புதுமைகளின் காதலன் மாலன்


என் சென்னை அறிமுக விழாவில் மாலனைப்பற்றி நான் பேசியது


ஆழ்கடல் எறிந்தாலும் அழகு
முத்தோடு வருவான் தமிழன்
அந்த ஆகாயம் எறிந்தாலும் புதுக்
கோளோடு வருவான் தமிழன்

கிழக்குத் திசையில் வளர்ந்தேன்
அச்சுத் திசைகளோடு வந்தார் இவர்
மேற்குத் திசையில் வாழ்கிறேன்
இணையத் திசைகளோடு வந்துவிட்டார்

என்போன்ற இளையோரை
எங்கு சென்றாலும் விடமாட்டாரோ
இந்தப் பொன்மன மாலன்

பண்டிகை தினத்தன்று புதுச்சட்டை அணிந்து அதைப் பார்த்துப் பார்த்துப் பூரிப்பில் நடந்தது ஒரு வயது. பின் கருகருவென்று வளர்ந்த மீசையைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கொண்டு பெருமையில் திளைத்தது ஒரு வயது.

அந்த வயதில்தான் திசைகள் எனக்கு அறிமுகம். அது என் பத்திரிக்கை. ஏனெனில் அதை இளைஞர்கள் பத்திரிகை என்று அறிவித்தார்கள்.

நாலைந்து இளைஞர்கள் சேர்ந்து தஞ்சையின் சார்பாக திசைகளில் பங்குகொண்டோம். இனிமையான நாட்கள் அவை. தஞ்சாவூர் பெரிய கோவிலில்தான் எங்கள் சந்திப்பு நிகழும்.

பலரும் தெய்வத்தை வணங்கிக் கொண்டிருப்பார்கள். நாங்களோ இலக்கியத்தில் நனைந்துகொண்டிருப்போம். அப்போதுதான் மாலன் என்ற பெயர் எனக்கு அறிமுகம்.

மாலையும் காலையும் மலர்ந்தமுக மாலனின் தலைமை எனக்கு இரண்டுமுறை கிடைத்திருக்கிறது.

என் இணைய நூல் வெளியீட்டு விழாவின் தலைவரும் மாலன்தான். (உலகின் முதல் இணையநூல் விழாபற்றி விரிவாக இதே வலைப்பூவிலேயே காணலாம்)

யானை கட்டிப் போரடிக்கும் பேருழவில்
ஓர் எறும்பு வந்து கயிறிழுக்கும் அதிசயம்
நயாகராக்கள் கூடிக் கொட்டும் விழாவில்
ஒரு குற்றாலம் பாட வரும் குதூகலம்

யார் தந்தார் இதை இன்று எனக்கு?

பொறுப்புகளின் ஆர்வலன்
எளிமைகளின் தூதுவன்
புதுமைகளின் காதலன் - நம்
மதிப்பிற்குரிய மாலன்

இந்த பந்தம் அதிசயமானது.
30 வருடங்கள் கழித்து மீண்டும்
இணையத்தின் மின்னிழைகளால்
கட்டித் தழுவிக்கொண்டோமே

இவர் இல்லையேல்... இன்று இந்த விழாவே இல்லை

நான் நேரே விமான நிலையத்திலிருந்து வருகிறேன்
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளுடனும்
மாலன் அமைதியாய்ப் புன்னகைக்கிறார்.
அதுதான் மாலன்....

இவருக்கு எப்படி நான் என் நன்றிகளைச் சொல்வது?

தேனுக்கு மேடைதரும் பூக்கள் - அந்தத்
தேனின் நன்றியோ ஒரு சொட்டு
மீனுக்கு மேடைதரும் நீரலை - அந்த
மீனின் நன்றியோ ஒரு துள்ளல்
மானுக்கு மேடைதரும் புல்வெளி - அந்த
மானின் நன்றியோ ஒரு தாவல்
வீணைக்கு மேடைதரும் காற்று - அந்த
வீணையின் நன்றியோ ஒரு நாதம்

என் கவிதைக்கு மேடைதந்த நெஞ்சமே
உங்களுக்கு என் நெகிழ்வான
நன்றியின் அளவென்ன தெரியுமா...?

வான் நிறைந்த விண்மீண்கள் கொஞ்சம்தான் - என்
வாய் நிறைந்த நன்றிகளோ சொல்லிலடங்கா!

No comments: