1. கவிதை எழுத வேண்டும் எனும் ஆர்வம் எத்தகைய உந்துதலின் பின்னணியில் அமைந்தது?


லண்டன் கவிஞர் சக்தியின் கேள்விக்கு கனடா கவிஞர் புகாரியின் பதில்

திட்டம் தீட்டிக்கொண்டு நான் என் முதல் கவிதையை எழுத அமரவில்லை. என் முதல் கவிதை எதுவென்றே எனக்குத் தெரியாது என்பதுதான் என்
ஞாபக இடுக்குகளில் ஒட்டிக்கிடக்கும் உண்மை.

இன்றும் நான் என் அடுத்த கவிதையை எப்போது எழுதுவதென்ற திட்டமும் இல்லை, அது எதைப் பற்றியது என்ற திடமும் இல்லை. சட்டென கொட்டும் மழைக்குத் திட்டங்கள் இருப்பதில்லை. மிக இயல்பாக அது பொழிகிறது.

அடையாளம் தெரியாத அடர்த்தியான சிற்சில தாக்கங்களால் உள்ளுக்குள் கொதிபடும் எவையெவையோ சட்டென்று ஆவியாகின்றன. ஆவியானவை எல்லாம் எப்போதென்றறியாத விசித்திரப் பொற்கணங்களில் இதய வெளிகளில் கவி இழைகளாய்க் கருக்கொள்கின்றன, சற்றும் எதிர்பாராத ஏதோ ஒரு தனிமைப் பொழுதில் வீரியம்பெற்ற அந்த உணர்வுகள் கறுப்புக் குடை கண்ட பசுக்களாய் நரம்புகளில் வெறித்துக் கொண்டோட, கொட்டோ கொட்டென்று கொட்டிவிடுகின்றன கவிதைகளாய்.

பின் அவற்றை எடுத்து வைத்துக்கொண்டு, அறிவின் சுடரொளியாலும் மொழியின் உளிகளாலும் தேவைக்கும் ரசனைகளின் உச்சத்திற்கும் ஏற்ப தட்டித் தட்டி செம்மையாய்ச் செதுக்க வேண்டியதுதான் என் மீதப்பணி.

புத்தி மொட்டுக்கள் பூத்துச் செழிக்காத பிஞ்சு வயதில் சிறுவர்களின் கூட்டத்தோடு கூட்டமாய் ஓடிக் கொண்டிருந்தேன். என்னை இழுத்து நிறுத்திய கலைகளை யெல்லாம் நின்று நிதானித்து ஆழமாய் ரசித்தேன். என்னை வேரோடு விழுங்கிய வார்த்தைகளில் எல்லாம் விழுந்து விழுந்து தொழுதேன். என்னை அறியாமல் ஆடிய கால்களும் அதனோடு அசைந்த இதயப் பசும்புல் பரப்பும் இசையின் ஆளுமையால் என்று உணராத வயதிலேயே மயங்கி நின்றேன்.

நெகிழ்ச்சியோடு முட்டிய கண்ணீர் மணிகள்தாம் என் ரசனையின் உயரத்தை எனக்கு அடையாளம் காட்டித் தந்தன. எதுவுமே அறியாதவன், உணர்வுகளின் தேவைகளால் எல்லாமும் ரசித்தேன்.

கவிதைப் பயிற்சி, இசைப்பயிற்சி, ஓவியப் பயிற்சி என்று முறையான எந்தக் கலைப் பயிற்சியும் என்னிடம் இல்லை. ஆனால் என் இதயம் கவிதைகளை நேசிக்கவே துடித்துக் கொண்டிருப்பது போலவும், என் செவிகள் இசையைக் கேட்கவே திறந்து கிடப்பது போலவும், என் விழிகள் அழகினை ரசிப்பதற்கே ஆடிக் கொண்டிருப்பது போலவும் உணர்வேன் எப்பொழுதும்.

என்றோ என் நினைவு தெளிவில்லாத நாளிலேயே எழுதத் தொடங்கிவிட்டேன் என்றாலும், பல காலம் என்னை அறிந்த பலருக்கும் நான் கவிதை எழுதுவேன் என்றே தெரியாது.

1 comment:

Anonymous said...

அன்பு நண்ப புகாரி,

உண்மையான சுயசரிதை. கவிதை எவ்வாறு பிறக்கிறது என்பது அழகாக விவரிக்கப் பட்டுள்ளது. பெரும்பாலும் உணர்ச்சிகள், நெகிழ்ச்சிகள், கவிதையாக மாறும். கவிதை என்பது திட்டமிட்ட செயலன்று. சில கவிதைகள்,
பலத்த முன்னேற்பாட்டுடன், திட்டமிட்டு, கருத்துகள் விவாதிக்கப் பட்டு, சொற்கள் பலப்பல மாற்றங்கள் அடைந்து, அடிகள் அடிக்கடி மாற்றப் பட்டு, செதுக்கிச் செதுக்கி, அழகான சிலையாக வெளி வரும். அவ்வகைக் கவிதைகள் விழுக்காடு குறைவே.

அடையாளம் தெரியாத, அடர்த்தியான தாக்கங்கள் - கொதிக்கின்றன - ஆவியாகின்றன-. கருத் தரிக்கின்றன - வீரியம் பெறுகின்றன - கொட்டுகின்றன - அறிவுச் சுடரொளி - மொழியின் உளிகளின் செதுக்கம் - தேவைகள் - ரசனைகள் - இத்தனையும் தான் இயல்பான கவிதைகளாய் மாறுகின்றன. கருத்து அருமை.

தந்தையைப் போல் தனயன் - நல்வாழ்த்துகள்

நன்றி புகாரி

அன்புடன் ..... சீனா