உலகமுதல் இணையநூல் வெளியீடு 5


தலைவர் மாலன்
அறிவிப்பாளர் ஆல்பர்ட்
முனைவர் அனந்தநாராயணன், கனடா
பரணி சங்கர், மும்பை
கவிஞர் மதுமிதாதலைவர் மாலன்
தாமிரபரணியில் நனைந்தவர்களுக்கு இதயத்தில் ஈரத்தோடு தமிழும் எப்போதும் உடனிருக்கும். மாதவியார் வசிப்பது மும்பை என்றால் அவருக்குத்
தாய் மண் நெல்லை. அவரது கருணையும் கறாராரும் எங்கிருந்து பிறந்தவை என்பது இப்போது புரிந்திருக்குமே! அடுத்து வருவது யார்? அறிந்து
கொள்ளப் பொறுத்திருங்கள். இடையில் ஒரு வேண்டுகோள். தமிழ் சொற்கள் வலிமை வாய்ந்தவை. குறைவான வார்த்தைகளைக் கொண்டே நிறையச்
சொல்ல முடியும். குறள் இருக்கிறதே மறுக்க முடியாத சான்றாக. அடுத்து வரும் நண்பர்கள் சுருக்கமாகப் பேசினால் தங்கம் கிடைக்கும். ஆமாம்
காலம் பொன் போன்றதாயிற்றே!

அறிவிப்பாளர்
கவிஞர் புகாரியின் "அன்புடன் இதயம்" கவிதை நூலை மாதவி வெளியிட முனைவர். வே.ச. அனந்தநாராயணன் நண்.மணியத்தை முந்திக்கொண்டு போய் மேடையில் மாதவியிடம் பெற்றுக்கொண்டு அப்படியே பளிச்..பளிச் பக்கம் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடிக்கொண்டிருந்தது. விட்டால் மாதவியிடமிருந்து ஒலிவாங்கியை பறித்துப் பேச ஆரம்பித்து விடுவார் போலிருந்தது. சரி, உங்களுக்குப் பின்னால் மணியம் வேறு நூலை வாங்க அந்தக் கடைசியில இருந்து ஓடி வர்றாரு என்று அவரை சமாதானப் படுத்தி மேடையின் இரண்டாவது வரிசையில், முன்வரிசையில் அமர்ந்திருந்த சிவா பிள்ளைக்கு பின்புறமாக உட்கார வைத்தார், கவிஞர்.கற்பகம்.

கவிஞர்.மாதவி பேசி முடித்ததும் கைதட்டல் இணையக் கூரையைப் பிய்த்துக் கொண்டு போனது. மீண்டும் பளிச்..பளிச்களுக்குப் பிறகு சி.என்.என் நிருபர் கவிஞர்.மாதவியை ஒட்டி நடந்தவாறே பேசிக் கொண்டு போக..இதுதான் சமயம் என்று ஒலிவாங்கி இருக்குமிடம் நோக்கி வேகமாகப் போனார். வேறு யார்?

கனடா ஹாமில்டன் நகர மெக் மாஸ்டர் பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர்.வே.ச. அனந்தநாராயணன் தான்! அவர் என்ன சொல்லப் போகிறாரோ பார்ப்போம்.

முனைவர் அனந்தநாராயணன், கனடா
எழுச்சியோடும், விழிச்சியோடும் இங்கு கூடியிருக்கிற எனதருமை தமிழ் அறிஞர்களே! ஆர்வலர்களே, அனைவர்க்கும் வணக்கம். விழாத் தலைமைக்கும், வாய்ப்பளித்த பேருள்ளங்களுக்கும் என் உவப்பான வணக்கங்கள்! நூல் பெறுவோன் ஆகிய என் உரைதனை சுருக்கமாக தலைவர் வேண்டுகோளுக்கிணங்க உங்கள் முன் ஆற்றிட வந்துள்ளேன்.

இறைவனால் நமக்கு அளிக்கப்பட்ட இனிய வரங்களில் தலையாயது பிறரின் சிறப்பைப் போற்றி வாழ்த்துதற்குக் கிட்டும் வாய்ப்பு ஆகும்.

அன்புடன் இதயத்திலிருந்து வரும் வாழ்த்து, அளிப்பவரையும் பெறுபவரையும் இன்பத்தில் ஆழ்த்தி அவ்விருவரின் வாழ்வின் தரத்தை உயர்த்தும். வாழ்த்துப் பெறுபவர் ஒரு தலைசிறந்த தமிழ்க் கவிஞர் என்றாகும்போது இந்த இன்பம் விண்ணையும் தாண்டிப் பெருக்கெடுத்து ஓடும். அத்தகைய ஆனந்த வெள்ளத்தில் மிதக்கும் வாய்ப்பு எனக்கு இந்தத் தமிழுலக இணையவெளிப் பந்தலிலே நம் இணையக் கவிமன்னர் புகாரி அவர்களின் நூல்
வெளியீட்டு விழா வழியாக இரண்டாம் முறையாகக் கிட்டியிருக்கிறது.

தொராண்டோ வில் நடைபெற்ற 'அன்புடன் இதயம்' நூல் வெளியீட்டு விழாவில் நான் நேரில் கலந்து கொண்டு என் வாழ்த்துரையை அளிக்க இயலாமற் போன குறையைப் போக்குகிறது இந்த இரண்டாம் வாய்ப்பு. கவிஞர்களும் அவர்களுடைய கவிதைகளைச் சுவைப்பவர்களும் கற்பனை வளம் மிகுந்தவர்கள் ஆதலால், இந்த இணையத் தள விழாவில் பெருமளவில் கூடியிருக்கும் அத்தனை பேரையும் என் மனக்கண்ணால் நன்கு காணமுடிகிறது. இந்த அழகிய சூழ்நிலையில் கவிஞர் மாதவி தம் கவிதைக் கைகளால் எனக்குத் தரும் 'அன்புடன் இதயம்' நூலைக் களிப்புடன், பெருமையுடன் பெற்றுக்கொள்கிறேன்.

முந்தைய விழாவில் கவிஞர் புகாரியின் திறத்தையும் நூலின் சிறப்பையும் பற்றி நான் கூறியதின் ஒரு பகுதியை இங்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்: "மணிமணியாக முப்பது கவிதைகளைக் கொண்டு தொகுத்த மாலையான 'அன்புடன் இதயத்தை'ப் படிக்கையில் நம் நெஞ்சில் பல்வேறு துடிப்புகள் மாறிமாறிப் பயில்வதைப் பார்க்கிறோம். முதல் பாடலிலேயே, நம் தாய்மொழியின் ஏற்றத்தைக் கவிதையின் நடையழகிலும் பொருள் அழகிலும் நாம்
உணரச் செய்கிறார். இதை அடுத்து வரும் காதலும் கனிவும் கொண்ட பாடல்கள் நம் இதயத்தில் "சொட்டுச் சொட்டாய் அமுத அழகை' வார்க்கின்றன. மேலே தொடர்ந்து, வேதனையும் விரக்தியும் விரவி மனத்தின் அடித்தளத்தைத் தொடும் பாடல்களும், அந்நிலையிலிருந்து நம்மைப் பிரபஞ்ச வெளிக்குக் கொண்டுசென்று சிறகடிக்க வைக்கும் 'பஞ்சபூத'ப் பாடல்களும், ஒரு விந்தைக் கவிஞனின் விரலைப் பிடித்துக்கொண்டு அவனுடன் நம்மைப் பயணம் செய்ய வைக்கின்றன" இப்போது, நீங்களும் என்னோடு சேர்ந்து நம் நண்பரும் பெருங்கவிஞருமாகிய புகாரி அவர்களுக்கு உங்கள் சார்பில் நான் எழுதிய ஒரு வாழ்த்துக் கவிதையைப் படிக்க வருகிறீர்களா?

இதோ, இலேசாகச் செருமிக் குரலைச் சரிசெய்து கொண்டு துவங்குவோம்:

கண்ணிலே காண்ப தெல்லாம்
கணினியில் காகி தத்தில்
வண்ணமும் வனப்பும் மிக்க
கவிதையாய் வடிக்க வல்ல
பண்புடை கவிஞர் ஏறு
படைத்தநல் நூலை இன்று
நண்பர்நாம் இணையம் ஏற்றி
நவிலுவோம் நமது வாழ்த்தை!

'முப்பது துடிப்பு' மூலம்
முழுமையாய் நமதுநெஞ்சைக்
கப்பிடும் நினைவை, காணும்
கனவினைப் படமாய்க் காட்டும்
செப்படி வித்தை தன்னைச்
செய்திடும் இவர்தி றத்தைச்
செப்புவது ஆமோ? என்றன்
சிந்தையால் வாழ்த்து கின்றேன்!

அன்புடன் இதயம் என்னும்
அழகிய நூலைப் பெற்றேன்
இன்பமாம் கடலில் நீந்த
இனியதோர் வழியைக் கற்றேன்!
தன்பணி தன்னில் ஓயாத்
தமிழுல கென்னும் இந்த
மின்குழு வாழ்க! மேலும்
வாழ்கநம் கவிபு காரி!


என்றும் அன்புடன்,
அனந்த்


பரணி சங்கர், மும்பை
அதோ அரங்கத்திற்குள் ஒரு பெரியப் பேரணி நுழைகின்றது. தேர்தல் நேரத்தின் மகா கூட்டணிக்கு வந்தது போல் கூட்டம். தளைய தளைய வேட்டிக்
கட்டிக்கொண்டு நாதஸ்வரம் முழங்க கரகாட்டம் பின் தொடர சிலம்பாட்டத்தைக் காட்டிக் கொண்டே பேரணி அரங்கத்தில் நுழைகின்றது. இலக்கிய
விழாக் கூட்டம் இவர்களின் வருகையால் மாநாடு போல் காட்சிதருகின்றது., அவர்கள் கைகளில்

ஆஸ்தானக் கவிஞர் வாழ்க..

அன்புடன் இதயமே வாழ்க..

எங்கள் உயிரெழுத்தே வாழ்க..

கணினி கவித்திரையே வாழ்க..

இணையத்தின் வானம்பாடியே வாழ்க..

அவர்கள் ஏந்தி வந்திருக்கும் பேனர்களின் வரிசையை இப்பொது நீங்கள் பார்த்தீர்கள்.. அவர்கள் யார் ? என்று தெரிகின்றதா... அரபு நாடுகளின் அமீரக நண்பர்கள். இப்போது அங்கிருக்கும் எல்லா அமைப்புகளையும் ஒருங்கிணைத்து விழாக் கண்டவர்கள்.. அப்படியே அந்த விழா முடிந்து இங்கே வருகின்றார்கள்... அவர்களின் முன்வரிசையில் நீங்கள் காண்கின்ற இந்த இளைஞர் ஆசிப்மீரான்.. அரபு வானொலியில் தமிழர்கள் கேட்கும் தமிழ்க்
குரலுக்குச் சொந்தக்காரர்.. அருகில் சாபு, இசாக்.. இந்தக் கூட்டத்தைப் பார்த்து மலைத்துப் போய் நிற்கின்றார் நம்பி அவர்கள்.. இத்தனைப் பேருக்கும் டீ, காபி .. இருக்கின்றதா என்ற கவலையில் அவர் உள்ளே போய் பார்க்கின்றார்....

கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்களும் புதியமாதவியும் தங்களின் அந்த நாள் மலரும் நினைவுகளில் எதையோ பேசி சிரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.. கவிமாமணி மும்பையில் இருந்தவராம்.ஏற்கனவே தெரியுமாம்..

ஒருவர் மேடையில் கவிதை வாசித்துக் கொண்டிருந்தார்..

கவிஞரே..
நாங்கள் எண்ணெய்க் கிணற்றில்
அவதரித்த ஆக்ஸிஜன்கள்..
உன் அன்புடன் இதயம்
தொட்டபிறகுதான்
பிராணவாயுவாக
மீண்டும் பிறந்தோம்...

. கைதட்டலில் அரங்கம் அதிர்கின்றது.... ஆமாம் மாலையில் சிறப்பு பட்டிமன்றம் இருக்கின்றதே.. கவிஞர் புகாரியில் கவிதையில் விஞ்சி நிற்பது
காதல் உணர்வுகளா..? அறிவியல் சிந்தனைகளா...?

வாவ்!! நல்ல தலைப்பு.. ஆமாம் யாரெல்லாம் பேசுகின்றார்கள்... தலைவர் யார்? உஷாவிடம் கேட்டோ ம். ம்ம்ம் சஸ்பென்ஸ் என்று அவர் சிரிக்கின்றார்.

இதோ இப்பொது நீங்கள் அரங்க மேடையின் அருகில் பார்க்கின்றீர்கள் கற்பகம் சேவியர் மீனாக்ஸ் என்று உயிரெழுத்தினர் உள்ளே நுழையும்போது மேடையிலிருந்தே கை அசைக்கின்றார் கவிஞர்.. அவர் முகத்தில் தான் எத்தனை மகிழ்ச்சி.. உயிரெழுத்திற்கு எங்கிருந்து வந்தது இந்த மெல்லினப்புன்னகை.

இதோ அங்கும் இங்கும் ஓடிக் கொண்டு மற்றவர்களை வேலை வாங்கிக் கொண்டு பதட்டத்தை வெளியில் காட்டாமல் நிற்பவர்தான் இளைஞர் ஆல்பர்ட்.. வருகின்றவர்களிடம் கைகுலுக்கி எல்லோரையும் பெயர் சொல்லி அழைத்து அசத்திக் கொண்டிருப்பவர் வேறு யாருமல்ல.. சிங்கையிலிருந்து வந்திருக்கும் பழநி அண்ணன்.. வை. கோ விடுதலைப் பற்றி காரசாரமாக பேசிக் கொண்டிருக்கும் கூட்டத்தில் ஆணித்தரமாக தன் கருத்தை சொல்லிக் கொண்டிருக்கும் இவர் சென்னை வாசியாம்.

கவிஞர் மதுமிதா, தமிழ்நாடு
புத்தக வெளியீடு இனிதாய் முடிந்து வாழ்த்துரைகளின் நடுவே வாழ்த்துப்பாடல் ஒன்று. அனுசரித்துக்கொண்டு ஒருதாய் மக்கள் நாமென்போம்...
மெட்டில் பாட வேண்டும்

உலகம் அனைத்தும் ஓரிடத்தில்
உறவாய் கூடின செந்தமிழால்
பிறந்தது புதிய வரலாறு
பலரும் போற்றிட இணையத்தால் (உலகம்)

அன்புடன் இதயம் எனும் நூலை
அகிலம் மகிழ்ந்திட படைத்தவராம்
கவிஞன் புகாரியை வாழ்த்திடவே
இணைந்தன இணைந்தன இதயங்கள் (உலகம்)

சென்னையில் வசிக்கும் மாலனுமே
சிறப்பாய் தலைமை வகித்திடவே
மும்பையின் புதிய மாதவியும்
புகாரியின் நூலை வெளியிடவே (உலகம்)

பலபல நகரின் நண்பர்களும்
பலவித வாழ்த்துக்கள் வழங்கிடவே
மனம் நிறை நெகிழ்வுடன் அதைஏற்று
விழிநீர் வழிந்திட மகிழ்ந்து நின்றோம் (உலகம்)

Comments

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சென்னை விழா நன்றியுரை

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

காணி நிலம் வேண்டும் பராசக்தி

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ