சென்னை விழா நன்றியுரை


நீரும் தனித்தே பொழிகிறது - அதன்
தொடுதலில் தாகம் தெரிகிறது

நிலமும் தனித்தே சுழல்கிறது - அதன்
தவிப்பினில் தாய்மை விரிகிறது

காற்றும் தனித்தே அலைகிறது - அதன்
அசைவினில் காதல் மலர்கிறது

நெருப்பும் தனித்தே எரிகிறது - அதன்
வேகத்தில் வேட்கை கொதிக்கிறது

வானம் தனித்தே விரிகிறது - அதன்
மௌனம் உயிரில் நிறைகிறது

தமிழனும் தனித்தே நின்றாலும் - அவன்
சாதனை இயல்பாய் வருகிறது

ஆம்... தமிழன் ஆறாவது பூதம்தான்

என் அன்பினிய ஆறாவது பூதங்களே
உங்களுக்கெல்லாம் எப்படியோ எனக்குத் தெரியாது
எனக்கு இது தேவலோகத்தில் நடக்கும்
இந்திரன் விழா சந்திரன்விழா வென்றெல்லாம் சொல்வார்களே
அவற்றையெல்லாம் விட பலமடங்கு உயர்ந்தது

நான் இந்த விழாவை மறப்பதற்கில்லை
இனி எத்தனையோ விழாக்கள் வரலாம்
ஆனால் முதல் காதல் முதல் முத்தம்போல்
இது என் இதயம் கீறி என்றும் வாழும்
இசைத்தட்டாய் ஆக்கிய விழா

நினைவு இருப்பவர்களால்தான்
தன்னை மறக்க முடியும்
நிம்மதி இருப்பவர்களால்தான்
தளர்ந்து உறங்க முடியும்

அன்பு இருப்பவர்களால்தான்
அள்ளி அணைக்க முடியும்
தெளிவு இருப்பவர்களால்தான்
புதியதைப் பொழிய முடியும்

கனவு இருப்பவர்களால்தான்
விரைந்து வெல்ல முடியும்
கற்பனை இருப்பவர்கலால்தான்
விரிந்து பறக்க முடியும்

கவிதை இருப்பவர்களால்தான்
ரசித்து வாழ முடியும்
இதயம் இருப்பவர்களால்தான்
உண்மையாய் வாழ்த்த முடியும்

என்னை வாழ்த்திய உயர்ந்த உள்ளங்களுக்கு
என் உயிரின் நன்றி இழைகள்....

என் செல்ல மகள் தொட்டு இந்த அரங்கை விட்டுச்
செல்லாத கடைசி தமிழர்வரை அனைவருக்கும்....

பழைய சுவடுகளைப் பாடமாக்கிக்கொண்டு
புதிய சுவடுகளைப் பயணமாக்கிக்கொள்ளும்
இந்த புகாரியின் நன்றியும் வணக்கமும்

இவ்வேளையில்....
பத்தே தினங்களில் என் நான்காவது கவிதை நூலான பச்சைமிளகாய் இளவரசியை அச்சில் கோத்துத்தந்த மணிமேகலை பிரசுரம் திரு ரவி தமிழ்வாணன் அவர்களுக்கும்

சரணமென்றேன் கவிதைநூலை காவ்யாவில் அச்சிட மிகுந்த சிரமங்களை எடுத்துக்கொண்ட கவிஞர் வைகச் செல்வி மற்றும் அவர் கணவர் என் இனிய நண்பர் திரு வேணுகோபால் அவர்களுக்கும், என் தொலைபேசி குரல்கேட்டதுமே ஒரு சிறந்த தேனீயைப் போல சுறுசுறுப்பாய் சின்னச்சின்னக் காரியங்களையும் சிரத்தையாய் செய்துமுடித்து என்னைத் திக்குமுக்காடவைத்த திருமதி காந்தி ஜெகன்னாதன் அவர்களுக்கும், நான் என் ஒவ்வொரு கவிதைத் தொகுப்பு இடும்போதும் என் கவிதைகளைக் கோர்த்து முத்துமாலையாய் ஆக்கித்தரும் என் அன்பிற்கினிய கவிதை நண்பர் கவிஞர் சேவியர் அவர்களுக்கும் என் பிரத்தியேக நன்றிகள்.

இறுதியாக நான் சொல்லப்போவது இதைத்தான். தமிழர்தம் அடையாளம் தமிழன்றி வேறில்லை தாய்மொழியைத் துறந்தவரோ தன்முகத்தை இழந்தவரே தமிழரோடு பேசும்போது தமிழ்மொழியில் பேசுவோம் தமிழ்த்தாயின் மடிதவழ்ந்து தன்மானம் ஓங்குவோம். வாழ்க தமிழ்

No comments: