அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது


இனிய இணைய அன்பர்களே,

உலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமமான அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

யுனித்தமிழ் தட்டச்சுவது எப்படி?

இதயம் மீறும் எண்ணங்களால்
நாம் எழுந்து பறப்போமே
இதய நிழலில் இதயம் கிடத்தி
இன்னல் துறப்போமே

இதுதான் அன்புடனின் மூச்சும் பேச்சும்.

இது தமிழர்களுக்கான குழுமம், யுனித்தமிழில் மட்டுமே இது இயங்கும். இங்கே கௌரவமான விசயங்கள் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்படும். விளம்பரங்கள், ஆபாசங்கள் போன்றவற்றுக்கு இங்கே அனுமதி இல்லை.

தமிழ்க் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், தமிழ் வளர்ச்சி, தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்று ஆக்கப்பூர்வமான தலைப்புகளிலேயே இங்கே மடலாடல்கள் நிகழும். இவற்றை அனுசரிப்போர் மட்டும் இக்குழுமத்தில் சேரும்படி அன்புடன் பணிகிறோம்.

(புகைப்படம்: 2007 சென்னை அன்புடன் சந்திப்பு)

அன்புடன், 2005ம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. தொடங்கிய 16 மாதங்களுக்குள் நானூறுக்கும் மேற்பட்ட அன்பர்கள் அறுபதாயிரத்து ஐந்நூறு மடல்களைத் தாண்டி அன்பையே அச்சாணியாகக்கொண்டு கருத்தாடல்கள் நடந்தி வருகிறார்கள். இது தமிழ்க்குழும உலகில் இதுவரை தொட்டிராத எண்ணிக்கைகளாகும். இன்று அன்பர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது.

அன்புடனில் சேர்ந்ததும் முதலில் உங்களைப் பற்றிய அறிமுகத்தை அன்பர்களுக்குத் தாருங்கள். உங்கள் பெயர், ஊர் விபரங்களையும், அன்புடன் குழுமத்தைப் பற்றி நீங்கள் எப்படி அறிந்துகொண்டீர்கள் என்றும், அன்புடனில் இணைய விரும்பியதன் காரணத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

உங்களின் அவ்வப்போதய உதவிகளுக்கு, அன்புடன் உதவிக்கு மடல் அனுப்புங்கள்.

எப்படி யுனித்தமிழில் தட்டச்சுவது என்று அன்பர்களுக்கு அன்புடன் ஓர் சேவையாகச் சொல்லித்தருகிறது. மேலும் இணையம் மின்னஞ்சல் யுனித்தமிழ் தொடர்பான அனைத்து சிக்கல்களையும் அன்புடன் தீர்த்துவைக்கிறது.

அன்புடனின் கொள்கைகள்

1. அன்புடன் தமிழில் உரையாடுவோருக்கான குழுமம். தமிழ் அறியாதவர்கள் இதில் பங்குபெற முடியாது. தமிழில் உரையாடும் ஜார்ஜ் ஹார்ட்டை அன்புடன் இணைத்துக் கொள்ளும். தமிழ் எழுதத் தெரியாத தமிழ்ச் செல்வனை நிராகரிக்கும்.

2. அவசர கால தேவைகளை மனதில் கொண்டு அன்புடனில் The Only English Thread in Anbudan என்ற ஓர் இழை ஆங்கிலத்திலும் தமிழிலும் கலந்து எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழில் தட்டச்ச இயலாத உண்மைச் சூழலில் முக்கியமான தகவல்களையும் விபத்து, மரணம், சுனாமி போன்ற அவசர விசயங்களையும் அறிவிக்க இவ்விழையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

3. அன்புடன் யுனித்தமிழில் மட்டுமே இயங்கும். உலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமம் என்ற பெருமை இதற்கு உண்டு. இங்கே திஸ்கி, தாம், டாப் போன்று வேறு எந்த தமிழெழுத்துத் தரத்தோடும் எழுத அனுமதியில்லை.

4. அன்புடனில் கௌரவமான விசயங்களே பரிமாறிக்கொள்ளப்படும். விளம்பரங்கள், ஆபாசங்கள் போன்றவற்றுக்கு இங்கே அனுமதி இல்லை. எது கௌரவம் எது ஆபாசம் என்பவற்றை அன்புடன் மட்டுமே தீர்மானிக்கும். இதில் சர்ச்சைக்கு இடமில்லை.

5. அன்புடனில் தமிழ்க் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், செய்திகள், துணுக்குகள், பாடல்கள், தமிழ் வளர்ச்சி, தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்று ஆக்கப்பூர்வமான மற்றும் சுமுகமான தலைப்புகளிலேயே மடலாடல்கள் நிகழும். இவற்றை அனுசரிப்போர் மட்டுமே இக்குழுமத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.

6. அன்புடனில் மதங்களை சாதிகளை இனங்களை காயப்படுத்தும் விதத்தில் மடல்கள் அனுமதிக்கப்படாது.

7. அன்புடனில் இதயங்களை நோகடிக்கும் நோக்கத்தோடு பொதுவிலும், தனிப்பட்ட முறையிலும் மடல்கள் இடக்கூடாது. கருத்துக்களால் எழும் மோதல்கள் தாராளமாக வரவேற்கப்படுகின்றன. ஆனால் தனிமனிதக் கீறல்கள் அனுமதிக்கப்படாது.

8. அன்புடனிலோ, அன்புடனின் நிர்வாகிகளிடமோ, அன்புடன் உதவிக் குழுவினரிடமோ எவரும் குறைகள் கண்டால், அவற்றை அன்புடன் உதவிக்குத் தெரிவிக்க வேண்டும். அதுவன்றி அன்புடனில் நேரடியாக மடல்கள் இடக்கூடாது.

9. அன்புடன்-உதவியிலிருந்து எந்த ஒரு விவாதத்தையும் நிறுத்தக்கோரி மடல் வந்தபின் அன்பர்கள் அதில் தொடர்ந்து விவாதம் செய்யக் கூடாது. அவர்களின் விவாதத்தை அன்புடன்-உதவிக்குத் தனிமடலாக அனுப்பி வைக்கலாம். அவை பரிசீலிக்கப்படும்.

10. அறிந்தே அன்புடன் கொள்கைகளை மீறும் அன்பர்கள் அன்புடன் உதவியினரால்
கண்டிக்கப்படுவார்கள். பிரச்சினை அதிகம் ஏற்படும் பட்சத்தில் பிரச்சினைக்குரிய அன்பர் நீக்கப்படக்கூடும். இது தொடர்பான விவாதங்களை அன்புடன் உதவிக்குத் தனிமடலில் இடலாமே தவிர அன்புடனுக்குள் இடக்கூடாது.


இந்தக் கொள்கைகள் தரும் ஒழுங்கில், அன்புடன் மேலும் செழித்து வளரும் என்ற நம்பிக்கை அன்புடனுக்கு உண்டு. இந்தக் கொள்கைகளில் மாற்றம் விரும்புவோரும் வாழ்த்துத் தெரிவிப்போரும் மறவாமல் அன்புடன் உதவிக்குத் தனிமடல் இடுங்கள்.

அன்புடன் கருத்தாடல்களின் முக்கிய தளங்கள்:

தமிழ், செம்மொழித் திட்டம், தமிழ் இலக்கணம், தமிழ் மற்றும் தமிழர் வரலாறு, தமிழர் பண்பாடு, தமிழர் புத்தாண்டு, சங்கத்தமிழ்ப் பாடல்கள், சித்தர் பாடல்கள்

யுனித்தமிழும் கூகுள்குழுமமும், யுனித்தமிழ் உதவி

நிகரான தமிழ்ச்சொல்

புகழ்பெற்ற கவிஞர்களின் கவிதைகள்

புதிய கவிஞர்களுக்கு ஊக்குவிப்பு

பிறமொழிக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு முயற்சிகள்

கவிதைகள் பற்றிய அலசல்கள்

அறிவியல் கேள்வி பதில்கள்

மருத்துவக் குறிப்புகள்

இந்தியப் பெருமை, இந்திய சுதந்திரம்

சுவாரசியமான புகைப்படங்கள், வீடியோக்கள்

மூளைக்கு வேலை தரும் புதிர்கள், விடுகதைகள், கணக்குகள்

நகைச்சுவைப் பக்கங்கள், குறுந்தகவல்கள், செய்திகள், துணுக்குகள், சிந்தனைத் துளிகள்

திரைப்படப் பாடல்கள், திரைக்கவிதைகள், திரைவிமரிசனம்

இவைபோல இன்னும் பலதரப்பட்ட விசயங்களை இதுவரை மிகச்சிறப்பாகக் கலந்துரையாடியிருக்கிறோம் என்பதைப் பெருமையுடன் நினைவுகூரலாம். இவையனைத்தும் இன்னும் பலவும் அடங்கிய இனிய தமிழ்ச்சுரங்கமே அன்புடன் குழுமம்.

அன்புடன் அன்பர்களால் ஆனதே அன்புடன். அன்புடனில் எழுதத் துவங்குங்கள். உங்கள் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், கருத்துக்கள் அன்புடனில் வரவேற்கப்படுகின்றன. எழுதுவோரை ஊக்குவியுங்கள். புதிதாய் எழுதத் தொடங்குவோருக்கு உங்கள் ஊக்குவிப்பும் அரவணைப்பும் மிகவும் இன்றியமையாதது. அன்புடனின் வளர்ச்சி நம் அனைவரின் கையிலும் தான் உள்ளது. அன்புடன் குழுமத்தை இன்னும் வளமாய், நலமாய் அமைக்க உலகத்தமிழர்கள் அனைவரும் அன்புடனுக்கு அன்புடன் வாருங்கள்.


இதய நிழலில்
இதயம் கிடத்துவதே
இதயத்தின் தேடல்
அந்தத் தேடலின்
கூடல் முகாம்தான்
அன்புடன்

2 comments:

cheena (சீனா) said...

அன்பு நண்பர் புகாரி, அன்புடன் இணைய அனைவரையும் அன்புடன் அழைத்தது நன்று. வலைப் பதிவர்கள், தமிழன்பர்கள், கவிதைப் பிரியர்கள் அனைவரும் இணைவார்கள் என நம்புகிறேன்.

அதிரை சித்திக் said...

நல்ல முயற்சி ..வெற்றி பெற வாழ்த்துக்கள் .,

நல்ல தமிழுள்ளங்கள் இணைவது எனக்கு

பேரானந்தத்தை தருகிறது ..தமிழூற்று

என்ற மாத இதழை ஆரம்பித்து ..

எழுத்தார்வமிக்கவர்களை .ஒன்று சேர்க்க முயற்சித்தேன்

முடியவில்லை ..ஆனால் வலை தளங்கள் வாயிலாக

கல்வியாளர்கள் ,தமிழ் ஆர்வலர் ,ஒன்று கூடும்

இடமாக இருப்பதால் வெற்றி நிச்சயம் .வாழ்த்துக்கள்