உலகமுதல் இணையநூல் வெளியீடு 10


தலைவர் மாலன்
புகாரியின் படைப்புக்களை பெரியவர்கள் பலர் பாராட்டிவிட்டார்கள். என்றாலும் இளைய தலைமுறையை வசீகரிக்காத எதுவும் வளர்ச்சி காணாது. இனி நீங்கள்
இளைய தலைமுறையின் குரல்களைக் கேட்கப் போகிறீர்கள்.ஒன்றல்ல, மூன்று குரல்கள். வெவ்வேறான கோணங்கள். இதோ துவங்குகிறது இளைய
தலைமுறையின் எண்ண ஊர்வலம். முதலில் வருகிறார் நம் அன்பிற்குரிய ஆசாத்.


கவிஞர் ஆசாத்
கவிதைகளைப் படிப்பது ஒரு சுகமென்றால், படித்த கவிதைகளைப் பற்றிப் பேசுவதும் ஒரு சுகம். அதிலும் கேட்பதற்கு நண்பர்கள் தயாராக இருக்கன்றபோது
இரட்டிப்பு சுகத்துடன் அதனைப் பற்றிப் பேசமுடியும்.

அன்புடன் இதயம்: இன்னூல் வெளியீடு குறித்து நண்பர் பாராவின் அறிவிப்பு ராயர் காப்பி க்ளப் குழுமத்தில் கிடைத்ததுமே, நூல் வெளியீட்டிற்கு ஒரு நாளுக்கு
முன்னரே பதிப்பகத்திற்கு ஆளை அனுப்பி ஒரு பிரதியை வாங்கி, சவூதி வருகின்ற நண்பர் வழியாக அதனை பெற்றுக்கொண்டேன்.

கவிதை குறித்த விமர்சனங்களைப் பிறகு அனுப்புவேன் என்று கூறிவிட்டு இன்று வரையில் அதனை அனுப்பாமல், தமிழ் உலகத்தில் விழாவில்தான் அது குறித்துப்
பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நூலிலுள்ள அனைத்துக் கவிதைகளுமே சிறப்பானவைகளென்றாலும் என்னை ஈர்த்தது, "நாணமே நீயிடும் அரிதாரம்".

புதுக்கவிதைகள் எழுதுகின்ற நண்பர் புகாரி சிறிது சந்தத்திற்கும் தலைசாய்த்து எழுதியிருக்கும் இந்தக் கவிதை, "மே பல் தோ பல் கா ஷாயர் ஹ¥ன்" என்ற
பிரசித்த பெற்ற பாடலின் சந்தத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 'நான் நொடிநேரக் கவிஞன்' என்னும் வரிகளின் தத்தகாரத்தில்,

"நீ வைகறைப் பனிவிழும் புல் மடியோ
.மலை வாழயில் வெடித்த பொற்கனி நிலவோ"

என்னும் கேள்விகளை முன்வைத்து கவிஞர் துவங்குகிறார். நீ யாரென எனக்குச் சொல்வாயா என்று சில கேள்விகளைக் கேட்டபின் கவிஞரே அவற்றுக்கு அடுத்த
வரிகளில் விடை சொல்கிறார். இது என்ன குறும்பு?

"பொன் விரலுக்கு வேண்டாம் மருதாணி"

என்று அப்பெண்ணின் சிவந்த விரல்களுக்குக் கட்டியங்கூறும் அளவிற்கு அவளை அறிந்திருக்கும் கவிஞர், துவக்கத்தில் வினாவுடன் கவிதையைத் துவங்குவது
குறும்பல்லாமல் வேறென்ன. வளரட்டும் இந்தக் குறும்பு.

நடையப் பற்றி எத்தனை படித்தாலும் சலிக்காது. காதலி சென்ற காலடிச் சுவட்டைப் பாதையில் தேடிப் பார்க்கிறான் காதலன், கிடைக்கவில்லை. கவிஞர் ஒருவர்
சொல்கிறார், "தென்றலது சென்றதற்குச் சுவடு ஏது?" ஆனாலும் அவள் சென்ற திசையினை அறியவேண்டுமல்லவா, நிலத்தில் கைகளைத் தடவிப் பார்த்து
இளஞ்சூடு பற்றியிருக்கும் இடத்தை வைத்து அவள் காலடிகள் பட்ட இடத்தினை அறிந்துகொள்கிறானாம்.

இங்கேயும் ஒரு பெண் நடக்கிறாள். அவள் மிகவும் மென்மையானவள். நிலமளக்கும் கால்கள் நிலத்தில் படுகின்றதா படவில்லையா என்ற சந்தேகம் மனதிற்குள்
பட்டிமன்றத்தை நடத்த கடைசியில் எதற்கு அந்தக் குழப்பம் என்று கவிஞர் புகாரி தீர்ப்பு வழங்குகிறார்,

"நீ நடப்பது நிலத்துக்குத் தெரியாது"

போதும். பாதங்கள் நிலத்தில் படுகின்றதா படவில்லையா என்ற பட்டிமன்றத்தை நிறுத்துங்கள். பட்டாலென்ன படாவிட்டாலென்ன அவள் நடப்பது நிலத்துக்குத்
தெரியவில்லை. அவளது மென்மைக்கும் நளினத்துக்கும் சாட்சி சொல்ல இந்த வரிகள் போதும். மென்மையைப் பாராட்டி இவ்வரிகளென்றால், அவளது பண்பைப்
பாராட்டி இன்னுமொரு வரி,

"கண் பார்வையில் துவளும் நீ என்ன மலர்"

கன்னம் சிவக்க இங்கே இப்பெண் வண்ணம் பூசவில்லை, அதற்கு வேறு வழி வைத்திருக்கிறாள். பெண்மைக்கே உரித்தான பாரம்பரிய வழி, நாணம். 'தாய் வழியே
வந்த நாணத்தைக் காட்டி / தான் வருவாள் மங்கை மங்கலம் சூட்டி' என்று பாடப்பட்ட நாணத்தால் இவள் முகம் சிவக்க, கவிஞர் அதுவே அவள் இட்டுக்கொள்ளும்
அரிதாரம் என்கிறார்.

"உன் நாணமே நீயிடும் அரிதாரம்"

கவிஞரின் தீர்ப்பு இத்துடன் முடிந்துவிடவில்லை, இன்னும் தொடர்கிறது. குற்றாலக் குறவஞ்சியிலே, 'தேனருவித் திரையெழுந்து வானின் வழி ஒழுகும்' என்றால்,
இங்கே கவிஞர் புகாரியின் வரிகளில் தேனருவி ஒரு முக்கியமான வேலைக்கு விண்ணப்பம் செய்கின்றது. யாருடைய பரிந்துரையையோ எதிர்பார்த்துக்
காத்திருக்கிறது தேனருவி என்றே நினைத்துக்கொள்ள வேண்டும். மனுப்போட்டாலே காரியம் கைகூடுவதென்பது நமது வழக்கத்தில் இல்லையல்லவா,
அதனால்தான் வெறுமனே அவளின் இடையில் விழ மனு போடுகின்ற தேனருவிக்கு அந்த வேலை கிடைக்காதென்கிறேன்.

அருவி அதன்பாட்டிற்கு மனு போடட்டும். அப் பெண்ணின் தலைவனிடமல்லவா யாரேனும் சென்று, "அந்த வேலையை விட்டு விடு. தேனருவியென்று யாரோ ஒரு
புதிய விண்ணப்பதாரர் கவிஞர் புகாரியின் பரிந்துரையோடு இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்திருக்கிறார்" எனக் கூறவேண்டும். தலைவன் வாளெடுத்து
வருவானா. . . அல்லது தலைவனாக உருவெடுத்திருப்பதே கவிஞர்தானா?

"தேன் அருவியுன் இடைவிழ மனுப்போடும்"

இப்படிச் சின்னச் சின்ன கற்பனைகளை அள்ளித்தெளித்து, அழகான சந்தத்தில், வர்ணமெட்டிற்கு ஏற்றபடி எழுதப்பட்டிருக்கும் இக்கவிதை அன்புடன்
இதயத்திலிருக்கும் சிறந்த கவிதைகளில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை.

அன்புடன்
ஆசாத்

மணியம், சிங்கை

'எல்லோருக்கும் வணக்கம்!
இன்றைக்கு இந்த விழாவில் நூலைப் பெற்றேன். ஆனால் அது என்றைக்கோ என் இதயத்தில் இடம்பெற்றுவிட்டது

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு மக்கள் கவிஞர் என்று பெயர்!

இன்றைக்கு மக்கள் கவிஞராக நம்மிடையே இருப்பவர் சகோதரர் புகாரி!

எளிமையான நடையில் அழகாக எழுதக்கூடியவர் புகாரி! எழுத்துக் கூட்டிப் படிக்கும் குழந்தை கூட புரிந்து கொள்ளக்கூடிய வகையில்
எளிமையாகச் சொல்லுகிற ஆற்றல் படைத்தவர் கவிஞர் புகாரி!

அவருடைய கவிதையில் தாக்கம் இல்லாத கவிதை உண்டா? கிடையாது. எனக்கு அவ்வளவு கவிதா ஞானம் கிடையாது. இருந்தாலும்
அவரது கவிதைகளைப் படிக்கும்போது மனசுக்குள் ஒரு பரவசம் எழுகிறது!

பாரதியாரைப் பார்க்கும், பழகும் வாய்ப்பு இல்லை!
பாரதிதாசனைப் பழகும் வாய்ப்பு இல்லை!
ஒரு பட்டுக்கோட்டையாரை பரிச்சயப்படுத்திக் கொள்ள இயலவில்லை!
இவர்களாக என் கண்களுக்கு கவிஞர் புகாரி தெரிகிறார்.

இது முகத்தாட்சண்யத்துக்காகச் சொல்லப்படுவது இல்லை! உலகம் எங்கும் அழுகுரல் எழுகிறதே உனக்கு மட்டும் ஓநாய்க் காதுகளோ
நிலவும் வானும் நிம்மதி கேட்கிறதே.. என்று கவிஞர் யுத்தத்துக்கு எதிராகக் குரல்கொடுக்கும்போதும்

கேடுகெட்டுப் போகட்டுமே
நாடு நமக்கென்ன
கேட்டதை நீ வாங்கிக்கலாம்
ஓடு வீட்டுக்கு...

என்று நாட்டு நடப்பைப் பிட்டு வைப்பதிலும்

ஆளுக்கு ஆள் சாதி வெறியில்
அடிக்க வெச்சுக்க
ஆதாயம் வரும்பக்கம்
நின்னு மறைஞ்சிக்க.....

என்று இவர் சொல்லுவதின் யதார்த்தம் எவருக்கேனும் புரியாமல்தான் போகுமா?

கவிஞரின் கவிதைகள் கரியமிலவாயு இல்லாக் காற்று!

இதயங்களை நேசிக்கக் கற்றுக் கொடுக்கிறது!
இயற்கையை நேசிக்கக் கற்றுக்கொடுக்கிறது!

இன்னும் இந்தக் கூட்டத்தில் கவிஞரின் கவிதைத் தொகுப்பை படிக்காதவர் இருந்தால் இப்போதே படிக்கத் துவங்குங்கள்!

இவர்கள் எல்லாம் இணையவானில் அன்புடன் இதயத்தைப் போதித்த கவிஞருக்கு விழாவெடுக்கும் போது சிலருக்கு வாயார வாழ்த்த
மனம் வேண்டாம்?

உதட்டளவிலாவது வாழ்த்துவோமே என்று எண்ன வேண்டாம்?

புன்னகைக்கத் தெரியாதவர்கள், போகட்டும்; அவர்களுக்கு அருவியின் பாஷை அறிமுகமில்லாமலிருக்கலாம்?!

பூபாளம் பாடத் தெரியாதவர்கள், போகட்டும்; அவர்களுக்கு பூவின் புனிதம் தெரியாதவர்களாயிருக்கலாம்?!

கண்களிருந்தும் குதிரைச் சேணத்தை வலுவில் பூட்டிக் கொள்பவர்கள், போகட்டும்; அவர்களுக்கு இதயங்களை ஈரப்படுத்தும்
எண்ணமில்லாதவர்களாயிருக்கலாம். என்று தான் எனக்குச் சொல்லத் தோன்றுகிறது.

வாழும் காலத்தில் எந்த அறிஞன் சொன்னதும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக வரலாறு இல்லை!

தமிழ் உலக ஆஸ்தானக் கவிஞர் புகாரி வாழும் காலத்திலேயே கெளரவிக்கப்படுபவர்!

இன்னும் இதுபோன்ற பலப்பல கெளரவங்களை, விருதுகளை அள்ளிக் குவிக்க வாழ்த்தி விடைபெறுகிறேன்.

நன்றி; வணக்கம்
மணியம், சிங்கை

No comments: