உலகமுதல் இணையநூல் வெளியீடு 8


தலைவர் மாலன்:'எழுத்தில் கூட வல்லினம் தவிர்க்கும் மென்மனதுக்காரர்' என அறியப்பட்ட நாஞ்சில் நாட்டுக்காரர் நம் சேவியர். வட
அமெரிக்காவிலிருந்து தமிழ் வளர்க்கும் தென் குமரித் தமிழர். மனவிளிம்புகளில் அவரது கவிதைத் தொகுதி. இங்கு மனதின் ஆழத்திலிருந்து வாழ்த்துரைக்க வருகிறார் சேவியர்.

கவிஞர் சேவியர்
விழாத் தலைவர் அவர்களே!
மேடையிலும், எதிரிலும், சுற்றிலும் வியாபித்திருகிற தமிழ் நெஞ்சங்களே! எனது நேரத்தில் கொஞ்சம் பங்கெடுத்துக் கொண்ட நண்பர் பிரகாஷ் அவர்களே! எல்லோருக்கும் என் முதல் வணக்கம்!

ஏனோ தெரியவில்லை, கவிதை பற்றி பேசும் போது மட்டும் மனம் நான்கைந்து இறக்கைகளை எங்கிருந்தோ எடுத்துக் கொண்டு வருகிறது.

கவிதைகளில் நல்ல கவிதைகள் அல்ல கவிதைகள் என்று இரண்டு வகை இருப்பதாகச் சொல்கிறார்கள். அதன் வரையறைகள் எனக்குத் தெரியவில்லை. காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு என்றொரு பழமொழியும், லவ்பேர்ட்? தான் வீட்டுக்கு அலங்காரம் காக்கைகள்
அல்ல என்று இன்னோர் வாதமும் வந்து கொண்டே இருக்கின்றன. எனக்கும் மனசுக்குப் பிடித்தமான கவிதைகளைப் பற்றிப் பேசுவதற்குத் தான் பிரியம். அப்படி மனதைப் பிடித்துக் கொண்ட புத்தகங்களில் ஒன்று நண்பர் புகாரியின் அன்புடன் இதயம்.

சந்தங்களின் மனம் தின்னும் சத்தங்களைக் கொண்டு கருத்துக்களைக் கருக்கலைப்பு செய்யாமல் சொல்வதற்கு ஒரு திறமை வேண்டும். அந்த வரம் புகாரிக்கு வாய்த்திருக்கிறது. வெண்பா போல எழுதுவார், ஆனால் இலக்கணங்கள் இருக்காது, இருந்தால் அவர்
பெருமிதப் படுவதுமில்லை, இல்லையேல்

அதற்காய் 'காய்' தேடிக் கவலைப்படுவதுமில்லை. அவர் எழுதுவது தான் அவருடைய கவிதைக்கான இலக்கணம். புட்டிகளுக்கேற்ப தைலம் தயாரிப்பதில் அவருக்கு உடன்பாடு இருந்ததில்லை. அது அவர் பாடு ! அவருடைய கொள்கைகளோடு அவர் கொள்ளும்
ஈடுபாடோடு எனக்கு உடன்பாடு !

அன்புடன் இதயம் தொகுதியில் என்னை சட்டெனக் கவர்ந்த கவிதைகளில் குறிப்பிடத்தக்கவை பஞ்சபூதக் கவிதைகள் ! நீர், நெருப்பு, நிலம், காற்று, ஆகாயம் - என்ற ஐந்து நிலைகளாகவும் மாறி கரைந்து கரைந்து வடித்திருக்கின்ற இந்தக் கவிதைகள் காலம் தாண்டி
நிற்கும். இந்த கவிதைகளுக்காகவே நான் இந்த தொகுப்பை மிகவும் நேசிக்கிறேன். மற்ற கவிதைகள் சிறப்பில்லை என்பதல்ல அதன் பொருள். மிட்டாய்க் கடையில் எனக்கு பஞ்சு மிட்டாய் தான் வேண்டும் என்று அடம்பிடித்தழும் குழந்தையைப் போல அவரவர் விருப்பம் அவரவர்க்கு !

ஆயிரமாயிரம் கோள்கள் இங்கே
ஆயினும் நீயே கர்ப்பப் பையே


என்று நிலத்தோடும்,

செவியும் மூக்கும் எப்படிப் பிறக்கும்
ஓசையும் வாசமும் காற்றால் பிறக்கும்


என்று காற்றோடும்

சிறிதும் பெரிதும் ஒன்றின் உருவே
வானம் தானே மூலக் கருவே


என்று ஆகாயத்தோடும்

தண்ணீரே இல்லையெனில்
வியாபிக்கும் வெற்றிடங்கள்


என்று நீரோடும்

வெளிச்சம் என்றும் நெருப்பின் எச்சம்
நிலவும் கூட நெருப்பின் மச்சம்


என்று நெருப்போடும் இவர் நின்று வாதிடும் போது நடுவராய் இருக்கும் வாசகன் கொஞ்சம் குழம்பித் தான் போவான்.

ஆறாம் வகுப்பு தாண்டினாலே ஆங்கிலத்தை நாக்கில் கட்டி அலையும் இன்றைய தலைமுறைக்கு அபரிமிதமான ஆங்கில அறிவு இருந்தும் எப்போதும் அழகுத் தமிழில் அழுத்தமாய் பேசும் நண்பர் புகாரி, ஒரு சிறப்பான வழிகாட்டி.

நண்பரே, அன்புடன் இதயம் முதல் இணைய வெளியீடு விழா வெகு சிறப்பாகத் துவங்கி யுள்ளது! இவ்விழா இணைய வரலாற்றில் ஒரு மைல்கல்லாய் இருக்கும்! இருக்க என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்


சிந்தித்துச் சந்தத்தில்
எழுதுவதென் வழக்கம் - நீ
சிந்திப்பதே சந்தத்தில்
அதுதானே பழக்கம் ?


நன்றி! வணக்கம்.
சேவியர்

சிலம்பு நாக. இளங்கோவன்

தமிழைப் பாடாத தமிழ்க்கவிஞர் இல்லை. அப்படியரு கவிஞர் இருந்தால் அவர் தமிழுக்கான கவிஞராக இருக்க மாட்டார்.

பாரதியாருக்கு செந்தமிழ்நாடு என்ற கேட்டவுடன் தேன் வந்து பாய்ந்தது அவர் காதினிலே!

பாரதிதாசனுக்கோ தமிழ் அவர் உயிருக்கு நேரானது மட்டுமன்றி முதும் மதுவும் வேலும் வாளும் என்று அனைத்துமாய் ஆனது தமிழ் அவருக்கு.

கவிஞர் புகாரி, தனது இதயத்தை திறக்கையிலேயே தமிழோடு திறந்திருக்கிறார்; தனது 30 கவிதைகள் கொண்ட "அன்புடன் இதயத்தில்" முதல் கவிதையே மனதை கொள்ளை கொள்கிறது. காரணம் இரண்டென்று யாரும் அறிவர். ஒன்று - அது புகாரியின் கவிதை. மற்றொன்று - தமிழைப் பாடும் கவிதை.

ஆயிரம் கவிதைகளைப் படித்தாலும், தமிழ்பால் ஒன்று படிப்பதிலேதான் எத்தனை சுகம்!!

30 கவிதைகளிலும் புகாரி தமிழையே பாடியிருந்தால் எப்படியிருக்கும் என்று பார்க்கிறேன். இது பேராசை; என்று என் மனம் கூறிடினும், இதைப் படிப்போர் கூறிடினும், அதைச் செய்யக் கூடியவர்தானே நண்பர் கவிஞர் புகாரி என்றே என் உதடுகள் உச்சரிக்கின்றன.

தொகுப்புக்கு ஒன்று வைத்தால் கூட அவரால் 30க்கும் மேலான தமிழைப் பாடும் கவிதைகளை எழுதிவிடமுடியுமல்லவா? அத்தனை நம்பிக்கை எனக்கு அவர் மேல்.

"விரலுக்குள் ஊறிவரும் எழுத்து தமிழ்
தமிழ் எழுத்தினில் நிமிர்கின்ற விரல் "


உண்மையான சொல். நல்ல தமிழில் எழுதும்போது எழுகின்ற விரலுக்கு வீழாத விரல்கள் உண்டோ? விரலில் ஊறிவந்த தமிழ்தான் இந்த குமரிநாட்டை கடந்த நூற்றாண்டில் மீட்டெடுத்தது பெருமளவு. விரலில் ஊறிவந்த தமிழ்தான் வாயில் ஊறிவந்த பலவற்றையும்
தடுத்தது. விரலில் ஊறி வரவேண்டிய தமிழ் இன்னும் எவ்வளவோ உண்டு. அது வரவேண்டும்.

விரல்களில் எல்லாம் தமிழ்ப் பெருக்கு ஏற்படவேண்டும்; ஆங்கிலமும் வடமொழியும் தமிழிற்கு ஏற்படுத்தியிருக்கும் கட்டுகளை, கட்ட முற்படும் சழக்குகளைக் களைதல் வேண்டும்.

சழக்குகளைக் களைந்து விட்ட விரல்கள் நிமிர்ந்தே நிற்கும்.

"உயிருக்குள் குடிகொண்ட மானம் தமிழ்
தமிழ் மானத்தில் துடிக்கின்ற உயிர்


மண்ணுக்குள் கருவான வளம் - தமிழ்
தமிழ் வளத்தினில் கொழிக்கின்ற மண்"


அத்தனை வரிகளும் அற்புதமெனினும், இவ்வரிகளை மேலெடுத்து எழுதுவது அவற்றின்பால் சற்றே அதிகமாய் உள்ள நேசத்தால்.

வாழ்க கவிஞர் புகாரி.
தமிழ் விரல்களை நிமிரவைக்கட்டும் அவரின் கவிதைகள்.

மீண்டும் சந்திக்கும் வரை
அன்புடன்
நாக. இளங்கோவன்எழில் நிலா மகேன்
இதயம்.

சந்தங்களின் மனம் தின்னும் சத்தங்களைக் கொண்டு கருத்துக்களைக் கருக்கலைப்பு செய்யாமல் சொல்வதற்கு ஒரு திறமை வேண்டும். அந்த வரம் புகாரிக்கு வாய்த்திருக்கிறது. வெண்பா போல எழுதுவார், ஆனால் இலக்கணங்கள் இருக்காது, இருந்தால் அவர் பெருமிதப் படுவதுமில்லை, இல்லையேல்

அதற்காய் 'காய்' தேடிக் கவலைப்படுவதுமில்லை. அவர் எழுதுவது தான் அவருடைய கவிதைக்கான இலக்கணம். புட்டிகளுக்கேற்ப தைலம் தயாரிப்பதில் அவருக்கு உடன்பாடு இருந்ததில்லை. அது அவர் பாடு ! அவருடைய கொள்கைகளோடு அவர் கொள்ளும்
ஈடுபாடோடு எனக்கு உடன்பாடு !

அன்புடன் இதயம் தொகுதியில் என்னை சட்டெனக் கவர்ந்த கவிதைகளில் குறிப்பிடத்தக்கவை பஞ்சபூதக் கவிதைகள் ! நீர், நெருப்பு,


நாக. இளங்கோவன்

பஞ்ச பூதங்களைப் பாடிய கவிஞருக்குப் பாராட்டுகள். பஞ்ச பூதங்களில் இந்த பூதத்தை இவர் பாடியிருப்பது மட்டும் சொக்க வைக்கிறது. ஏன் தெரியுமா?

நீர், நெருப்பு, ஆகாயம், காற்று என்ற நான்கனுக்கும் இல்லாத அந்த ஒற்றைச் சிறப்பு நிலம் என்ற பூதத்துக்கு இருப்பதுதான்.

தாய் நீர் என்று சொல்லிக் கேட்டிருக்கிறோமா? அது ஓடிப் போகும் இயல்பினது.

தாய் நெருப்பு என்று சொல்லிக் கேட்டிருக்கிறோமா? சிறிதாய் இருந்தால் அடங்கிக் கிடக்கும். பெரிதாய் ஆனால் பேயாய் உலவும்.

தாய் வானம் என்று உண்டா? வானம் என்பதென்ன? வினாக்குறி!!

தாய்க் காற்று? சின்ன நகைப்புதான் இதழோரம்!!

தாய் மண் என்று சொல்லாத மாந்த இனம் பூவுலகில் ஏது? ஒரு மனிதனுக்கு முகவரியைத் தருவது அவன்/அவளைப் பெற்றவர் மட்டுமா? இல்லை. பிறந்த மண்ணும்தான். மனிதனுக்கு மட்டுமல்ல. பறவைகளுக்கும் பேருண்டு ஊருமுண்டு! மணப்பாறை மாடு முதல் ஆப்பிரிக்க ஆனைக்கும், அமேசான் பாம்புக்கும் முகவரி உண்டு.

பெற்ற தாயையும் பிறந்த மண்ணையும் பழிப்போரைத் தாய் தடுத்தாலும் விடுவரோ? தாயும் மண்ணும் ஒன்று.

அவளும் அன்னை; இவளும் அன்னை. இருவருக்கும் அதே பொறுமை; தாய்மை.

அன்னைக்குத் தீங்கு வரும்போதெல்லாம் மனிதகுலம் சிதறித் தவிக்கிறது.

அன்னைக்கு வந்த தீங்கைக் காக்க மறந்த குலமெல்லாம் நாசமடைந்து போகிறது; தமிழகத்தைப் போல.

அன்னைக்குத் தீங்கு செய்வோரைப் போற்றுபவரும் காப்பவரும் நிறைய நிறைய, பொறுக்க முடியாமல் போனாலும் பொங்கியா எழுகிறாள்?

இல்லை இல்லை; தன்னையே தண்ணீரில் அமிழ்த்திக் கொண்டு பிணமாகிப் போகிறாள்!

ஒன்றா இரண்டா! நான்கு முறைகளாம் தமிழ் மண்ணில்.

பாதகர்கள் பெருகிய நாட்டில் "ஐந்தாம் கடல்கோளே வா!" என்று அன்னை நிலம் அழைக்கும் முன்னர் அறிவு பிறக்கட்டும் பகைநக்கும் பாதகர்களுக்கு!

அதற்கு நண்பர் கவிஞர் புகாரியின் நிலமகளைப் பாடிய இக்கவிதை கண்ணொளி வழங்கட்டும்! வாழ்த்துகிறேன் வாழியவே!

அத்துடனே, மீண்டும் மீண்டும் படித்த சில அடிகளையும் சுட்டிக் காட்டுகிறேன். முழுக்கவிதையும் சற்று கீழே காண்க.

குங்குமம் குழைத்த சந்தனப் பந்தாய்
தோழியரோடு ராட்டினம் ஆடும்
மங்களப் பெண்ணே நிலமெனுந் தாயே
சக்கரம் இல்லாச் சொப்பனத் தேரே

வானம் கூட வம்பாய் உன்மேல்
காயம் ஆக்கும் கற்கள் வீசும்
தாயே நீயோ சகிப்பின் எல்லை
உயிர்கள் காக்கப் பொறுப்பாய் தொல்லை


அன்புடன்
நாக.இளங்கோவன்

நிலம்

குங்குமம் குழைத்த சந்தனப் பந்தாய்
தோழியரோடு ராட்டினம் ஆடும்
மங்களப் பெண்ணே நிலமெனுந் தாயே
சக்கரம் இல்லாச் சொப்பனத் தேரே

கட்டி இழுக்கும் கயிறும் இல்லை
கடந்து செல்லும் சாலை இல்லை
கையை நீட்டி வழியைச் சொல்லும்
கடமைப் பணியில் எவரும் இல்லை

சொல்லடி அழகே பொறுமைக் கிளியே
போவது எங்கே பூமிப் பெண்ணே
ஆயிரமாயிரம் கோள்கள் இங்கே
ஆயினும் நீதான் கர்ப்பப் பையே

எத்தனை கோடி எத்துணைக் காலம்
எறும்பாய் புழுவாய் மனிதப் பிறப்பாய்
எல்லா உயிர்க்கும் அன்னை நீதான்
அண்டம் மீதில் அட்சயக் கருப்பை

கனவுகள் தொற்றி காற்றினில் ஏறலாம்
கற்பனை பிடித்து வானிலே ஆடலாம்
காலடி மட்டும் எங்கே வைப்பேன்
கருணைத் தாயே உன்னில் தானே

பேரிடி வந்து இடுப்பினில் இறங்க
பிள்ளைகள் ஈனும் மெல்லிய பெண்மை
மீண்டும் பிறக்கும் வல்லமை கொள்வது
மசக்கையில் உன்னை உண்பதால் தானே

காற்றின் சீற்றம் கடலை உசுப்பும்
புயலெனும் பேயும் உன்னை ஆட்டும்
கோப நெருப்பும் கொதித்துக் கிளம்பும்
உன்னுடல் கிழித்துப் புண்கள் சேர்க்கும்

வானம் கூட வம்பாய் உன்மேல்
காயம் ஆக்கும் கற்கள் வீசும்
தாயே நீயோ சகிப்பின் எல்லை
உயிர்கள் காக்கப் பொறுப்பாய் தொல்லை

உன்னில் இருந்தே உயிர்கள் பிறப்பு
உன்னைச் சேரவே ஒருநாள் இறப்பு
விண்ணில் ஏறும் மேகம் கூட
உன்னில் வாழ உனக்குள் குதிக்கும்

உன்னில் தோன்றி உன்னில் தவழ்ந்து
உன்னில் வாழ்ந்து உனக்குள் மாயும்
ஊனும் உயிரும் உன்றன் பிள்ளை
உயிர்கள் இன்றி ஒன்றும் இல்லை

No comments: