யாரடித்தபோதும்
எனக்கு வலிப்பதில்லையே
அடடா
நீயடித்த பின்னர்
நிழலும் எழுவதில்லையே
ஊருரைத்த வசைகளேதும்
செவியிலில்லையே
உள்ளே
நீ இருந்து வதைப்பதென்னை
விடுவதில்லையே
சாட்சி சொல்ல
வந்திடாத சாட்சியமே
மனதின்
சன்னதியில் வீற்றிருக்கும்
ராச்சியமே
பேச்சில்லாமல்
பேசுகின்ற ஓவியமே
என்னைப்
பெற்றவளும் கண்டிடாத
காவியமே
வணக்கமென்று
கள்ளமனம் வணங்கும்போதும்
துளியும்
வணங்காமல் நிமிர்கின்ற
சத்தியமே
கணக்குமூடிக்
கைகழுவி மறந்ததையும்
உள்ளே
கணக்கு வைத்துப்
பழிதீர்க்கும் தீச்சுடரே
எனக்கு மட்டும் சொந்தமான
குருகுலமே
நெஞ்சில்
ஏணிவைத்து ஏற்றிவிடும்
திருக்கரமே
துணைக்கு வந்த எல்லாமும்
தொலைந்தபோதும்
என்னைத்
தொட்டணைத்துத் துணை நிற்கும்
உயிர்த் துணையே
No comments:
Post a Comment