காதலும் உறக்கமும்

பிரசாத்:
எனக்கு ஒரு சந்தேகம் புகாரி, நீங்கள் எழுதிய கவிதைகளில் சில காதல்
உறக்கத்தை தொலைக்கும் என்ற கருத்தோடு உள்ளது. உண்மையிலேயே உறக்கத்தை
தொலைய வைக்குமா காதல். அனுபவமில்லாததால் அறிந்து கொள்ள கேட்கிறேன்.


நான்:
காதல் பொல்லாதது. அது குறிவைப்பதே முதலில் உறக்கத்தைத்தான். புரண்டு புரண்டு படுக்கும் பதின்ம வயது பெண்ணைக் கண்டால் தாய் கவலைகொள்கிறாள். இவள் காதலில் விழுந்துவிட்டால் என்று.


ஊரு சனம் தூங்கிருச்சி
ஊதக் காத்தும் அடிச்சிருச்சி
பாவி மனம் தூங்கலியே
அதுவும் ஏந்தான் தெரியலியே

என்று ஜானகியின் குரலில் வழியும் காதல் ஏக்கத்தைக் கேட்டிருப்பீர்கள். எனக்கு மிகவும் பிடித்த பாடல்களுள் அதுவும் ஒன்று.

கண்ணதாசன் பட்டுக்கோட்டையாருக்கெல்லாம் முன்பு மருதகாசி என்று ஒரு கவிஞர் அருமையாக திரையிசைப் பாடல்கள் எழுதிக்கொண்டிருந்தார். அவர் ஒரு பாட்டு எழுதினார். அந்தப் படம் ஊத்திக்கொண்டாலும் இந்தப் பாட்டுக்காகவே பேசப்பட்டது. அந்தப் பாடல் துள்ளல் இசையில் ஏ.எம். ராஜா குரலில் அழகாக வெளிவந்தது

தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா - காதல்
கண்கள் உறங்கிடுமா

காதலும் உறக்கமும் எப்படி நேரடித் தொடர்பு கொண்டிருக்கிறது பாருங்கள்.

இன்னொரு பாட்டு நான் அசந்துபோகும் பாட்டு. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாட்டு. இதை கண்ணதாசன்தான் எழுதி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நல்ல பழைய பாடலைக் கேட்டாலே கண்ணதாசனையே மனம் எண்ணிக்கொள்கிறது. அந்த அளவுக்குக் கண்ணதாசன் திரையிசைப்பாடல்களில் பலருக்கும் மயக்கம்.


தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று
தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னைக் கண்டு


காதலுக்கு எப்படி ஒரு வரையறை கொடுக்கிறார் பாருங்கள். தூங்காத கண். துடிக்கின்ற சுகம். அதென்ன துடிக்கின்றன சுகம். ஆமாம் காதலில் மட்டும்தான் வலி சுகமாய் இருக்கும். அப்படியான காதல் உறக்கத்தோடு கயிறிழுக்கும் போட்டி நடத்தாமல் இருக்குமா?

இன்னொரு திரையிசைப்பாட்டு இதுகூட கண்ணதாசனாய் இருக்கலாம். யாருக்குத் தெரியும். தேடிப்பிடித்து சரியான கவிஞர் பெயர் இட ஆசைதான் என்றாலும், இந்தக் கட்டுரை என்னை அவசரப்படுத்துகிறது :)


நீ இல்லாத உலகத்திலே நிம்மதியில்லை
உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை
காயும் நிலா வானில் வந்தால் கண் உறங்கவில்லை-உனைக்
கண்டு கொண்ட நாள் முதலாய் பெண் உறங்கவில்லை

கண்டு பின் அவனைக் கொண்ட நாள் முதலாக அவள் உறங்கவே இல்லையாம்! எப்படி இருக்கிறது கதை. நிலாவைப் பார்த்தாலே அம்மாவுக்குத் தூக்கம் வரவில்லையாம். அத்தனை காதல் வேதனை. அதுவும் காயும் நிலா. இலக்கியத்தில் காயும் நிலவை காதலோடு கட்டிப்ப்டித்து விளையாட விடுவார்கள்.

அத்திக்காய் காய்காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ

ஒரு பழம்பெரும் தமிழ்க்கவிதையை கண்ணதாசன் அருமையான திரை இசைப்பாட்டாகத் தந்தான். அதன் ஒவ்வொரு வரியும் கேட்கக்கேட்க சுவை. அதை வைத்துக்கொண்டு விடுகதை போட்டே விளையாடலாம்.

உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச் சுரைக்காயோ என்று எழுதி இருப்பார் கண்ணதாசன். என்ன ஒரு நயம் பாருங்கள். உள்ளம் எல்லாம் இளகாயோ, ஒவ்வொரு பேச்சு உரைக்காயோ என்று காய் காய் என்றே கனிகளைக் கொய்யக்கொடுத்தார் கண்ணதாசன். இப்படியே மாதுளங்காய் - மாது உள்ளம் காய், அவரைக்காய் - அவரை காய், கொற்றவரைக்காய் -கொற்றவரை (அரசரை) காய் என்று பாடல் மிகச் சுவையாய்ச் செல்லும். சரி நீண்டு விலகிவிடலாமல் மீண்டும் உறக்கத்துக்கே வருவோம்.

சரி பழைய பாடல்கள்தானா இப்படி உறக்கத்தையும் காதலையும் கைகலப்புச் செய்தன. புதிய பாடல்கள் இல்லையா என்று கேட்கலாம். இதோ காதல் படங்கள் எடுப்பதில் ஒரு கலைவண்ணத்தை அள்ளிக்கொட்டிய பாரதிராசா படத்திலிருந்து ஒரு பாடல்

நாளெல்லாம் ஏங்கிக்கிட்டிருக்கேன்,
சாமிக்கு வேண்டிக்கிட்டிருக்கேன்
தூக்கமில்ல... காத்திருக்கேன்
வீரபாண்டிக் கோயிலிலே, வருகிற தைப்பொங்கலிலே
வேண்டினபடியே பொங்கலும் வைப்பேன்,
கேட்டதை எல்லாம் கொடுக்கிற சாமிக்கு

என்று ஒரு கிராமியப் பெண் பாடுகிறாள். நாளெல்லாம் ஏக்கம் ராத்திரியும் தூக்கம் இல்லை. அடடா இந்தக் காதல் படுத்தும் பாடு கொஞ்ச நஞ்சமா? வலையில் விழுந்த மீன்களென இந்த வாலிப உள்ளங்கள் துடிப்பதென்ன என்ற நிலவே நீ சாட்சி பட பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது இப்போது. எழுதிய வாலியாக இருக்கலாம்.

சரி வைரமுத்து தன் திரையிசைப்பாடலில் என்ன சொல்கிறார் பார்ப்போமா? புதுக்கவிதை இலக்கியத்தை இயன்றவரை திரையிசைக்குள் புகுத்தியவராயிற்றே.


இசையை அருந்தும் சாதகப்பறவை போல நானும் வாழ்கிறேன்
உறக்கமில்லை எனினும் கண்ணில் கனவு சுமந்து போகிறேன்
தேவதை பாதையில் பூவின் ஊர்வலம்
நீயதில் போவதாய் ஏதோ ஞாபகம்
வெந்நீரில் நீராடும் கமலம், விலகாது விரகம்!

இதுவரை கண்ட பாடலுக்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் பார்த்தீர்களா? அதுதான் வைரமுத்து. அப்படியே புதுக்கவிதை தெறிக்கும்.

சரி ரொம்ப கிட்டத்தில் வந்த ஒரு பாடலைப் பார்ப்போமா? இதை எழுதியது நா. முத்துக்குமார் அல்லது யுகபாரதியாய் இருக்கலாம்.


அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண்ணுறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்

காதல் தவிப்பு என்றால் கண்ணுறங்கப்போவதில்லை என்று இளைய கவிஞர்களும் ஒப்புக்கொண்டார்களா? அதைவிட இளையவனான நான் என்ன செய்யமுடியும் :)

வெறும் திரையிசைப்பாடல்களாகவே தந்துவிட்டேனே என்று யாரும் வருந்தவேண்டாம். மிகப் பழந்தமிழ்ப்பாடல்முதல் இன்றைய நவீன கவிதைவரை காதலும் உறக்கமும் ஒன்றை ஒன்று விழுங்கித்தான் வாழ்கின்றன. இன்னொருநாள் அவற்றைத் தொகுக்க முடிகிறதா என்று பார்க்கிறேன்.

8 comments:

சாந்தி said...

அழகான பாடல்கள் .. அருமையான தொகுப்பு..

இப்படியெல்லாம் உள்ளே புகுந்து வரிகளை ஆராய்ச்சி செய்ததேயில்லை.. ( சந்தர்ப்பம் கிடைக்கலேன்னு சொல்லலாமோ)

நல்ல வேளை நமக்கு இந்த வியாதி வரவில்லை வாழ்நாளில்...

கவிஞர்ஸ் கோபம் வேண்டாம்..பிளீஸ்..:))

பூங்குழலி said...

"துயிலாத பெண்ணொன்று கண்டேன்"
என்றும் ஒரு அருமையான பாடல் உண்டு புகாரி .மீண்ட சொர்க்கம் என்று நினைக்கிறேன் .கேள்வியும் ஒற்றை சொல் பதிலுமாக வரும்.ஏ எம் ராஜா ,சுசீலா குரலில் ..மதுரமான பாடல்

சீனா said...

அன்பின் புகாரி -

ஆராய்ச்சி செய்யும் அள்விற்கு நேரம் இருக்கிறதா - செய்ய வேண்டும் என விரும்பும் போது நேரம் ஒத்துழைக்கிறதா

நன்று நன்று - நல்லதொரு ஆராய்ச்சி - நல்ல பதில்

நல்வாழ்த்துகள்

Unknown said...

பிரசாத்தின் கேள்விக்கு சுவாரசியமாக பதில் தரலாம் என்று தோன்றியது, ஓய்விலும் இருப்பதால், எழுதினேன். 10 நிமிடத்தில் எழுதிவிட்டேன்.

Anonymous said...

அறிவேன் பூங்குழலி

அது உரையாடலாய் வரும் என்று விட்டுவிட்டேன். சரி நாம் இந்த இழையைத் தொடர்வோமா?

அப்படியே ஞாபகத்தில் வரும் பாடல்களை எழுதுங்களேன். கவிதைகளையும்தான். சில கட்டுரை சிறுகதை நாவல்களில் வரும் வசனங்களையும் எழுதலாம்

பூங்குழலி said...

நடு இரவினில் விழிக்கின்றாள்

உன் உறவினை நினைக்கின்றாள்

அவள் விடிந்த பின் துயில்கின்றாள்
என்று ஒரு முறை கூறாயோ

ஆயிஷா said...

அருமையான பாடல்கள். அழகான தொகுப்பு. இரவு நேரங்களில் மெல்லிய ஓசையில் தனித்திருந்து இப்பாடல்களைக் கேட்கும் போது இனம் புரியாத சுகம் கிடைக்கும்.
நன்றி ஆசான்.....எனது பணிச் சுமைகளுக்கு ஒரு ஒத்தடமாக இந்த இழை இருந்தது.
அன்புடன் ஆயிஷா

பூங்குழலி said...

இனிய இசை மனதை வருடிக் கொடுக்கும் .சின்ன வயதில் இரவில் காதருகே டிரான்சிஸ்டரை வைத்துக் கொண்டு இந்த பாடல்களை கேட்ட படியே தூங்கி போயிருக்கிறேன்