உலகமுதல் இணையநூல் வெளியீடு 1'தமிழ்-உலகம்' இணைய குழுமம் பிப்ரவரி 8, 2004ல் துவங்கி ஒரு வார காலம் இணையவெளிப் பந்தலில் நடத்திய 'அன்புடன் இதயம்' கவிதை நூல் வெளியீட்டு விழா சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு

1 அழைப்பிதழ் - வரவேற்பு - தலைவர் அழைப்பு
2 தலைமையுரை - உபசரிப்பு - நிகழ்ச்சி ஒலிபரப்பு
3 நூல் வெளியீடு - ஆய்வுரை - நூல் பெறுதல்
4 விமரிசனங்கள் - வாழ்த்துரைகள்
5 ஏற்புரை - நன்றியுரை - வணக்கம்அழைப்பிதழ் - வரவேற்பு - தலைவர் அழைப்பு

வரலாற்றின் வைர மணித் துளியில் வாழ்கின்ற பேறு
வாய்த்திருக்கிறது நமக்கு
இந்திய மொழிகளில் எந்த மொழிக்கும் இந்தப் பெருமை
இதுவரை சொந்தமில்லை
அயல் மொழிகள் முயல்வதற்குள்
ஆரம்பித்து விட்டோம் நாம்
சென்ற தலைமுறைக்கு இந்தச் சிறப்பு இல்லை
அடுத்த தலைமுறைக்கு இதை நாம்
அனுமதிக்கப் போவதில்லை

-திசைகள் மாலன்
உலகின் முதல் இணைய நூல் வெளியீட்டுவிழா தலைவர்
*

அழைப்பிதழ்

கவிஞர் புகாரியின் "அன்புடன் இதயம்"
இணையத்தில் முதல் கவிதை நூல் வெளியீட்டு விழா

நாள்
08-பிப்ரவரி-2004 துவக்கம் ஒரு வாரகாலம்

இடம்
தமிழ் உலக இணையவெளிப் பந்தல்

விழா தலைமை
திசைகள் ஆசிரியர் மாலன்

முன்னிலை
பேராசிரியர் சிவாபிள்ளை
இலண்டன் பல்கலைக் கழகம்

வரவேற்புரை
அன்பு

வெளியிடுபவர்
கவிஞர் புதியமாதவி

பெறுவோர்
முனைவர் அனந்த நாராயணன், கனடா

வாழ்த்துரை
இணையவெளி சுற்றங்கள்

ஏற்புரை
கவிஞர் புகாரி

நன்றியுரை
கவிஞர் நம்பி, ஆறு. பழனியப்பன்

*

தமிழ் உலக மட்டுநர்கள் பழனி, ஆல்பர்ட், மணியம்
அன்பு தமிழ் உலகத்தாருக்கு,
இணையத்தில் முதல் புத்தகம் வெளியீட்டு விழா!

நம் தமிழ் உலக ஆஸ்தானக் கவிஞர் நண்.புகாரி, சமீபத்தில் கனடாவில் சிறப்பாக தனது "அன்புடன் இதயம்" புத்தகத்தை வெளியிட்டார். சிலமணி நேரப் பயண தூரத்தில் நடந்த அந்த இனிய விழாவிற்குச் செல்ல முடியவில்லை என்று வருந்தினேன்; விழா முடிந்த பிறகு அவரைச் சுற்றிலும், அருகிலும் வசிக்கும் நண்பர்கள் கூட விழாவுக்கு வர இயலாமற் போனதை அறிந்தேன்.

திடீரென்று ஓர் எண்ணம் உதயமானது. மண்டபம் பிடித்து, தோரணம் கட்டி, விழா பதாகைகள் தகதகக்க.....ம்ம்ம்ம் இன்னும் விழாத்தலைவர் வரலையே; தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுகின்றேன் என்று நெஞ்சாரச் சொன்னவரைக் காணோமே; விழாத் துவங்கும் முன் அரங்கம் நிறைந்திடுமா? என்ற கவலைகள் இல்லாமல் நாம் ஓர் விழா நடத்தினால் என்ன?

ஆம்! நண்பர்களே! தமிழ் உலக இணையப் பந்தலில் புத்தக வெளியீட்டை நடத்தினால் என்ன? நடத்தினால் என்ன... நடத்துகிறோம். இணையத்தில் நடக்கும் முதல் புத்தக வெளியீட்டு விழாவாகவும் இது அமையப் போகிறது!

பிப்ரவரி 2வது வாரம், அதாவது எட்டாம் தேதி துவங்கி ஒருவாரகாலம் வெளியீட்டுவிழா நடக்கும்! உலகிலுள்ள அனைவரும் விழாவில் ஒரு நாள் கலந்து கொள்லவில்லையென்றாலும் அடுத்த நாளோ அதற்கு அடுத்த நாளோ கலந்து கொண்டு அவரின் கவிதை நூலை விமரிசித்து வாழ்த்துங்கள்! வாழ்த்து எனும் பூவை கூடை..கூடையாகக் கொட்டுங்கள்; கவிதையில் உடன்பாடில்லையா? நயத்தகு நாகரிக வார்த்தைப் பூ பந்தால், அர்ச்சியுங்கள்!

தமிழ் உலக உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்கின்ற இணைய விழா அல்ல; தமிழ் ஆர்வலர்கள் உள்ள எந்தக் குழுவிலிருந்தும் இந்த விழாவில் கலந்து கொள்ளலாம்; சிறப்பிக்கலாம்; வழக்கம் போல பார்வையாளர்கள் பகுதி நிரம்பியிருக்கக் கூடும்; ஆனால் பார்வையாளர்களும் எங்க அண்ணன் புகாரி இந்தப் புத்தகத்தில் எழுதியிருந்த இந்த வரி எனக்குப் புடிச்சிருந்தது என்ற வாழ்த்தும் பங்கேற்பை எதிர்பார்ப்போம்;

உலகின் முதல் இணையவெளி புத்தகம் வெளியீட்டிற்கு அனைவரையும் வருக வருகவென்று வரவேற்கின்றோம்.

சிலம்பு நாக. இளங்கோவன், தமிழ்நாடுபுத்தாண்டில் நல்ல முயற்சி மட்டுநர்களே. அதோடு புதுமையான முயற்சியும் கூட. நண்பர் புகாரியின் நூலோடு துவங்கும் இம்முயற்சியும் விழாவும் இனிதமைய வாழ்த்துக்கள்.

கவிஞர் சாபு, துபாய்இதுதான் உண்மையான புத்தாண்டுப் பரிசு. அடிச்சு தூள் கெளப்புங்கோ அப்பு !

திரு, ஒட்டாவாவணக்கம் அவைத் தலைவருக்கும் புதிய கலை மண்டபத்தில் கூடி வாழ்த்த வந்த கவி உள்ளங்களுக்கும் என் அன்பு வணக்கங்கள். வளர்க கலைத்தொண்டு!!! கவிஞரின் புத்தக வெளியீட்டை இங்கு எதிர்பார்த்துக்கொண்டு ..... நேரில் வந்து கலந்து கொண்டு ரசிக்க முடியாவிட்டாலும் கவிதைகளை இணையத்தில் வெளியிட்டு எம்போன்றோரை அக் கவிதைகளைச் சுவைக்க சந்தர்ப்பம் தந்தமைக்கு நன்றிகள் பல

எழில்நிலா மகேன், டொராண்டோ
வித்தியாசமான ஒரு முயற்சி. வெற்றிபெற வாழ்த்துக்கள்!

கவிஞர் நா. முத்து நிலவன், புதுக்கோட்டை
ஆகா! மிக அருமையான முடிவு! நான் ஏற்கெனவே புத்தகத்தைப் படித்துவிட்டேன் (சென்னைக்குப் பணம் அனுப்பி வாங்கிப்படிதேனாக்கும்!) நான் விழாவில் அவசியம் கலந்துகொள்வேன். தமிழ்-கூரும்- நல்லுலகின் முதல் இணைய நூல்வெளியீட்டு விழாவில் நண்பர் புஹாரியின் கவிதைகளைப் பற்றி ஓரிரு வார்த்தைகளாவது நான் அவசியம் சொல்லியாக வேண்டும்! இந்த நல்ல யோசனைக்காக நண்பர்கள் பழனி,ஆல்பர்ட்,மணியம் மூவருக்கும் எனது பாராட்டுதல்களையும் முதல் இணைய நூல்வெளியீட்டு விழாவின் நாயகர் கவிஞர் புஹாரிக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் முதலிலேயே தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். பி.கு: ஏதேது... ஆண்டுத்தொடக்க நாளிலேயே நம் மட்டுறுத்துனர்கள் அசத்திவிட்டார்களே! இந்த வருடம் பூராவும் இப்படியே நல்ல செய்திகள் தொடரட்டும்!

ஆசியான் இலக்கிய விருதுபெற்ற கவிஞர் இக்பால், சிங்கப்பூர்
அன்புள்ள கவிஞர் புகாரி: விழா பற்றிய தகவல்கள் ,படங்கள் அனைத்தும் கண்டு ரசித்தேன்! கவிஞர் பசுபதியின் பாராட்டுப் பாடலும் தங்களின் நன்றியுரைக் கவிதையும் அருமை!

கவிஞர் புதியமாதவி, மும்பை
இனிய தமிழ் உலகத்தார்க்கு, கவிஞர் புகாரி அவர்களின் இரண்டு கவிதை நூல்களையும் புறாவின் கால்களில் கட்டி மும்பைக்கு அனுப்பியிருந்தார்.!! வந்து இரண்டு வாரம் ஆகிறது. என் விமர்சனமும் ஒரளவு மனதில் எழுதியாகிவிட்டது. என் விமர்சனத்திற்கும் இடமுண்டு அல்லவா.. நல்ல ஆரோக்கியமான தளத்திற்கு உயர்ந்திருக்கின்றோம். வரவேற்பும் வாழ்த்தும்.. (அட நீ ஒண்ணுமா அப்போ இதுவரை ஆரோக்கியமில்லாத தளத்திலா இருந்தோம்னு ஏதாவது குண்டக்க மண்டக்க அர்த்தம் பண்ணிக்காதீங்க.. அண்ணன்மார்களே..!!)

கவிஞர் நா. ஆனந்த குமார், சென்னை
பலே! பலே! இது ரொம்ப நல்லாயிருக்கே! ஆரம்பமே ஜோருங்கோவ்! பட்டாசு விடும் சிறுவன் என்று என் பெயரைப் போட்டிருக்கலாம்..! இருந்தாலும் பற்றவைக்கிறேன்.... பட்டாசை!

Kavingar Na. Muthu Nilavan, Pudukkottai
A Real mile stone in the History of Tamil Poetry... Anbiniya naNbarkku, vaNakkam. This is the first of its type, in the history of tamil poetry - Poetry collection book release function in Inter-Net ! Pl. do 'come' to the function, and greet our beloved poet Kavinjar Buhari. (non member of 'Tamil ulagam' can also send their comments, greets to the function as usual - this invitation is being sent as per the request of the commitee of the function) PL. FORWARD THIS INVITATION TO ALL OF (Y)OUR TAMIL E-FRIENDS.

கவிஞர் புகாரி, டொராண்டோ , கனடா
பேரன்புமிக்க இணையத்தோரே, உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன். இது இணையத்தின் முதல் நூல் வெளியீட்டு விழா. இதில் என் 'அன்புடன் இதயம்' கவிதை நூல் வெளியிடப்பட இருப்பதில் உங்களோடு நானும் பூரிப்படைகிறேன். என் நூலுக்கான தங்களின் மதிப்புரைகளை, வாழ்த்துக்களை, மற்றும் விமரிசனங்களைத் தமிழ் உலகத்தில் இவ்வாரம் இடுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்விழாவைச் சிறப்பு விழாவாக்குவதற்குத் தங்களின் பொன்னான ஒத்துழைப்பை மிகுந்த அன்போடு நாடும் உங்கள் அன்புடன் புகாரி.

அன்புடன் இதயம் கவிதைகளை இங்கே காணலாம் http://ezilnila.com (நன்றி மகேன்). தமிழ் உலகம் கோப்புகள் பகுதியில் PDF கோப்புகளாகவும் காணலாம்.


விழா ஏற்பாட்டாளர்கள் ஆல்பர்ட், பழனி, மணியம்
"தூங்கும் புலியை பறைகொண் டெழுப்பினோம்
தூய தமிழரைத் தமிழ் கொண்டெழுப்பினோம்" -பாவேந்தர்.

தமிழ் உலக விழா! தங்க நிகர் விழா!!
இணையம் காணும் முதல் விழா!

ஒவ்வொருவருக்கும் நான் தனித்தனியே தருகின்ற இவ்விணைய அழைப்பிதழையே தனி அழைப்பாகக் கருதி வருகை தந்து, விழாக்குழுவினருக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும்
ஒத்துழைப்பை நல்கி விழாவைத் திருவிழாவாக்கிட இருகரம் கூப்பிக் கேட்டுக்கொள்கிறோம்.

"இமைதிற! எழுந்து நன்றாய் எண்ணுவாய்!
தோளை உயர்த்துச் சுடர்முகம் தூக்கு!
மீசையை முறுக்கி மேலே ஏற்று!
விழித்தவிழியில் மேதினிக் கொளிசெய்!
ஏறு! வானை இடிக்கும் மலைமேல்!
ஏறு விடாமல்! ஏறு மேன்மேல்!
ஏறி நின்று பாரடா எங்கும்;
'என்குலம்' என்றுனைத் தன்னிடம் ஒட்டிய
மக்கள் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி கொள்!... "

என்ற பாவேந்தரின் கவிதை என் அடிமன வானில் விரிகிறது.

விரியும் விழிகளில் தமிழ் உலக விழாப் பந்தல் மிடுக்காய் காட்சி தருகிறது! நாளை ஒருநாள் தானே இருக்கிறது...! இல்லை..இல்லை இன்று ஒருநாள்தான்....!

நாளை விழா என்று உலகின் இன்னொரு உலகம் கூவும் செய்தி என்னைப்பரபரப்பாக்குகிறது! வாருங்கள் புகாரியின் நூலுக்குச் சிறப்புச் செய்வோம்! பாருங்கள் பாருக்குள் உலகளாவிய விழாவை!

இணைய வராலாற்றில் இந்தச் செய்தி பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படப் போவது நிச்சயம்

வரவேற்புரை: அன்பு, துபாய்
அன்பு இணைய நண்பர்களே...
முதன் முறையாக தமிழ் உலக இணைய பந்தலில் கவிஞர் புகாரியின் அவர்களின் முத்தான படைப்பான 'அன்புடன் இதயம்' நூல் வெளியீட்டிற்கு இங்கு திரளாக வருகை தந்திருக்கும் அன்பு இதயங்களே, இந்த இனிய விழாவிற்கு தலைமேற்றுள்ள திரு மாலன் அவர்களையும், முன்னிலையேற்றுள்ள பேராசிரியர் சிவாபிள்ளை அவர்களையும், இந்நூலை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கவுள்ள கவிஞர் மாதவி அவர்களையும் விழாக்குழுவினரின் சார்பில் அன்போடு வரவேற்கிறேன்.

இந்நூல் குறித்து வாழ்த்துரைகளும் விமர்சனங்களும் வழங்க இங்கு வருகை புரிந்துள்ள கவிஞர்கள் கவிமணி இளந்தையார், சாபு, சேவியர், கற்பகம், முத்துநிலவன், ஆசாத், மற்றும் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் ஆகியோரையும், மேலும் சிறப்புரை வழங்கவிருக்கும் தமிழ் உலக நண்பர்கள் அனைவரையும், பிற மடலாடற் குழுக்களின் நண்பர்களையும், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள கலைஞர்களையும் அன்புடன் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

ஏற்புரை ஏற்கவிருக்கும் இந்நூலின் ஆசிரியர் கவிஞர் புகாரி அவர்களையும், இவ்விழா இத்துனை சிறப்புற நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ள தமிழ் உலக மட்டுறுத்துனர்கள், விழா ஒருங்கிணைப்பாளர்கள் பழனி, ஆல்பர்ட், மணியம் ஆகியோரையும் மற்றும் இவ்விழாவிற்காக இடைவிடாது ஒத்துழைப்பு நல்கியுள்ள நல்ல உள்ளங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி விழாக்குழுவினரின் சார்பாக அன்புடன் வருக வருக என வரவேற்கிறேன்.

தலைவர் அழைப்பு - கவிஞர் நம்பி, சிங்கப்பூர்
(எங்க..இன்னும் நம்பி...பாரத்தைக் காணோம்....முப்பது மணித்துளிக்கு முன்னாடியே கைபேசியில் அழைத்துச் சொன்னார்கள். ஆனா...இன்னும் காணோமே... என்ற மேடையருகில் பேசுவது கேட்கிறது...! எழுச்சி மிக்க விழா தமிழ்த்தாய் வாழ்த்தோடு துவங்கியது. அதனையடுத்து விழாக்குழுவினர் விழாவிற்கு தலைமைப் பொறுப்பேற்க திசைகள் ஆசிரியர் மாலன் அவர்களை புடைசூழ அழைத்து விழா மேடையில் அமர்த்தினர். தமிழ் உலகத் தொண்டர்படையினர் சீருடை அணிந்து கூட்டத்தினை ஒழுங்குபடுத்தி, அமரவைத்த அரிய பாங்குதனையும் கண்டோ ம். சகோதரி உஷா, அவர்கள் பம்பரமாய்ச் சுழன்று பணியாற்றுகின்ற அன்பு, பாண்டியன் என்று இன்னும் பலரைக் காண முடிகிறது. அன்பு வரவேற்புரைக்க விழா களைகட்டத் துவங்கியது; அதற்குள் எங்கிருந்தோ மின்னெலென கவிஞர் நம்பி மேடையேறி ஒலிவாங்கி அருகே சென்று இடிமுழக்கமாக....) "திரளாகத் திரண்டிருக்கும் இந்தக் கூட்டத்தைப் பார்க்கும் போது தலையா, கடல் அலையா என்கிற வியப்பினையூட்டுகின்றது. இது விழா....அல்ல..அல்ல மாநாடு! உலகத் தமிழர்கள் சங்கமித்திருக்கின்ற மாநாடு! இந்த இனிய இணைய விழாவிற்கு தலைமைதாங்குகின்ற திசைகள் ஆசிரியர் நண். மாலன் அவர்களை தலைமை உரை நிகழ்த்த அன்போடு அழைக்கின்றேன்.

அன்புடன் திரு, ஒட்டாவா, கனடா
வணக்கம். ஒரு மூலையில் இருந்து கைதட்டல்!

1 comment:

nidurali said...

நல் வாழ்த்துக்கள்