காதலும் சாதலும்


”காதலுக்காக மட்டுமே உருகி உயிர் துறப்பது ஏற்க முடிவதில்லை”

இது என் கவிதை ஒன்றுக்கான விமரிசனம். அந்தக் கவிதையின் கடைசி வரிகள் இவைதாம்.

என் உயிர்
உனக்காக ஊதுபத்தியாய்ப் புகைகிறது
அது உதிர்க்கும் சாம்பலையாவது
உன் கைகளில் ஏந்திக்கொள்
நான் மரணத்திலும் வாழ்வேன்

இந்த வரிகளுக்கான என் விளக்கத்தை இந்தக் கட்டுரையின் இறுதியில் நான் தருகிறேன். அதற்குமுன் மற்ற கவிஞர்கள் காதலையும் சாதலையும் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்

இது பாரதியின் பாட்டுவரிகள். இதை நேரடியாய்ப் பார்த்தால் காதல் தோல்வி என்றால் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று சொல்வதாகப்படும். ஆனால் அதல்ல உண்மை. காதல் இல்லாவிட்டால் மனிதன் நடைபிணமாகிவிடுவான், வாழ்க்கை முடமாகிவிடும் என்பதே பொருள். காதலில்லாவிட்டால் வாழும்போதே சாதலை அனுபவிப்போம் என்பதே பொருள். அதாவது வாழ்க்கை சாவாக இருக்கும். இதுதான் பொருளேதவிர தற்கொலை செய்துகொள்வதல்ல. காதலிதான் ஓடிப்போவாள். காதல் ஓடிப்போகாது. எனவே இன்னொரு காதலியைக் காலம் தரும். அவளோடு மீண்டும் காதல் கொண்டால் காதல் காதல் காதல் என்று ஆகிவிடுவிடும். ஏன் காதல் காதல் காதல் என்று மூன்றுமுறை பாரதி சொல்கிறான். ஒவ்வொரு தோல்விக்குப்பின்னும் இன்னொன்று என்று வலியுறுத்தான் என்று நீங்கள் அர்த்தப்படுத்திக்கொண்டால், நான் குறுக்கே நிற்கமாட்டேன். வீழும்போதெல்லாம் எழுந்து நின்று வாழ்வோம். அதுவே காதலோடு இருப்பது. வீழ்ந்ததும் அப்படியே புதைந்துபோவதுதான் வாழும்போதே சாதல் என்பது.

ஆரத்தழுவி அடுத்தவினாடிக்குள் உயிர்
தீரவரும் எனிலும் தேன்போல் வரவேற்பேன்!

என்கிறார் பாரதிதாசன். இதன் பொருள் என்ன? மனிதனுக்கு உயிர்தான் முதன்மை. அதை இழக்க எந்த ஜீவனும் ஒப்புவதில்லை. ஆனால் அதைவிட ஒருபடி உயர்வாக தன் காதலியைச் சேர்வதை கவிஞன் உயர்வு நவிழ்ச்சியணியில் கூறுகிறான். அவ்வளவுதான். தவிர உண்மையிலேயே அவளை அணைத்ததும் அவன் அணைந்துபோய்விடமாட்டான். அட சாக வேண்டும் நினைப்பிலா அவன் அணைக்க விரும்புகிறான். ஏன் அவளை அணைக்க விரும்புகிறான் என்று நான் சொல்ல வேண்டுமா? வாழத்தான் என்பதை நீங்கள் அறியமாட்டீர்களா என்ன?

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நினைத்தேன்
உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி நீதானே என் சன்னிதி

என்கிறார் கண்ணதாசன். நீயில்லாமல் எது நிம்மதி என்று கேட்கும்போதே ஒரு விசயம் தெளிவாகிறது. நிம்மதி இல்லாத நாட்கள் மரண நாட்கள். அவளின்றி அவன் பிணம்போலத்தான் ஒன்றுமற்று வாழ்வான். If love goes wrong, Nothing goes right என்பார்கள் அழகாக ஆங்கிலத்தில்.

மரணம் என்னும் தூது வந்தது
அது மங்கை என்னும் வடிவில் வந்தது
சொர்க்கமாக நான் நினைத்தது
இன்று நரகமாக மாறிவிட்டது

என்றும் கண்ணதாசன் இன்னொரு பாடலில் கூறுகிறார். இது மிகத் தீவிரமான காதலின் வெளிப்பாடு. இது நீயில்லாமல் நான் செத்துவிடுவேன் என்று நேரடியாகவே சொல்கிறது. அந்த அளவுக்குச் செல்லும் காதலும் உண்டுதான். ஆயினும் இது தற்கொலை செய்துகொள்வதற்கான வரிகள் அல்ல. ஏக்கத்தின் மனச்சிதைவால் அவன் உடல்சிதைகிறான். மரணம் மங்கையைத் தூதனுப்பி அவனைக் கொல்ல வருகிறது என்பதை அவன் உணர்கிறான். அவள் கிடைத்துவிடமாட்டாளா, சாவை வென்றுவிடமாட்டேனா என்ற வேதனையின் வெளிப்பாடுதான் இந்தப் பாடல். இதிலும் அவன் சாக விரும்பவில்லை. ஆனால் அது அவன்மீது வலுக்கட்டாயமாகச் சுமத்தப்படுகிறது.

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன்
அவன், அருளைப்பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்

என்று கண்ணதாசன் இன்னொரு பாடலிலும் சொல்கிறார். இதுபோல காதலும் சாதலும் சேர்ந்துவரும் பாடல்கள் நிறைய உண்டு. அண்ணலின் அருள் பெறவே உயிர் வளர்த்தேன் என்கிறாள் அவள் காதலில் உருகி. இந்த உயிர் உனக்கானது என்கிறாள். அதன் பொருளென்ன, நீயில்லாமல் நானில்லை, என் உயிரில்லை. இந்த உயிரை உனக்குப் படைப்பேன் என்பதுதானே? இதுவும் ஒன்றே ஒன்றுதான் வேண்டும் என்ற ஆழ்மனதின் அழுத்தமான எண்ணம். இப்படி ஒன்றே ஒன்று வேண்டும் என்பவர்கள் மட்டுமே தற்கொலைவரை செல்கிறார்கள். அப்படி இல்லாமல் இந்தக் காதல் போனால் இன்னொரு காதல் என்று நினைத்த மாத்திரம் வாழ்க்கை எழுந்து நடக்கத் தொடங்கிவிடுகிறது. நாம் யாரையும் ஏமாற்ற வேண்டாம். நம்மை ஏமாற்றியவர்களை விட்டுவிலகி வேறொன்றைத் தொட்டு வாழ்வை காதலாய் அமைத்துக்கொள்வதே அறிவுடைமை.

ஒன்றையே நினைத்திருந்து
ஊருக்கே வாழ்ந்திருந்து
உயிர் கொடுத்து உயிர் காக்கும்
உத்தமர்க்கோர் ஆலயம்

என்று தன்னலமற்ற சேவையை கண்ணதாசன் காதல் தோல்வியில் ’எங்கிருந்தாலும் வாழ்க’ என்று சொல்லிவிட்டு சாகும் ஒருவனுக்காகப்பாடுகிறார். காதல் என்பது சுயநலம்தான். ஆனால் அது பிறர்நலம் நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்துவிடும் என்பதற்கான உதாரணம் இந்த பாடலும் அதன் சூழலும். குறிப்பாக தன் காதலியின் நலம். இருந்தும் அவன் தற்கொலை செய்துகொள்ளவில்லை, அவன் ஆழ்மனம் அழிகிறது அது அவன் இதயத்தை பலகீனமாக்குகிறது. மரணம் தன் குருட்டுச் செயலை அரங்கேற்றுகிறது. அதற்குமுன் காலம் அவனுக்கு வேறு சந்தர்ப்பங்களை உருவாக்கிக் காத்திருக்க வேண்டும். அல்லது அந்தக் காதலியாவது காத்திருக்க வேண்டும். அல்லது நண்பர்கள் உறவுகள் என்று எவரேனும் காத்திருக்க வேண்டும். இங்கே குற்றவாளி காதலில்லை. காக்காத உறவு, நட்பு, சமூகம் என்றே நான் கூறுவேன்.

காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு கிள்ளி என்னைச் செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா

என்கிறார் வைரமுத்து. இதுவும் தன் வேதனையும் துயரும் உச்சமானது. அது என் ஜீவனை கரையானாய் அரித்துக்கொண்டிருக்கிறது. அதற்குமுன் வந்து என்னைக் காத்துவிடு என்று கூறும் பாடல்தான். காதல் என்ற உணர்வு சாதாரணமானதில்லை. அதன் ஆழம் உண்மையான காதலியைச் சந்தித்துவிட்டு அவள் பறிபோன துயரை ஏற்கும் இதயங்களுக்கே தெரியும். காலம் அவர்களுக்கு மருந்து இடும்முன் முடிவு நேர்ந்துவிடுவது துரதிர்ஷ்டம்தான்.

முத்தமிட்டு நெத்தியில
மார்புக்கு மத்தியில
செத்துவிடத் தோனுதடி மனசு

என்கிறார் இன்னொரு பாடலில் வைரமுத்து. ஒரு காதலன் தன் உயர்வான காதலையும் அவளை மட்டுமே நாடும் இதயத்தையும் மிக அற்புதமாகச் சொல்கிறான் இந்த வரிகளில். என் உயிரைத்த்தருகிறேன் என்பதே உயர் பக்தி. நான் உன் காலடி வருகிறேன் என்பதே கடவுள் பக்தியின் உச்சம். காதலும் பக்தியைப் போன்றதுதான். ஆயினும் கவிஞர் இங்கே தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன் என்றா சொல்கிறார்? இல்லை. அப்படியே அந்த சுகத்தின் தருணத்தை ஆழ்ந்து உணர்ந்து அதிசயித்து மயங்குகிறார். இந்த இன்பத்திலேயே செத்துபோலாம்னு இருக்கு என்று உணர்வு பொங்குகிறார்.

என் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து
உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாரது போனால்
மலைமீது தீக்குளிப்பேன்

வருகிறாயா இல்லை நான் சாகவா என்று முடிவெடுப்பதற்கு பயந்து தயங்கி நிற்கும் காதலிக்கு உறுதியாகச் சொல்கிறான் இந்தப்பாட்டில் காதலன். இதை அற்புதமாக எழுதி இருக்கிறார் வைரமுத்து. காதலனின் இந்த வார்த்தைகளால் இவனை நம்பி எங்கும் எத்தனைக் காலமும் செல்லலாம் என்ற அழுத்தமான உணர்வுகளை அவளுக்கு அந்த வரிகள் சத்தியம் செய்து தருகின்றன. இதுவும் தற்கொலை முயற்சியல்ல, தன்னை காதலிக்குச் சரியாக உணர்த்தும் அற்புதக் கவிதை வரிகள்.

இந்த காதலில் மரணம் ஏழு நிலை
இது இல்லை என்றால் அது காதல் இல்லை
உடல் மரிக்கின்ற காதல் மரிப்பதில்லை

என்று உயிரே என்ற படத்துக்காக வைரமுத்து எழுதுகிறார். ஒரு காதல் மரணம் வரை பயணப்பட்டுவிடும் என்பதை சொல்லும் பாடல்தான் இது. காதலுக்காக உயிர்துறக்கவும் தயாராகவே காதல் உள்ளங்கள் இருக்கின்றன. இங்கே சமுதாயம்தான் அவர்களைக் கொல்கிறதே தவிர அவர்கள் வாழவே விரும்புகிறார்கள். அவர்களை வாழவிடாத சமூகம் அவர்களைக் கொலை செய்கிறதே தவிர அவர்கள் தற்கொலை செய்துகொள்வதில்லை. கடைசிவரைப் போராடவே செய்கிறார்கள்.

உடல் பொருள் ஆவி அனைத்தும்
உனக்கெனவே தருவேன் பெண்ணே

என்று புதியபாடல் சொல்வதும் இதே காதலின் மேன்மையான உணர்வுகளைத்தான். வாழ்வதே காதலர்களின் நோக்கம். சாவல்ல. சாவு அவர்களுக்குச் சுமத்தப்படும் கொடுமை.

முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி

என்கிறார் கங்கை அமரன். ஒரு பெண்ணில்லாமல் ஓர் ஆணுக்கு ஏன் பிறவி என்ற கேள்வி காதல் வாழ்க்கையின் மேமையை அற்புதாகச் சொல்கிறதல்லவா?

யாரென்று நீயும் எனைப் பார்க்கும் போது
உயிரே உயிர் போகுதடி
கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து
உந்தன் முகம் பார்ப்பேனடி
போகாதே போகதே

என்கிறார் நா. முத்துக்குமார். என்னை விட்டுப் போகாதே. நீ போனால் நான் ஒன்றுமற்றவன். உயிரற்றவன். நான் இறந்தால் கூட இந்த உணர்வுகள் என்னை அகலாது. கல்லறையிலும்கூ நான் விழித்திருப்பேன் என்று கற்பனையை உச்சத்துக்குக் கொண்டு செல்கிறார். கதாநாயன் கேட்பது என்ன? போகாதே போகாதே. அவ்வளவுதான். அதை தன் காதலிக்குப் புரியவைக்கும் வரிதான் உயிர் போவதும் கல்லறையிலும் உன் முகம் பார்ப்பேன் என்பதும். ஆக இதுவும் வாழ்க்கையின் தேடலே தவிர மரணத்தின் தேடல் அல்ல.

இனி என் கவிதையின் பொருளைப்பார்ப்போம்.

என் உயிர்
உனக்காக ஊதுபத்தியாய்ப் புகைகிறது
அது உதிர்க்கும் சாம்பலையாவது
உன் கைகளில் ஏந்திக்கொள்
நான் மரணத்திலும் வாழ்வேன்

பெண்ணே நான் உன் மீது என் உயிரையே வைத்திருக்கிறேன். நீ என் மீது கொண்ட காதலை மறைத்து மறந்து எனக்கு மரண அவதிகளைத் தராதே. என் உயிர் ஊதிபத்தியைப்போல் நொடிதோறும் கரைந்துகொண்டே இருக்கிறது. அது சிறுகச்சிறுக சாகும் இந்த வேதனைக்கு தூரமாய் இருந்தாவது உன் அன்பெனும் ஆறுதலைக்கொடு. நீ என்னோடு வாழாவிட்டாலும் பரவாயில்லை. நான் இந்த மரண வலியின் கொடுமையிலும் நிம்மதியாய் வாழ்வேன் என்கிறான். தற்கொலை செய்துகொள்வேன் என்று அவன் கூறவில்லை. இப்போதும் உயிர்வாழ்வேன் என்றே கூறுகிறான்.

காதல் என்பது ஓர் அற்புதமான உணர்வு. அது மனிதன் பிறந்த முதல் அழுகை நாள்முதல் அவன் பிறர் அழ இறக்கும் இறுதி நாள் வரை நீடிக்கும். காலத்துக்கும் கோலத்துக்கும் ஏற்ப அதன் வெளிப்பாடுகளில் மாற்றம் இருக்கும். ஆனால் காதலே இல்லாமல் மனிதன் மனிதனே அல்ல.

பிறந்த ஒவ்வோர் உயிரும் தன்னைச் சூழ்ந்துள்ள உயிர்களின் காதலுக்காக ஏதேனும் இயன்றதைச் செய்ய வேண்டும் அதுவே இந்தப் பிரபஞ்சம் வசந்தம் பூக்கும் வாழ்க்கைக்குப் பஞ்சமின்றி வாழத் தகுந்த சொர்க்கமாய் மாறும். நமக்கெல்லாம் சொர்க்கம் வேண்டுமா நரகம் வேண்டுமா? நாம் வாழும்போதே என்பதுதான் மிக முக்கிய கேள்வி!

5 comments:

சாதிக் அலி said...

அருமையான விளக்கங்கள். நம் நாட்டில் எதற்கெடுத்தாலும் தற்கொலைகள். அரசியல் வெறியிலும் தீக்குளிப்புகள். தலைவர்கள் சுகமாக இருந்துக்கொண்டு வெறியை ஏற்றிவிட்டு விட்டு தொண்டர்கள் தீக்குளிப்பதில் குளிர்காய்கிறார்கள். தற்கொலை செய்துகொண்டவரின் குடும்பம் தான் அந்தோ பரிதாபம். பொதுவாக தற்கொலை செய்வது கோழைத்தனம். ஆனால் நம் நாட்டில் சமீப காலமாக அதை வீரமரணம் என்கிறார்கள். சரி எதற்கோ ஆரம்பித்து எதையோ புலம்பிக்கொண்டிருக்கிறேன்.
If love goes wrong, Nothing goes right என்பார்கள் அழகாக ஆங்கிலத்தில்.

ஆமாம் மிகவும் சரியான சொற்றொடர்.


இவ்வுலகமே உன்னை வெறுத்து உன் மனைவி உன்னை நேசிப்பாளேயானால் , நம்புவாளேயானால் யாருமில்லாத தீவில் கூட நூறாண்டுகள் சுகமாய் வாழலாம். மாறாக, இந்த உலகமே உன் கையிலிருந்தாலும் உன் மனைவி உன்னை நேசிக்கவில்லையென்றால் அது நரக வாழ்க்கை தான்.


இது எந்த அறிஞர் சொன்னது என்று கோட்கிறீர்களா? சத்தியமா நானுதாங்கோ....

சாந்தி said...

அருமையான விளக்கம்.. ஒருவேளை என்னை போல சிலர் இவ்வாறு ஆழத்துக்கு போகாதவராய் , ரசிக்காதவராய் இருக்கலாம்..

என்னை பொறுத்தவரை கடமை முதலில் .. அப்புரம்தான் காதல்..

ஒருத்தியையே காதலித்து கற்பனையில் நேரம் செல்வழைத்தால் மற்ற நம்மை நம்பியிருக்கும் ஜீவன்களை பற்றி எப்படி சிந்திப்பதாம்..?.. இவ்வுலகை பற்றி.???? .. சமுதாயத்தை பற்றி யார் சிந்திப்பது..?

பள்ளி , கல்லூரி காலத்திலேயே இந்த காதல் , கண்றாவியாய் துரத்தியதால் அதன் மேல் ஒரு வெறுப்புதான் இருந்தது எனக்கெல்லாம்..( அண்ணா, அம்மா தான் பாடிகார்ட் எனக்கு..)

அதிலும் கவிதை எழுதி திரிபவர்களை பார்த்தாலே லூஸுகளாய் தோணும்..மன்னிக்கவும்..( ஆனா ,இப்ப 2 வருடம் நானும் செஞ்சேன்ல தமிழ் கவிதை தெரியும்னு பில்டப் கொடுக்க )

ஏன் இப்படி நேரத்தை செலவு செய்துகிட்டுன்னு இருக்காங்க னு தோணும்..?..

காதல் என்பது என்னை பொறுத்த வரையில் புரிதல்...அது இருந்தால் போதும்..

தினமும் கணவனோ , மனிவியோ " ஐ லவ் யூ டா செல்லம் " னு சொல்லிட்டா காதலா..? ம்ஹூம்.. அவரவர் கடமையை சரியா செஞ்சுட்டு அமைதியா இருந்தாலே போதும்..

கல்யாண நாள் பொறந்த நாள், இதெல்லாம் நியாபகம் வெச்சுக்கணுமா?.. தேவையேயில்லை , நிஜமான அனுசரிப்பில் , புரிதலில்..

என்னை உயிருக்குயிராய் நேசிக்கிறேன் என சொல்பவரை/ளை விட இந்த சமுதாயத்தை , உலகத்தை ,உலகின் மக்களை நேசிப்பேன் , அவர்களுக்காக ஏதாகினும் இந்த வாழ்நாளில் செய்யணும் என்பவரே/ளே என் பிரியமானவராய் இருக்க முடியும்..

மற்றபடி காதல் சுயநலம்..உருகுவதெல்லாம் நமக்கு அலெர்ஜி..அதனால்தான் காதல் இல்லையேல் சாதல் என்பது முட்டாள்தனம் என்னைப்பொறுத்தவரையில்...

நிஜமான காதல் எல்லாரையும் வாழ வைக்க நினைக்கும் , காந்தியின் தேசத்தின் மீதான காதல் போல...அந்த காதல் தான் நான் தேடுவது..( பாக்கலாம் அடுத்த ஜென்மத்தில் ஒரு ஆணாய் பிறந்தால்.:) )

கவிஞர் என்னை மன்னிக்கணும்.. கடவுள் என்னை வித்யாசமா படைச்சிட்டார் போல...

பூங்குழலி said...

கடமை என்பது முதலில் ....
உண்மைதான் சாந்தி .இதை மறந்து காதலுக்கு சகலமும் துறந்து திரிபவர்கள் தான் காதலை இழிவு செய்கிறார்கள் .மற்றபடி எல்லா உயிர்க்கும் காதல் தேவை தான் ..அது கிடைத்தவர்கள் அதை கொண்டாடுகிறார்கள் ,கிடைத்து தவறவிட்டவர்கள் அதன் நினைவுகளில் இனிமை தேடுகிறார்கள் ,கிடைக்கவே கிடைக்காதவர்கள் அது இல்லை என்று சொல்கிறார்கள் இல்லாவிட்டால் அதை தேடுகிறார்கள் .

(புகாரி ரொம்ப அனுபவித்து பல விஷயங்களை எழுதுகிறீர்கள் .காதல் +மரணம் ,காணி நிலம் ,அத்திக்காய் என )

புன்னகையரசன் said...

ஆசான்

ஆண் பெண் உறவு மட்டுமே காதலா...

கடமை என்பது என்ன...

நாம் நம் குடும்பத்தின் மீது வைக்கும் பாசமும் அக்கறையும் கூட காதல் தானே...

எல்ல காதலையும் சரியாக செய்தால் சரிதானெ... என்ன குழப்பம்..

புரியவில்லை ஆதலால் கேட்கிறேன்...

--
பிரார்தனைகளுடன்...
M.I.B

Unknown said...

புன்னகையரசன்,

கடவுள் மீது பக்தன் கொண்டிருப்பதும் காதல்தான்!
இந்த உயிர்கள் மீது நாம் வைக்கும் பரிவும் அன்பும்கூட காதல்தான்!
இவை அனைத்துக்கும் ஆதாரமானது ஆண் பெண் உறவு

அன்புடன் புகாரி