தமிழ் வளர புலம் பெயர்ந்த தமிழர் என்ன செய்ய வேண்டும்?

நான் பல தமிழ்ச் சங்கங்களுக்குச் சென்றிருக்கிறேன், பல இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன், ஈழத் தமிழர்கள் வாழும் கனடாவில் வாழ்கிறேன், தமிழகத் தமிழர்கள் நிறைந்திருக்கும் இடங்கள் பலவற்றுக்கும் சென்றிருக்கிறேன்.

அங்கெல்லாம் நான் கண்ட ஓர் கசப்பான உண்மை இதுதான். நாற்பதைக் கடந்தவர்களே அவை நிறைய வீற்றிருப்பார்கள். இளைஞர்கள் மிக அரிதாகவே தென்படுவார்கள்.

ஏன்?

இளைஞர்களை ஏந்திக்கொள்ளாமல் தமிழ் நாளைய தமிழாய் ஆகுமா? வெல்லத் தமிழ் இனி வெல்லுமா? நாம் அடிப்படையில் ஏதோ தவறிழைக்கிறோம்.

தமிழை அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் இருக்கையில் அமர்த்துவது அவசியம்தான் மறுப்பதற்கில்லை. ஆனால் அதைவிட செய்யவேண்டிய மிக முக்கியமான காரியம் ஒன்று உண்டல்லவா?

இன்றெல்லாம் இரண்டரை வயதிலேயே பிஞ்சுகள் பள்ளிக்குச் சென்றுவிடுகின்றன. ஆனால் அங்கே அவர்கள் தமிழையா கற்கிறார்கள், தாய் மொழியோடா உறவாடுகிறார்கள்? அந்த அந்த நாட்டு மொழியையல்லவா கற்கிறார்கள்?

நாம் அதனைச் சரிசெய்யும் முயற்சிகளைச் செய்யாமல் புலம்பெயர்ந்த நாட்டில் தமிழுக்கு ஏது எதிர்காலம்?

ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டிலிருந்து தமிழ்க் குழந்தைகள் தமிழோடு அயல்நாடு வருவதும், சில வருடங்களில் அப்படியே தமிழறியாதவர்களாய் ஆவதும், பின் புதிய வரவுகள் வருவதும், பின் அவர்களும் விழுங்கப்படுவதும் என்ற அவல நிலையல்லவா நிகழ்கிறது.

புலம்பெயர் நாடுகளில் தமிழ் என்ன முதியவர் - ’சீனியர் சிட்டிசன்’களுக்கான மொழியா?

நாம் முயன்றால் நம்மால் நாற்பது மில்லியன் ஐம்பது மில்லியன் டாலர்கள் என்று வசூலிக்க முடிகிறது. ஆனால் நாம் செய்ய வேண்டியது என்ன?

இலவசமாக பிஞ்சுகளுக்குத் தமிழ்ப்பள்ளிகள் அமைப்பதும், தமிழ் சொல்லித் தருவதும், சிறுவர் பராமரிப்புக் கூடம் நடத்துவதும்தானே?

புலம்பெயர்ந்த ஒவ்வொரு ஊரிலும், அப்படியான தமிழ்ப் பள்ளிகள் பல்கிப் பெருகுதல் வேண்டும். அதுவன்றி தமிழின் பெருமை பேசுவதும் தொன்மை பேசுவதும் வெட்டிப் பேச்சு என்றே இங்கே நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

நாம் இங்கே ஆயிரம் காமராசர்களாய்ச் செயல்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

நான் அயல்நாட்டில் எந்த ஊர் சென்றாலும் அங்கே முதலில் பாராட்டுவது தமிழ்ப்பள்ளி நடத்துவோரையும் அதன் ஆசிரியர்களையும்தான். அவர்களே தமிழுக்காகப் பாடுபடும் களப் பணியாளர்கள் என்பேன்.

அன்புடன் புகாரி

No comments: