புலம்பெயர்ந்த கனடா வாழ்வில்


பிப்ரவரி 16, 2008ல் கனடாவில் எழுத்தாளர் இணையம் ஏற்பாடு செய்த கவியரங்கத்தில் வாசித்த படைப்பு இது. இதனுள் ஆங்காங்கே என் பழைய கவிதைகளின் வரிகள் சில தலைகாட்டும். அவை யாவும் தேவை கருதியே கையாளப்பட்டன

நம்மூர் வாழ்க்கை
மாட்டுவண்டியைப் போன்றது
இரண்டு மாட்டை வாங்கிப் பூட்டிவிட்டால்
வண்டி தானே ஓடிக்கொண்டிருக்கும்

கனடிய வாழ்வென்பதோ
மிதிவண்டியைப் போன்றது
ஒவ்வொரு முறையும் உயிரழுந்த உயிரழுந்த
மிதிப்பதை நிறுத்தினால்
அந்த நிமிடமே நாம் மரண மிதிபடுவோம்

உண்மைதான்...
பலருக்கும் இங்கே உறங்கவும் பொழுதின்றி
இருபணி முப்பணியென்று
செக்குப்பிராணி வாழ்க்கைதான்

கிரடிட் கார்ட் என்பதை எவரும்
பிழையாக மொழி பெயர்க்காதீர்கள்
கடனட்டை என்பது தவறு
கடவுள் அட்டை என்பதே சரி

அந்தக் கடவுள் அட்டையும்
தங்க நிறத்தில் கிடைத்துவிட்டால்
அலாவுதீன் பூதம்
தன் முழுமொத்தச் சக்தியையும்
முறுக்கிக்கொண்டு
அப்போதே வந்து நிற்கும்
நம் உத்தரவிற்காக

உண்மைதான்...
கடன் அட்டை
இல்லாதான் வாழ்க்கை
கனவிலும் தைக்க இயலா
ஓட்டை

கடன் அட்டை
இழந்தோரெல்லாம்
உடன் கட்டை ஏறுவோர்தான்

***************************************
இனிவரும் வரிகள் கவிதையாய் ஆக்கப்பட்டுவிட்டது

படிக்கத்தான் அனுப்பினோம் மகனை

பள்ளியில் சேர்ந்த ஒராண்டுக்குள்
மகனே இல்லை என்றாகிவிட்டது
மருந்துக்கு விருந்தாகி மறைந்தே போனான்

பெண் பிள்ளைகள் மட்டுமென்ன
ஆளுக்கு நாலு காதல் வீசி
எட்டுபேரைப் புதைத்துவிடுகிறார்கள்

உண்மைதான்
பிள்ளைகளை நம் பண்பாட்டுக்குள்
கட்டிவைப்பதென்பது
நயாகராவை
முந்தானையில் ஏந்துவதைப்
போன்றதுதான்

தமிழனின்
அடுத்த சந்ததியை அழித்தெடுக்க
மிகுந்த கவர்ச்சிகாட்டி நிற்கிறது
மேற்குலகக் கலாச்சாரம்
***********************************************


குளிரும்
இங்கே கொடுமைதான்

ஆடை துளைத்து
தோல் துளைத்து
தசைகள் துளைத்து
இரத்த நாளங்கள் துளைத்து
இருதயம் துளைத்து
உயிர் துளைத்து
உள்ளே ஊசிகளாய்
உறைய வந்துவிடுகிறது

எழிலத்தனையும் இழந்துவிட்டு எங்கெங்கும்
சிலுவையில் அறைந்த ஆணிகளாய்
கண்ணீர்க் கசிந்து நிற்கும் மூளி மரங்களே
மிச்சமாகிப் போகின்றன

நுரையீரல் சுவர்களில்
குளிர் ஈக்கள்
சவப்பெட்டிக் கூடுகட்டுகின்றன

உண்மைதான்...
ஒரே ஒருநாள் இந்த மின்சாரம்
தன் மூச்சை நிறுத்திக் கொண்டுவிட்டால்
ஒட்டுமொத்த மக்களும் மூச்சின்றிப் போவார்களோ
என்ற பயம் வந்து முட்டுகிறதுதான்

சரிதான்...
இந்தப் புலம்பெயர் வாழ்வென்பது
தேவைதானா என்ற கேள்வி எழுவது
உண்மைதான்

குளிர் குதறிக் கிழிக்க
வேலை விழிக்குள் விரலாட்ட
வருமானம் முகத்தில் கரிபூச
பிள்ளைகள் உயிரில் ஆணியடிக்க
இந்தப் புலம்பெயர் குடும்ப வாழ்வு
தேவைதானா?

ஆனால்...
ஒரே ஒரு கேள்வி உங்களிடம்

உண்மையா
இல்லையா சொல்லுங்கள்

தமிழ் ஈழம்
இலங்கையில் மலரப்போவது
நாளை
இன்றே மலர்ந்திருப்பது
கனடாவில்

உண்மையா
இல்லையா சொல்லுங்கள்

உழைப்பிருந்தால்தானே
எங்கும் பிழைப்பிருக்கும்

நல்ல உழைப்பிருந்தால்
கடவுள் அட்டை
உன் கட்டைவிரலாகாதா

************
உன் வீட்டில் தமிழிருந்தால்
தமிழ்ப்பிள்ளை எப்படித் தடம்மாறும்?

தமிழ் வெறும் மொழியல்ல தமிழா
கற்புமிக்க பண்பாட்டின் பாடசாலை
கலையாத கலாச்சாரத்தின் அடையாளம்

தமிழர்தம் உடலின் உள்ளே
திரண்டோடும் இரத்தம் தமிழாக வேண்டும்
தமிழர்தம் விழியின் உள்ளே
திரையேறும் கனவும் தமிழாக வேண்டும்

தமிழர்தம் உள்ளத்துள்ளே
தினமோடும் எண்ணம் தமிழாக வேண்டும்
தமிழர்தம் உயிரின் உள்ளே
துடிக்கின்ற துடிப்பும் தமிழாக வேண்டும்

நம் புலம்பெயர் வாழ்வில்
நான் மிகப்பெரும் தவறென்னு
எண்ணுவது ஒன்றே ஒன்றைத்தான்

ஊரில் என் விடலைப்பருவத்தில்
கவிதை கவியரங்கம் கருத்தரங்கம் பட்டிமன்றம்
என்பன வருகிறதென்றால்
தமிழ் கேட்டு நெகிழ... உருக...
உள்ளமும் உயிரும் உயர...
கேளிக்கைகளை எல்லாம் துறந்து
ஓடிச்சென்று செவி விரித்துக்
காத்துக்கிடப்பேன்

எங்கே அந்த இளைஞர்கள்
இங்கே?

இளைஞர்களைத்
தமிழின்பால் ஈர்க்காமல்
புலம்பெயர் வாழ்வு
புழுதிவாழ்வாகித்தான் போகும்

நாம் அவர்களின் பக்கம் திரும்புவதாக
அவர்கள் தமிழின் பக்கம் உருகுவதாக
இந்த மேடைகள் அமையவேண்டும்
இதுவே இன்றைய என்
உறுதியான வேண்டுகோள்
***************************************************

அடுத்தது குளிர்..
நெஞ்சில் நெருப்பிருந்தால்
கொடும் பனியும் கொடிய குளிரும்
உன்னைக் கும்பிட்டு விலகாதா

எதையும் தாங்கும்
இதயம் கொண்ட தமிழனை
குளிர் வவ்வால் கொன்றா போடும்?

என் முதற்பணி நேர்காணலில்
நிறுவன அதிபர் இத்தாலியர் கேட்டார்
பனியிங்கே கொல்லுமே
வாழ முடியுமா உன்னால்?

நொடியும் தாமதிக்காது
குரலுயர்த்திக் கேட்டேன்
உன்னால் இயலுமென்றால்
என்னால் இயலாதா?

மறுபேச்சின்றி அப்பொழுதே
பணியொப்பந்தம் கையெழுத்தானது

ஈழத்தமிழா...
பிறந்த மண்ணை உயிர்முத்தமிட்டு
ஈர உதடுகளில் இரத்தம் கசியக் கசிய
தாய் நாட்டைவிட்டு
விதி விரட்டிய திசைகளெங்கும்
சிதறி ஓடும் அவலத்துக்கு
ஆளானாய் நீ

ஆனால் வந்த இடம் எப்படி?
சொர்க்க பூமியல்லவா

தமிழ் மணக்கும் தெருவு
தமிழ் பேசும் நிலவு
ஈழத்தமிழ் நெஞ்சம்
இளைப்பாறும் மஞ்சம்

மேடைப் பேச்சு இல்லை
சாலை கோஷம் இல்லை
தூய கைகள் விரித்து
தெளிந்த நல்ல ஆட்சி

கோடி அன்னை தெரிசா
கூடிச் சேர்ந்த அங்கம்
கனடா என்னும் தங்கம்

லஞ்சம் ஊழல் சாதிவெறி மதவெறி
அழுகல்-அரசியல் கற்பழிப்பு கிட்னி திருட்டு என்று
தாய்மண்ணின் சீர்கேடுகளைப் பட்டியலிட்டு
நம்மை நாமே தாழ்த்திக்கொள்ளத் தேவையில்லை

ஏற்றத்தை நோக்கியதொரு
மாற்றம் புலம்பெயர்பு

புலம்பெயர்வின்றி
சிறு புல்லுக்கும் வளர்ச்சியில்லை

புலம்பெயர்வென்பது
இன்று நேற்று நிகழும் செயலல்ல
அன்று புலம்பெயர்ந்ததைப் பாடி
எத்தனை எத்தனை
பாலைத்திணைப் பாடல்கள்

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
என்று பாரதி பாடினான்
ஆனால் கனடாவுக்கும் ஊருக்குமே
இன்று பாலம் வந்துவிட்டது
புலம்பெயர்வுகளைப்
பூசைக்குரியதாய் ஆக்கிவிட்ட
ஆகாயப் பாலம்

திரையில் வந்த
புலம்பெயர்வுப் பாடல் ஒன்று
என் கண்களை உருக்கித் திரவமாக்கியது

விடைகொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனைமரக் காடே பறவைகள் கூடே
மறுமுறை ஒருமுறை பார்ப்போமா
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்
தலையில் கொஞ்சம் நெஞ்சில் அதிகம்
சுமைகள் சுமந்து போகின்றோம்

அந்த அழுகையையும் கண்ணீரையும்
கருணையோடு துடைத்து
பஞ்சு மஞ்சம் தந்த சுவனம்
இந்த நாடு

இரவும் உறங்கிப்போகும் இரவுகளில்
உறங்காத இருபத்துநாலு மணிநேர
தமிழ் வானொலிகள்
தமிழ்த் தொலைக்காட்சிகள்
தமிழ்ச் செய்தித் தாள்கள்

தமிழிலேயே பேசலாம்
என்ற வழக்காடு மன்றங்கள்

'வருக வருக' என்று
முகப்பில்
தமிழில் வரவேற்கும்
கனடா தேசக் கோபுர
நுழைவாயில் என்று
இப்படியாய்
எத்தனை எத்தனை அடுக்கலாம்

நம்மூரில்கூட
அவசரப்பிரிவுக்கு
ஐசியூ என்றுதானே எழுதியிருக்கிறார்கள்

ஆனால்
கனடாவில்
அழகு தமிழிலல்லவா
எழுதியிருக்கிறார்கள்

வாரம் தவறாமல்
எங்கோ ஓர் இடத்தில்
கலீர் கலீர் எனக் கேட்கும்
சலங்கையொலி

கொட்டும் பனியிலும்
முத்தமிழ் விழாக்கள்
பட்டிமன்றங்கள் கவியரங்கங்கள்
புத்தக வெளியீடுகள்
பழைய மாணவர் சங்கங்கள்

கவிப்பேரரசு முதல்
ஆச்சி மனோரமா வரை
அனைவரும் வந்து
தமிழ்மண் வாசணையை
இதயத்தில் கொட்டிவிட்டுச்
செல்கிறார்களே

சொல்லுங்கள்
ஈழத்தமிழர்களுக்கு
கனடா இரண்டாவது தாயகமா?

முதலாம் தாயகமல்லவா
முதன்மைத் தாயகமல்லவா

அகதிகளாக வாழாமல்
குடிமக்களாய் வாழும் வாழ்வு
எத்தனை ஏற்றம்?

இன்னல் பிளந்தெடுக்க
சுற்றும் இருளே வாழ்வாக
கண்ணில் மனந்துடிக்க
முற்றும் கிழிந்தே கிடந்தவென்னை
உன்னில் அணைத்தவளே
உயிரின் ஓலம் தணித்தவளே
அன்னம் அளித்தவளே
கருணை அன்பில் புதைத்தவளே
எண்ணம் மதித்தவளே
என்னை எடுத்தும் வளர்த்தவளே
இன்னும் பலவாறாய்
எனக்குள் எல்லாம் ஈந்தவளே
மண்ணே புகலிடமே
என்றன் மற்றோர் தாய்மடியே
உன்னை நினைக்கயிலே
நன்றி ஊற்றே உயிர்தனிலே

என்று
ஒவ்வோர் ஈழத்தமிழனும்
கண்ணீர் பொங்கப் பாடவேண்டும்
ஆனால் இங்கே சிலர்
அப்படியா செய்கிறார்கள்?

புலம்பெயர்ந்தது
வாழ்வு தேடியல்லவா

ஆனால் வீழ்ந்துபோகவே
எண்ணம் கொண்டு
தங்கள் குழிகளைத்
தாங்களே வெட்டிக்கொள்ளும்
கேடுகெட்ட மண்வெட்டிகளாய்
ஆகிப்போனார்களே
இங்கே சிலர்

புலம்பெயர்ந்த தமிழா
உனக்கு ஏனடா ஏக்கே 47

அதோபார்
உன் அம்மா... அப்பா...
உன்னால் தனித்து விடப்பட்டு
மன அழுத்தத்தால் மடிந்துபோகிறார்கள்

அழிந்துபோக மட்டுமே
ஆசைப்படும் தமிழனே கேள்

இது கருணை மிக்க நாடு
நல்ல மக்களைக் கொண்ட சொர்க்க பூமி
இங்கே உன் பாவங்களைக் கழுவிக்கொள்
மனிதனாய் இனியாவது வாழப் பழகு

தமிழையும் தமிழினத்தையும்
தரணி மேடையில்
வெட்கித் தலைகுனியச் செய்யாதே

இந்தக் கருணைக் கனடாவில்
தரமான உயரினம்
நம் தமிழினம் என்று காட்டு

புதைத்ததும் புதைந்ததும்
போதும் போதுமடா தமிழா

பண்பும் புகழும்
பாரம்பரியத் தமிழ் அறமும்
மீட்டெடுப்பொம் வா

தமிழ் அடையாளம்
தொலைத்துவிட்டு வாழும் தமிழனை
தமிழ் மண்ணிலும் காண்கிறேன்...
புலம்பெயர்ந்த மண்ணிலும் காண்கிறேன்.

தமிழ் அடையாளம் தொலைக்காமல்
ஆண்டாண்டு காலமாகப்
புலம்பெயர்ந்த மண்ணில் வாழும்
உண்மைத் தமிழர்களையே
நான் என்றும் போற்றுகிறேன்

எங்கே வாழ்கிறோம் என்பதைவிட
நாம் எப்படி வாழ்கிறோம் என்பதே
நம் அடையாளத்தைத் தக்க வைக்கிறது

யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்பதே தமிழனின் பண்பாடு

ஒரு மனிதன் புலம்பெயரும் போது
தன் விழுதுகளைத்தான் பரப்புகிறான்

அவன் வேர்கள்
தான் பிறந்த மண்ணில்தான்
அழுத்தமாகக் கிடக்கின்றன

ஒருவனின் தாய்
எப்படி மாற்றப்படமாட்டாளோ
அப்படித்தான் பிறந்த இடமும்

தாய், மண், பண்பு என்ற அடையாளங்களோடு
போகுமிடத்தில் கிளை பரப்புவதும்
இலை விரிப்பதும்
கலாச்சாரக் கலப்பு கொள்வதும்
சிறந்த பண்புகளை ஏற்றுக்கொள்வதும்
இயல்பானது உயர்வானது

புலம்பெயர்வு என்பது பிழையல்ல
அது ஓர் உயர்வு

ஒரு பெண் பிறந்த இடத்திலிருந்து
தன் புகுந்த வீட்டிற்குப் புலம்பெயர்கிறாள்.
அவள்தான் உன் தாய்

ஓர் உயிர் கர்ப்பப்பையிலிருந்து
பூமிக்குப் புலம்பெய்கிறது
அதுதான் நீ

மனிதன் முதலில்
ஆப்பிரிக்காவில் பிறந்தான்
பின் எங்கும்
புலம்பெயர்ந்தான் என்கிறது
சரித்திரமும் அறிவியலும்

பறவைகள்
புலம்பெயர்ந்த வண்ணம்
இருக்கின்றன

அவை பொருளுக்காகவா
புலம்பெயர்கின்றன

வாழ்விற்காகப்
புலம்பெயர்கின்றன.

வாழ்விற்காகப் புலம்பெயர்வதில்
தவறே இல்லை

மனித வாழ்வில்
எது மிக மிக அவசியமானது?

சாதி, மதம், இனம், மொழி, மண்
என்ற எதுவும் இல்லை
மனிதம்... மனிதம் மட்டும்தான் தமிழா

இந்தியாவுக்குச்
சுதந்திரம் வாங்கித்தந்த
மகாத்மா காந்தி
புலம்பெயர்ந்து வாழ்ந்தவர்

இந்தியப் பெண்ணாகவே
மாறிவிட்ட
சோனியா காந்தியும்
புலம்பெயர்ந்தவர்

தேம்பாவணி
வீரமாமுனிவரை அறிவீர்கள்
அவர் தமிழ்நாட்டிற்குப்
புலம்பெயர்ந்ததோடு
தன் பெயரைத்
தமிழ்ப்பெயராகவே
மாற்றிக்கொண்டவர்

அன்னை தெரிசா எந்த நாடு
அவர் ஏன் புலம்பெயர்ந்தார்
காசுக்காகவா புகழுக்காகவா
பாதுகாப்பிற்காகவா

அவரின் ஆத்மா
கருணைமிக்க
அந்தப்
புலம்பெயர்வில்தானே
துடித்துக்கொண்டிருந்தது

நீர் தன் புலம் பெயராமல்
உலகுக்கு மழை இல்லை

பயிர் தன் புலம் பெயராமல்
மக்களுக்குச் சோறு இல்லை

நதி தன் புலம்பெயராமல்
கடல்சேர வழியில்லை.

புலம்பெயராத மரங்கள்கூட
தங்கள் விதைகளைப்
புலம்பெறச் செய்துவிடுகின்றன.

அந்தக் காலத்தில் வந்த
சுனாமிதான்
பூம்புகார் மக்களைப்
புலம்பெயரச் செய்தது

இலங்கைத் தீவு இந்தியாவிலிருந்து
கடலால் புலம்பெயர்க்கப்பட்டிருக்கலாம்.

யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
புலம்பெயர்வு என்பது நிகழும்
அது இயற்கையின் விதி

அகிலமெங்கிலும் நிகழும்
அயராத புலம்பெயர்வுகளே
மனிதனையும் மனிதநேயத்தையும்
இமயத்தில் ஏற்றும் வல்லமை கொண்டவை
என்று கூறி விடைபெறுகிறேன்
நன்றி வணக்கம்

Comments

//உன் வீட்டில் தமிழிருந்தால்
தமிழ்ப்பிள்ளை எப்படித் தடம்மாறும் ?//

//நெஞ்சில் நெருப்பிருந்தால்
கொடும் பனியும் கொடிய குளிரும்
உன்னைக் கும்பிட்டு விலகாதா
//

//தமிழர்தம் உடலின் உள்ளே
திரண்டோடும் இரத்தம் தமிழாக வேண்டும்
தமிழர்தம் விழியின் உள்ளே
திரையேறும் கனவும் தமிழாக வேண்டும்//


//இளைஞர்களைத்
தமிழின்பால் ஈர்க்காமல்
புலம்பெயர் வாழ்வு
புழுதிவாழ்வாகித்தான் போகும்

நாம் அவர்களின் பக்கம் திரும்புவதாக
அவர்கள் தமிழின் பக்கம் உருகுவதாக
இந்த மேடைகள் அமையவேண்டும்
இதுவே இன்றைய என்
உறுதியான வேண்டுகோள்//

நான் அதிக நேரம் செலவிட்ட கவிதை இதுதான். ஒவ்வொரு அடியும் சம்மட்டி அடியாக, நமது மனதில் ஆழப் பதிய வேண்டிய அடியாக இருக்கின்றன.

பல காரணங்களுக்காக புலம் பெயருகிறோம். இந்தியனின் உழைப்பை அயலகம் விலைக்கு வாங்குகிறது. அவர்களுக்குத் தேவை நமது உழைப்பு. நமக்குத் தேவை அவர்களது பணம். இருபணி முப்பணி எல்லாம் இதனடிப்படையில் தான். வாரக்கடைசியில் இந்தியன் மட்டுமே உழைத்துக் கொண்டிருப்பான்.

அங்கு வாழும் எம்குலப் பெண்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு தான் குழந்தை வளர்க்கின்றனர். கலாச்சார சீரழிவு - கட்டுக்குள் கொண்டு வருவது சிரமம் தான். அயல் நாட்டினரைத் மணம் செய்து கொள்வது இயல்பாகி விட்டது. என்ன செய்வது.

ஆதங்கங்களும் ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் கவிதை மழையாய்க் கொட்டுகின்றன.

பாலைத்திணைப் பாடல்கள், சிறு புல்லின் வளர்ச்சி, புலம் பெயர்ந்து பேர் பெற்ற தமிழர்கள் - இவை எல்லாம் சற்று ஆறுதல் அடையத் தான்.

கனடா எப்படியோ தெரியாது. மற்ற நாடுகளில் அமெரிக்கா, இலண்டன் இவைகளில் தமிழனின் நிலை என்ன ? தமிழகத்தை மறந்து அங்கு பச்சை அட்டை வாங்க வேண்டும். அல்லது குறுகிய காலத்துக்குள் உழைத்துப் பொருள் சேர்த்து உடனே திரும்பி விட வேண்டும். இரண்டு விருப்பங்கள் தான்.

கவிதையை தனியாக ரசித்தேன். அடி அடியாக சுவைத்தேன். தமிழின் இனிமையை, இன்பத்தை அள்ளிப் பருகினேன். கவிதையை ரசிப்பது வேறு - கருத்தை ரசிப்பது வேறு.

//அகிலமெங்கிலும் நிகழும்
அயராத புலம்பெயர்வுகளே
மனிதனையும் மனிதநேயத்தையும்
இயமத்தில் ஏற்றும் வல்லமை கொண்டவை//

இயமத்தில் : இமயத்தில் என இருந்தால் நலமாக இருக்கும்.

இவ்வடிகள் வலியுறுத்தும் கருத்து விவாதத்திற்குரியது நன்பரே !!
உங்கள் விமரிசனத்திற்கு மிக்க நன்றி சீனா

//அகிலமெங்கிலும் நிகழும்
அயராத புலம்பெயர்வுகளே
மனிதனையும் மனிதநேயத்தையும்
இமயத்தில் ஏற்றும் வல்லமை கொண்டவை//

இதில் உங்களுக்கு உடன்பாடில்லை என்று தெரிகிறது.

இது தொடர்பாய் சில கருத்துக்களை மட்டும் நான் உங்கள் முன் வைக்கிறேன்.

நீங்கள் தஞ்சையில் பிறந்தவர் புலம்பெயர்ந்து மதுரையில் வாழ்கிறீர்கள். அது உயர்வு.

அன்னை தெரசா அயல்மண்ணில் பிறந்தவர், கல்கத்தால் புலம்பெயர்ந்தார். அது உயர்வு.

ஆதிமனிதன் ஆப்பிரிக்காவில் பிறந்தான். புலம் பெயராமல் இருந்திருந்தால் இந்த உலகமே இல்லை.

உலகமெங்கிலுமுள்ளோர் புலம்பெயரப் புலம்பெயர உலகின் எல்லைக் கோடுகளுக்குப் பொருளின்றிப் போய்விடும் ஓர்நாள்.

உலகம் என்பதே ஒன்று என்று ஆனால் புலம்பெயர்வென்பதன் பொருள்தான் என்ன?

பஞ்சபூதங்கள் எல்லாம் புலம்பெயர்ந்த வண்ணம் இருக்கின்றன.

இந்தப் பிரபஞ்சமே பெருவெடிப்பில் புலம்பெயர்ந்து வந்த ஒன்று.

நம் பூமியே சூரியனிலிருந்து புலம்பெயர்ந்து வந்த ஒன்று.

இப்படியே சிந்தித்துப் பாருங்கள், நான் எழுதியதன் பொருள் புலரக்கூடும்!
நண்பரே !! எல்லைக்கோடுகள் இருக்கும் வரை, புலம் பெயருதலுக்கு பொருள் வேறு தான். வீடு மாறுவது, தெரு மாறுவது, ஊர் மாறுவது, மாநிலம் மாறுவது இவை எல்லாம் நாடு மாறுவது போல் அல்ல. இன்ஞும் நூற்றாண்டுகள் கடந்தால் நாடுகள் ஒன்றாகலாம்.

நிற்க, புலம் பெயருவது இயல்பு. ரத்த ஓட்டத்தைப் போல, சுவாசிப்பதைப் போல, வாழ்க்கைக்கு அது தேவை. உணர்வுகளையும் உள்ளங்களையும் அதற்கேற்ப மாற்றிக் கொள்வதென்பது தேவை யற்ற ஒன்று.
நான் நாடுகளையும் ஊர்களாகக் காணும் மனோபாவம் கொண்டவன் சீனா! கோடுகளை மதிப்பவனல்ல, வெறுப்பவன்!

வானத்தைக் கோடுகிழிக்கமுடியாதவனுக்கு, காற்றைக் கோடு கிழிக்க முடியாதவனுக்கு, நெறுப்பைக் கோடு கிழைக்க முடியாதவனுக்கு நிலத்தைமட்டுமே கோடுகிழிக்க முடிந்தது. அந்தச் சுயநலத்தை நான் எப்போதும் மதிப்பதே இல்லை!

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதே கட்சி!

பறவைகளுக்கெல்லாம் பாஸ்போர்ட் இல்லை என்ற பாடல்வரிகளில் மயங்குபவன்.

எல்லைக்கோடுகள் அழிந்திடணும் அதை என் சின்னக் காலால் அழித்திடனும் உலகை ஒற்றைப் பூவாய்க் கண்டிடணும் என்ற என் கவிதையை வாசித்திருப்பீர்கள்.

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. என் கருத்துக்களை வழங்க வழிதந்தமைக்கு பெருநன்றி.
ஆழமான சிந்தனை புகாரி. ஜீவிதத்திற்கு திரைகடலோடியும் திரவியம் தேடு என்பார்கள். ஆனால் திரவியம் தேடுவதே இங்கு ஜீவிதமாகிறது.
Anonymous said…
//புதைத்ததும் புதைந்ததும்
போதும் போதுமடா தமிழா

பண்பும் புகழும்
பாரம்பரியத் தமிழ் அறமும்
மீட்டெடுப்பொம் வா//

பல வண்ணங்களின் கலவைதான் வாழ்க்கை. அதற்கேற்றாற் போல் உங்கள் கவியின் முகப்பிலுள்ள படமும் பலவண்ண உலகைக் காட்டுகிறது. புலம்பெயர்வை புலம்பலாக எடுத்துக்கொள்ளாமல் நயம்பட தமிழுணர்வை வெளிப்படுத்தியிருந்தது உங்கள் கவிதை.
அமெரிக்காவுக்கும் பொருந்தும் :-(

ஆமாம், இது முழுநீளக் கவிதையாயிருக்கிறதே, அன்புடனில் அனுப்பியது என்ன abridged version-ஆ? :-)
nidurali said…
உங்கள் கவிதையின் உயிர் ஓட்டம் மெய் சிலிர்க்க வைகின்றது .அலை ஓய்ந்தாலும் உங்கள் கவிதையின் கற்பனை ஓயாது . வாழ்த்துக்கள்

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சென்னை விழா நன்றியுரை

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

காணி நிலம் வேண்டும் பராசக்தி

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ