உலகமுதல் இணையநூல் வெளியீடு 13


தலைவர் மாலன்
கவிதை அறிந்தவர் இதயத்தில் எப்போதும் இக்பாலுக்கு இடமுண்டு. 'சாரே ஜகான்ஸே
அச்சா' என்று சொன்ன அந்தக் கவியை மட்டும் சொல்லவில்லை. சிங்கைக் கவிஞரையும்
சேர்த்தே சொல்லுகிறேன். ஆசியான் விருது பெற்ற நேசக் கவிஞர் நம் இக்பால். தமிழுக்குத்
தரப்படும் தென்கிழக்காசிய விருது அது. பொன் எழுத்துக்களால் புதுப் புதுக் கவிதைகள்
செய்பவருக்குப் பொருத்தமான பரிசு என்ன? தங்கப் பேனாதானே? அந்தப் பரிசையும்
வென்றவர் இக்பால். அவர் பெற்ற பரிசுகளைச் சொல்ல ஆரம்பித்தால் அது சுவர் போல
நீண்டு செல்லும். சிங்கைத் தமிழ் கொண்டு எங்கள் நெஞ்சை நிறைத்தவரே வருக.
இளந்தமிழன் புகாரியை இனிய கவி கொண்டு வாழ்த்துக.

கவிஞர் க.து.மு.இக்பால், சிங்கப்பூர்
இனிய இணைய விழாவின் தலைவர் அவர்களே!
இந்த அற்புத, அற்புதமான பல கவிதைகளை அடக்கிய உங்கள் இதயம், உங்கள் நூலில்
தெரிகிறது.

எந்தக் கவிதை நூலையும் நான் முதல் பக்கத்தில் இருந்து வாசிக்கத் துவங்குவதில்லை.
கை திருப்பிய பக்கத்தில் கண் விழும்.உங்கள் நூலையும் அவ்வாறே திருப்பினேன். முதலில்
மின்னலடித்த கவிதை- "

ஐயா இது அமெரிக்கா ".அதன் முதல் கண்ணியே ஓர் அதிர்வை ஏற்படுத்துகிறது:

"கடன் அட்டை
இல்லாதான் வாழ்க்கை
கனவிலும் தைக்க இயலா ஓட்டை !"


எவ்வளவு பெரிய உண்மையைச் சொல்லிவிட்டது இந்தவரி! அமெரிக்காவில் மட்டுமா இந்த
நிலை...!

"அலாவுதீன் பூதம்
தன் முழுமொத்த சக்தியையும்
முறுக்கிக் கொண்டு
அப்போதே வந்து நிற்கும் நம் உத்தரவிற்கு .."
ரசித்தேன் !


கவிதைகளை ஒரே வாசிப்பில் புரிந்துகொள்ள முடியாது என்பார்கள்.நின்று நிதானமாக
அமைதியான சூழலில் படித்து அனுபவிக்க வேண்டிய கவிதைகள்! மீண்டும் உங்களுக்கு என்
இதயம் நிறைந்த நன்றிகளை தமிழ் உலகம் நடாத்தும் இவ்விழாவின் மூலம் கூறிக்
கொள்கிறேன்.

இயற்கைக் கவி

அன்புடன் இதயம் என்னும்
அருங்கவி மாலை கட்டி
இன்புற எமக்குத் தந்த
எழில்மிகு புகாரி நின்றன்

கன்னல்சேர் தமிழும் ஞானக்
கற்பனை வீச்சும் சோலைத்
தென்றலும் அருவிப் பாட்டும்
திங்களும் எமக்கொன் றாகும்

வித்தாரக் கவிகள் நூறு
விரைந்துநீ பாடு கின்றாய்
சத்தான வரிகள் தோறும்
சந்தங்கள் மீட்டு கின்றாய்

பத்தோடு பதினொன்றாகப்
பாவல உன்னை வையேன் !
முத்தாரக் கவிநீ எங்கள்
முன்னணிப் புலவன் அன்றோ

இன்றுபோல் கவிகள் பாடி
இதயங்கள் ஆள்க நீயே ;
ஒன்றுபோல் தலை நிமிர்ந்தே
ஒளிர்கஉன் சிந்த னைகள் ;

மன்றுளே புகழ்கு விக்கும்
மாணிக்கக் கவியே என்றும்
நன்றுநீ வாழ வல்லான்
நல்லருள் வேண்டுகின்றேன்


அன்புடன்
க.து.மு.இக்பால், சிங்கப்பூர்


சிங்கை பழனி ஆஸ்திரேலியாவிலிருந்து
அன்புமிகு நண்பர்களுக்கு,
ஓர் அவசர பணி காரணமாக கடந்த வாரம் சனிக்கிழமை ஆஸ்திரேலியா-மெல்பல்னுக்குச் செல்ல வேண்டியதாயிற்று. அடுத்த வாரம் வெள்ளிதான் சிங்கை திரும்புவேன். என் தம்பிகளில் ஒருவன், புலம் பெயர்ந்து வாழும் பிரிஸ்பேனுக்கு இன்று காலை வந்தேன். அங்கி ருந்துதான் முரசு அஞ்சலைக் கீழிறக்கு இம்மடலை அனுப்புகிறேன். சிங்கப்பூருக்கும் மெல்பனுக்கும் இடையே 3 மணி நேர வேறுபாடு. மெல்பர்னுக்கும் பிரிஸ்பேனுக்கும் இடையே 1 மணி நேர வேறுபாடு. உடல் இன்னும் இந்த நேர வேறுபாட்டிற்குச் சரி செய்து கொள்ளவில்லை.மேலும் பகலில் வெயில் இரவில் குளிர் எனும் வெப்ப தட்ப நிலை வேறுபாட்டையும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

தம்பி புகாரியின் கவிதைநூல் விழா, நண்பர் முகுந்தராஜின் இந்தியப் பயணத்தின் விளைவாக சன் டிவி செய்திப் பிரிவு நேர்காணல்(ஏற்பாடு செய்த நண்பர் மாலனுக்கு நன்றி-நண்பர் குமார் குமரப்பன் கேட்டுக்கொண்டுள்ளதுபோல சன் தொலைக்காட்சி செய்தியிலும் முகுந்துவின் நேர்காணலின் ஒரு சிறு பகுதியைக் காட்டினால் வெளிநாட்டுத் தமிழர்களும் அந்த இளைஞனைப் பார்க்க இயலும் அல்லவா?), நண்பர் இளங்கோவின் கண்ணீர்-தண்ணீராகுமா எனும் சுவாரசியமான கேள்வி ( poetic licence என்பது கவிஞர்களுக்காகவே ஏற்படுத்தப்பட்ட விதிவிலக்கு அல்லவா- நண்பர் இளங்கோ?) என பல அருமையான விஷயங்கள் விவாதிக்கப்படுவது குறித்து மிக்க மகிழ்ச்சி. தம்பி ஆல்பர்ட்டும் நண்பர் மணியமும் (மணியம் தம்பி புகாரியின் கவிதை நூல் பற்றி நல்ல விமர்சனத்தைத்
தந்துள்ளீர்கள்) இருக்கும்போது இன்னும் ஒரு மாதமாவது வெளிநாட்டில் தங்கலாம்தான்..ஆனால் வேலை என்று ஒன்று இருக்கிறது..இன்னும் பல பொறுப்புக்கள்.

சகோதரி கமலாதேவியின் தொலைபேசி அழைப்பு உலகம் சுற்றும் கைத்தொலைபேசி வழி கிடைத்தது. மெல்பர்னில் இருக்கும் பேராசிரியர் இராஜேந்திரனைக் கண்டு பேசி வருமாறு சொன்னார். அதே பேரைக் கொண்ட என் தம்பி வீட்டிற்கு இன்று காலை வந்து சேர்ந்ததுமே பேராசிரியர் ராஜேந்திரன் கைத்தொலைபேசியில் அழைத்தார். திங்கட்கிழமை மெல்பர்னுக்குத் திரும்பியதும் அவரைக் காணவேண்டும். வெளிநாட்டில் இருக்கும்போது தமிழில் பேசுவதும் தமிழரைக் காண்பதும் சுகம்தான்.
விரைவில் சந்திப்போம்.
அன்புடன்
பழனி
பிரிஸ்பேன்
குவீன்ஸ்லன்ட்
ஆஸ்திரேலியா

மருத்துவர் பிலிப், ஹாங்காங்
அன்பு தமிழ் உலக நெஞ்சங்களுக்கு,
நண்பர் கவிஞர் புகாரியின் கவிதை விழாவிற்கு காலம் தாழ்ந்து வந்ததாலும் கண்களும் விழியும்போன்ற கவின் மலர் கவிதைக¨ளைப் பற்றிய தங்கள் எண்ணங்களை வண்ணமாக்கி எழில்மிகு ஓவியங்கள் எழுந்துக் கொண்டிருப்பதை காணுவதில் பெரும் மகிழ்ச்சி. இதுவரை யாரும் செய்யாத புதுமையான ஒரு நிகழ்ச்சி- நிழல் வெளியில் நூல்வெளியீடு . அந்தப் புதுமை தமிழ் உலகத்தில் நடப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.இங்கு வந்துக் கொண்டிருக்கும் எழ்த்துக் குவியல்களைக் கண்டப் பின்னும் நானேதாவது எழுதினால் இரும்படிக்கிற இடத்தில் ஈக்கென்ன வேலையென்று எண்ணம் எழாமலில்லை.

ஒரு கவிதையில்

"நெஞ்சைப் பிசைந்து
உயிரைக் கரைக்கும் எழுத்தையும்
நெஞ்சாரப் பாராட்ட
நெஞ்சுகொள்ள மாட்டார் சிலர்"


என்று கவன்றிருந்தார் நண்பர். இங்கு வந்துக்கொண்டிருக்கும் கருத்துக் குவியல்கள் அவரது கவலைகளை மாற்றியிருக்கு மென்று நம்பலாமா? இனி கடை விரித்தேன் கொள்வாரில்லையென்று எண்ணவேண்டாம் நண்பரே. உங்கள் கவிதைகள் படிக்கப் படுகின்றன. அதனால் இனி எதிர் வினைகளைப பற்றி கவலுறாது எழுதிக் கொண்டிருங்கள்.

இந்த நிகழ்ச்சியில் இன்னொரு புதுமையென்னவென்றால் பார்க்க முடியாத பலரை காணமுடிந்ததுதான். பலமுறை இலண்டன் சென்றாலும் காணமுடியாத இலண்டன் சிவாவே இந்த விழாவிற்கு வந்திருக்கின்றாரென்றால்!!

புகாரியும் தமிழுலக அறிமுகம் இன்னும் என் மனதில் அப்படியே இருக்கிறது. அவரின் பெயரைப் பார்த்தவுடன் என்ன இப்படியுமொரு பெயர் உண்டோ என்று வியந்தேன் ஏனெனில் அதுவரை அது உணவகத்தின் பெயராக மட்டும் தான்தெரியும்:-)). அடுத்து சில கவிதைகள். அதைனையடுத்து ஒரு மடல் மனிதப் பிறவி எடுப்பதே கவிதைப் படிப்பதற்காகத்தான் எனற பொருள் பட எழுதியிருந்தார். என்ன விவகார மனிதராக இருப்பார்போலிருக்கிறதே. கொஞ்சம்விட்டால் கவிதைகளைக் கண்டால் காத தூரமோடும் என் போன்றோரெல்லாம் மனிதராக பிறகத் தகுதியில்லாதவர்களென்று கூறினாலும் கூறிவிடுவார் போலிருக்கிறதே என்று எண்ணினாலும் அதன் பிறகு வந்த மடகள் எண்ணத்தை முற்றிலும் மாற்றிவிட்டன. தன்னுடய தமிழ் உணர்வை பல் முறை தயங்காது வெளிப்படுத்தியுள்ளார். தகுதியான மடல்களைக் கண்டால் உடனே பாராட்ட தயங்கியதில்லை அதேபோல் அவரைப் பாராட்டி வரும் கடிதங்களுக்கு நன்றி கூற மறந்ததில்லை. மிக நல்லப் பண்பு நாமொவ்வொருவரும் -கண்டிப்பாக நான்!!- கடைப் பிடிக்க வேண்டியப் பண்பு... இன்னொரு நிக்ழ்ச்சி. பாவேந்தர் விழா தொடக்கம் பற்றிய அறிவிப்பு ஒரு நாள் இரவு வந்தது. மறுநாள் காலையில் பாவேந்தரை பற்றிய வைரக் கவிதை யன்று ஒளிவீசிக்கொண்டிருந்தது தமிழ்லுகத்தில். திருச்சி வானொலி நிலையத்தில் நடந்த பாரதியார் விழாவிற்கு தலையேற்ற பாவேந்த தன் கவிதையை விழவிற்கு ஒரு சில மணினேரங்களிலெழுதிய நிகழ்வுதான் என் நினைவிற்கு வந்தது..அலுவலுக்கு இடையே குறுகியக் காலத்த்ல் எழுதிய அவர்கவிதைத்திறத்தை பாராட்டாமல் இருக்கமுடியுமா?

கவிஞனுக்கு கருத்தூற்று மலையூற்றாய்ப் பெருக்கெடுக்க வேண்டும் என்பார் பாவேந்தர். இந்தக் கவிதனத்தை நம்புகாரியிடம் நிறைக்காணலாம். நம் பாவேந்தர் ஏடொன்று எடுக்க கவியன்று எழுதிடப் பணித்து எழுந்ததாம் வான். என் நினைவைவிட்டு அகலாத பாவேந்தரின் கவிதைகளில் அதுவொன்று., நம் புகரிக்கோ விழும் நயாகார விழ்ச்சிமட்டுமல்ல , கனடாவின் கடும்குளிரும் கூட கவிபுனையவைத்திருக்கிறன. நீர் குளிர் மட்டுமல்ல, தென்றலாய் வந்து காற்றையும், நெருப்பின் நெறுக்கத்தையும் பாடி ஊடே வானத்தையும் அளந்திருக்கிறார்.

காதலைக் கூறி, காதலியைப்பாடி, திருமணத்தைப் பற்றி புகழ்ந்து விட்டு கூடவே பிரிவுத்துயரையும் மறக்கவில்லை. வெளினாடு செல்லும் பலருக்கு அது பொதுவல்லவா?

பனி மலரே புது நிலவே
பருவமழை தேன் துளியே
தனிமரமாய் நின்று
தவிப்புடனே என்னை நோக்க

கனிவான உன் முகத்தைக்
கண்ணீரில் மூழ்கவிட்டு
வெண்ணீரில் விழும் புழுவாய்
வெளினாடுபுறப் பட்டேன்



போன்ற வரிகள் சிலரின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக வன்றோ அமைந்து விடுகின்றன.

தமிழரென்று கூறிக்கொள்பவர்களுக்கு தமிழ் மீது பற்று வேண்டும். தமிழைவைத்து ஏய்க்கும் கூட்டமும், தமிழைவிற்று வயிறு வளர்க்கும் கூட்டமும் பெருகுவரும் இந்நாளில் நல்ல தமிழ் பற்று உள்ளவர்களைக் காண்பதே அருகிவருகிறது. .தமிழில்' தன் கவிதைத் தொகுப்பைத் தொடங்கி


இதயத்தில் இனிக்கின்ற
மொழி-தமிழ்
மொழியினுள் துடிக்கின்ற
இதயம்


என்ற வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

'தமிழை மறப்பதோ தமிழா' வில் தன் தமிழ் பற்றை வெளிச்சம் போட்டு காட்டுகிறார்.


தமிழச்சியிடம்
தாய்ப்பால் பருகிப் பருகி
நிமிர்ந்த உன் முதுகெலும்பை
தாய் மொழிக்கன்றி
வேறெதற்கும் வளைக்கலாமோ
...
தாய்மொழி இழந்தவன்
தன் முகம் இழந்தவன்
தமிழ்ப் பற்று போனவனோ
தன் தலையற்றுப் போனவனன்றோ
...
நம்
மூச்சிலும் காற்றிலும்
கன்னித்தமிழ் மணம்
என்றும் வீசுதல் வேண்டாமோ

நம்
இரத்தக் குழாய்களிலும்
சுத்தத் தமிழெழுத்துகள்
வற்றாது ஓடுதல் கூடாதோ
.....
வா தமிழா
நல்ல தமிழில் நாம்
நாளெல்லாம் பேசுவோம்
வா


ஒவ்வொரு தமிழரும் நினைவில் நிறுத்த வேண்டியவை.

இன்னும் இதுபோன்ற பல கவிதைகளை அவரிடம் காணத்தான் போகிறோம்.

வாழ்த்துகள்,
அன்புடன், பிலிப், ஹாங்காங்

No comments: