திசைகளின் கவிமுகத்தின் அறிமுகம்


2005 சித்திரையில் சென்னை சென்றேன் ஒரு பத்து தினங்களுக்காக. அங்கே மாலன் தலைமையில் வைரமுத்து வாழ்த்துரை வழங்க இந்திரன், யுகபாரதி, அண்ணா கண்ணன், வைகைச் செல்வி ஆகியோர் என் நூல்களை விமரிசிக்க சிறப்பாக நடந்தது எனக்கான அறிமுக விழா. அதில் நான் பேசிய பேச்சின் ஒரு பகுதிதான் இது


என் அன்பிற்கினிய தாய்மண் நெஞ்சங்களே
உங்கள் அனைவருக்கும்
என் இதய ஆழத்தின் இனிய வெளிகளிலிருந்து
ஆனந்தச் சந்தங்களாய்ப் பொங்கியெழும்
விசாரிப்புகளும் வணக்கங்கள்

ஐஸ்கிரீம் நடுவில்
ஜில்லென்றிருக்கும் செர்ரிப் பழம்
அப்படியே நழுவி
அடுப்பில் விழுந்துவிட்டதைப்போல
இப்போது என் உடல்

பாலைவனத்தில்
பல்லாயிரம் மைல்கள் நடந்து நடந்து
வெடித்த பாதமும்
பற்களின் நடுவிலிருக்கும் ஈரத்தையும்
சுத்தமாய் உறிஞ்சி முடித்த தாகமும்
விமானம் ஏறி நேரே
கங்கையில் விழுந்துவிட்டதைப்போல்
இப்போது என் மனம்

இப்படி நிலவும் சூரியனும்
ஒரே சமயத்தில் முற்றுகை இடப்பட்ட
சின்னஞ்சிறு வானத் துண்டாய் நிற்கிறேன்
இன்று நான் உங்கள் முன்

என்ன வினோதம் பாருங்கள்...
இரண்டு சூட்டோடு நான் இங்கே நிற்கிறேன்
ஒன்று இது... (என் உடையைச் சுட்டிக் காட்டுகிறேன்)
இன்னொன்று இந்தச் சித்திரைச் சென்னை

இரண்டுமே எனக்கு வெளியில்தான் இருக்கின்றன
என் உள்ளே இருப்பவையோ குளுகுளுப்பாய்
தமிழ் நாடும் பிரியமும்
தமிழ்நாட்டுப் பிரியமுமே

இருபத்தைந்து ஆண்டுகளாக நான் வெளிநாட்டில் வாழ்கிறேன்
பலமுறை ஊரோடு வந்துவிட வேண்டும் வேண்டும் என்று
ஆசைப்பட்டிருக்கிறேன்

ஆனால் இப்போதோ
ஊரே அங்குவிட்டதைப்போல ஒரே கூட்டம்

ஆவியான கடல்நீர் வானம் சென்று
மேகங்களாய்க் கூடுகட்டிக்கொள்வதைப்போலத்தான்
தமிழனின் வெளிநாட்டு வாழ்க்கை
மீண்டும் வானம் திரும்ப விரும்பாமல்தான்
நிலம் விழுந்து தன் கடல் சேருகிறான்

ஆனால் புலிவால் பிடித்த வாழ்க்கை அப்படி விடுவதில்லை
கடும் வெப்பம் ஏற்றி மீண்டும் ஆவியாக்கி
அந்த அயல் வானத்திலேயே ஏற்றிவைத்து விடும்

இருப்பினும்....
அதுவும் நமக்குச் சொந்தம்தான் என்ற நிறைவு
மெல்ல மெல்ல பின் வந்துசேரும்

தன் கிராமத்தை மறக்காமல்
அடுத்த கிராமத்தில் வாழ முடியும்போது
தன் தலைநகரை மறக்காமல்
அடுத்த தலைநகரில் வாழ முடியும்போது
தன் நாட்டை மறக்காமல்
அடுத்த நாட்டில் வாழ்வது மட்டும் இயலாதா

உலகம் ரொம்பப் பெருசுதான்....
ஆனால்
அது சுருங்கிச் சுருங்கி சுண்டைக்காய் ஆகிவிட்டதே
அடுத்த கோள் போவதற்கு
ஆயத்த நிலையிலல்லவா இன்று மனிதன்?

எங்கேயோ தூரமாய்ப் பறந்துபோய் ஏதேதோ கண்டுவிட்டேன்
ஆனால் இந்த மேடைதான்....
என் தாய்மண்ணின் இந்த மேடைதான் எனக்கு
இதயக் குப்பிக்குள் தஞ்சாவூர்க் கரும்புச்சாற்றை
ஊற்றிவைத்ததைப் போல் தித்திப்பாய் இனிக்கிறது

காமடி மூர்த்தி தொடங்கி கவிப்பேரரசு வைரமுத்துவரை
அங்கே அடிக்கடி வருகிறார்கள்

வாழை இலை தொடங்கி நெத்திலி கருவாடு வரை
எல்லாமும் கிடைக்கின்றன

அட...
அமுதத் தமிழே
பாட்டுப் பாடிக்கொண்டும்
ஆட்டம் ஆடிக்கொண்டும்
ஆசை ஆசையாய் அங்கே வந்துவிட்டபின்
வேறு எதுதான் வரவேண்டும்?

கழுத்தெலும்பு ஒடிய ஒடிய
கண்ணுமணி விரிய விரிய
ஆச்சரியம் கூச்செறிய
அதிசயத்தைப் பாரு
அது கனடா சியென் டவரு

அந்த சியென் டவரின் அடிவாரத்தில்
சின்னதாய் ஒரு கூடு கட்டி வாழும்
தஞ்சாவூர்ப் பறவை நான்

இன்று உங்களை எல்லாம் காண சிறகடித்துச்
சிலிர்ப்போடு வந்து இறங்கி இருக்கிறேன்

ஆயினும்
இது என் வேடந்தாங்கல் அல்ல
இதுதான் என் கருவறை

எத்தனை சுனாமிகள் வந்தாலும்
கடலை நேசிக்காமல் இருக்கமுடியுமா?

எத்தனை இன்னல்கள் துளைத்தாலும்
வாழ்வை நேசிக்காமல் இருக்கமுடியுமா?

எத்தனை தேசங்கள் சென்றாலும்
தாய்மண்ணை முத்தமிடாமல் இருக்கமுடியுமா?

எனவேதான்
இதயத்தைத் தேடிவரும் இரத்த நாளங்களைப் போல
என் தாய்மண் தேடி ஓடிவந்திருக்கிறேன்

நான் என் கால்நூற்றாண்டு வெளிநாட்டு வாசத்தால்
அனுபவித்து உறுதி செய்துகொண்டது
ஒன்றே ஒன்றைத்தான்

அது....
தமிழன் என்றோ எழுதி வைத்தப் பொன்னெழுத்துக்கள்

யாதும் ஊரே யாவரும் கேளிர்

இந்தச் சர்வதேசச் சத்திய சொற்களை மீறி எழுத
எந்த மொழிக்கும் வக்கில்லை
எந்தக்கவிஞனுக்கும் இனி வாய்ப்பில்லை

கனடா வாழ்க்கை நவீனமயமானதுதான்.
தொட்டதற்கெல்லாம் அங்கே அட்டை அட்டை

கடன் அட்டை காப்புறுதி அட்டை
சாரதி அட்டை சலுகை அட்டை
வங்கி அட்டை வைத்திய அட்டை
அலுவல் அட்டை அடையாள அட்டை
வணிக அட்டை விருந்து அட்டை
தரிப்பிட அட்டை தகராறு அட்டை
அட்டை அட்டை அட்டையோ அட்டை

நாளும் பொழுதும் அது ஒட்டி ஒட்டி
உயிர் உறிஞ்சி வெளுத்துப் போன இந்த முகத்தில்

தமிழைக் காட்டி.... இரத்தம் பாய்ச்சி
தமிழைப் பேசி.... உயிரை மீட்டு... தமிழை வாழ்த்தி....
ஆயுள் வளர்க்கும் இனிய இணையம்
அதை அமைத்துத் தந்த கணித்தமிழ்க் கணிஞர்கள்
அவர்களுக்கு என் தமிழ்மன நன்றிகள்

கனடாவில் தமிழ் பற்றி
இங்கே நான் சொல்லியாகவேண்டும்

கனடாவின் தேசிய கீதம் தமிழ்க் கவிஞனால்
அதே இசைக்குள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது

நான் வாழும் ஒண்டாரியோ மாகாணத்தின் மொழிகளில்
தமிழும் ஒன்று என்று தமிழின் பலகோடி கிரீடங்களோடு
ஒரு புதுக்கிரிடமும் தரப்பட்டுள்ளது

அதாவது எந்த அரசு பத்திரம் வந்தாலும்
அது தமிழிலும் வரும்

கனடிய பொது நூலகங்களில் தமிழ்ப் புத்தங்கள் வாசிக்கலாம்
தமிழ் திரைப்படங்களின் ஒளிநாடாக்களை இலவசமாகப் பெறலாம்

கனடா அனைத்துப் பண்பாடுகளையும் ஏற்பதால்,
தமிழ்ப் பண்பாட்டின் நெய்மணம் மாறாமல் அங்கே வாழலாம்.

இரண்டு லட்சம் தமிழர்கள் அங்கே வாழ்கிறார்கள்

உலகின் உயர்ந்த கோபுரமான சி என் டவரில் வருக வருக என்று
தமிழில் எழுதி இருப்பதை வாசிப்பது எத்தனைச் சிலிர்ப்பென்று அறிய
நீங்கள் நயாகராவில் விழுந்து எழவேண்டும்

இருபதுக்கும் மேற்பட்ட கனடிய தமிழ்ப் பத்திரிகைகள்
பத்துக்கும் மேல் தமிழ் வானொலிகள்
பன்னலை வரிசைகளில் (FM) தமிழ்
மசூதிகளில் தமிழ்,
கிருத்தவ ஆலயங்களில் தமிழ்
தொலைக்காட்சிகளில் தமிழ்
என்று எங்கும் எதிலும் தமிழ் தமிழ் தமிழ்

பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் தமிழ்
சொந்தவீடு கட்டிக்கொண்டிருக்கிறது அங்கே

தமிழ் மணக்கும் தெருவு
தமிழ் பேசும் நிலவு
ஈழத்தமிழ் நெஞ்சம்
இளைப்பாறும் மஞ்சம்
அது சொர்க்கத்தையே மிஞ்சும்

கனடாவில் ஒரு தமிழீழமும் இருக்கிறது;
ஒரு தமிழ்நாடும் இருக்கிற்து

இன்னும் நிறைய சொல்லலாம், எனக்கு அவகாசம் இல்லை
இருந்திருந்தால் அவற்றைக் குட்டிக் குட்டியாய்ப்
படம் எடுத்துக்கொண்டுவந்து
இங்கே ஓர் ஒளிப்படக்கருவி மூலம்
கொட்டிக் குவித்திருப்பேன்.

சின்ன வயதில் கோபால் பல்பொடி விளம்பரம் கேட்டிருக்கிறேன்.
இலங்கை இந்தியா சிங்கப்பூர் மலேசியா ஆகிய நாடுகளில்
புகழ்பெற்ற கோபால் பல்பொடி என்பார்கள்

இன்று தமிழ் எந்தெந்த நாடுகளில் இருக்கிறது என்று சொல்லத்
தொடங்கினால், அது ஒரு நிறுத்தமுடியாத பட்டியலாய் இருக்கும்

சர்வதேச விமான நிலையங்களில் வேட்டி கட்டிக்கொண்டு
"உப்புக்கருவாடு ஊறவச்ச சோறு" என்று
பாட்டுப் பாடும் தமிழர்கள் அதிகரிக்கிறார்கள்.

செவ்வாய்க் கிரகணத்திலும் தமிழ்ப் பாடல் கேட்கிறது
என்று ஒரு கதை விட்டால்கூட அதை
உறுதியாய் நம்புவதற்கு வட அமெரிக்காவே இன்று தயார்

எங்கு சென்றாலும் தமிழன்
தன் மொழியையும் பண்பாட்டையும் எடுத்தே செல்கிறான்
தமிழை உச்சிக் கொம்பில் ஏற்றி வைக்காமல் அவன் ஓய்வதே இல்லை

நான் எழுதி வாழ்வது....
இன்று இணையத்தில்தான்

வெளிநாட்டுத் தமிழன் நெஞ்சில்
நீறு பூத்துக் கிடந்த நெருப்புத் தமிழ்
இனிப்புப் புயல்போல் வந்த
இணையத்தமிழால் உந்தப்பட்டு
நீறும் சேறும் என்றுமே தொடமுடியாத
சூரிய நெருப்பாகிவிட்டது


இணையம் தமிழ் வளர்க்கும் நவீன தமிழ்ச்சங்கம்

ஆலமரத்தடி, அரசமரத்தடி, தேனீர்க்கடை, ஆத்துப் பாலம்
எல்லாம் ஒரு கிராமத்துக்கு மட்டுமே மேடை! ஆனால்,
இணையம் என்பதோ உலகின் ஒற்றை மகா மின்மரம்.

நீங்கள் முழுச்சுதந்திரம் பெற்ற எழுத்தை வாசிக்க வேண்டுமா
இணையம் வாருங்கள். அது இன்று அனைத்து ஊடகங்களையும்
அப்படியே மாற்றிப்போட்டுக்கொண்டிருக்கிறது....

ஏழரைக் கோடித் தமிழரை
ஈன்றவள் எத்தனைப் பெரியவள்
நாலரை நூறு ஆண்டுகள்
நூல்களில் அச்சாய் வாழ்பவள்

பழமைக் கலைகளும் கொண்டவள்
புதுமைக் கணியுகம் கண்டவள்
இளமை குன்றாத் தமிழ்த்தாய்
இணையப் பெருவெளி வென்றாள்

தமிழினி மெல்லச் சாவதோ
தீப்பொறி தீர்ந்தே போவதோ
விழிகளை விரித்தே காண்பீர்
வெற்றியின் நெற்றியில் தமிழே தமிழே தமிழே

வெளிநாடு வந்தவர்கள் தமிழை அதிகம் நேசிக்கிறார்கள்
தமிழிலேயே பொழுதும் யோசிக்கிறார்கள்
தமிழில் பேசுவோமே என்று யாசிக்கிறார்கள்

இன்று எங்கே இல்லை தமிழ்?

வளை குடாக்களில்
பாலைவன மணலில் படிந்திருக்கிறது தமிழ்

அமெரிக்க நாடுகளில் பனிக்கட்டிகளில்
ஒட்டிக்கிடக்கிறது தமிழ்

என்னடா தமிழ் தமிழ் என்று பேசுகிறானே என்று
புருவம் உலராதீர்கள்

மடியிலேயே கிடந்தால் தாயின் அருமை தெரிவதில்லை
கொஞ்சம் தூரதேசம் வந்து வாழ்ந்து பாருங்கள்
என் தாகம் புரியும் தமிழின் உன்னதம் விளங்கும்

உயிர் துறப்பான் தமிழன்...
ஆனால் தன் மொழி துறப்பானா?
மொழி துறந்தால் அவன் ஒரு தமிழன் தானா...?

மொழியின் மேடைகளில்தானே
தமிழனின் கர்வம் விண்ணளந்து நிற்கிறது!
அவன் பண்பாடு தலைநிமிர்ந்து வாழ்கிறது!

ஊர்விட்டால் என்ன?
மொழிவிடாத வரை தமிழன் என்றென்றும்
ராஜ சிம்மாசனத்தில்தானே!

5 comments:

பாச மலர் said...

வாழ்த்துகள் புகாரி.

அன்புடன் புகாரி said...

கவிமுகத்தின் அறிமுகத்தை வாசித்ததற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பாச மலர்

padmanabhan said...

thisaigal turns as "pudhiya thalaimurai" now. it moves fast in tamil nadu.
padmanabhan,(padhu)Old address r.v. nagar, orathanad

அன்புடன் புகாரி said...

பத்மநாதன், நீங்களும் ஒரத்தநாடா? இங்கே கண்டதில் மிக்க மகிழ்ச்சி

padmanabhan said...

i am padmanabhan(known as padhu), was residing near to your sister mrs.Jarina's house. i know you well as jagabar sadiq's uncle. your blog contains valuable articles. If time, allows, visit my blog and give your suggestion.
www.thanjaipadmanabhan.blogspot.com
e.mail. tan_padma@ediffmail.com
thanks