கொஞ்சம் தமிழைப் பற்றி பேசலாமா? தமிழின் தொன்மையும் இளமையும் பற்றி நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி?

நான் தமிழறிஞன் அல்லன், ஆனால் தமிழின் மீது தீராத காதலுடையோன்.

நான் அணைகட்டிய நதியல்ல, இயல்பாய்ப் புறப்பட்டப் பெருமழையாறு.

2016 ஜூன் மாத முதல் வாரத்தில் கனடாவில் உலகத் தொல்காப்பிய விழா இரு தினங்கள் சிறப்பாக நடந்தது. அதில் தொல்காப்பியம் பற்றி கவிதை வாசிக்க என்னையும் அழைத்திருந்தார்கள்.

எனக்குக் கவிதை எழுதுவது என்பது பொன்வானம் முன்னறிவிப்பின்றிப் பொழிவதைப் போல இயல்பானது சில நேரம். மகப்பேறில் முதல் மகவினை ஈனுவதைப் போல வலியும் அச்சமும் மிகுந்தது சில நேரம்.

என் நெஞ்சில் நீண்டு வளர்ந்து நிறைந்திருக்கும் அழுத்தமான எண்ணங்களையும் உணர்வுகளையும் எனக்குச் சட்டெனக் கொட்டுவது எளிது. ஆகவே சில நிமிடங்களில் சில கவிதைகள் கொட்டிவிடக்கூடும்.

ஆனால், தொல்காப்பியம் பற்றி நான் அப்படி எழுதிவிடமுடியாது.

நிறைய வாசித்தேன், தொல்காப்பியனை முன்பைவிட அதிகமாக நேசித்தேன். நான் நேசித்தப் பெருமைகலையெல்லாம் என் நடையில் அந்த மேடையில் வாசித்தேன்.

அக்கவிதை உங்கள் கேள்விக்கான பதிலை ஓரளவு தரும். தமிழின் தொன்மையும் இளமையும் கண்டு நான் எப்படிச் சிலிர்த்தேனோ, அதை அப்படியே உங்களுக்குக் காட்டும் என்றும் நம்புகின்றேன்.

இந்தோ அந்தக் கவிதையின் சில பகுதிகள், முழுக்கவிதையையும் வாசிக்க கீழுள்ள சுட்டியைச் சொடுக்குங்கள்:

தமிழ்காப்புத் தொல்காப்பியம்

தொல்காப்பியா
நீ புதுமைக் காரனடா

இலக்கணம்தானே எழுத வந்தாய்
ஆனால் அதையும் நீ ஏன்
இலக்கியம் சொட்டச் சொட்ட எழுதினாய்

*
அள்ளித்தரும் இலக்கியம்
தாய்க்கு நிகர்
சொல்லித்தரும் இலக்கணம்
தந்தைக்கு நிகர்

ஞானத் தந்தையே
தொல்காப்பியா
நீ தாயுமானவன்தான்
தொல்காப்பியா

*
தமிழோடு தமிழாக
தழுவிக் கிடக்கும்போது
உன் தொன்மைக்கு
ஏதடா முதுமை
உன் சொல்லுக்கோ
தீராத மகிமை

தொன்மையையே இளமையாக்கி
நீ நிற்கும் முரண்
அடடா அதுதான் எத்தனைச் சவரன்

*
அட்டையைத் தொட்டாலே
விரால்மீனாய்த் துள்ளும்
உயிர்நூல் படைத்தவனே

அதோ வருகிறான் பார்
நக்கீரன்
உன் நூலுக்குப் பெயரிட்டதில்
பொருட் பிழை என்கிறான்

என்றென்றும்
இளமையே கொண்ட காப்பியம்
எப்படித் தொல்காப்பியமாகும்
என்று தகிக்கிறான்
கேள்

*
ஓர் இலக்கண நூலே
இத்தனைத் தொன்மையெனில்
தமிழனின் இலக்கியம்தான்
எத்தனை எத்தனைத் தொன்மையானது

கண் தோன்றிச்
செவி தோன்று முன்னரே
முன் தோன்றி வளர்ந்த
மூத்த மொழியோ

*
பசுமரத்தாணியைப்
பழுதின்றி அறைந்தாய்
இலக்கியப் பயிர்களுக்கு
வரப்புகள் வகுத்தாய்
வடமொழி நூல்களுக்கும்
தடம்போட்டுத் தந்தாய்
சுற்றுப்புறச் சூழல் பேசும்
சித்தாந்தம் கொண்டாய்

கம்பனை வள்ளுவனை
இளங்கோவை பாரதியை
உயிர்த்தமிழ் அமுதூட்டிய
இன்னும்பல
இலக்கியக் கொடை வள்ளல்களை
உன் பட்டறையில் வைத்துப்
பட்டைதீட்டிவிட்டாய்

*
ஓரறிவதுவே உற்றறிவு அதுவே
இரண்டறிவு அதுவே அதனொடு நாவே
மூன்றறிவு அதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவு அதுவே அவற்றொடு செவியே
ஆறறிவு அதுவே அவற்றொடு மனமே

இது
தொல்காப்பியத்தின்
ஒரு சிறு துளித்தேன்

அன்றெழுதிய இத்தேனில்
ஒரு சொல்லேனும்
இன்று வாழும் நமக்கு
அந்நியமாய் நிற்கிறதா
அவையோரே

என்றால்
தொல்காப்பியன்
எங்கே நிற்கிறான்

கடைநிலைத் தமிழனோடும்
கைகுலுக்கும் தாகத்தோடு
நெருக்கமாய் நிற்கிறானல்லவா

இதுதான் தமிழின் தொடர்ச்சி
செம்மொழித் தேர்வில்
இதுவுமொரு சுந்தரத் தகுதி

https://anbudanbuhari.blogspot.ca/2016/06/blog-post_6.html

அன்புடன் புகாரி

No comments: