ஆனந்தம் நிறைந்த முதல் அழுகை

நம் வாழ்க்கை நம்மிடம்தான் இருக்கிறதா அல்லது யார் யாரோ அதை எடுத்துக்கொண்டு எங்கெங்கோ ஓடி ஆடி விளையாடுகிறார்களா?

பிறந்து விழுந்த உடனேயே நம்மையும் அறியாமல் நாம் நம் வாழ்க்கையை தேடி விழிகளால் புறப்படுகிறோம். அல்லது புறப்பட்டதாய் பிற்காலத்தில் கற்பனை செய்துகொள்கிறோம்.

பிறந்து விழுந்ததும் வாழ்க்கைக்குள்ளேயே படுத்துக்கொண்டு வாழ்க்கையை எங்கே தேடி ஓடுவது?

ஆம், அம்மா மடியைவிட வேறு வாழ்க்கை இருக்க முடியுமா? அம்மா மடியின் கதகதப்பில் கண்கள் மூடிக்கிடக்கிறோம்.

சுகமான வாழ்க்கை. வேறு எப்போதும் எங்கேயும் கிடைக்கவே கிடைக்காத சுகம்கொண்ட பெருவாழ்க்கை.

தாய்ப் பாலின் சூடு இதயத்தின் இடுக்குகளிலும் பரவிக்கிடந்த நாட்கள் ஞாபகங்களில் இருப்பதில்லை ஆனால் மிகுந்த சுகத்தோடு அனுபவித்திருக்கிறோம்.

இதில் ஒரு சங்கடம் உண்டு. எதை நாம் அனுபவிக்கிறோமோ அதை அனுபவிக்கிறோம் என்ற உணர்வில்லாமல் அறிவற்றிருப்பது. அதன் மேன்மை தெரியாமல் அதை விட்டு விட்டு எழுந்து ஓடுவது. பின் அந்த பாச சூட்டின் தேவ ஈர்ப்பால் மீண்டும் ஓடி வந்து தன்னை அறியாமலேயே ஒட்டிக்கொள்வது.

எல்லாம் சரிதான், ஆனால் அந்த பாக்கியம் என்பது எல்லோருக்கும் ஒன்றுபோலவே நிறைவாய் கிடைப்பதில்லையே என்பதுதான் சிலருக்கு அல்லது பலருக்கு மன்னிக்க முடியாத உண்மை.

ஆனாலும் குறைந்த பட்ச தாயன்பு என்பதுகூட ஒரு வரம்தான். நாம் வாங்கிவந்த வரம்தானே நம் வாழ்க்கையின் நீள அகலங்களாகிறது.

ஆனாலும் ஒன்றை இங்கே சொல்லவேண்டும். தன்னை எட்டி எறியும் தாயை அதன் பிள்ளை அதிகமாக நேசிக்கிறது. அவள்பின் அழுதழுது ஓடுகிறது.

அதுதான் மானிடத்துக்கு மட்டுமல்ல விலங்கினத்திற்குமான பிறப்பின் ரகசியம்.

கௌரவம் கோபம் தன்மானம் என்று எது வந்து முட்டியும் விலகியோட நினைப்பதே இல்லை.

தாயின் நினைவும் தாய்ப்பாச ஏக்கமும் இதுபோன்ற குழந்தைகளின் மனோநிலையை வெகுவாக பாதித்துவிடுகின்றன. கொஞ்சும் பிஞ்சிலேயே வஞ்சிக்கப்பட்ட பைத்தியம் ஆகிவிடுகின்றன. அந்த ஏக்கமும் துக்கமும் தன் இறுதிநாளிலும் தீர்வதே இல்லை.

எதை கண்டாலும் தாயாய் நினைக்கும் மனோநிலை உயர்வானதா தாழ்வானதா என்று பட்டிமன்றமே நடத்தலாம்.

அதில் வெல்பவர் பிஞ்சு ஏக்கத்தால் பைத்தியமாக்கப்பட்டு கண்ணீராய் கரைந்தோடுபவராய்த்தான் இருக்கமுடியும்.

சகோதரியை கண்டால் இவள் என் தாய் என்று நினைப்பது. தோழியை கண்டால் இவள் என் தாய் என்று சிலிர்ப்பது. காதலியைக் கண்டால் இவள் என் தாய் என்று உருகுவது. மனைவியை கண்டால் இவள் என் தாய் என்று அழுவது. மகளை கண்டால் இவள் என் தாய் என்று குழைவது. பேத்தியை கண்டாலும் இவள் என் தாய் என்று பிணாத்துவது.

இப்படியாய் எதிலும் எப்போதும் தாயை காணும் கண்கள் கிட்டாத தாய்ப்பாசத்துக்கு ஏங்கி ஏங்கி நீர்வழிந்த கண்கள்தாம்.

விரும்பாதவளாய் இருந்தாலும் தன் தாயைப் பிரிய எந்த குழந்தையும் விரும்புவதே இல்லை. பள்ளிக்கு செல்வது என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் பெரும் துயரம் நிறைந்த பாலைத்திணை.

தாயின் மடியில் எல்லாம் பெற்ற பிள்ளைகள் கொஞ்சம் பிரிந்து பள்ளிசெல்ல விரும்புவது உண்டு. ஆனால் தாயின் பாசத்துக்காக ஏங்கும் பிள்ளைகள் அழுது புரளுமே தவிர பள்ளி செல்ல விரும்புவதில்லை.

ஆனாலும் பள்ளிக்கு சென்றுதானே ஆகவேண்டும். அங்கே பள்ளியில் தமிழாசிரியர் பாடம் நடத்தினார். 'அ' என்று எழுதினார் குழந்தைகள் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தன. ‘ஆ' என்று எழுதினார் ஓ அப்படியா என்று பார்த்துக்கொண்டிருந்தன. 'இ' என்று எழுதினார் அவ்வளவுதான் அதில் ஒரு குழந்தை அழத்தொடங்கிவிட்டது. 'அம்மா அம்மா அம்மா' ஒரே அழுகைதான். நிறுத்தவே இல்லை. அந்தக் குழந்தையின் தாய் அமர்ந்திருந்தால் அது 'இ' போல இருக்கும் என்பதால் அந்தக் குழந்தையின் அழுகை நிற்கவே இல்லை.

ஆம், நம் முதல் அழுகை தாயோடுதான் தாய்ப்பாலுக்காகத்தான் தாயின் கதகதப்யைத் தேடித்தான், தாய்மடி என்ற சொர்க்கத்தை விட்டுப்பிரியாத நிலைக்காகத்தான்.

4 comments:

சாந்தி said...

அழகா வடித்துள்ளீர்கள் குழந்தையின் ஏக்கத்தை..

இதேபோல் ஒரு தாயின் / தந்தையின் ஏக்கத்தை வடிக்க தோன்றுகிறது.

பூன்குழலி said...

>>>>ஆம், அம்மா மடியைவிட வேறு வாழ்க்கை இருக்க முடியுமா? அம்மா மடியின் கதகதப்பில் கண்கள் மூடிக்கிடக்கிறோம். சுகமான வாழ்க்கை. வேறு எப்போதும் எங்கேயும் கிடைக்கவே கிடைக்காத சுகம்கொண்ட பெருவாழ்க்கை. <<<<


உண்மை உண்மை உண்மை


>>>>இதில் ஒரு சங்கடம் உண்டு. எதை நாம் அனுபவிக்கிறோமோ அதை அனுபவிக்கிறோம் என்ற உணர்வில்லாமல் அறிவற்றிருப்பது. <<<<


கையில் இருப்பதன் மதிப்பை அது விலகும் வரை அறியாதிருப்பது வேதனை + மடமை


>>>>சித்திரையில் பிறந்து சீரழிச்சிட்டான் என்று தனக்கான அனைத்தும் இவள்தான் என்று நினைத்திருக்கும் தன் அன்பு தாயின் வாய் எப்போதும் வெறுப்போடு உச்சரித்தபடியே தனக்கு ஊட்டியும் விட்ட நிலை சிலருக்கு வாய்ப்பதுண்டு. <<<<


ஆமாம் .பெண் குழந்தை என்பதால் இழிவாய் நடத்தும் அம்மாக்களும் உண்டு தானே


>>>>எதை கண்டாலும் தாயாய் நினைக்கும் மனோநிலை உயர்வானதா தாழ்வானதா என்று பட்டிமன்றமே நடத்தலாம். அதில் வெல்பவர் பிஞ்சு ஏக்கத்தால் பைத்தியமாக்கப்பட்டு கண்ணீராய் கரைந்தோடுபவராய்த்தான் இருக்கமுடியும். சகோதரியை கண்டால் இவள் என் தாய் என்று நினைப்பது. தோழியை கண்டால் இவள் என் தாய் என்று சிலிர்ப்பது. காதலியைக் கண்டால் இவள் என் தாய் என்று உருகுவது. மனைவியை கண்டால் இவள் என் தாய் என்று அழுவது. மகளை கண்டால் இவள் என் தாய் என்று குழைவது. பேத்தியை கண்டாலும் இவள் என் தாய் என்று பிணாத்துவது. இப்படியாய் எதிலும் எப்போதும் தாயை காணும் கண்கள் கிட்டாத தாய்ப்பாசத்துக்கு ஏங்கி ஏங்கி நீர்வழிந்த கண்கள்தாம்.<<<<


உண்மைதான் .அதன் பொருட்டே வேறொரு வடிவில் தாய் கிடைக்க மாட்டாளா என்று ஏங்கித் தவிக்கிறார்கள்


>>>விரும்பாதவளாய் இருந்தாலும் தன் தாயைப் பிரிய எந்த குழந்தையும் விரும்புவதே இல்லை. பள்ளிக்கு செல்வது என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் பெரும் துயரம் நிறைந்த பாலைத்திணை. தாயின் மடியில் எல்லாம் பெற்ற பிள்ளைகள் கொஞ்சம் பிரிந்து பள்ளிசெல்ல விரும்புவது உண்டு. ஆனால் தாயின் பாசத்துக்காக ஏங்கும் பிள்ளைகள் அழுது புரளுமே தவிர பள்ளி செல்ல விரும்புவதில்லை.

ஆனாலும் பள்ளிக்கு சென்றுதானே ஆகவேண்டும். அங்கே பள்ளியில் தமிழாசிரியர் பாடம் நடத்தினார். 'அ' என்று எழுதினார் குழந்தைகள் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தன. ‘ஆ' என்று எழுதினார் ஓ அப்படியா என்று பார்த்துக்கொண்டிருந்தன. 'இ' என்று எழுதினார் அவ்வளவுதான் அதில் ஒரு குழந்தை அழத்தொடங்கிவிட்டது. 'அம்மா அம்மா அம்மா' ஒரே அழுகைதான். நிறுத்தவே இல்லை. அந்தக் குழந்தையின் தாய் அமர்ந்திருந்தால் அது 'இ' போல இருக்கும் என்பதால் அந்தக் குழந்தையின் அழுகை நிற்கவே இல்லை.<<<<

இ என்ற எழுத்தை உங்கள் மகள் திருமண வரவேற்பின் போது உங்கள் அம்மாவுடன் நீங்கள் ஒப்பிட்டது நினைவுக்கு வருகிறது ...

>>>>ஆம், நம் முதல் அழுகை தாயோடுதான் தாய்ப்பாலுக்காகத்தான் தாயின் கதகதப்யைத் தேடித்தான், தாய்மடி என்ற சொர்க்கத்தை விட்டுப்பிரியாத நிலைக்காகத்தான்.<<<<


அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் .குறிப்பாக குழந்தை பள்ளி செல்ல மறுப்பதை

ஆயிஷா said...

அழகான கருத்துக்கள். அத்தனையும் உண்மைகள்.
தாய்ப் பாசத்துக்காக ஏங்கும் நிலை நம் யாருக்கும் வர வேண்டாம். அதற்காகப் பிரார்த்திப்போம்.

"விரும்பாதவளாய் இருந்தாலும் தன் தாயைப் பிரிய எந்த குழந்தையும் விரும்புவதே இல்லை. பள்ளிக்கு செல்வது என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் பெரும் துயரம் நிறைந்த பாலைத்திணை. தாயின் மடியில் எல்லாம் பெற்ற பிள்ளைகள் கொஞ்சம் பிரிந்து பள்ளிசெல்ல விரும்புவது உண்டு. ஆனால் தாயின் பாசத்துக்காக ஏங்கும் பிள்ளைகள் அழுது புரளுமே தவிர பள்ளி செல்ல விரும்புவதில்லை."

இன்று இங்கு விடுமுறை தினம். எனக்கு காரியாலயத்தில் முக்கிய வேலை இருந்தது. என் மகள் வேலைக்குப் போக வேண்டாம் என முரண்டு பிடித்தாள். 12 மணிக்கு வந்து விடுவேன் எனக் கூறியே வந்தேன். சரியாக 12 மணிக்கு அவளிடம் இருந்து எனக்கு அழைப்பு. ஏன் இன்னும் வரவில்லை.... நீங்கள் வராவிட்டால் நான் பாடம் படிக்க மாட்டேன் என்று,,,,,
இதில் அவள் பிழை எதுவும் இல்லை. ஆசான் உங்க கருத்துக்கள் என்னை விழிப்படையச் செய்துள்ளது.
உங்க தெளிவான கருத்துக்களுக்கு என் நன்றிகள்.
அன்புடன் ஆயிஷா

தஞ்சை மீரான் said...

>>>>>எதை கண்டாலும் தாயாய் நினைக்கும் மனோநிலை உயர்வானதா தாழ்வானதா என்று பட்டிமன்றமே நடத்தலாம். அதில் வெல்பவர் பிஞ்சு ஏக்கத்தால் பைத்தியமாக்கப்பட்டு கண்ணீராய் கரைந்தோடுபவராய்த்தான் இருக்கமுடியும். சகோதரியை கண்டால் இவள் என் தாய் என்று நினைப்பது. தோழியை கண்டால் இவள் என் தாய் என்று சிலிர்ப்பது. காதலியைக் கண்டால் இவள் என் தாய் என்று உருகுவது. மனைவியை கண்டால் இவள் என் தாய் என்று அழுவது. மகளை கண்டால் இவள் என் தாய் என்று குழைவது. பேத்தியை கண்டாலும் இவள் என் தாய் என்று பிணாத்துவது. இப்படியாய் எதிலும் எப்போதும் தாயை காணும் கண்கள் கிட்டாத தாய்ப்பாசத்துக்கு ஏங்கி ஏங்கி நீர்வழிந்த கண்கள்தாம். <<<<<

தரமான கருத்துக்கள். அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்.