உலகமுதல் இணையநூல் வெளியீடு 11


தலைவர் மாலன்
திறமான புலமையெனில் அதை வெளி நாட்டார் வணக்கம் செய்தல் வேண்டும் என்று மகாகவி ஒரு இலக்கணம் வகுத்துச் சென்றார். அந்த இலக்கணத்தை
இலக்கியமாக மாற்றியவர் ஜெயந்தி. சிங்கை இதழ் ஒன்றில் அவரது கதை ஒன்றினை முதன் முதலாக இரண்டாண்டுகளுக்கு முன் படித்தேன். இப்போது வாரம்
தோறும் ஏதேனும் இணைய இதழில் அவரது எழுத்துக்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன். எழுத்துத் திறத்தாலே எல்லைகலைக் கடந்தவரே. வருக. உங்கள்
வாழ்த்தைத் தருக

எழுத்தாளர் ஜெயந்தி சிங்கை
இணையப் பெருமக்கள் அனைவருக்கும், எளியவளின் பணிவான வணக்கங்கள். தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரும் தலை நிமிர்ந்து நிற்கவேண்டிய பொன்னான நேரம். இந்நாள் உலகச் சரித்திரத்தில் எழுதப்பட வேண்டிய நந்நாள்!

இணையப் புத்தக விழா
என்பதே ஒரு புதுமை என்றால்,
அதில் இன்னொரு சிறு புதுமை,
வெறும் ரசிகையேயான
என்னை உரையாற்ற ஆல்பர்ட்
அழைத்திருப்பது.

இணையதளங்களைச் சுற்றி வந்து கொண்டிருக்கும் இந்தச் சில வருடங்களில் நான் கவனித்தும், படித்தும், ரசித்தும் வரும் ஒரு கவிஞர் தான் கவிஞர் புகாரி அவர்கள். அவருடைய எளிய மொழியில் கருத்தைத் திடமாய்க் கூறும் பாங்கு தான் என்னை ஈர்த்தது.

உலகத்தின் கன்னக்கதுப்புகளில் வழியும் கண்ணீரைத் துடைக்க உனது விரல் முளைத்திருக்கிறது!

வானம் கூட வசப்படாமல் போகலாம்; நம்பிக்கை மட்டும் தீர்ந்துபோகக்கூடாது என்பதில் உறுதிபடைத்த கவிஞர்!

வாழ்க நீடூழி விழாக்காணும் இந்த இளைய கவி, நம் இணைய கவி! இந்நநாளில் இணைய மேடையில் அவரை வாழ்த்தக் கிடைத்த நல்வாய்ப்பிற்கு மிக்க நன்றி.

எனக்கு 'அன்புடன் இதயம்' தொகுதியில் எல்லாக் கவிதைகளும் பிடித்ததிருந்தாலும்

'தோழியரே தோழியரே' என்னும் கவிதை ஏனோ அதிகம் பிடித்தது.

பிடித்துப் படித்து முடித்தபோது...நதிவெள்ளம் குறைந்த பிறகு நாணல் நிமிருமே அப்படி நிமிர்ந்தேன் நான்!

தண்ணீரில் குளித்துவிட்டுச் சிலிர்த்துக் கொள்ளும் பறவையாய் எனக்குள் புத்துணர்ச்சி பூத்தது!

பெண்ணை அவர் உள்ளத்தால் நன்கு உணர்ந்து தோழமையோடு பாடியிருப்பதால் என்றே நினைக்கிறேன்.

மற்ற 'எழுதாதக் கூடாத கடிதம்','நான்தான் வேண்டும் எனக்கு' போன்ற காதல் கவிதைகளிலும் கூட பெண்ணின் உருவத்திற்குக் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை விட உள்ளத்திற்குக் கொடுத்திருக்கும் முக்கியத்துவம் தான் அதிகம்.

'திரும்பிய பயணத்தில் திரும்பாத பட்டங்கள்' கவிதையில் 'கல்பனா சாவ்லா' என்ற விண்வெளி பெண்ணைக்கண்டு பூரிப்பும் பெருமையும் கொள்கிறார்.

அதனாலேயே, 'கவிஞரின் பார்வையில் பெண்', எப்படியிருக்கிறாள் என்றுஆராயத் தோன்றியது எனக்கு.

'தோழியரே தோழியரே' என்றழைத்து கவிஞர் முதலில் கூறுவது இப்படி-

/ஓ

பெண்ணே
நீ
போகாதே பின்னே
நீ
பின்னுக்குப்போனால்
வாழ்க்கை
மண்ணாகிப் போகும்
உன் கண்ணுக்கு முன்னே/


அழகுவரிகள் இவை!

பெண் பின்னுக்குப் போனால், வாழ்க்கை மண்ணாகிப்போகும். இதையுணர்ந்த சமூகம் முன்னேருவதையும் உணராத சமூகம் மண்ணாகுவதும் தெளிவு.

பாரதியும் கூட எடுத்துரைத்தது இதைத் தானே. அன்று பாரதி இட்ட விதையை இன்று வளர்த்துப் பயிராக்குகிறார் புகாரி.

/போராடு
யாரையும் சாகடிக்க அல்ல
உன்னையே நீ வாழ வைக்க
உன்னோடு
இந்த உலகப் பெண்களையும்
உயர்த்தி வைக்க

முன்னுக்கு வருவதென்பது
முதலையே மோசமாக்கும்
மூர்க்கச் செயலல்ல/


அடடா! அவர் எழுத்தில்தான் எத்தனை வேகம்? என்னென்ன சுழற்சி? தன்னைத் தானே வாழவைக்கப் பெண் போராடவேண்டியுள்ளது என்பதை கவி ஒப்புக்கொள்வது பாராட்டத்தக்கது.மாற்றங்கள் ஆங்காங்கே வந்த போதிலும் உலகளவில் பல நாடுகளில் பொதுவாக பெண்ணினம் இன்னமும் பின் தங்கியிருப்பது நாம் அறிந்ததே.அதற்கு பெண்ணிடம் குறைவாய் இருக்கும் போராட்ட குணம்.

பெண்ணை தெய்வமாக்குவது ஆணாதிக்கத்துக்குச் சாதகமாயும், பெண்ணை அதிகாரம் செய்ய விடுவது பெண்ணாதிக்கத்துக்குச் சாதகமாயும் அமையக் கூடும் அன்றோ,அதனால் தான் மிகவும் முன்னெச்சரிக்கையாக,

/ஆண்களை மிதித்துக்கொண்டு
அதிகாரம் காட்டுகின்ற
அவலமல்ல
ஆணோடு பெண்ணும்
சமமென்றே கைகோக்கும்
அற்புதம் செய்ய/


என்று பாடுகிறார் நம் இணைய கவி. ஆணோடு பெண் சமனென்ற நிலை அற்புதம் தான் நிச்சயமாய். எங்கெங்கு காணினும் இது நடக்கவே விழைகிறார் இன்று விழாக்காணும் நம் கவி.

/பிறப்புச் சூட்சுமம்
உரைக்கும் நியதிப்படி
மறுப்பவர்கள் அல்ல - ஆண்கள்
கொடுப்பவர்கள்தாம்

ஓர்
உயிரைக் கருக்கொள்ள
பலகோடி உயிரணுக்களைக்
கணக்கின்றி
செலவிடுகிறான் ஆண்
ஒற்றைக் கருமுட்டையோடு
சிக்கனமாய் நிற்கிறாள்
பெண்

ஆக,
ஊதாரிதானே ஆண் -
கவலையை விடுங்கள்/


பெண்ணின் சிக்கனத்தை விஞ்ஞானப்பூர்வமாய்க் கூறி 'ஊதாரிகள்- ஆண்களா? பெண்களா? என்னும் பட்டிமன்றத்திற்கே, தீர்ப்பு வழங்கி விடுகிறார்.

ஓஹோ! இதனால் தான் போலும்,

'அய்யா கையில கொடுத்துப்போடு சின்னக் கண்ணு' எனாமல்,
'அம்மா கையில கொடுத்துப் போடு சின்னக் கண்ணு'


என்றார் அன்று பட்டுக்கோட்டையார். ஆண்கள் ஊதாரிகள் தான் என்று தீர்க்கமாய்க் கூறிய கவிஞர் புகாரி இவ்வாறு தொடர்கிறார்-

/பெண்களின்
விருப்பமே அறியாமல்
ஓடிக்கொண்டிருக்கலாம்
உங்கள் ஆண்கள்
அவர்களிடம்
கேளுங்கள் தோழியரே
காதல் பேசிய
விழிகளால் மட்டுமல்ல
சம்மதம் சொன்ன மொழிகளாலும்
உங்கள் தேவைகளைக்
கேளுங்கள்/


பெண்ணின் மனத்தை அறியாமல் ஆண் ஓடிக் கொண்டிருக்கிறான் என்று தயக்கமே இல்லாமல் ஒப்புக்கொள்கிறார் நம் மானுடக் கவி.

ஒரு தோழனால் தான் இவ்வாறு புரிந்துகொள்ள முடியும். இதயங்களைச் சுளுக்கெடுக்கத் தெரிந்த கவிஞர் என்பேன் நான் இது எனக்கு மட்டுமல்ல, அவரது வரிகளைப் படிக்கும் எல்லாத் தோழியருக்கும் பிடிக்கும்.

ஒரு பெண்ணின்மனதைப்புரிந்தவருக்கே வரக்கூடிய வார்த்தைகளும் அவற்றின் எளிமையும் ஏன் அவர்களைக் கவராது?!

/தொட்ட நாள் முதல்
தொடரும் நாளெல்லாம்
விட்டு விடாமல்
வீரமாய் நின்று - வார்த்தை
மொட்டவிழ்த்துக் கேளுங்கள்
கேட்பது என்பது
எவருக்கும் பொது
நாளெல்லாம்
அவர்கள் உங்களிடம்
கேட்டுக் கேட்டுப் பெறுகிறார்களே
அதைப் போல
கேளுங்கள் தோழியரே/


பெண்ணின் வாழ்வில் வரும் தந்தை முதல் மகன் வரை, எல்லா ஆண்களும் தான் அவளின் விருப்பமே அறியாமல் ஒடிக்கொண்டிருப்பரே, ஆகவே தான், தோழனானவனுக்குப் புரிகிறது, கேட்டுத் தான் பெறவேண்டும் என்று. 'தொட்ட நாள் முதல்' என்பதால், கொண்டவனைத் தான் இங்கு சொல்கிறார் கவி என்பது தெரிகிறது.

சரி.

தனக்கு வேண்டியதை பெண் வீரமாய்க் கேட்க வேண்டும்; ஆனால், வார்த்தை மொட்டவிழ்த்துக் கேட்க வேண்டும் என்பதே கவியின் கருத்து. நன்று.

'கவிதைக்குப் பொய்யழகு' தான் என்றாலும், பூசி மெழுகாமல்,

உண்மை நிலையைத் தானே இயம்புகிறார், மெச்சுவோம் நாமும் அவரை.

/வரம் கேட்டு
வாங்கிக்கொள்வதெல்லாம்
பெண்கள்
அதைக் கொடுத்துவிட்டு
அல்லல் படுபவரே
ஆண்கள் என்றுதானே
நம் இலக்கியங்களும்
எழுதப் பட்டிருக்கின்றன/


என்று கூறி ஆண் பிடிக்கும் முரண்டெல்லாம் வெறும் பயமே என்றும் பாரபட்சமில்லை என்றும் தோழியருக்குக் கனிவாய்க் கூறுகிறார். அதற்கு நம் இலக்கியங்களின் மேல் பழியைப் போடுகிறார் அழகாக.

/அந்தப் பயத்தில்
எவரேனும் முரண்டுபிடிக்கலாம்
அது வெறும் பயமே தவிர
பாரபட்சம் காட்டும்
போக்கு அல்ல/


போராடு, 'போகாதே பின்னே', 'வீரமாய்க் கேள்' என்றெல்லாம் தன் தோழியருக்குச் சொல்லும் கவி, ஆண்மகனையும் அறியாமலா இதை எழுதியிருப்பார்.ஆகவே ஏற்போம்!

/உங்கள் வரங்கள்
வாழ்வதற்கன்றி
வதைப்பதற்கல்ல என்று
உங்கள் முகப்பூக்களின்
விழிச் சுவடிகளில்
இனிமையாய்த் தெளிவாய்
எழுதி வையுங்கள்
பிறகு பாருங்கள்
நீங்கள்
கேட்கும் முன்னரே
எல்லாமும் கிடைக்கக் கூடும்/


எனும் போது முகப்பூக்களின் விழிச்சுவடிகளில் இனிமையாய் எழுதிவைத்தால் மட்டுமே நீ கேட்கும்'வரங்கள்' வாழ்வதற்கு என்று அறிவான் ஆண். கேட்கு முன்னரே எல்லாமும் கிடைக்கும். இன்சொலின் ஆற்றலை இதைவிட இதமாகச் சொல்லவும் முடியுமோ?!

/திருமணம் என்பது
தண்டனை அல்ல
செக்கில் கட்டிச்
சிதைக்கும் காரியமல்ல
தலையைக் கொய்யும்
தலையெழுத்தல்ல
அடிமையாவதற்கு
அடிமைகளே எழுதித் தந்த
அடிமைச்சாசனம் அல்ல

இதைத்
தெளிவாக்கிக்கொண்டுவிட்டால்
தோழியரே
பெண்ணின் மீது இடப்பட்ட
அத்தனை விலங்குகளும்
பட்டுப் பட்டென்று
தெறித்துச் சிதறி
எங்கும்
சமத்துவமே துளிர்க்கும்/


'சமத்துவம் துளிர்க்கும்' என்று நம்பிக்கை தரும் முன் திருமணத்தை எப்படிக் காண வேண்டுமென்று நட்புடன் தோழியருக்குச் சொல்கிறார். திருமணத்தைத் தலையெழுத்தென நினைக்காதே, நீ அடிமை அல்ல என்று நீ உணர்ந்தால் மட்டுமே உன் மீது இடப்பட்ட விலங்குகள் உடையும் என்கிறார் எளிய சொற்களில்,பெண்மையைப் போற்றும் நம் கவியின் அக்கறை புரிகிறது.

/தன்னம்பிக்கை தத்தளிக்கும்
தோல்வித் தருணங்களில்
உன் நம்பிக்கையோடு
இந்த உலக நம்பிக்கை
அனைத்தையும்
என்னம்பிக்கைக்குள்
ஊற்றி ஊற்றி
தைரிய தீபம் ஏற்ற
அன்பே நீயென்
உடன் வருவாயா/


என்று முத்திரைக்கவிதையான 'அன்புடன் இதயம்'எனும் கவிதையில் கூட பெண்ணிடம் அவர் கொள்ளும் பெரும்நம்பிக்கை தெளிவாய் தெரிகிறது. அன்பிற்கு விடுக்கும் அழைப்பு போலவும் ஒரு துணைவிக்கு விடுக்கும் அழைப்பு போலவும் இருக்கிறது இந்தக் கவிதை என்றே எனக்குத் தோன்றியது.

/இருந்தும்
என் காதலை உன்முன்
என்
உதடுகள் உச்சரிக்காவிட்டாலும்
உள்ளம் உச்சரித்து
ஓர்
உற்சவமே நடத்திவிட்டது/


வளமான வார்த்தைகள், கவிஞர் புகாரியின் பேனா முனையை முத்தமிடத் துடித்து நிற்கிறதே! இளமை குலையா வைர வார்த்தைகளில்... எழுதக்கூடாத கடித்தில் வரும் இவ்வரிகள் உள்ளத்தால் வரிகள் வடிக்கும்

கவிஞர் நம் கவிஞர் என்பது மேலும் உறுதியாகிறது. பலரையும் சென்று தனது கவிதைகள் அடைய வேண்டும் என்னும் உள்ளத்துடிப்போடு வார்த்தைகளைத் தொடுத்திருக்கிறார் கவிஞர். கவிஞர் ஒவ்வொரு வார்த்தையைத் தேர்ந்தெடுப்பதில் எவ்வளவு சமூகப் பொறுப்போடு செயல்பட்டிருக்கிறார் என்பதை அவரது ஒவ்வொரு கவிதை வரிகளும் போட்டி போட்டுக்கொண்டு நிரூபிப்பதைக் காணலாம். இவரது கவிதைகளைத் தொட்டுக் காட்டத் துவங்கினால் என்னுரையே கவிஞரின் கவிதைத் தொகுப்பின் மறு பிரசுரமாகிவிடும். ஒவ்வொரு கோணத்தில்

பார்த்தாலும் ஒரு தனிச் சிறப்பைப் பெற்றதாகவே அமைந்திருக்கிறது! பாசத்தோடும் நேசத்தோடும் தோழியருக்கு ஆலோசனைகள் பல சொல்லி பெண்ணின் நேசத்தைப் பெறுகிறார் கவிஞர் புகாரி! இத்தொகுதி புகாரி அவர்களை 'அன்புக்கவிஞர்' ஆக்குகின்றது. உன் பயணத்தில் நீ பாலைவனங்கள் இல்லாத நதிக்கரை வழியாகவே நடந்து போகவேண்டும்! உனக்கும் மேலே ஒரு குளிர்ந்த மேகம் எப்போதும் குடைபிடிக்க வேண்டும்! வாழ்க நம் இணையக் கவிஞர்!வளர்க அவர் தமிழ்ப் பணி! இந்த அரிய வாய்ப்புக்கு மிக்க நன்றி, வணக்கம்.

அன்புடன்,
ஜெயந்தி

No comments: