மிருகம் எகிறிப் பாயும்போது


முதலில்
செயல்படப்போவது
கோரைப்பல் மிருகம்தானென்றால்
இதயத்துக்குள்
எத்தனைக் கிளிகளிருந்தாலென்ன

சூழலின் மாலுமி கோபமெனில்
சூராவளியில்தான்
கப்பல்கள்

மன்னிப்புகள்
கோபத்தின் காற்புள்ளிகள்
நிதானமிழக்கும் நரம்பின்
தற்காலிக அடைப்புகள்

பொங்கும் பாலில்
நீர் தெளிக்கும் அவசரம்தான்
நாகரிகம்

செப்பனிடப்படாத
காட்டுப் புதர்களிலிருந்து
மிருகம் எகிறிப் பாயும்போது
பொத்திப் பாதுகாத்த முயல்களின்
எலும்புகளும் எஞ்சுவதில்லை

நாகரிக நூலில் நட்புப்பட்டம்
அறுத்துக்கொள்ளாமல் பறப்பதற்கு
காற்றின் விசை
மிதமாயிருத்தல் அவசியம்

சிலநேர புயல்காற்று
இடம்-பொருள்-ஏவல் வழியே
வீசும்போது
தென்றலாய் மாறுகிறதே

நெருக்கடிக்கு நடுவிலும்
நெருப்பால் கருக்கப்படாத
அன்பு அரிதரிது

கோபம் வேண்டாமென
கோபப்படலாம்தான்
தாராளமாக

No comments: