புலம்பெயராத உணர்வுகள்


எத்தனைக் காலம் நான் ஏங்கினேன்
எத்தனைக் கனவினில் மூழ்கினேன்
எத்திசை நோக்கினும் நீயின்றி
என்விழி கண்டது வேறில்லை

அத்தனை ஆசையும் தேக்கிவைத்து
அன்பே நானின்று ஓடிவந்தேன்
பித்தனைப் போலே ஆடுகின்றேன்
பேசு உன் மொழியில் சீராவேன்

முத்தங்கள் வேண்டுமென் இதழுக்கு
முந்தானை வேண்டாமுன் முகத்துக்கு
ரத்தினப் பேழையில் மதுவுண்ண
ரதியே பொன் மாலைகள் மயங்கட்டும்

மொத்தமாய் அள்ளியென் தோள்சேர்த்து
முடியாத கவியொன்று நான்பாட
முத்தமிழ்ச் சுவையேயுன் விழிமெல்ல
முகிழட்டும் முகிழட்டும் தேன்சிந்த

ஜாடையில் நீ இள ரோசாப்பூ
ஆடைகள் கட்டிய தாழம்பூ
ஓடையில் ஓரிரு ஊதாப்பூ
ஓடுதல் போலவுன் விழியழகு

கோடையில் கொட்டிடும் நீரருவி
கூந்தலாய் வந்ததோ பேரழகி
நாடிநான் தவிப்பது போதுமடி
ஓடிவா ஓடிவா தேவன் மடி

வளைகுடா நாட்களோ துயரமடி
வருமானம் வாழ்வை மேயுதடி
விலையாக உயிரைக் கேட்குதடி
விடியாத இரவுகள் ஈனமடி

கொஞ்சமே போதும் பொருளாக
கொஞ்சலே வேண்டும் வாழ்வாக
உயிரின் இழைகள் காயவைத்து
தரியில் பட்டாடை நெய்வதில்லை

No comments: