கவிதை பிறந்த கதை - எங்கள் கலைக்கூடம் கலைந்தது


புகாரி, உங்கள் 'கவிதை பிறந்த கதை' ஒன்றை இங்கே இடலாமே என்று கவிமாமணி இலந்தை அவர்கள் சந்தவசந்தக் குழுமத்தில் என்னிடம் கேட்டார். உடனே எழுதிய 'ஒரு கவிதையின் கதை'தான் இது.

என் நாள்காட்டியைக் கொஞ்சம் பின்னுக்குத் தள்ளுகிறென்.

ஜூலை 21, 2001 சனிக்கிழமை.

வெள்ளி என்றாலே ஒரு சந்தோசம்தான். வாரம் முழுவதும் உயிர்விட்டுப் பார்க்கும் வேலைக்கு அது ஒரு விடுதலைத் துவக்க நாள்.

இரவெல்லாம் கண்விழித்து நூற்றுக்கும் மேல் கொட்டிக் குமியும் தொலைக்காட்சிக் கால்வாய்களில் நீந்தி நீந்தி எப்போது உறங்கினோம் என்று தெரியாமல் உறங்கிப் போகும் இனிய வாழ்க்கைத் தினம்.

எனவே சனிக்கிழமைகள் எளிதில் புலர்வதில்லை என் விழிகளுக்கு. ஆறுமணிக்கு அலாரத்தின் மீது சீறிக்கொண்டு வரும் கோபத்தோடு அவசரமாய் எழுந்திருக்கும் இன்னல் இல்லாத வாரத்தின் இரு அற்புத தினங்களில் அது முதல் தினம்.

எனவே அது ஓர் இனிப்பான காலைதான் எனக்கு எப்போதும். ஆனால் அன்று அது இனிப்பாய் இருக்கவில்லை!

ஒரு காப்பியின் (நிச்சயம் நான் கொட்டை வடிநீர் என்று எழுதப் போவதில்லை; தீவிர தமிழறிஞர்கள் மன்னியுங்கள்) இயல்பான அவசியம் அவசரமாய்த் தலைதூக்க, அரைகுறையாய்ப் பல்துலக்கிவிட்டு, அதை மனைவியிடமிருந்து வாங்கி உறிஞ்சுவதில் அந்தக் காலை அப்போதுதான் அதிசயமாய்ப் புலரும் என் ஐம்புலன்களிலும்.

நான் இருபத்தைந்துமாடிக் கட்டிடத்தின் 17வது மாடியில் நான்காம் நம்பர் வீட்டில் தங்கியிருந்தேன் அப்போது. 17வது மாடியென்றால், ஒரு மாடியை வடஅமெரிக்காவில் கழித்துவிடுங்கள். 13ம் நம்பர் மாடி என்று ஒரு மாடி வடஅமெரிக்காவில் இருக்கவே இருக்காது. அத்தனை மூட நம்பிக்கை இவர்களுக்கு உண்டு. கோட்டு சூட்டோ டு(தமிழ்?) கழுத்துப் பட்டை அணிந்து கொண்டு இங்கும் பிறக்க வேண்டிய கட்டாயம் நம் பெரியாருக்கு உண்டு.

அருமையான என் பலகணிவழியாய் ஆகாயத்தையும், தூரமாய்த் தெரியும் கனடா தேசக் கோபுரத்தையும் (C.N. Tower), பக்கத்தில் தெரியும் டான் வேல்லி பார்க்வே (டான் பள்ளத்தாக்குப் பூங்காச் சாலை என்று மொழி பெயர்த்துக்கொண்டால் ஏனோ இனிப்பதில்லை எனக்கு. பெயர்கள் அப்படியே அழைக்கப்பட்டால் என்ன என்றே மூளைக்குள் பட்டிமன்றம் நடக்கிறது. இன்னும் நான் தீர்ப்பு வழங்காமலேயே நாட்கள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. ஒரு வெள்ளைக்காரன் நம்மூர் வந்து, அடியக்கா மங்கலத்தை, Hi, Big Sister Good Fortune என்று மாற்றி எழுதினால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். உறக்கமே வரமாட்டேன் என்கிறது.) யில் அலறியடித்துக்கொண்டு ஓடும் வகைவகையான வாகனங்களையும் பார்க்கப் பார்க்க, உற்சாகம் காப்பியால் வந்ததைத் தோற்கடித்துக்கொண்டு விரையும்.

அதோடு, இலங்கைத் தமிழர் புண்ணியத்தால், 24 மணி நேர தமிழ் வானொலிகள் அந்தக் காலைப் பொழுது ஊரில் மலர்வதைப் போன்றதொரு எண்ணத்தை உள்ளுக்குள் வைத்து நெய்துமுடிக்கும்.

அன்றும் நான் கீதவாணி வானொலியைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அடிக்கடி வந்து அவசரமாய்க் கண்ணீருடன் கதறிய அந்தச் செய்தி விடிந்த பொழுதுக்குள் கற்றை கற்றையாய் இருட்டைக் கக்கியது.

ஆம், நடிகர் திலகம் மறைந்துவிட்டார். அந்த மகா கலைஞன் மறைந்ததை எப்படி உணர்கிறீர்கள் என்று கருத்துக்கேட்டு தன் காந்தக் குரலால் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார் கீதவாணி உரிமையாளர் திரு. நடா. ராஜ்குமார்.

உள்ளத்தில் பொங்கியது ஓராயிரம் உணர்வுகள். காலை நேரத்தின் தெளிவான மூளை என் கண்முன் நின்று எழுது எழுது என்று துடித்தது.

அந்த பத்மஸ்ரீயிடம் நான் கண்ட அதிசயங்களையெல்லாம் எழுதி எழுதி என் துயரத்தின் வலியை எழுத்து உளியால் கழித்துப் பார்த்தேன் அப்போதே.

எழுதி முடித்ததும், கீதவாணியை அழைத்தேன். திரு. நடா. ராஜ்குமார்தான் எடுத்தார். என் கண்ணீரை கவிதையாக்கியிருக்கிறேன், வாசிக்கலாமா என்றேன். வாசியுங்கள் என்றார். நான் வாசித்து முடித்ததும், மிகவும் உணர்வுபூர்வமாக எழுதியிருக்கிறீர்கள் புகாரி. "அந்த மாதிரி இருக்கிறது" (இது இலங்கைத் தமிழர் பழக்கம் - அற்புதமாக இருக்கிறது என்று அர்த்தம்) என்று அந்த துயர நேரத்திலும் என்னைப் பாராட்டினார்.

பிறகு, மறைந்த 31வது நாளை துக்க தினமாக அறிவித்தார்கள் இங்கே. அன்றிரவு கவிதை நேரத்தில் நான் என் கவிதையை மேலும் மெருகேற்றி மீண்டும் வாசித்தேன். பாராட்டுகள் மீண்டும் மலர்ந்தன.

பிறகு வெளிச்ச அழைப்புகள் தொகுப்பின் அணிந்துரைக்காக, கவிஞர் வைரமுத்து அவர்கள் இக்கவிதையை வாசித்துவிட்டு இப்படி எழுதினார்:

஑எங்கள் கலைக்கூடம் கலைந்ததுஒ எனும் நடிகர் திலகம் அவர்கள் பற்றிய கவிதை இத்தொகுப்பிலுள்ள மிகச் சிறந்த கவிதைகளுள் ஒன்று; அந்த மகா கலைஞனின் மகத்துவம் சொல்லும் அந்தக் கவிதையால் ஆசிரியர் என் மனதின் மதிப்பில் உயர்ந்தார்.

இதோ அந்தக் கவிதை:

எங்கள் கலைக்கூடம் கலைந்தது

No comments: