கவிதையில் பொய்யும் மெய்யும் பற்றி சற்று விளக்குவீர்களா?

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

என்று பாரதி கூறுவது அறிவியல் கண்ணோட்டத்தில் அழகான பொய்யாகத்தான் தோன்றும்.  ஆனால் அது உண்மையில் பொய்தானா என்று நாம் சற்றே சிந்திக்க வேண்டும்.

வானம் என்பது கூரையும் அல்ல அது இடிந்துபோகக் கூடியதும் அல்ல. ஆனால் எந்த எல்லைவரை ஒருவனுக்கு அச்சமில்லை என்று சொல்ல கவிஞனுக்கு ஓர் உவமை தேவைப்படுகிறது. அங்கேதான் அவன் கற்பனை சிறகடித்துப் பறக்கிறது.

உச்சிமீது வானம் இடிந்து விழுந்தாலும் என்று வாசகனை கவிஞன் பெற்ற உணர்வின் உயரத்திற்கு உயர்த்திப் பார்க்கிறான். அடடா என்று வியந்து புரிந்துகொள்ளவும் வைத்துவிடுகிறான்.

அச்சமில்லை என்பது ஒரு மெய். அந்த மெய்யை அழுத்தமாகக் கூற கவிநயமிக்க ஒரு கற்பனை தேவை. அந்தக் கவிநயமிக்க கற்பனையே உச்சிமீது வானிடிந்து வீழ்ந்தாலும் என்பது. அந்தக் கவிநயமிக்கக் கற்பனை இல்லாவிட்டால் ரசிப்பதற்கும் சிலிர்ப்பதற்கும் கவிஞன் கண்ட அதே உச்சம் சென்று உணர்வதற்கும் ஏதாவது இருக்கிறதா?

இப்படியான கற்பனை நயங்களைச் சொல்வதால் கவிதைக்குப் பொய்யழகு என்று சொல்வது இலக்கியச் சுவையே ஏதென்றறியாத அறியாமைதானேயன்றி வேறில்லை.

இப்படிக் கற்பனை நயங்களைச் சொல்வது கவிஞன் மட்டுமா என்றும் பார்க்க வேண்டும்?

நிலாவைப் பிடித்து விளையாடத் தருகிறேன் ஒரு வாய் சோறு வாங்கிக்கொள் என்று தாய் நமக்குப் பாலூட்டும்போதே சொல்கிறாள். எனவே, தாய்மைக்குப் பொய்யழகு என்று சொல்வதா?

உனக்காக என் உயிரையும் தருவேன் என்கிறான் நட்பில் சிலிர்த்த ஒரு நண்பன். எனவே, நட்புக்குப் பொய்யழகு என்று சொல்வதா?

வானத்து நட்சத்திரங்களை எல்லாம் பிடித்துவந்து தோரணம் கட்டவா என்கிறான் ஒரு காதலன். எனவே, காதலுக்குப் பொய்யழகு என்று சொல்வதா?

இப்படியே போனால், வாழ்க்கைக்குப் பொய்யழகு என்று புரிந்துகொள்ள அதிக நேரம் பிடிக்காது.

எந்தக் கவிதையும் உண்மை என்ற அழுத்தமான தளத்தில்தான் காலூன்றி நிற்க முடியும். வெறும் கற்பனை மட்டுமே கவிதை ஆகிவிடாது. அப்படியானவை நிலைக்கவும் செய்யாது. அவற்றைப் போலிக்கவிதைகள் என்று நாம் விலக்கிவிடலாம். ஓர் உண்மையை அழுத்தமாகச் சொல்வதற்குக் கறபனை வளம் கூட்டி சொல்நயம் கவிநயம்கூட்டிச் சொல்வது காலத்தால் அழியாததாக நிலைத்து நிற்கும். மக்கள் மனதில் அழுத்தமான மாற்றங்களையும் விதைக்கும்.

நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளம் தென்றலே

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

முகத்தில் முகம் பார்க்கலாம் - விரல்
நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்

இந்த வரிகளை வாசிக்கும்போதே சட்டெனத் தெரிவது உண்மையா பொய்யா என்பது எவருக்கும் எளிதா இல்லையா?

இப்படியே நம் அன்றாட வாழ்வில் எத்தனையோ கவிநயமிக்க வரிகளை நாம் சொல்லிக்கொண்டே வாழ்க்கையை ரசித்து வாழ்கிறோம்.

தாயின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறது

நீரெல்லாம் கங்கை நிலமெல்லாம் காசி

என்று தொடங்கி எத்தனையோ நயமான வரிகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

இன்னொன்றையும் என்னால் சுவாரசியம் கருதிச் சொல்ல முடியும். பொய்யிலே பிறந்து பொய்யில வளர்ந்த புலவர் பெருமானே என்று கண்ணதாசன் பாடினார். என்றால் புலவர்கள் கவிஞர்கள் எல்லாம் பொய் மூட்டைகளா?

காயமே இது பொய்யடா
வெறும் காற்றடைத்தப் பையடா
என்றான் ஒரு சித்தன்.

உலகே மாயம்
வாழ்வே மாயம்
என்றான் ஒரு திரையிசைக்கவிஞன்.

இதன்படி பார்த்தால் காயம் (உடல்) என்ற பொய்யிலே பிறந்து, உலகம் (மாயம்) என்ற பொய்யிலே வளர்ந்து என்று பொருளாகிறது. ஆகவே, புலவர் பெருமான் மட்டுமல்ல உலகின் ஒவ்வோர் உயிரும் உடல் என்ற பொய்யிலே பிறந்து உலகம் என்ற பொய்யிலே வளர்ந்தவைதானே?

அன்புடன் புகாரி

Comments

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சென்னை விழா நன்றியுரை

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்