உலகமுதல் இணையநூல் வெளியீடு 15


ஏற்புரை - நன்றியுரை - வணக்கம்

சிங்கை மணியம்
அன்பிற்குரிய விழா நாயாகரும், அன்புடன் இதயம் நூலை" ஆக்கியளித்த கவிஞருமான சகோதரர் புகாரி அவர்களை ஏற்புரை வழங்க வருமாறு
அன்புடன் அழைக்கின்றேன்.


கவிஞர் புகாரி

சந்திரனில் கையசைத்துச்
செவ்வாயில் கால்பதித்து
மந்திரமாய் மின்வெளியில்
மந்தகாசம் செய்கின்றாய்
எந்திரமாய் சென்றவாழ்வை
இழுத்துவரும் உனக்கெந்தன்
வந்தனங்கள் தந்தவண்ணம்
வருகின்றேன் தமிழ்த்தாயே


நன்றி:
தமிழிணைய மேடைதனில் என்னைத் தவழ் மகனாய் ஏற்றி தமிழ் முத்தம் தந்து பூரிக்கும் என் பேரழகுத் தமிழ்த்தாய்க்கு

வரலாற்றின் வைர மணித் துளியில்
வாழ்கின்ற பேறு வாய்த்திருக்கிறது நமக்கு.
இந்திய மொழிகளில் எந்த மொழிக்கும்
இந்தப் பெருமை இதுவரை சொந்தமில்லை.
அயல் மொழிகள் முயல்வதற்குள்
ஆரம்பித்து விட்டோம் நாம்.
சென்ற தலைமுறைக்கு
இந்தச் சிறப்பு இல்லை.
அடுத்த தலைமுறைக்கு இதை நாம்
அனுமதிக்கப் போவதில்லை.
- மாலன்

உந்திவிட்டாய் உலகத்தைச்
சாதனையில்
முந்திவிட்டாய் தமிழுலகே
பந்தியிட்டாய் இணையத்தில்
பேரொன்றைத்
தந்துவிட்டாய் தமிழுக்கே
வாழ்க வாழ்க
இந்தத்திருக் குழுமம்தான்
நான்முதலில்
வந்தேறிய தாய்க்குழுமம்
முந்தாநாள் வந்ததுபோல்
ஈரத்திலென்
பந்தவலைத் தொப்புள்கொடி
நன்றி:


அகிலமுதல் இணையநூல் வெளியீட்டு மின்மேடை அமைத்து அதில் எனக்கு முதலிடமும் கொடுத்து அன்புடன் எடுத்தென்னை அணைத்த என் தாய்க்குழுமம் தமிழ் உலகிற்கு

ஈராயிரத்து மூன்றின் காதலர் தினத்தில் எனக்குத் தமிழ் உலகின் முதல் ஆஸ்தானக் கவிஞன் என்ற அரும்பெரும் பதவி

ஈராயிரத்து நான்கின் அதே காதலர் தினத்தில் எனக்கு இன்னுமொரு பொற்கிரீடமா? அதுவும் அண்டவெளி அளவில்...

இறைவனால்
நமக்கு அளிக்கப்பட்ட
இனிய வரங்களில்
தலையாயது
பிறரின் சிறப்பைப் போற்றி
வாழ்த்துதற்குக் கிட்டும்
வாய்ப்பு ஆகும்
- அனந்தநாராயணன்

'reality TV' என்று சொல்லிக் கொண்டு
கற்பனையை அடியோடு
வேரறுத்துக் கொண்டிருக்கும்
இக்காலகட்டத்தில்
எந்த வித ஊடகங்களின் துணை இன்றி
வார்த்தைகளால் புத்தக வெளீயீட்டு விழா
நடத்துபவர்களுக்கு நன்றி கூற
வார்த்தைகளில்லை !
- கீதா

நீரும் தனித்தே பொழிகிறது - அதன்
தொடுதலில் தாகம் தெரிகிறது
நிலமும் தனித்தே சுழல்கிறது - அதன்
தவிப்பினில் தாய்மை விரிகிறது
காற்றும் தனித்தே அலைகிறது - அதன்
அசைவினில் காதல் மலர்கிறது
நெருப்பும் தனித்தே எரிகிறது - அதன்
வேகத்தில் வேட்கை கொதிக்கிறது
வானம் தனித்தே விரிகிறது - அதன்
மௌனம் உயிரில் நிறைகிறது
தமிழனும் தனித்தே நின்றாலும் - அவன்
சாதனை இயல்பாய் வருகிறது
ஆம்... தமிழன் ஆறாவது பூதம்தான்
நன்றி:


தனியருவனாய் நின்று கட்டுகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து
சாதனைச் செல்வராய் உயர்ந்து நிற்கும் தமிழ் உலக மட்டுநர்
ஆல்பர்ட் அவர்களுக்கு

இதையும் செய்வேன்
இன்னமும் செய்வேன்
எதையும் செய்வேன்
எப்படியும் செய்வேன்
என்பதே இவரின்
கவசகுண்டலமோ

அமெரிக்காவில்
அண்ணன் வீடு இருக்கிறது
அண்ணன் வீட்டுக்கு
அடியேன் சென்றதில்லை
இன்றுவரை
ஆனால் அவரின்
ஆயிரம்வாசல் இதய வீட்டிற்குள்
அடிக்கடி சென்றுவருகிறேன்


அன்பின் ஆல்பர்ட் அண்ணா உங்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டுமென்றால்
அந்த வார்த்தையின் நீளம் வால்கா நதியாகவாவது இருக்கவேண்டும்

தம்பி
தமிழ் உலக
வேடந்தாங்களில்
உங்கள்
அஞ்சல் பறவைகளைக்
காணவில்லையே
வேடந்தாங்களில்
வருடம் ஒருமுறையே
பறவைகள் வரும்
ஆனால்
தமிழ் உலகில்
உங்கள் பறவைகள்
வருடம் முழுவதும்
பறக்கவேண்டும் என்று
அன்போடு
அழைத்துச் சொல்வார்
தெம்பான மொழியில்
என் அண்ணன்
தமிழ் உலக மட்டுநர்
திரு. பழனி
நன்றி:


தட்டச்சு விரல்களால் கலந்துகொள்ள இயலா நிலையில் சிக்கிக்கொண்டிருந்தபோதும் இதயத்தால் கலந்துகொண்டு அன்போடு வாழ்த்தும் தமிழ் உலக மட்டுநர் பழனி அவர்களுக்கும்

ஓடி ஓடி விழாவின் சந்துபொந்துகளிலெல்லாம் பாசத்தோடும் நேசத்தோடும் மின்னலாய் நுழைந்து பணியாற்றி, நெஞ்சார வாழ்த்தி, கண் திருஷ்டி கழித்து என்னைத் திக்குமுக்காட வைத்த அண்ணன் தமிழ் உலக மட்டுநர் மணியம் அவர்களுக்கும்

வானம் உடைக்கும் உளியோடு - இந்த
வையம் பிளக்கும் வாளோடு
யாரோ ஒருவன் வருகின்றான் - அவன்
எழுதும் போதே வாழ்கின்றான்


அன்புடன் இதயம் சென்னையில் வெளியானது கைகளைப் பிசைந்துகொண்டு நான் டொராண்டோவில் அலைந்தேன்

அது என் விழாவா?

"வெளிச்ச அழைப்புக"ளைப் போலவே அன்புடன் இதயத்தையும் டொராண்டோவில் வெளியிட்டேன். வெற்றிவிழாதான் என்றாலும் நான் தவழும் இணையமும் பழகும் இணையவழி உறவுகளுமின்றி மனதைப் பிசைந்துகொண்டு தவித்தேன்

அதுகூட என் விழாவா?

இணையத்திலிருந்து பலநூறு வாழ்த்துக்கள் பறந்து வந்தன.. வர இயலவில்லையே என்று வருந்தாத ஒரு மடல் இல்லை.

இன்று என் விழிகளில் நயாகரா ஆனந்தத்தின் அபூர்வ சந்தங்களாய்.... பூரிக்கின்றேன்... பூரிக்கின்றேன்... உள்ள வனமெங்கும் உவகையால் பூத்துப் பூரிக்கின்றேன்...

ஏன்?

இது என் மேடை இது என் பந்தல் இது என் மேளம் இது என் நாதசுரம் இது என் விருந்து இது என் வரம்....

இது.... இதுதான் என் விழா!

அமெரிக்க மண்ணில்
பட்டுச்சேலை அணிந்து
மல்லிகைச் சரங்கள் சூடி
தங்க வளை பூட்டி
அலங்காரம் செய்துகொள்ள
ஒரு சந்தர்ப்பம் அமைந்ததே
மாபெரும் அதிர்ஷ்டம்

கூடுதலாக
மேடையில் பேசும்
வாய்ப்பினையும் அளித்த
தமிழுலக மட்டுனர்களுக்கு
எப்படி நன்றி சொல்வது

இது போன்ற வெற்றி விழா
கண்டதில்லை
வாழ்க உங்கள் தமிழ்த் தொண்டு


-கற்பகம்

என் தாய்நாடு தமிழ் நாடு
என் தாய்மொழி தமிழ் மொழி
என் தாய்க்குழுமம் தமிழ் உலகம்


தமிழ் உலகம் மட்டுமின்றி இணைய தமிழ் குழுமங்களின் அனைத்து உறுப்பினர்களும் என் நண்பர்கள் என் உறவுகள்.

தமிழ் உலகத்திலிர்ந்துதான் நான் பிறகுழுமங்களுக்குள் நுழையும் வளர்ச்சி பெற்றேன். தமிழ் உலகத்தின் முதல் ஆஸ்தானக் கவிஞன் என்ற அந்தஸ்துக்கு உயர்த்திய தமிழ் உலகத்தையும் அதன் உறுப்பினர்களையும் என்னால் மறக்கமுடியாது. அடடா... அன்றுதான் எத்தனை எத்தனை வாழ்த்து மடல்கள் வந்து குவிந்தன. மூச்சுத்தான் திணறிப்போனேன்.

இன்று உலகின் முதல் இணைய நூல் விழாவில் என்னை நாயகனாய் நிறுத்தி அழகுபார்க்கும் அந்த இனிய உள்ளங்களுக்கு உயிர் நெகிழ்வோடு நான் நன்றி கூறுகிறேன்.

(மாணிக்க மாலையாக மாறும் டொராண்டோ மலர்மாலை (நன்றி மகேன்) கனேடியத் தொலைக்காட்சியில் மீண்டும் பூக்கும் ஹாமில்டன் பூமாலை (நன்றி அனந்த்), வைரமாலையாய் மாறும் ஒட்டாவா மலர்மாலை (நன்றி திரு), பாசத்தோடு வந்த ஒரு பட்டாடை (நன்றி உதயச்செல்வி), வைர வைடூரியங்கள் பதிக்கப்பட்ட சிங்கைப் பொன்னாடை (நன்றி கலைமணி) ஆகிய அனைத்தையும் பெற்றுக்கொண்ட ஆனந்தத்தில் மீண்டும் தொடர்கிறேன்.)

கீழ் திசையில் வளர்ந்தேன்
அச்சுத் திசைகளோடு
வந்தார் இவர்

மேல் திசையில் வாழ்கிறேன்
இணையத் திசைகளோடு
வந்துவிட்டார்

என்போன்ற இளையோரை
எங்கு சென்றாலும் விடமாட்டாரோ
இந்தப் பொன்மன மாலன்


பண்டிகை தினத்தன்று புதுச்சட்டை அணிந்து அதைப் பார்த்துப் பார்த்துப் பூரிப்பில் நடந்தது ஒரு வயது. பின் கருகருவென்று வளர்ந்த மீசையைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கொண்டு பெருமையில் திளைத்தது ஒரு வயது.

அந்த வயதில்தான் திசைகள் எனக்கு அறிமுகம். அது என் பத்திரிக்கை. ஏனெனில் அதை இளைஞர்கள் பத்திரிகை என்று அறிவித்தார்கள். என் முதல் கவிதை அலிபாபாவில் வெளியானது. இரண்டாவது கவிதை திசைகளில்தான். அதுமட்டுமல்லாமல், நாலைந்து இளைஞர்கள் சேர்ந்து தஞ்சையின் சார்பாக பங்குகொண்டோம். இனிமையான நாட்கள் அவை.
தஞ்சாவூர் பெரியகோவிலில்தன் எங்கள் சந்திப்பு நிகழும்.

பலரும் தெய்வத்தை வணங்கிக் கொண்டிருப்பார்கள். நாங்களோ இலக்கியத்தில் நனைந்து கொண்டிருப்போம். அப்போதுதான் மாலன் என்ற பெயர் எனக்கு அறிமுகம். இப்போது அவர் தலைமையிலேயே ஒரு வைர வாய்ப்பு வாய்த்திருப்பது தித்திப்பாக இருக்கிறது.

நன்றி:

மாலையும் காலையும் மலர்ந்தமுக மாலனின் தலைமை கிடைத்ததை எப்படிக் கொண்டாடுவதென்றே தெரியாமல் இங்கும் அங்கும் தாவித் திரிகிறேன்.
நன்றி.

முன்னிலை தந்து என் விழாவினைச் சிறப்பித்த பேராசிரியர் சிவாபிள்ளை அவர்களுக்கு நன்றி

சின்னச் சின்னத் தோரணங்கட்டி
சிரிக்கச் சிரிக்கப் பாட்டுகள் பாடி
வண்ண வண்ண எண்ணங்கள் கூட்டி
அன்பின் ஊற்றால் ஆட்டங்கள் ஆடி

நட்பெனும் சுடரே தமிழ்வழி உறவே
நீயே அன்றி வேறெவர் உயர்ந்தோர்


ஒலிபெருக்கியில் இனிய குரல்பெருக்கி நகைச்சுவையோடு சிலரும், அறிவிப்புகளோடு சிலரும், உபசரிப்புகளோடு சிலரும், நயமான வாழ்த்துக்களோடு சிலருமாய் வந்த

உஷா (உற்சாக மழை)
உமர் (உள்ளத்தில் நல்ல உள்ளம்)
பாண்டியன் (படரும் பந்தக்கொடி)
பாரத் (அன்பருவி)
பரணி சங்கர் (தேன்மழை)
நம்பி ("நச்" சொற்குருவி)
திரு (நூறு சொல் சொன்னாமாதிரி)
மகேன் (மாற்றுக் குறையாத தங்கம்)
உதயச்செல்வி (பாச ஊற்று)
சுவாமிநாதன் (நகைத்தென்றல்)
வாசன் (நேசன்)
கீதா (உலகம் சுற்றும் வாலிபி)
குமார் (நிறைமனச் செல்வர்)
நா. கணேசன் (முனைகூர் முனைவர்)
புஷ்பா கிறிஷ்டி (தாய்க்கவிதையும் சேய்க்கவிதைகளும்)


சும்மா சொல்லக்கூடாது கோடை மழையாகக் கொட்டோ கொட்டென்று கொட்டி குதூகலப் படுத்திவிட்டார்கள். இவர்களின் வர்ணனைகளில் நனைந்து மகிழ்ந்தேன். அந்த ஈரத்தோடு அவர்கள் அனைவருக்கும் நன்றி.

விவேகானந்தரின் சிந்தனைப் பூக்களை தமிழுலகில் வாரி இறைக்கும் அன்பு நண்பர் அன்பு அருமையான வரவேற்புரை வழங்கினார் அவருக்கு என் நன்றி

சீற்றத்தோடு அரபிக்கடல்
அட்லாண்டிக் கடலில் விழுந்து
ஆர்ப்பரித்தது
அழகாய்த்தான் இருந்தது

அடுத்தக்
கடல்(ன்)காரன்தானே நான்
அட்லாண்டிக்காரனல்லவே


வெளியிட்டவரே ஆய்வுரையும் தந்த
புதுமை கண்டு வியந்தேன்
ஓ.. புதிய மாதவி (இது ஹைக்கூ அல்ல)

நன்றி:

வெளியீட்டுரையில்....

உங்கள் உள்ளத்திலிருந்து பொங்கிவந்த உயர்வான வாழ்த்துரைகளாலும் பாராட்டுகளாலும் நட்போங்கும் பட்டங்களாலும் எனக்குள் மத்தாப்புத் திருவிழாவையே நிகழ்த்திக் காட்டிவிட்டீர்கள் தோழி நன்றி.


ஆய்வுரையில்...

நீங்கள் சீறிய கவிதைகளையெல்லாம் சீரிய கவிதைகள் என்று முன்னும் பின்னும்
வந்தவர்கள் மொழிந்துவிட்டபடியால் எனககு எதுவும் சொல்லத்தேவையின்றிப் போய்விட்டதே தோழி!

கேடயங்களால் வாள் உடைந்துபோய்விட்டதை இந்த மேடையிலேயே காணும் வாய்ப்பை
அனைவரும் பெற்றது ஆறுதலாய் இருக்கிறது அழிவில் வாழ்வா கவிதைக்கு இப்பெருஞ்சபை
ஆசிகள் வழங்குகிறது (நன்றி: இலந்தையார்)

போராடு
எவரையும் சாகடிக்க அல்ல
உன்னையே நீ வாழவைக்க

உன்னோடு
இந்த உலகப் பெண்களையும்
உயர்த்தி வைக்க

முன்னுக்கு வருவதென்பது
முதலையே மோசமாக்கும்
மூர்க்கச் செயலல்ல

ஆண்களை மிதித்துக்கொண்டு
அதிகாரம் காட்டுகின்ற
அவலமல்ல

ஆணோடு பெண்ணும்
சமமென்றே கைகோக்கும்
அற்புதம் செய்ய


இதுதான் தோழியரே தோழியரே கவிதையின் நாடித்துடிப்பு. அதைப் பிடித்துப் பார்த்தே பாவேந்தர் வையவிரி அவை இதற்கு பரிசு கொடுத்தது. இந்த மேடையிலும் தனிப்பெரும் வாழ்த்து கிடைத்தது. (நன்றி: ஜெயந்தி சங்கர்)


வெறும் கடன் அட்டையாகவும்
கழுத்துப் பட்டையாகவும்
காட்சி தருவது அவலம்தான்


- புதிய மாதவி

ஆம். அமெரிக்க வீதிகள் அப்படிக் காட்சிதருவதால்தான் இப்படி ஒரு கவிதையே வந்தது. (நன்றி: இக்பால், பிரகாஷ்)


தமிழ் என்ன தந்தது நமக்கு என்று இனி யாரும் நம்மைப் பார்த்துக் கேட்க முடியாது தமிழ் நமக்கு முகம் தந்துவிட்டது

- புதிய மாதவி

கவிஞர் என்றால் கட்டாயம்
தமிழ்- சித்திரை பற்றி எல்லாம்
கவிதை எழுதியே ஆகவேண்டுமா
என்பதைக் கவிஞர் சிந்திக்கவே இதுவும்
-புதிய மாதவி


தமிழின் முகத்தை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது தோழி அவ்வப்போது கண்ணாடியில் பார்த்து அழகாக இருக்கிறது என்று பெருமைப்பட்டுக்கொள்கிறேன். இன்னும் இன்னும் நிறைய நிறைய இனிவரும் காலங்களிலும் பெருமைப்படுவேன் (நன்றி: நாக இளங்கோவன்)

இதய மலர்வு வார்த்தைகளும் அக்கறை விமரிசனங்களும் தந்தருளிய புதிய மாதவிக்கு நன்றி.

நினைவு இருப்பவர்களால்தான்
தன்னை மறக்க முடியும்
நிம்மதி இருப்பவர்களால்தான்
தளர்ந்து உறங்க முடியும்

அன்பு இருப்பவர்களால்தான்
அள்ளி அணைக்க முடியும்
தெளிவு இருப்பவர்களால்தான்
புதியதைப் பொழிய முடியும்

கனவு இருப்பவர்களால்தான்
விரைந்து வெல்ல முடியும்
கற்பனை இருப்பவர்கலால்தான்
விரிந்து பறக்க முடியும்

கவிதை இருப்பவர்களால்தான்
ரசித்து வாழ முடியும்
இதயம் இருப்பவர்களால்தான்
உண்மையாய் வாழ்த்த முடியும்

நன்றி:

அன்புடன் இதயத்தைத் தன் ஆழ்ந்த அனுபவக் கரங்களால் பெற்றுக்கொண்டு வாழ்த்துக்கள் பட்டங்கள் பாராட்டுக்கள் என்று தனித்தேன் கொட்டிய நயாகரா முனைவர் அனந்தநாராயணன் அவர்களுக்கு நன்றி

அழைப்பிதழ் வந்த அடுத்த நொடியே வாழ்த்து மடல்களை வாரிவழங்கிய வள்ளல்கள் நாக. இளங்கோவன், சடையன் பாபு, திரு, எழில்நிலா மகேன், முத்துநிலவன், புதியமாதவி, இக்பால், சுவாமிநாதன், நா. ஆனந்தகுமார் அனைவருக்கும், இவர்களைத் தொடர்ந்து வாழ்த்துமழை பொழிந்த அனைவருக்கும் நன்றி.

தேர் பெற்ற முல்லை
நன்றிக் கொதிப்பால்
எப்படி எப்படியெல்லாம்
தவித்திருக்கும் என்பதை
அப்படி அப்படியே
உணர்கின்றேன் இணையமே

வாழ்த்துக்களை
வாரி வாரிக் குவித்த
பாரிகளெல்லாம் பெருமிதத்தில்
நெஞ்சு நிமிர நடந்து
என்னைக் கடந்து சென்றுவிடுவீர்கள்

நன்றி நெகிழ்வுகளைக்
கணக்கற்று ஏற்றிக்கொண்டு
நானல்லவா தவிக்கிறேன்


வாழ்த்துரை வழங்கிய

மதுமிதா -
மல்லிகைப் பந்தலை
உலுக்கிவிட்டது யார்

ஞானவெட்டியான் -
தத்துவார்த்தத் தராசு
நிறுத்து நிறுத்துப் பார்த்த அழகு
நிறுத்தப்படாத காவிரியோ

இலந்தை ராமசாமி -
மூழ்கி மூழ்கி கடலாழத்தில் முத்தெடுக்க
மூச்சும் யோகமும் வேண்டும்
அலசி அலசி கவியாழத்தில் முத்தெடுத்துக்
காட்சிக்கு வைத்தது பேரழகு
அந்த வித்தைக்குப் பெயரோ ஆய்வுழவு

நம்பி -
தெம்பான சொற்களால்
பழமையையும் புதுமையையும்
நெம்பிப்பார்க்கும் பார்வையை
நம்பிக்குத் தந்தது யார்?

ஐகாரஸ் பிரகாஷ் -
வெளிச்சத்தில் இருட்டையும்
இருட்டில் வெளிச்சத்தையும்
விரட்டிப் பிடித்து
விமரிசனப் பொறியிலடைக்கும்
வல்லமைக்கு வாழ்த்து

தமிழ்க்கவிதை என்பது
கடலேறாமல் நீண்டு படர்ந்து
ஓடிக்கொண்டிருக்கும் ஜீவநதி

தோன்றிய இடத்திலிருந்து
பெருகிப் பெருகித்தான்
நம் வாய்க்கால்களுக்கும்
வரம்தருகிறது

அவ்வைக்கும் முன் தொட்டு
வைரமுத்துவை உள்ளடக்கி
வந்தவாசி நவீன கவிஞனின்
சின்னஞ்சிறு கிளையோடை
வரைக்கும் ஓடுவது
அந்த நதியின் மூலம்தானே!

உங்களுக்காக ஒரு சின்ன உதாரணம்:

ஆங்காரம் உள்ளடக்கி
ஐம்புலனைச் சுட்டறுத்து
தூங்காமல் தூங்கிச்
சுகம் பெறுவது எக்காலம்?


- பத்திரிகிரியார் (பத்தாம் நூற்றாண்டு)

பேரீச்சம் பழம்போல
பெரிய உதட்டுக்காரி
வெட்கத்தை ஒத்திவெச்சி
விருந்து வைப்பது எக்காலம்

ஆத்தங் கரையோரம்
ஆலமரம் அடையாளம்
ஆல மரத்தடியில்
அள்ளுவது எக்காலம்


- வைரமுத்து

பசுபதி -
ஆசியோடு வரவு
நேசத்தோடு பார்வை
ஆகாய உயரத்துக்கு
அரை நிலவை ஏற்றிவைக்க
பேருள்ளம் கொள்வதெப்படியோ
பேராசிரியரே

ஆசாத் -
மென்மையைத் தொட்டு
மேன்மையாய்ப் பாராட்டும்
தன்மையைப் பெற்ற
தரமெங்கு பெற்றாயோ

சேவியர் -
ரசித்துப் பாராட்டும் உன்
பாராட்டின் இளஞ்சூட்டில்
எனக்குள் சாய்ந்துகிடக்கும்
பைசா கோபுரங்களெல்லாம்
நிமிர்ந்து கொள்கின்றன
கவித்தென்றலே

கற்பகம் -
சுவாசங்களேந்தி
உயிர்த்தென்றல் அலைகிறதோ
உணர்வுகளால் புள்ளி வைத்து
உயிரெழுத்தை வரைகிறதோ

நாக. இளங்கோவன் -
தூய சொல் அன்னைத் தமிழுக்கு
சாட்டைச் சொல் அழுக்கு அரசியலுக்கு
வாசனைச் சொல் எனக்கே எனக்கா
அலசியாராய்ந்து அள்ளிவழங்கிய
பாராட்டின் தாலாட்டு
பரவசத்தில் ஆழ்த்துதையா

"கண்ணீரும் தண்ணீர்தான்" மட்டும்தான்
கண்ணில் பட்டதா?

சமைப்பதுவும் உண்பதுவும்
உண்டதனைச் செரிப்பதுவும்
செரித்ததெலாம் ரத்தமெனச்
சேர்வதுவும் தண்ணீரே
கருணைகூடத் தண்ணீரே
பனிக்குடமும் தண்ணீர்தான்
தாய்முதலில் ஊட்டியதும்
பாலென்னும் தண்ணீர்தான்
தேகத்துள் ஓடிநின்று
மோகத்தில் ஊறிவந்து
கருவாகி உருவாகி
உயிர்ப்பதுவும் தண்ணீர்தான்
தண்ணீரால் ஆனதினால்.....

இவற்றில் எதுவுமே நீங்கள்
பொருள் கொள்ள முனையும்
பொருளில் இல்லையே?

பொருள் விளக்கங்கள் தந்துதவிய
அனந்தநாராயணன், ஞானவெட்டியான்
புதியமாதவி, இக்பால், நா.கணேசன்
அனைவருக்கும் என் நன்றி

ஜெயந்தி -
உருவ ஈர்ப்பா உள்ள ஈர்ப்பா என்று
உற்றலச விழி விரிக்கும்
பெண் மனங்களே
பௌர்ணமி நிலாக்கள்

சாபு -
பாலைவனப் பாமலர்
அன்பு மணம் வீசும் மாமலர்
பார்வையைத் தரையில் பதிக்கும்
மேல் மாடிப் பொன்மலர்

இக்பால் -
மெல்லிய தசையிலானதுதான்
என்றாலும் இதயம்
மென்மையாய் இருப்பதில்லை பலருக்கு
சிலரோடு சில பொழுது
உரையாடும்போது
வன்மை என்ற சொல்லையே
மன அகராதி மறந்துபோகும்

இராமகி -
பட்டமரத்தின் பழையவேர்கூட
பாய்ந்திருந்தத் தடயம் தேடிப்
பசி மறக்கும் தமிழ்நெஞ்சம்

இராஜரங்கன் -
கணித அரசரோ இசை மன்னரோ
நகைச் சுவை வேந்தரோ

கவியோகி வேதம் -
நெஞ்சு என்றால் நெஞ்சு
நேற்றுப் பிறந்த பிஞ்சு
வஞ்சமில்லா நெஞ்சினின்று
வாழ்த்துக்களோ பஞ்சு

உஷா -
முதலில் கா-விட்டு கவிதை விட்டு
பின் பழம்-விட்டு பாட்டு தொட்டு
போட்டிக் குள்ளும் துணிந்து
குதித்த மனவீரப் பேழை
நற் சுவை எழுத்தில்
வாழையடி வாழை

பிலிப் -
தமிழ்த்தாய் நெஞ்சின்
வாடாத காயத்தைக் கண்டபோதெல்லாம்
வாடாமல் போய்விடும் மருத்துவரல்ல

உதயச்செல்வி -
கொட்டும் மழையெனக் கவிதை
கூட இருப்பதும் கவிதை
நாளை முளைக்குமோ விதை

மீனா -
நீரிலலையும் கார்காலக்
குமிழிகளின் மென்மை
வேரில் காக்கும் பழைய
நினைவுகளின் விருந்து

குழுக்கள் யாவினுக்கும்
பாலம் அமைப்போம்
குலுக்கவே கைகளென்ற
ஞானம் வளர்ப்போம்

வழுக்கிடும் சொல்மறந்து
வானில் ஏறுவோம்
செழிப்பது தமிழேயென்று
வெற்றி பாடுவோம்

நன்றி:

குழுமங்கள் அத்தனையும் ஒன்றாய்க் கூடி
உய்ர்ந்த குரலில் மனதார வாழ்த்தியது
தமிழ் நஞ்சையில் நிமிர்நெஞ்சை விதைத்தது
தங்கத்தமிழ்க் குழுமங்கள் யாவுக்கும்
நன்றி.

அனைத்துக் குழுமங்களும் எனக்கு ஒன்றுதான் என்றாலும்

என் கவி ரோஜாக்களின்
வண்ணமும் மணமும் முகர்ந்து
நீர் ஊற்றி உரமிட்டு
பாராட்டுப் பரிசுகள் அளித்து
உற்சாக ரத்தமேற்றி
சிலிர்ப்பாகப் பூக்கவிடும்
என் இனிய கவிதைக் குழுமங்கள்

சந்தவசந்தம்
உயிரெழுத்து
தினம் ஒரு கவிதை

ஆகிய மூன்றுக்கும் என் பிரத்தியேக நன்றிகள் பிரியங்களுடன்

நன்றி

என் கவிதைகளை அருமையாய்த் தொகுத்து வலைதந்து வலையேற்றிய எழில் நிலா மகேன் அவர்களுக்கும்

விழா அழைப்பிதழை முதல் பக்கமாய் விரித்துக் காட்டிய சங்கமம் ஆசிரியருக்கும்

நன்றியுணர்வால் நனைந்து நனைந்து கண்கள் கடலாழத்தில் காணாமலேயே போய்விட்டன.

என்னை வாழ்த்தியவர்களின்
ஒவ்வோர் எழுத்தும்
உயிரெழுத்தாய் என் இதயத்தில்
துடித்துக்கொண்டிருக்கிறது

இங்கே பெயரிடாமல் நான் விட்டிருக்கும் ஏனைய இணையத்தமிழ் நெஞ்சங்களுக்கு என் சிறப்பு நன்றி

தமிழர்தம் அடையாளம்
தமிழன்றி வேறில்லை
தாய்மொழியைத் துறந்தவரோ
தன்முகத்தை இழந்தவரே
தமிழரோடு பேசும்போது
தமிழ்மொழியில் பேசுவோம்
தமிழ்த்தாயின் மடிதவழ்ந்து
தன்மானம் ஓங்குவோம்


நன்றி, வணக்கம்.

அன்புடன் புகாரி ....................(மனமும் ஏற்புரையும் நிறைவு)

No comments: