உலகமுதல் இணையநூல் வெளியீடு 12


தலைவர் மாலன்
அடுத்து வருகிறார் கற்பகம். இவரது எழுத்து உயிரெழுத்து. உயிர் சுமந்த மெய் எழுத்து. வரம்
தரும் அந்தக் கற்பகம். வாழ்த்துரைக்க வருகிறார் இந்தக் கற்பகம்

கவிஞர் கற்பகம்
எல்லோருக்கும் வணக்கம்.

"நான்புரிந்துகொண்ட அனைத்தையும் நான் மிகவும் நேசிக்கிறேன். அதனால்தான்
அவற்றைப் புரிந்துகொள்கிறேன்." - லியோ டால்ஸ்டாய்.

"ஊரும் உலகமும்
உறவும் சாட்சிகளும்
தப்பும் தவறுமாய்
மொழிபெயர்த்தாலும்
நடு நாசி சிவக்க
என் செயல் முகர்ந்து
முழுமனம் பூட்டி
உள் நியாயம் புரிந்த
உன் ஆறுதல் பரிசத்தில்
என்னுயிர் காக்க..
அன்பே நீயென்
உடன் வருவாயா...?


- புகாரி. அன்புடன் இதயம்

புலரிலும்,
பொழுதிலும்
புரிதலே வேண்டுகிறேன்
பராபரமே.


அருகிலே அழைத்து ஆறுதலாகப் பேசவொரு அன்பான இதயம் இருந்துவிட்டால் இமயம்
போன்ற இன்னல்களும் எளிதாக இளகிவிடுமே... என எண்ணாத இதயமென்று இங்கேது
பராபரமே.

குழந்தை அழுகிறது.. ஏன் என்று புரியவில்லை.
ஏன் என்று புரியவில்லை... அதனால் அழுகிறது
.

ஒவ்வொரு பொருளையும், ஒவ்வொரு மனிதனையும்,ஒவ்வொரு பிரச்னையையும் புரிந்து
கொள்ள வேண்டும். அதன் ஆழத்துக்கு, வேருக்குள் சென்று பார்க்க வேண்டும். அப்படிப்
பார்த்தால், புரியும்.. புரிந்தால் பல கவலைகள் தீரும்.

சரி, புரிந்துகொள்வது எப்படி, என்கிற கேள்வி எழும்பொழுது... உன்னிடம் கொஞ்சம் பேச
வேண்டும்... வருவாயா? என்று அக்கறையோடு அழைக்கிறது கவிஞர் புகாரியின்
இரண்டாவது கவிதைத் தொகுதி "அன்புடன் இதயம்"

"நான் புரிந்துகொண்ட அனைத்தையும் நான் மிகவும் நேசிக்கிறேன். அதனால்தான்
அவற்றைப் புரிந்துகொள்கிறேன்." - லியோ டால்ஸ்டாய்.

நெஞ்சத்தின் ஆழத்திலிருந்து நேசிக்கத்துவங்கிவிட்டால் நிஜமான புரிதலும் மிக
இயல்பாகவே வந்துவிடும். இந்த ஒரு மந்திரச் சூத்திரத்தைக் கையிலெடுத்துகொண்டு
கருவறையில் உருவாகி, தாய்மொழியின் மடியில் தவழ்ந்து, தேசப்பற்றில் வளர்ந்து,
பஞ்சபூதங்களையும், அண்டப்பெருவெளியினையும் கூடத் தொட்டுவிட்டு வருகிறது இந்த
அன்புடன் இதயம். இது இக்கவிதைத் தொகுதியின் முதல் வெற்றி.

இது என் வாழ்க்கை, எனக்கு அருகாமையில் இருக்கும் பொருள், நான் தினமும் காணும்
காட்சி என்று வாசிப்பவர்கள், தங்களோடு, தங்களது வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்திப்
பார்க்கின்ற வகையில் கவிதைகளின் பொருளடக்கம் அமைந்துவிடுமேயானால் அது ஒரு
கவிஞன் காட்டுகின்ற அக்கறை, வாசகனுக்குக் கிடைத்த மாபெரும் பரிசு.

அன்புடன் இதயத்தின் ஒவ்வொரு அழைப்பும், ஒவ்வொரு குரலும், ஒவ்வொரு வரியும்
இப்படி நம்மைச் சுற்றியே பின்னிப் பிணையப்பட்டுள்ளது.

படிப்பவர்களோடு ஒன்றிப்போய் கைகோர்த்துக் கொள்கின்ற கவிதைகள். இவை இக்கவிதைத்
தொகுதியின் இரண்டாவது வெற்றி.

நடைமுறையிலில்லாத சொற்களையும், சாமானிய வாசகனுக்கு எட்டாத சிந்தனைகளையும்

திருத்தமாக வரிகளுக்குள் புகுத்திவிட்டுச் சிறப்பான கவிதை சமைத்துவிட்டோம் என்று
பெருமைப் பட்டுக்கொள்வதில் என்ன பயன்? வாசகர்களில் பெரும்பான்மையானவர்கள்
(எல்லோரும் அல்ல) பெரும் சிந்தனையாளர்களாகவோ இலக்கியவாதிகளாகவோ,
மேதாவிகளாகவோ இருக்க மாட்டார்கள், என்று புத்தகம் எழுதி வெளியிடும் கவிஞரோ,
அல்லது எழுத்தாளரோ நினைவில் கொள்ள வேண்டும்.

அறிவியல், ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட புத்தகங்கள் எழுதுபவர்கள் இப்படி யோசிக்கத்
தேவையில்லை.

அகராதியின் துணையின்றி எளிய நடையில் ஒரு நண்பனோடு பேசும் உணர்வை ஏற்படுத்தும்
எளிய மொழி. இத்தொகுதியின் மூன்றாவது வெற்றி.

இப்படியாக அடுக்கிக்கொண்டே போகலாம் அன்புடன் இதயத்தின் சாதனைகளை. ஒரே
வரியில் சொல்வதானால் ஆரவாரமில்லாது, மெல்லிய இசைக்கேற்ப அசைந்தாடி, அழகாக
நெளிந்தோடும் ஒரு தெளிந்த நீரோடை.

"அன்புடன் இதயம்".

வரும் நாட்களில் இக்கவிதைகளோடு இழைந்து மகிழ வாய்ப்பளித்த தமிழ் உலக
மட்டுநர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி.

"வா தமிழா...
நல்ல தமிழில் நாம்
நாளெல்லாம் பேசலாம் வா.."


நன்றி, வணக்கம்.
கற்பகம்.

தலைவர் மாலன்
சர்ச்சைகளால் கவனத்தை ஈர்த்த சங்கதிகள் பல உண்டு. ஒற்றுமையால் நம் கவனததைக்
கவர்ந்த இடமொன்று உண்டா? இருக்கிறது நண்பர்களே இருக்கிறது. அதன் பெயர் அமீரகம்.
அமீரகத்துக் கவிஞர் சாபு, வரம் பெற்ற வார்த்தைகளால் வாழ்த்துரைக்க வருகிறார்.
பிரியமானவரே வருக. பேரீச்சம் பழம் தருக.

கவிஞர் சாபு
அனைவருக்கும் என் அன்பான வணக்கம்!
சனவரித் திங்கள் அமீரகத் தமிழ் அமைப்புகளில் ஒன்றான ' துபாய் தமிழ்ச் சங்கம்'
நடாத்திய பொங்கல் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக
அழைக்கப்பட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். பொங்கலை ஒட்டி பாடிய ஓர் கவிதையில்,
கவிஞரொருவர்...

புள்ளிராஜா பொங்கல் கொண்டாடுவாரா ?
இல்லை
பெண்களை கொண்டாடுவார்
புள்ளிராஜா


என்ற கவிதையை கேட்டு கனத்த இதயத்தோடு வந்த எனக்கு, கவிஞர்.புகாரியின் '
அன்புடன் இதயம்' கனத்த இதயத்திற்கு மருந்தாக அமைந்தது.

விரலுக்குள் ஊறிவரும்
எழுத்து - தமிழ்
எழுத்தினில் நிமிர்கின்ற
விரல்


என்ற வரிகளை படித்த போது, மனசாட்சியிடமிருந்து ஓர் கூவல்,'

அய்யா..
இதுவரை நீ எழுதியதெல்லாம் தமிழல்ல கவிஞர்.புகாரியின் வரிகளைப் படித்து விட்டு
எழுதத் துவங்கினாயே இதுதான் தமிழ்' என்றது. நிதர்சனமான உண்மை, என் விரலும்
நிமிர்ந்து 'தமிழ்' எழுதத் துவங்கியது. என்ன வரிகள் இவை. இப்படியே இக் கவிதையின்
ஒவ்வோர் வரிகளும் வைர வரிகள். அதியமானுக்கு வாழ்நாளை நீட்டித்தரும் ' நெல்லிக்கனி'
கிடைத்தபோது, தமிழ் வாழ வேண்டுமென்பதற்காக அந்நெல்லிக்கனியை ஒளவைக்கு
கொடுத்தானாம். அதுபோல எனக்கும் ஓர் நெல்லிக்கனி பாலைவனத்தில் ஏது நெல்லிக்கனி
ஓர் பேரீத்தம் பழம் கிடைத்தால், கவிஞர்.புகாரிக்கு கொடுத்திடுவேன். அரபி மொழியில்
'சாதிக்' என்றால் நண்பன். நண்பர் கவிஞர். புகாரி ஏற்கனவே வெளி(ச்ச) அழைப்பு கிடைத்து
சாதித்து விட்டார். இன்னும் சாதிக்கப் போவது 'சாகித்ய அகாதெம'¢ யாகவுமிருக்கலாம்.

இவரை வாழ்த்திட, விமர்சித்திட, பாராட்ட எனக்கு தகுதியில்லை. வளம் பல படைத்து
வலம் வர வல்லோனை வாழ்த்தி விடை பெறுகிறேன். வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

நிறைந்த இதயத்துடன்
சாபு

No comments: