நான் கனடா வந்து டொராண்டோவில் சந்தித்த மிக உன்னத மனிதர்களுள் திரு அ. பொ. செல்லையாவும் ஒருவர். இலங்கையில் தலைமை ஆசிரியராய் பணியாற்றியவர். இந்தியாவில் படித்தவர். பேச்சிலும் மூச்சிலும் எப்போது திராவிட மணம் கமழும். திருக்குறளை அருமையாக விளக்கி நாள்தோறும் வானொலிகளில் உரையாற்றுவார். ஏராளமான தமிழ் வரலாறு கட்டுரைகளை நாளேடுகளில் எழுதுவார். அன்பானவர் மிகுந்த பண்பானவர். என்மீதும் என் கவிதைகள் மீதும் தனியன்பு கொண்டிருந்த அவருக்கு புற்றுநோய் வந்ததை நானறியேன். அறிய நேர்ந்தபோது அவர் அரைமேனியாய் இருந்தார், என்னைக் கால் உயிராய்த் துடிக்கவைத்தார். பின்னொருநாள் அது நடந்தே விட்டது. அந்த கறுப்புநாளில் நான் அவருக்கு அஞ்சலி செலுத்த சென்று வாசித்த கண்ணீர் மணிகள்தாம் இவை. அவரின் அஞ்சலி நாளில் நான் அவசியம் மேடையேறவேண்டும் என்று தம்பி செந்தியிடம் சொன்னாராம். செந்தி அதை நான் மேடையை விட்டு கீழிறங்கி வந்ததும் சொன்னபோது மீண்டும் செத்துப்போனேன்
கண்ணீர் வரிகள்... என் இதய வரிகளை மறைக்கின்றன
எல்லாம் உதிர்ந்துபோக
எஞ்சி இருக்கும் வேர் என்ற மூல உயிரோடு மட்டுமே
மொட்டையாய் நிற்கும் பனிக்கால மரத்தைப் போல
நிற்கிறேன் நான் இந்த மேடையில்
ஒரே நாளில் சட்டென்று வந்த துக்கமல்ல இது
சிறுகச் சிறுக என் இதய உண்டியலில்
கண்ணீர் கண்ணீர் என்று விழுந்து... சேமித்துக்கொண்ட துக்கம்
சட்டென்று இன்று... ஓர் இடிமழையாய்க் கொட்டியபோது
எதிர்பார்த்ததுதான் என்றாலும்... முற்றுப் பெறாத சிக்கல் வந்து
நகர மறுக்கும் வீம்போடு.... மூச்சுக்குழாய்களில் சிக்கிக்கொண்டது
என் அன்பிற்கினிய ஐயா....
பாதியாய்க் குறைந்துபோன மேனியோடு நீங்களிருக்க
இரட்டிப்பாய் விரிந்துபோன விழிகளோடு நான் பார்த்தேன்
உங்களை என் புத்தக வெளியீட்டு விழாவில்
என்னய்யா இப்படி என்றேன்
என் ஆச்சரியம் நெற்றிப் பொட்டில் முட்டிமோத
ஆமாம் புகாரி... கொஞ்சம் உடல்நலமில்லை
மருந்துண்பதால் இப்படி... விரைவில் மாறிப்போகும் என்று
கவலைகளின் பெரும் பள்ளத்தாக்கை
தவறியும் தளராத.... வார்த்தைத் திரைகளால் மூடி மறைத்தீர்கள்
ஆனால்.... உன்னைக் காணத்தான் வந்தேன் புகாரி என்று
உங்கள் விழிகள் என்னைத் தேடித் தேடித் தேடி முத்தமிட்டன
இங்கிருக்க வேண்டாம் வாருங்கள் என்று
மேடைக்கு அழைத்துவந்து அமரவைத்தேன்
எப்போதும் நான் உங்களுக்குத்தரும் மரியாதை... அன்று....
இரட்டிப்பாய் உயர்ந்ததை என் ஒவ்வொரு செல்களிலும் உணந்தேன்
"புகாரியின் விழாவிற்கு வந்தே தீருவேன் என்று
வம்பு செய்து வந்திருக்கிறார் அண்ணே" என்று... செய்தி தந்தார் செந்தி
நான் காணாத நேரம்பார்த்து
மேடையை விட்டுப் போய்விட்டீர்கள் ஐயா
நான் விட்டுவிட்டேன்
நான் காணாத நேரம்பார்த்து
மண்ணையும் விட்டுப் போய்விட்டீர்களே ஐயா
எப்படியய்யா விடமுடியும்?
அன்று மேடையை விட்டு விடைபெற்றதும்
இன்று மண்ணையே விட்டு விடைபெற்றதும்
உங்களுக்கு உங்களின் சங்கடம் போக்கும்
சௌகரியமானமான காரியங்கள்தாம்
எப்படித்தான் மனதைத் தேற்றித் தேற்றிப் பார்த்தாலும்
எங்களுக்கோ சங்கடமொன்றையே தருவதாகவே இருக்கிறதே ஐயா
நான் தமிழ்ப்பற்று மிக்க பலரை
அவ்வப்போது என் வாழ்வில் கண்டிருக்கிறேன்
தமிழாகவே நிற்கும் உங்களைப்போல் நான் அதிகம் கண்டதில்லை
என் மேடைகளை விட்டிறங்கி மெல்லிய குரலில்
நான் உங்களிடம் அவ்வப்போது கேட்பேன்
எப்படி ஐயா என் பேச்சு என்று
உள்ளன்போடு பாராட்டிவிட்டு... உரிமையோடு ஒரு முறை சொன்னீர்கள்
கவிதைகள் வாசிக்கும் போதுமட்டும்
இன்னும் கொஞ்சம் உரத்து வாசியுங்களேன் என்று
இன்றும் உங்கள் சொல் கேட்கவே நான் விரும்புகிறேன் ஐயா
ஆனால் இயலவில்லையே... எனக்கு இயலவில்லையே...
மேலுலகம் என்றொன்றிந்தால்... வள்ளுவர் காத்திருப்பார் அங்கே
"கேட்டது.... உன் குரலில் என் குறள்"
என்று உங்களை.... வாரியணைத்து நன்றி சொல்ல
நான் கவிஞன்தான் ஐயா....
ஆனால்.... நானிங்கே வாசிப்பது கவிதையல்ல
இன்று... வாழும் வாய்ப்பிருக்கும் எனக்கு
அன்பும் அறிவும் பொங்கும் உங்கள் திருமுகத்தை
ஆறுதலாய்க் காண.... ஓடி வருகின்ற வாய்ப்பு அமைந்தது
அதைக் கண்டு வலுவிழந்து துடிக்கும் இதயத்தின்
புலம்பல்களை இறக்கிவைக்காமல்... நான் எங்கே போகமுடியும்?
அழுவோன் எவனும் என்னை அணுகாதே என்ற வைராக்கிய உள்ளத்தோடு
தெரிந்துபோன மரணத்தை உங்களின் சுண்டுவிரலால்
சுண்டிச் சுண்டி நகைத்த மன உரம் உங்களுக்கே வரும்
புகாரி... பதினைந்து தினங்களில்
நான் இந்த மருத்துவமனை விட்டு வீடுவருவேன்
நாம் ஆற அமர அமர்ந்து தமிழ் பேசுவோம் என்றீர்களே ஐயா
......எந்த வீட்டைச் சொன்னீர்கள்?
சாவு ஒன்றும் புதியதில்லைதான்
இந்த உலகின் எத்தனையோ மனிதர்கள்
பிறக்கிறார்கள் தினம் தினம்.... இறக்கிறார்கள் தினம் தினம்...
இறந்தும் பிறக்கும் ஜீவ உயிர் கொண்ட தமிழறிஞர் நீங்கள்
.....உங்களுக்கு ஏது மரணம்?
என்னில்... எழில் தமிழில்... தமிழர்தம் நெஞ்சில்....
என்றும் என்றும் என்றென்றும்
வாழ்வீர் வாழ்வீர் வாழ்வீர் ஐயா