பிச்சைக்காரரின்
நெளிந்த பாத்திரத்தில் ஊற்றப்படுவதே
பணக்காரரின்
வெள்ளிப் பாத்திரத்தை நிறைக்கும்
அமுதமாகிறது

அது எது?

உடல்நலமில்லா முதியவரின்
நடுங்கும் கரங்களின்முன்
வைக்கப்படுவதே
ஆரோக்கியமான இளைஞனின்
துடிப்பான விரல்கள்
தாவியெடுக்கும்
அருசுவையாகிறது

அது எது?

உண்டு முடித்ததும்
மீந்துப் போனதென்று
பின்னிரவில் நீரூற்றப்படும் பழையதே
புனிதப் பசியின் உச்சத்துக்கு
புத்தம் புதிதாகச் சமைக்கப்படுகிறது

அது எது?

பிரியாணிகளும்
கோழி வறுவல்களும்
வகைவகையாய்ப்
பறிமாறப்பட்டிருக்கும்போதே
அனைத்தையும் மறுதலித்து
ஆவலோடு அள்ளிக்குடிக்கும்
கிடைத்தற்கரிய அற்புதமாகிறது

அது எது?

ஓய்வெடுத்துத் தளர்ந்து
மயங்கிக் கிடக்கும்
நாக்கின் நரம்புகளுக்குப்
புத்துணர்ச்சி மந்திரம்
அதுவன்றி வேறொன்றில்லை

அது எது?

எரியடுப்பு வயிற்றை
ஈரமாய் அணைத்து
இதமாய் வருடும் பாசம்மிக்கது
இன்னொன்றில்லை

அது எது?

ஏழை வீட்டில்
செலவே இல்லாமல்
செய்யப்படும் அந்த ஒன்றே
கோடி கொட்டிச் சமைத்தாலும்
கிட்டாத
செல்வச் செழிப்புமிக்க
இன்சுவையாகிறது

அது எது?

தரைதொட்டுத் தரைதொட்டு
நிமிரும் நெற்றிகளின்
செல்கள் ஒவ்வொன்றுக்கும்
அது
சொல்லவொண்ணாத
ஊட்டச்சத்தை அள்ளித்தரும்
சூட்சுமமாகிறது

அது எது?

அதை அருந்தும்
முன்பு கேட்கும் துவாக்கள்
உனக்கானவை
பின்பு கேட்கும் துவாக்களோ
உலகுக்கானவை

அது எது?

அதுவும்
ரமதானின்
ஒரு
கருணைக் கொடைதான்

அதுதான்
நோன்புக் கஞ்சி
நெஞ்சுநிறை
மாண்புக் கஞ்சி

- அன்புடன் புகாரி

1 comment:

mohamedali jinnah said...

கஞ்சியின் அருமை தெரியாதவர் யாரும் இலர்
கஞ்சியின் மகிமை வரண்ட வாய் நன்கு அறியும்
அதிலும் நோன்புக் கஞ்சியின் சுவை உயர்விலும் உயர்வு
நோன்புக் கஞ்சியின் சிறப்பினை நோன்பாளியே கவிதையாக வடித்துத் தருவது
அமிர்தத்தை வாயில் ஊட்டி விடுவதைப்போல் மகிழ்வைத்தருகிறது