கவிதை என்றால் என்ன என்று வியப்போர் பலர். அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

வியக்கத்தான் வேண்டும். ஏனெனில்

கவிதை
உணர்வுகளை
மொழியாய் மொழி பெயர்க்கும்
ஓர் அழியாக் கலை

மொழியின் உயிர்
உயிரின் மொழி

உயிர்த் துடிப்புகளை
அப்படி அப்படியே காலன் தின்னாததாய்ச்
சேமித்து வைக்கும் உயிர்ப் பெட்டகம்

நாளைகளில் நம்பிக்கை இல்லாக்
கோழைகளாக்கும் இந்த நூற்றாண்டுகளின்
பிரம்மாண்டங்களில்
நால்திசை நாடுகளும்
இடுப்பில் அணுகுண்டுகளைத்
தூக்கி வைத்துக்கொண்டு நிலாச் சோறு ஊட்ட

உலகம்
ஒரு நொடியில் பொடியாகும் அபாயம்
நம் நிழலைக் கிள்ளியெறிந்துவிட்டு
அந்த இடத்தை அபகரித்த
பெருமிதத்தில் மந்தகாசிக்க

விழிகளில் நம்பிக்கை ஒளியூட்டி
நடுங்கும் கரங்களைப் பிடித்து நிறுத்தி
இயல்பு வாழ்க்கைக்குள்
இழுத்துச் செல்லும் அன்புக் கரம்

ஆகவே வியக்கத்தான் வேண்டும்.

ஆனால் வியக்கிறேன் என்று விலகி நின்றிடுதல் கூடாது. வியப்பது ரசிப்பதின் உச்சம். ரசனை உயர உயர அந்த ரசனையாகவே மாறிப்போவதே இலக்கியத்தின் மேன்மை. அப்படி ரசனையாகவே மாறிப்போனால், தமிழ்க் கவிதைகள் சிறு விரல் நுனிகளில் நம் எண்ண ஆழத்தில் இடையறாது துடிக்கும் உட்கிளியின் அமுதை, உணர்வுகெடாமல் சுரந்து கசிந்த வண்ணம் இருக்கும். அதைக் காட்டாறாய் மாற்றிக்கொள்ள தமிழோடும் தமிழ்க் கவிதைகளோடும் கடும் தாகத்தோடும் மோகத்தோடும் காதல்கொள்ளுதல் வேண்டும். கவிஞனாய் வளர்ந்து நிமிர வேண்டும்.

ஒவ்வொரு தமிழனும் கவிஞனாய் ஆகவேண்டும் என்பதே என் தமிழாசை. தமிழன் என்று சொன்னாலே அவன் கவிஞன்தான் என்று அறியப்படவேண்டும்.

இவ்வேளையில் நான் ஒன்றைக் கூறவேண்டியதை அவசியமாகக் கருதுகிறேன்.

கணினிப் பணியாற்றும் நான் கவிதைகளும் எழுதுகிறேன் அல்லது கவிதைகளை ரசிக்கிறேன்.

ஒரு வணிக நிறுவனத்தை உருவாக்கி பொருளீட்டும் வணிகரும்கூட கவிதைமனம் கொண்டிருக்க வேண்டும்.

நம் உடலில் வயிறும் இதயமும் இருப்பதுபோல தொழிலும் இலக்கியதாகமும் அவசியமானவை.

உலகில் எல்லோருமே தொழில் செய்பவர்களாக மட்டுமே இருந்துவிட்டால், வாழ்க்கை வரண்டுபோய் பொய்கள் நிறைந்ததாய் கருணையற்றதாய் ஆகிவிடும்.

அதே போல, எல்லோருமே கவிதை எழுதுபவர்களாய் மட்டுமே இருந்துவிட்டால், பசி பட்டினி வறுமையில் உலகமே அழிந்துபோகும்.

அன்புடன் புகாரி

No comments: