உலகமுதல் இணையநூல் வெளியீடு 2


தலைமையுரை - உபசரிப்பு - நிகழ்ச்சி ஒலிபரப்பு

தலைமையுரை - திசைகள் ஆசிரியர் மாலன்

கணித்தமிழ் பொன் கொண்டு, கவிதைச் சுடர் கொண்டு அணி பல செய்யக் காத்திருக்கும் அன்பர்களே! இனிமை இனிமை என்று இதயம் நனைந்திருக்க இணையத் தமிழ் தொடுக்கும் கவிஞர்களே! இது ஓர் அற்புதப் பொன் நிமிடம். ஒளி மிகுந்த ஒரு தருணம்.

வரலாற்றின் வைர மணித் துளியில் வாழ்கின்ற பேறு வாய்த்திருக்கிறது நமக்கு. எண்ணி நெஞ்சு விம்முகிறது. நெகிழ்ந்து ததும்புகிறது, உண்மைதானா உண்மைதானா என்று உள்ளம் உறுதி கொள்ளத் துடிக்கிறது. ஒருசில நொடிகள் சுட்டியை விட்டு உடலைக் கிள்ளிப் பார்த்துக் கொள்கிறது விரல்.

இன்னொரு தமிழன் என்னருகே இருந்தால் அவனை இழுத்து அணைத்து 'தமிழனாய்ப் பிறந்ததனால், தமிழ் எழுதப் பயின்றனதால், தகைந்ததடா இந்த நிமிடம்!' என்று பூரித்துச் சிரிப்பதற்குப் பொங்குகிறது மனம்.

மிகையாகச் சொல்லவில்லை நண்பர்களே, மெய்யாகச் சொல்லுகிறேன். கற்பனையில் அற்புதங்கள் செய்கின்ற பொற்கரங்கள் வாய்த்த கவிஞர்கள் நீங்களெல்லாம். நானோ உள்ளதை உள்ளபடி ஊருக்குச் சொல்லுகின்ற ஓர் உரைநடைக்காரன்.

நடந்தை நாட்டுக்குச் சொல்லுகிற செய்தியாளன். கவிதை மனம் உண்டு , கற்றறிந்த தமிழ் உண்டு என்கிற தைரியத்தில் எப்போதோ கவிதைகள் எழுதிப் பார்த்ததுண்டு. என்றாலும் நான் கவிஞன் இல்லை.

நீண்டதொரு காவியத்தில் நேர்கின்ற இலக்கணப் பிழை போல், கவிஞர்கள் அரங்கிற்குத் தலைமையேற்க ஆல்பர்ட் பணித்துவிட்டார். நண்பர் புகாரி என்பதனால் நானும் துணிந்து விட்டேன்.

இதழாளன் என்பதானல் உள்ளதைச் சொல்லுகிறேன். உண்மையிலேயே இது ஓர் அற்புதப் பொன் நிமிடம். ஒளி மிகுந்த ஒரு பொழுது.

தமிழ் உலகம் தலை நிமிர்ந்து சிரிக்க தக்கதொரு தருணம். ஏன் என்று கேட்பவர்க்கு இதோ என் விளக்கம்:


இணையம் குறித்து இதுவரைக்கும் ஆறு மாநாடுகள் ஆங்காங்கே நடந்ததுண்டு. இணையத்தின் துணை கொண்டு, இந்தியாவின் அதிபர் ஏதோ ஓரு மாநாட்டில் உரை நிகழ்த்தக் கண்டதுண்டு. என்றாலும் இணையத்திலேயே ஒரு மாநாடு இதுவரைக்கும் நடந்ததுண்டா?

நடக்கிறது நண்பர்களே நடக்கிறது. நம் கண்ணெதிரே இதோ நடக்கிறது!. இந்திய மொழிகளில் எந்த மொழிக்கும் இந்தப் பெருமை இதுவரை சொந்தமில்லை. அயல் மொழிகள் முயல்வதற்குள் ஆரம்பித்து விட்டோ ம் நாம்.

தமிழ் என்பதாலே வாய்த்தது இந்தத் தகமை. சென்ற தலைமுறைக்கு இந்தச் சிறப்பு இல்லை. அடுத்த தலைமுறைக்கு இதை நாம் அனுமதிக்கப் போவதில்லை.

கணினியும் காலமும் நம் கைகளில் தந்ததிது. இப்போது சொல்லுங்கள், இது பொற்கணமா இல்லையா? பூபாளம் இசைக்கின்ற புது விடியல் பொழுதல்லவா?


இந்தப் புதிய சரித்திரம் எங்கள் வீட்டுப் பிள்ளைக்கல்லவா இதுவரை காத்து நின்றது! புகாரி கையில் அல்லவா இந்தப் புலரி மலர்ந்தது!

அவரைக் கவிஞர் என்று அன்றே அடையாளம் கண்டது திசைகள்.

அன்று திசைகள் இனம் கண்டது.
இன்று இனம் இவர் திசைகண்டது.


காற்றில் விதைக்கவில்லை, கழனியில்தான் பயிர் செய்தோம் என்று கர்வம் கொள்கிறது நெஞ்சம்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தாய் எப்படி இருப்பாள் என்று புரிகிறது!

இணையம் கவிதை இரண்டுக்கும் எத்தனையோ முகங்கள். ஏராளம் வடிவங்கள். என்றாலும் ஆதாரமான உயிர் ஒன்றுதான். இணைப்பது என்பது இரண்டுக்கும் பொது.

மனிதரை இணைப்பது, மனங்களில் விதைப்பது, திசைகளை இணைப்பது, திறமைகள் வளர்ப்பது, காலத்தை வெல்வது,

கருத்துக்கள் சொல்வது கவிதையும் இணையமும். இந்த மூல மந்திரத்தை முழுவதும் கற்றவர் புகாரி. சான்றா வேண்டும்? சந்தக் கவிதைக்கு வாரீர்.

எட்டு வேற்றுமை என்பது தமிழுக்கு. தமிழருக்குள்ளோ எண்ணற்ற வேற்றுமை. காலங் காலமாக இதுதான் நம் கதை.

ஆதி காலத்திற்குப் போகவில்லை. கணினித் தமிழையே அணுகிப் பார்ப்போம். அதற்கே நம்மிடம் நான்கு குறியீடு (encoding). தரப்படுத்துதல் குறித்து இன்னும் நமக்குள் தகராறு. இந்தப் பின்புலத்தில் எழுதுகிறார் புகாரி. இணைய மாநாட்டுக் கவிதையிலிருந்து இதோ ஒரு வரி:

அழைப்பும்
தொடுப்போமின்று
அன்புடன் ஒன்றுதல் நன்று

தழைப்பது
தமிழ்தான் என்போம்
தரமென ஒன்றே கொள்வோம்


கடந்த பிறவியில் அய்யா உமக்கு, ஓளவை என்றொரு பெயரும் உண்டோ ? அவள்தானே அரசர் ஒன்றப் பாடினாள்?

ஆணைப் பெண்ணாய் ஆக்கினேன் என்று கோபம் கொள்ள வேண்டாம் தம்பி.

பாரதியின் சாயல் கூடப் பார்த்தேன் உன் பாட்டில். ஆணும் பெண்ணும் நிகரெனெக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் செழிக்கும் என்று அந்தப் 'பையன்' அன்று சொன்னான். இன்று இந்த இளைஞன் சொல்வான்:

" ஆணும் பெண்ணும்
சமமென்றே கை கோக்கும்
அற்புதம் செய்ய"


( பெண்ணே போராடு!)

பாரதி நமக்கு பாடல்தானா கொடுத்தான்? நம்பிக்கை என்னும் கையைக் கொடுத்தான். வறுமை அவனைத் தின்ற நாளிலும் வாழ்க்கை இனிது என்றவன் அவன் ; இவ்வுலகம் இனிது மனிதர் இனியவர் என்று இறுதி வரைக்கும் நம்பி வாழ்ந்தவன்.

நம்பிக்கை என்னும் கை நமக்கிருந்தால், இளமையில் கனியலாம், திறமையில் மின்னலாம், முதுமையை வெல்லலாம், வறுமையைத் தின்னலாம், தனிமையைத் தவிர்க்கலாம், கனவுகள் நெய்யலாம், கவிதைகள் செய்யலாம் என்று காட்டிச் சென்றவன் அந்த மகாகவி.

அவன் அளித்துச் சென்ற நெருப்பை அணையாமல் காத்து அடுத்த தலைமுறைக்குத் தருகிறார் புகாரி:

கனவுகள் முயற்சியின் பொறுப்பு
கைகளில் நம்பிக்கை நெருப்பு
கண்களில் வெற்றியின் சிரிப்பு
கவலையின் வேர்கள் அறுத்து -தோழா
கண்களின் அருவியை நிறுத்து.


அருவி என்றதும் நெஞ்சில் ஒரு ஞாபக வெள்ளம்.

அடையாரில் ஒரு பெண்கள் கல்லூரி. எம்.ஜி.ஆர்-ஜானகி பெயரில் அமைந்தது. ஒருநாள் என்னை உரையாற்ற அழைத்திருந்தார்கள். அரங்க மேடையில் அய்யா (வா.செ.) குழந்தைசாமி, அருமைத் தங்கை கனிமொழி, அப்புறம் யார் யாரோ பேராசிரியர்கள். அகில இந்தியக் கருத்தரங்கம் என்று அறிவித்திருந்ததால் அனைத்துக் கல்லூரியும் ஆஜராகி இருந்தது.

என்னைப் பேச அழைத்த போது மின்னல் போல் நெஞ்சில் ஒர் எண்ணம். நெடிது தொடரும் சிந்தனை மரபில் சிறிது காட்டலாம் என்று நினைத்தேன்.

நீர் இன்றி அமையாது யாக்கைக்கு என்று சொன்ன சங்ககாலத்து குடபுலவியனாரை எடுத்துச் சொல்லி ஆரம்பித்தேன்.

அடுத்து நான் புகாரியின் இந்த வரிகளைத் தொடுத்துச் சொல்ல, அரங்கம் அதிர்ந்தது கரங்களின் ஒலியால்:

சமைப்பதுவும்
உண்பதுவும்
உணடதனைச் செரிப்பதுவும்
செரித்ததெல்லாம்
ரத்தமெனச்
சேர்வதுவும் தண்ணீரே

கண்ணீரும்
தண்ணீர்தான்
கருணை கூடத் தண்ணீரே
ஈரமில்லா
உள்ளத்தை
இதயதமென்று யார் உரைப்பார்?


அந்தக் கரவெலிகள் எனக்கா? புகாரிக்கா?

இருவருக்கும் இல்லை என்பதுதான் உண்மை. அந்த விரலொலிகள் அத்தனையும் எங்கள் தமிழுக்கு. இதை எனக்குச் சொன்னதும் இந்த புகாரிதான்:

விரலுக்குள் ஊறிவரும்
எழுத்து- தமிழ்
எழுத்தினில் நிமிர்கின்ற
விரல்!


கனடாக் கவிஞர் சொல்வதெல்லாம் உமக்கு உடன்பாடா எனக் கேட்டால் இல்லை இல்லை இருக்கிறது ஒன்றிரண்டு முரண்பாடு என்றும் சொல்வேன். உதாரணம் ஒன்று சொல்லும் என்று உறுமாதீர் இதே எடுத்துரைப்பேன், இஷ்டம் எனில் கேட்டுக் கொள்ளும். சித்திரையைப் புத்தாண்டு என்று செப்புகிறார் புகாரி.

இல்லை தம்பி இல்லை. தை! தை! தை! தை முதல்நாளே தமிழருக்குப் புத்தாண்டு. எப்படி என்று என்னைக் கேட்காதே. அண்ணன் பழனி அன்றைக்கே மடலிட்டார். ஆவணக் களஞ்சியத்தைக் குடைந்திட்டால் அகப்படும்.

அய்யா தலைவரே தை தை என்று தாண்டவம் ஆடாமல் அடுத்தவருக்கு வழி விட்டு அரங்கத்தைக் காலி செய்யும் என்றோர் குரல் எந்தன் மனச்செவியில் கேட்கிறது. இதோ இறங்கி விட்டேன்.

மும்பைக் கவிஞர் மாதவி அவர்கள் இப்போது புகாரியின் நூலை வெளியிட்டு வாழ்த்துரை வழங்குவார்கள். கவிஞர். மாதவி அவர்களே, களம் இனி உமது.

2 comments:

ஷேக் அப்துல்லாஹ் said...

ஆனந்தம் அத்தனையும் இன்று படிக்க !

ஷேக் அப்துல்லாஹ் said...

ஆனந்தம் அத்தனையும் இன்று படிக்க !