அம்மா என்று அன்போடு அழைத்தால் இப்போதெல்லாம் பெண்கள் கோப்படுகிறார்கள். ”எனக்கென்ன அம்புட்டு வயசா ஆயிடுச்சு?” என்று மூக்குநுனி மின்ன இதழ்கள் ஒட்டியொட்டிப்பிரிய நெற்றி நெறிய கேட்கிறார்கள். அம்மா என்பதற்குப் பொருள் ஒன்றே ஒன்றுதானா? எத்தனை ஆயிரம்? அவற்றுள் சிலவற்றை மட்டும் நான் இங்கே குறிப்பிடுகிறேன் பாருங்கள்
அம்மா - தங்கை
அம்மா - மகள்
அம்மா - பேத்தி
அம்மா - வேலைக்காரி
அம்மா - தாய்
அம்மா - எஜமானி
அம்மா - நண்பரின் தாய்
அம்மா - கருணையோடு பிச்சையிடுபவள்
அம்மா - காதலி (மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா)
அம்மா - நண்பன் (என்னம்மா கண்ணு சௌக்யமா?)
அம்மா - பாரதியின் செல்லம் (கண்ணம்மா)
அம்மா - அன்னை தெரசா (மத்த எல்லாரையும்விட இந்த அம்மாவைத்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்)
அம்மா - தமிழ் (தமிழன்னை)
அம்மா - தெய்வம்
அம்மா - மருத்துவர் (டாக்டரம்மா என்னைக் கொஞ்சம் திரும்பிப்பாரம்மா)
அம்மா - துன்பம் அகன்ற நிம்மதி (அம்மாடி இப்பதான் நிம்மதியா இருக்கு)
அம்மா - வலியின் வேதனையில் தன்னைமறந்து சொல்லும் சொல்
அம்மா - கலைஞரின் எதிர் இருக்கை :)
அம்மா - மணமான பெண்ணை அழைக்கும் மரியாதைச் சொல்
அம்மா - பெண்கள்
அம்மா - தாய்க்குலம்
இவ்வளவையும் விட்டுவிட்டு (இன்னும் இருக்கு) ஒரே ஒரு பொருளை மட்டும் எடுத்துக்கொள்வது என்ன ஞாயம்? தமிழன்னை வயதானவளா? என்றென்னும் இளமையானவளல்லவா? அன்னைதெரசா என்று அழைத்தது வயதின் காரணமாகவா? கொஞ்சம் யோசிங்கம்மா!
எல்லாம் சரிதான், ஆனால் எனக்குப் பிடித்த ஒன்று எதுவென்றால், எந்தப் பெண் தன்னை எப்படி அழைக்க விரும்புகிறாளோ அப்படியே அழைப்பதுதான்.
பெண்களைச் சந்தோசப்படுத்தாவிட்டால் எவருக்கும் சொர்க்கம் என்பது இங்கும் இல்லை அங்கும் இல்லை எங்கும் இல்லை!
11 comments:
//பெண்களைச் சந்தோசப்படுத்தாவிட்டால் எவருக்கும் சொர்க்கம் என்பது இங்கும் இல்லை அங்கும் இல்லை எங்கும் இல்லை!//
கலக்கிப்புட்டீங்க.....:-)
அம்மா என்ற சொல்லுக்கு ஏதேதோ அர்த்தம் சொல்லி எங்கள் அம்மாவை புறந்தள்ளிய உங்கள் கவிதையை ஏற்க புரட்சித் தலைவியின் போர் வாள்கள் நாங்கள் தயாராக இல்லை -:)))))))))
அருமை..
என் மகன்களையும் நான் என்னம்மா , வாம்மா, தாங்கம்மா னு தான் சொல்லுவேன்..:))
" மா" போட்டு அழைப்பது ஒரு பாசம்தான்...
பெண்ணாய் இருந்தால் என்னடா னு கொஞ்சியிருப்பேன்..:(
--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
அருமை..
அம்மா என்பது ஒரு அழகான சொல் புகாரி ..அது அழைப்பவர்கள் பாசத்தை காட்டுகிறது
ஆசான் உங்கள் வழக்கமான டச் இல்லையே...
என்னமோ மிஸ்ஸிங்...
எனக்கு என்னை யாராச்சும் மா போட்டு அழைத்தால் பிடிக்கும்.
நானும் பிறரை (நேசத்துக்கு உரியவர்களை மட்டும்) "மா" சொல்லி அழைப்பதும் வழக்கம்.
இது ஆழ் மனதிலிருந்து தானாய் வருவது.
--
நட்புடன்
மீரான்
உடல் களைத்தாலும் "அம்மா" என்ற சொல் வரும்
நல்லபடியாக ஒரு காரியம் முடிந்தால் "அம்மாடி நல்லபடியாக் முடிந்தது "என்றும் வரும்
அம்மா என்ற சொல்லில் அகிலமும் அடங்கும் என் சொல்லிவிட்டால் போகிறது.
எதற்கு இத்தனை விளக்கங்கள். தாங்கள் எவ்வளவு தான் விளக்கி கூறினாலும்
பன்பாடை மறந்த பெண்கள் கோபப்படத்தான் செய்வார்கள்...
அப்பா என்ற வார்த்தையை இதே போல் சொல்வதுண்டா?
--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
அம்மம்மா இதில் இவ்வளவு இருக்கின்றதா?
Post a Comment