கவிதையில் காதல் பற்றி!

மனிதனை இயக்கும் மகா சக்தி காதல்.

மனிதனை மட்டுமா இந்தப் பிரபஞ்சத்தையே இயக்கும் மகா சக்தி காதல். எல்லா வயதிலும் எல்லா பருவத்திலும் காதல் நம்மோடு இயற்கையாய் வாழ்கிறது. நம்மோடு வாழும் ஒன்றை நாம் பதிவு செய்வதைவிட மேன்மையானது ஒன்று உண்டா?

அநேகமாக உலகின் அத்தனைக் கவிஞர்களும் ஆரம்பத்தில் காதல் என்ற மகா சக்தியால் உந்தப்பட்டு கவிஞர்களாய் ஆனவர்களாய்த்தான் இருக்க முடியும் என்று தைரியமாகவே சொல்லிவிடலாம்.

”நல்லா கவிதை எழுதறீங்க. கற்பனை வளம் எழுத்து நடை எல்லாமே அமோகமா இருக்கு. ஆனால், இந்தக் காதல் கவிதைகள் எழுதறத விட்டுட்டு எப்போ நல்ல கவிதைகள் எழுதப் போறீங்க?”

அநேகமாய் ஒவ்வொரு கவிஞனும் இந்த வரிகளால் தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் வலைவீசிப் பிடிக்கப்பட்டிருப்பான்.

உங்கள் கவிதை நன்றாக இல்லை என்று சொல்ல ஒவ்வொருவருக்கும் விமரிசன உரிமை உண்டு, ஆனால் காதல் கவிதை எழுதாதே என்று சொல்ல எவருக்குமே உரிமை இல்லை.

பலருக்கும் ரோஜா தோட்டங்களைப் பிடிப்பதில்லையோ சுண்டைக்காய் பயிரிடுங்கள் என்று சட்டென்று சொல்லிவிடுகிறார்களே என்று சில நேரம் கவிஞனுக்குத் தோன்றும். ஆனால் உண்மை அப்படியே வேறுமாதிரியாய் இருக்கும். ஆம், ரோஜாத் தோட்டங்களில் புகுந்து வெளிவராமல் உருண்டு புரள்பவர்களின் முதன்மையானவர்கள் அப்படியான விமரிசகர்களாகத்தான் இருபார்கள்.

ஆனால் காதலோடு நின்றிவிடாமல் மற்ற தளங்களிலும் கவிதைகள் எழுதுங்கள் என்பதே அவர்களின் உண்மையான விமரிசனம் என்பதை கவிஞன் புரிந்துகொண்டுதான் இருக்கிறான். காதல் கவிதையால் அகரக்கவிதை எழுதிய கவிஞன் காதலோடு மட்டுமே நின்றுவிடுவதில்லை. பாரதியைப் போல எல்லாத் தளங்களிலும் நிச்சயம் சஞ்சரிக்கவே செய்வான். அப்படி சஞ்சரிக்கச் செய்யாமல் கவிதைச்சக்தி அவனை விடவே விடாது.

கவிஞன் ஒரு வினோதமான தாவரம். இந்தத் தாவரத்தில் ரோஜாக்களும் மல்லிகைகளும் பூக்கும். ஆப்பிள்களும் முந்திரிகளும் பழுக்கும். நெல்மணியும் கோதுமையும் விளையும். வெண்டைக்காய், கத்திரிக்காய், முருங்கைக்காய் என்று எதுவேண்டுமோ காய்க்கும். சில சமயம் கோழி முட்டை ஆட்டுக்கால் சூப்கூட கிடைக்கலாம்.

வெண்டைக்காய் மட்டுமே காய்த்தால்தான் நல்ல தாவரம் என்று கவிதைத் தாவரங்களிடம் எவரும் சட்டம் போடக்கூடாது. அவற்றை அவற்றின் இயல்பிலேயே விட்டால்தான், காய்ப்பவையும் பூப்பவையும் சிலிர்ப்புகள் உதிர்ப்பனவாய் அமையும்.

தாவரத்தை ஊசிகளால் குத்திக் காயப்படுத்தினாலோ ரம்பங்களால் அறுத்து கோடுகள் கிழித்தாலோ, விளைவு நன்றாக இருக்காது. சீக்கிரமே பட்டுப்போய் கீழே விழுந்துவிடவும் வாய்ப்புகள் உண்டு.

ஆனாலும் உண்மையான தாவரங்கள் இந்தக் கல்லெறிகளுக்கெல்லாம் கட்டுப்படாமல், தன் விருப்பம்போல் வாரிவழங்கி புசிப்போரைக் குவித்து நிலைத்துவிடும்.

கவிஞன் அப்படிப்பட்ட ஒரு தாவரம்!

நான் கவிதை எழுதவேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டு என்றுமே எழுத அமர்ந்ததில்லை. என் கவிதைகள்தாம் இவனைக் கவிதை எழுத வைக்கவேண்டும் என்று என்னை இழுத்துக்கொண்டுபோய் எழுத வைக்கின்றன.

அப்படி எழுதப்பட்டவைதாம் உண்மையான கவிதைகள் என்ற கர்வம் கொண்டவன் நான்.

ஆகவே காமத்துப்பால் எழுதுவதும் பொருட்பால் வடிப்பதும் அறத்துப்பால் இயற்றுவதும் என் கையில் இல்லை. எழுதி முடித்த கவிதைகளைத் தனித்தனியே பிரித்துத் தொகுத்து நூலாய் வெளியிடுவதுதான் என் கையில் இருக்கிறது.

தமிழ் மொழியில் மட்டுமல்ல உலக மொழிகளிலும் புறக்கவிதைகளைவிட அகக்கவிதைகளே ஏராளம் ஏராளம்!

அன்புடன் புகாரி

No comments: