்க்கவே செய்கிறது

அதன்
தித்திப்பு முத்தங்களும்
திரும்பியோட ஏங்கும்
நினைவுகளும்
விழிகளெங்கும் கவிதைகளாய்ப்
பொழுதுக்கும்
வேர் விரிக்கின்றன

உணர்வுகளின்
உயிர்ச் சிறகுகளை
ஈரம் உலராமல்
எடுத்துப் பதித்துக்கொண்ட
இதயக் கணங்களாய்க்
கவிதைகள்

தீபத்தைத் தொட்டால்கூட
சுடாமல் போகலாம்
தீபம்பற்றிய கவிதையோ
சத்தியமாய்ச் சுடும்

புயலைப்
புரிகின்ற மொழியில்
மொழிபெயர்க்கவும் செய்யும்
அதை வளைத்துப்
பெட்டிக்குள் இடும் சாமர்த்தியத்தைப்
பூந்தென்றலின் வரிகளில்
பதுக்கிவைக்கவும் செய்யும்

கவிஞனின்
பிரம்மாண்ட எழுச்சி
கவிதை
கவிதையின் பித்தன்
கவிஞன்

கவிதைக்கும் மனத்திற்கும்
இடைவெளி இல்லை
ஏனெனில் அது
என்னுடைய இயல்பு

கவிதைக்கும் வாழ்க்கைக்கும்
ஏராள இடைவெளி
ஏனெனில்
அது வாழ்க்கையின் இயல்பு

வாழ்க்கையை வளைத்து
கவிதை ரதம் ஏற்றும்
தவ முயற்சிகளே
கவிதைகளாயும் நிகழும்
வாழ்க்கையாயும்
என்னோடு

3 comments:

இஸ்மாயில் said...

எங்கிருந்து ஆசான் யோசிக்கிறீங்க....

ஒரு படத்துல நாயகன் சொல்லுவான் எனக்கு மட்டும் மூளை ஒரு கிராம் ஐ நூறு கனங்கள் என்று....
உங்களுக்கும் அப்படி தானோ...

நானும் கத்துக்கிறேன்.... இயல்பு அப்படினு சொல்றீங்க... ஆனா படிச்ச பின்ன இயல்பா நான் இல்லை....

தருமி said...

//கவிதைக்கும் வாழ்க்கைக்கும்
ஏராள இடைவெளி
ஏனெனில் அது வாழ்க்கையின் இயல்பு//

ஆமா .. ம்.
கவிதை பிறக்கும் மனதுக்கும்,
நடந்து் போகும் வாழ்க்கைக்கும்தான் எத்தனை எத்தனை தொலைவு..

பூங்குழலி said...

--இன்னதென்று விளக்க முடியாத சில உணர்வுகளை அழகாய் வசப்படுத்தியிருக்கிறீர்கள்

அன்புடன் புகாரி