
தகாத ஆசைகளைத்
துறந்தோரின் பெருமைகளை
தரமான நூல்களெல்லாம்
தவறாமல் சொல்லி நிற்கும்
இறந்தோரின்
எண்ணிக்கையையும்
இவர்களின் பெருமைகளையும்
எண்ணிமுடிக்க எண்ணுவதோ
எக்காலும் இயலாது
துருவித் துருவி ஆய்ந்து
துயர் தரும் தீயவற்றைத்
துறந்தே வாழும்
அந்தத்
தூயவர்களைத்தான்
தரணி போற்றும்
யானைகளாம் ஐம்பொறிகளையும்
அறிவென்னும் அங்குசத்தால்
அடக்கியாளும் அந்த வல்லவர்களே
சொர்க்கத்தில் விதைக்கப்பட்ட
விதைகளாவார்
இவர்களின் அற்புதச் சக்திக்கு
பரந்த வானில் நிறைந்து வாழும்
ஆண்டவனே சான்று
சாதனை படைப்போர் மட்டுமே
மண்ணில் பெரியோர்
ஐம்புலன்களின் பண்புகளையும்
அலசி அலசி ஆராய்ந்து
அவற்றை
முற்றும் வென்று வாழும்
அறிஞர்களின் அறிவில்தான்
அகிலமே இருக்கிறது
அவர்களின் உயர்வுகளை
அவர்கள்
அன்றாடம் தரும்
அரிய உபதேசங்களே
அடையாளம் காட்டிவிடும்
குணத்தால்
குன்றென உயர்ந்த அவர்கள்
கொண்ட சினத்தால் குமுறும்போது
ஒரு கணம்தான்
அது நிலைக்கும் என்றாலும்
அதனைத் தடுப்பதென்பதோ
இயலாது
அனைத்து உயிர்களிடத்தும்
அன்பும் கருணையும்
அள்ளிப் பொழியும் நல்லவர்கள்தான்
அந்தணர் எனப்படுபவர் !
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொன் டற்று.
இருமை வகைதெரிந்து ஈண்டு அறம்பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.
செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர்
செயற்கரிய செகலா தார்.
சுவையொளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது.
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
1 comment:
அழகுத் தமிழில் அழகு குறள்..படிக்க நன்றாய் இருந்தது..
Post a Comment