உலகமுதல் இணையநூல் வெளியீடு 16


எழுத்தாளர் உஷா
பெரியவர்கள் நிறைந்த சபை, என்ன பேசுவது எப்படி பேசுவது என்ற பயத்தில் ஒதுங்கி நின்று சுகமாய் செவிக்குணவு கிடைத்துக் கொண்டிருக்கும்
போது என்னையும் பேச சொல்லி சகோதரர் ஆல்பர்ட் அவர்கள் மேடையேற்றிவிட்டார். தமிழில் அதிக பயிற்சியில்லாத எனக்கு கதையோ, கவிதையோ
எளிமையானவைதான் புரியும். திருகுறளும், பாரதியும் இன்றும்

நிலைத்து நிற்பதற்கு அதன் எளிமைதான் காரணம் என்பது எண்ணம். அதிக படிப்பறிவில்லாதவர்கள் கூட சர்வசாதாரணமாய் திருக்குறளை சொல்வதை
நாம் பார்த்திருப்போம். புகாரியின் கவிதைகளும் எனக்கு புரியும்படி எளிமையானவை. கண்களில் அருவியை நிறுத்து என்று தோழனுக்கு சொல்லும்
கவிதையை தோழி என்று மாற்றி படித்தேன். அத்தனையும் எனக்கு சொல்வதாகவேயிருந்தது. பல பெரியவர்கள், கற்றவர்கள், கவிஞர்கள்
வாழ்த்துவிட்டார்கள்.

இணைய நண்பர் கவிஞர் புகாரி இன்னும் பல நூறு கவிதைகள் படைத்து பேரும் புகழும் அடைய வாழ்த்தி இந்த பொன்னாடையை கவிஞர் புகாரிக்கு
அணிவித்து மகிழ்கின்றேன்.


எழில்நிலா மகேன் கனடா
வணக்கம் சபையோரே!
ஏற்புரையை கவி நடையில் மிக அற்புதமாக நிகழ்த்திக் கொண்டிருக்கும் கவிஞர் புகாரி அவர்களுக்கு, கனடிய மண்ணின் தமிழ் உலக அங்கத்தவர்கள்
சார்பாக இந்த மலர்மாலையை மாணிக்கமாலையாகச் சூட்டுகிறேன்.


அன்புடன் திரு, ஒட்டாவா, கனடா
> வானம் உடைக்கும் உளியோடு - இந்த
> வையம் பிளக்கும் வாளோடு
> யாரோ ஒருவன் வருகின்றான் - அவன்
> எழுதும் போதே வாழ்கின்றான்

கவிஞர் புகாரி அவர்களுக்கு இந்த மலர்மாலையை வைரமாலையாகச் சூடி அணிவிப்பதில் எங்கள் தமிழ் சங்கம் , ஒட்டாவா மிகவும் பெருமை
அடைகின்றது. வாழ்த்துகின்றோம்

மீனா, மலேசியா
அன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய எங்களின் கவிஞர் புகாரி! தங்களின் "அன்புடன் இதயம்" இதயத்தை விட்டு என்றும் நீங்காது எல்லாக் கவிதகளும்
ஒன்றுக்கொன்று சிறப்பாக இருக்க எதை பாராட்டுவது? எனக்கு மற்றவர்கள் போல் தனித்தனியாக பாராட்டத் தெரியாது அத்தனையும் அற்புதமாய்
இருக்கிறது அதில் என்னைக் கவர்ந்தது

'தமிழ்'

வைரமாக,எழுத்தாக,சுகமாக,வாசமாக,வானமாக,வளமாக, மழையாக,உணர்வாக,தாகமாக,இளமையாக,சிறகாக,கருணையாக, மானமாக,புனிதமாக
எத்தனை விதமாக அந்தத்தாயை பார்க்கிறீர்கள்! பிரமித்துப் போய்விட்டேன்!

"வேங்கூவர் கனடா"

பார்க்காத கனடாவைப் பார்க்க வைத்தது!

அம்மாவந்தாள் அருமை!

குடியரசுத்தலைவர் குறித்த கவிதை! ஆம் அவர் நமக்குக் கிடைத்த பொக்கிஷம்!

எழுதக் கூடாத கடிதம் எல்லோர் மனதிலும் இப்படி ஒரு கடிதம் இருக்குமோ

என்னை பாதித்தது கவியரசனே கண்ணதாசனே.
இவரின் ஊரில் (உறவினராக) பிறந்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன் இவரைப் பற்றி எழுதிய இக்கவிதை எனக்கு கண்ணீரை வரவழைத்தது

அன்புடன் இதயம்

ஆஹா அன்பே நீ என் உடன் வருவாயா!
எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தார் போல்!!

எப்பொழுதும் இதுபோல் கவிதைகளை வாரி வழங்க ஆண்டவன் அருள் உங்களுக்குக் கிடைக்க வேண்டி வாழ்த்தி இந்தப் பொன்னாடையைப்
போர்த்துகிறேன்.
வணக்கம். நன்றி.
மீனா., மலேசியா


சிங்கை கலைமணி
அவையோருக்கு என் வணக்கங்கள். எனக்கும் கவிதைக்கும் விண்ணுக்கும் மண்னுக்கும் உள்ள தூரம். ஆனால் கவிஞர் புகாரியின் - அன்புள்ள
இதயம் - படித்தபின்னும், இங்கு இந்த நிகழ்ச்சியில் பேசிய பெரியோர், சான்றோரின் உரையைக் கேட்டபின் எனக்கும் கவிதைமீது ஒரு காதல்
வந்துவிட்டது. இது காதலர்தினத்தின் தாக்கமா அல்லது மொழியின்மேல் எனக்கு ஏற்பட்ட காதலா !

நான் கவிஞனும் இல்லை
நல்ல ரசிகனும் இல்லை

என கண்ணதாசன் பாடிச்சென்றார் அனால் நானோ - நான் கவிஞன் இல்லை அனால் நல்ல ரசிகன் மட்டும் இல்லாமல் ஆஸ்தான கவிஞர் புகாரிக்கு
இன்று இந்த பொன்னாடையை, வைர வைடூரிய இழைகளால் நெய்யப்பட்ட இவ்வாடையை போர்த்துவதில் பெரு மகிழ்வெய்துகின்றேன். இந்த வாய்பை
அளித்த தமிழ் உலக அன்பர்களுக்கு எனது
நன்றி
கலைமணி


எழில் நிலா மகேன் கனடா
இந்த இணையவெளிப் பந்தலில் குழுமியிருக்கும் என் இனிய நண்பர்களே! அனைவருக்கும் வணக்கம்!

ஆறு வருடங்களுக்கும் மேலாக இந்த இணையவெளியில் மின்னஞ்சல் மூலமாகவும் வலைத்தளங்கள் வாயிலாகவும் சந்தித்த இதயங்கள் பலநூறு.

இதில் மறந்துபோனவர்கள், மறைந்துபோனவர்கள், விலகிப்போனவர்கள் என்று பார்க்கும்போது எஞ்சியிருப்பவர்கள் சிலநூறு.

அந்தச் சில நூறு இதயங்களில் இந்த "அன்புடன் இதயம்" புகாரியும் ஒருவர். இவர் எனக்கு அறிமுகமானதே கவிதை மூலம்தான்.

புகாரி எழுதிய கவிதைகள் பலவற்றை நான் வாசித்திருக்கின்றேன். நான் வாசிக்காமல் விட்ட கவிதைகள் என்றால் அவை நீ....ள...மான கவிதைகளாக
ஒருவேளை இருந்திருக்கலாம். (நண்பர் புகாரி மன்னிக்கவும்)

அவரின் கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்தது என்று சொல்வதானால் "உலகம்" என்ற கவிதையாகும். இதுதான் நான் வாசித்த அவரின் முதல்
கவிதை.

அக்கவிதையை நான் முதலில் வாசித்தபோது எனது மனதில் சிறிது தாக்கத்தை ஏற்படுத்தியது அந்தக் கவிதை. என்னைச் சற்றுச் சிந்திக்க வைத்தது.
அப்போதே அக்கவிதையை எடுத்து எழில் நிலாவில் "எனக்குப் பிடித்த கவிதைகள்" பகுதியில் சேர்த்துக்கொண்டேன்.

இப்போதும் சில சமயங்களில் அக்கவிதைப் பக்கத்திற்கு போய் அதனைப் படித்துப் பார்ப்பேன்.

என்னைப்பொறுத்தவரை கவிதை என்பது அதனை வாசிக்கும் ஒருவர் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். மீண்டும் ஒருமுறை அதனை
வாசிக்கத்தூண்ட வேண்டும்.

இதனை நண்பர் புகாரியின் கவிதைகள் செய்யத்தவறவில்லை.

உதாரணத்திற்கு அன்புடன் இதயம் தொகுப்பிலிருந்து சில கவிதை வரிகள்..

"கலவரம்
அது இங்கே தினம் வரும்

அது வரும்போதெல்லாம்
வெறுமனே நிற்கும்
சிலைகளின் உயிரும் பிடுங்கப்படும்"

*

"ஓர்
உயிரைக் கருக்கொள்ள
பலகோடி உயிரணுக்களைக்
கணக்கின்றி
செலவிடுகிறான் ஆண்

ஒற்றைக் கருமுட்டையோடு
சிக்கனமாய் நிற்கிறாள்
பெண்

ஆக,
ஊதாரிதானே ஆண் "

*

"தமிழச்சியிடம்
தாய்ப்பால் பருகிப் பருகி
நிமிர்ந்த உன் முதுகெலும்பை
தாய்மொழிக்கன்றி
வேறெதற்கும் வளைக்கலாமோ"

*

"ஞானத்
தாமரை ஒன்று
மண்ணின் இரைப்பையில்
ஜீரணிக்கப்பட்டுவிட்டது

வேதனை நெஞ்சங்களை
வருடிக் கொடுக்கும்
ஒரு
மகத்தான கவிமலர்க்கரம்
தீக்கரங்களுடன்
கை குலுக்கிக் கொண்டுவிட்டது "

ம்.. சிந்திக்க வைக்கும் சிறப்பான வரிகள்..

அவரின் 'அன்புடன் இதயம்' கவிதைகளை இங்கு பல நண்பர்கள் மதிப்புரை செய்திருந்தனர். பல கவிதைகள் அக்கு வேறு ஆணி வேறாகப்
பிரிக்கப்பட்டு விமர்சனம் செய்யப்பட்டன. எனவே அதனை நானும் செய்யாமல் அவரிடம் ஒரு அன்பான வேண்டுகோள்!

சாதி, மதம், மொழி, இனம் என்பனவற்றிலான சகல வன்முறைகளும் ஒழிய, சகல வழிகளிலுமான அடக்குமுறை அழிந்து போக, யுத்தமில்லாத பூமி
வேண்டி நிறையக் கவிதைகள் பாடுங்கள்! நண்பரே!! நிறையக் கவிதைகள் பாடுங்கள்!

நண்பர் புகாரியின் கவித்திறன் மேன்மேலும் வளர மனதார வாழ்த்துவதுடன் இந்த இணையவெளி கவிதா நூல் வெளியீட்டு விழாவை ஒழுங்கு செய்த
அனைத்து இதயங்களையும் அன்புடன் வாழ்த்திக்கொண்டு, தமிழ் உலக மடலாடற்குழு சார்பில் இந்த பொற்கிழியை கவிஞர் புகாரிக்கு வழங்கி
அவரைக் கௌரவிக்கின்றேன்.

அட, எங்கே இந்த பொற்கிழி என்று கேட்கின்றீர்களா?

"அன்புடன் இதயம்" என்ற இந்த கவிதைத் தொகுப்பு என்றுமே இணையவெளியில் இருப்பதற்காகவென ஒரு தனி வலைப்பக்கத்தை உருவாக்கி
ஏற்றியுள்ளேன். இதுதான் நான் அவரிற்கு "தமிழ் உலகம் மடலாடற் குழு" சார்பில் அளிக்கும் பொற்கிழி.

இத்தளத்தில் மிக விரைவில் இந்த இணையவெளி கவிதா நூல் வெளியீட்டு விழாவில் இடம்பெற்ற அனைத்து உரைகளும் தொகுத்து வெளியிடப்படும்.

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும் நண்பர் புகாரி அவர்களே!


புத்தம் புதிதாகப்
....பிறக்க வேண்டும்

நித்தம் விடிவானில்
....பறக்க வேண்டும்

செத்த விலங்கோடும்
....அன்பு வேண்டும்

சித்தம் கலையாத
....பண்பு வேண்டும்

புத்தம் மறவாத
....புனிதம் வேண்டும்

ரத்தம் பழகாத
....மனிதம் வேண்டும்

சத்தம் வெல்லாத
....அமைதி வேண்டும்

யுத்தம் இல்லாத
....பூமி வேண்டும்


இவையும் புகாரியின் கவிதை வரிகள்தான்!

என் அன்பு வேண்டுகோளின்பேரில் "எழில் நிலா"விற்காக எழுதப்பட்ட கவிதை இது.

நன்றி. வணக்கம்,

அன்புடன்,
எழில் நிலா மகேன்.


தமிழ் உலக மட்டுறுத்துனர்கள் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள்.
அன்பினிய தமிழ் நெஞ்சங்களே!
இந்த இனிய விழாவின் நிழல்வெளி மேடையில் அமர்ந்திருக்கும் நிஜத் தலைவர் மாலன் அவர்களே,
முன்னிலை வகித்த லண்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் அய்யா சிவா பிள்ளை அவர்களே,
கவிஞர் புகாரி அவர்களே, சகோதர குழுக்களிலிருந்து விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்துக் கொண்டிருக்கும் நண்பர்களே,
அரபிக்கடலளவு அன்பும், பசிபிக் கடலளவு பாசம் நிறைந்த தமிழ் உலக அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் வணக்கங்கள்!

உங்களை எல்லாம் என் மனக்கண் முன் நிறுத்திப் பார்க்கும்போது,

வெள்ளத்தின் பெருக்கைப் போற்
கலைப் பெருக்கும் **கவிப்பெருக்கும்** மேவுமாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்.............."

என்கிற பாடல்வரிகள் என் நெஞ்சில் விம்மிப் புடைத்து எழுகிறது. வாழ்கின்ற காலத்தில் ஒருவனின் திறமைகளைப் போற்றி வரவேற்க மனமில்லாதது
மனித மனம்! குறிப்பாக, சக கவிஞர்கள் எழுத்தாளர்களின் வெற்றியை அங்கீகரிக்காதவர்கள் உலகமாக உள்ள இந்தக் காலக்கட்டத்தில் கூட, மனம்
திறந்து வாழ்த்த முன்வந்த கவிஞர்கள், எழுத்தாளர்கள் ஏனைய பிற அறிஞர் பெருமக்களையும் அவர்கள் இருக்கும் திக்கு நோக்கி வணங்குகிறேன்.
இன்றைக்கு எல்லோருடைய பாராட்டையும் பெற்ற கவிஞராக புகாரி திகழ்கிறார். மோசமான கவிதைகள், மனித குல சமுதாயத்திற்குப் பயன்படாத
கவிதைகள் நிலைத்து நிற்காது.

கவிஞர் புகாரியின் கவிதைகள் காலத்துக்கும் நிலைத்து நிற்கக்கூடியது. பட்டுமெத்தையில் படுத்துறங்கி மதுக்கோப்பையில் கண்விழிக்கிற
கவிஞர்களுக்கு நடுவே, சமுதாய கருத்துக்களைப் பரப்புவதே சகல சுகம் என்று நினைக்கின்ற நேசக் கவிஞர் அவர்! சகமனிதர்களின் தோள்களிலும்
தோழமையோடு கைபோட்டுப் பேசும் உரிமை புகாரியின் கவிதைகளுக்குண்டு!

வாழ்க்கையில் விட்டுக்கொடு விட்டுநீ கொடுக்கும் போது விண்தொட்டு வளரும் இன்பம் கொட்டியே கிடக்கும் எங்கும் - தோழா எட்டியே நடக்கும்
துன்பம்..........................................இந்தத் தோழமையைப் பார்த்தீர்களா?

எந்த ஆமை வேண்டுமானாலும் இருக்கலாம்; இந்த ஆமைமட்டும் இருக்கக்கூடாது என்பதை எவ்வளவு நயம்பட தோளில் கைபோட்டுப் பக்குவமாகப்
பகர்கிறார் பாருங்கள்!

பொறாமை முற்றும் இல்லா
தோழமை தேடிச் சேரும்
நல்லதோர் நட்பினில்தானே
உள்ளத்தின் துன்பம் தீரும் - தோழா
கவலைகள் தீயில் வேகும்.."

வாழ்க்கையை நொடிப்பொழுதில் மூர்க்கத் தனமாய் முடிக்கத் துடிக்கும் முரடனைக்கூட அரவணைத்துச் சொல்லுகிற அசாதாரண அன்பைப் பாருங்கள்!
சொல்லும் எளிமை; அதில் பட்டுத் தெறிக்கும் இனிமை பாருங்கள்;

சாவதா வாழ்க்கை
வாழ்வதன்றோ வாழ்க்கை
வீசியெறிந்த விதை
விழுந்த இடம் முளைக்கும்
வெட்டிச் சரிந்த கிளை
தரை தொட்டதும் துளிர்க்கும்
உலகின் உயிர்கள் வாழ்வதற்கே
அதை
உணர்த்தும் இயற்கையை
உற்றுப் பார் சகோதரா..."

வெட்டரிவாள் சகிதமாக வெட்டிச் சாய்க்கும் கொம்பன் கூட இந்தக்கவிதையை ஒருமுறை வாசித்துப் பார்த்தால் வசிக்கவே தோன்றும், அவனுக்கும்!

குனிந்து நடக்கத் தெரியாமல் முட்டிக்கொண்ட பிறகு குனிகின்ற வர்க்கம் இங்கே! கண் கெட்ட பிறகே சூரிய நமஸ்காரம் செய்து பழக்கப்பட்ட
நம்மவர்களுக்கு நாசூக்காய் நாலுவரியில் எதார்த்தமாய்ப் புரியவைக்கும் பாங்குதனைப் பார்க்கின்றேன்.

கழுத்தில் தொங்கிய
தங்கச் சங்கிலியைக்
காணவில்லை நேற்றுமுதல்
ஓர்
அனாதை ஆசிரமத்திற்கு
வழங்கியிருக்கலாம்
மனம்
எவ்வளவு நிறைவாய்
இருந்திருக்கும்..."

கவிஞர் புகாரியின் ஆழ்ந்த சிந்தனை! அழுத்தமான சொல்லாட்சி!

தமிழைப் பற்றிக் கவிதையாத்திருக்கிறார். ஒருவரிக்கு மறுவரி உயிர் கொடுக்குந் தன்மை அவர் கவிதையில் மிளிரக் காண்கிறேன்!

இதயத்தில் இனிக்கின்ற
மொழி - தமிழ்
மொழியினுள் துடிக்கின்ற
இதயம்........................................"

இந்தக் கவிதையைப் படிக்கும்போது சில்லென்ற நதி நனைப்பு திடீரென தேகத்துக்கு வந்துவிடுகிறது!

அழிவில் வாழ்வா? என்ற தலைப்பில் கலவரம் குறித்துக் கலவரத்தோடு எழுதும்போது இவன் நிலாக் கவிஞன் இல்லை; சூரியக் கவியாக
உருவெடுக்கிறான்!

கலவரம்
அது இங்கே தினம் வரும்
அது வரும்போதெல்லாம்
வெறுமனே நிற்கும்
சிலைகளின் உயிரும் பிடுங்கப்படும்

O

தவறொன்றும் செய்யாமலேயே
தரையோடு தரையாக
இரத்தச் சகதியாய்ச்
சிதைந்து கிடக்கும் சகோதரா.......

புல்லின் ஒரு இதழைக் கூட மயில் தோகையாய் ஸ்பரிசித்துப் பார்க்க முடிந்தவர்களுக்கு மட்டுமே இப்படி எழுதுவது வசப்படும்! நீ! மனித ஜாதியை
நேசத்தோடு பார்க்கும் பாசக் கவிஞன்!

உன் கவிதைகளை என் மனம் உரக்க வாசிக்கும்போது
நினைவு மேகங்கள் கூட்டம்கூட்டமாய்
எனக்குள் கடந்து கொண்டிருக்கிறது.

உன் கவிதைகள்
என் புலன்களைப் பூக்கவைத்திருக்கிறது~!
உன் கவிதைப் பறவை
என் வானத்தில் பறந்து போகும்போது
என் மீது அதன் நிழல் படிகிறதே!
அந்த நிழல் பட்டு மூலிகை வெளிச்சமாய்
மனம் மலருகிறதே!


கவிஞர்கள் சகோதரர் புகாரியின் கவிதையை அக்குவேறு ஆணிவேறாக அலசி இங்கே சொல்லிவிட்ட பிறகு நானும் அவர்களுடன் போட்டி
போட்டுக்கொண்டு சொல்லப் போவதில்லை;

எமக்குத் தொழில் கவிதை!
நாட்டுக்கு உழைத்தல்!
இமைப்பொழுதும் சோராதிருத்தல்

என்ற மாகவியின் வாரிசாக நான் புகாரியை இங்கே பார்க்கிறேன். இவன் விருதுகளுக்காக சோரம் போகாதவன்! காசுக்காக சிறகுவிரிக்காத
கவிக்குயில்!

கல்லை நொறுக்குமொரு வலுவிருக்கும் - அந்தக்
கவியுளத்தில் ஆவேசம் கொலுவிருக்கும்!
வில்லிலிருந்து ஒரு கணை பறக்கும் - அந்த
வேகத்திலே அதில் கனல் தெறிக்கும்...

என்ற ஜெயகாந்தன் எப்போதோ, எதற்கோ எழுதிய பாடல்வரிகள் நம் நேசக் கவிஞர் புகாரிக்குப் பொருந்தும்!

எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும் - ஏழை
கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும் !
பண்ணோடு சந்தமும் வரும் - பழைய
மண்ணின் வாடையும் சேர்ந்து வரும்!

என்ற அந்தப் பாடல் வரிகள் ஏனோ நம் கவிஞருக்காகவே எழுதியதாக என் மனதில் தோன்றுகிறது.

எல்லோரும் உங்களை... இதயத்தை அலசிவிட்டதால் எனக்கென்று மிச்சம் வைக்கவில்லை. சந்தர்ப்பம் வாய்க்கும் போது பிறிதொரு முறை
செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு உங்கள் ஏற்புரையில் தமிழ் உலகு குறித்து எழுதிய

தமிழுலகே தமிழுலகே வா வா -
என்ற கவிதையை தமிழுலக தேசிய கீதமாக நாங்கள் ஏற்கிறோம்!

கடந்த ஆண்டு இதே நாளில் பேருவகை முகத்தில் பூக்க கவிஞர் புகாரி நம்மிடையே வலம் வந்தார்; அந்தப் புன்னகை இன்று பன்மடங்காகக் கூடி
இருக்கிறது; கடந்த ஆண்டு தமிழ் உலக ஆஸ்தானக் கவிஞராக அறிவிக்கப்பட்டார்; இன்று "அன்புடன் இதயம்" ஞானப்பழத்துடன் இணைய உலகையே
வலம்வந்து கொண்டிருக்கிறாரே!

இணைய உலகில் முதல், உலக மொழிகளில் முதல், தமிழ் நூல்களில் முதல் என்று முதல் விழாவாக கடந்த ஒருவாரகாலம் இரவுபகலாக
நடைபெற்றுள்ளது. இணையத்திலேயே ஒரு மாநாடு போல நடந்து முடிந்திருக்கிறது.

இந்த விழா மாலன் அவர்கள் குறிப்பிட்டது போல,

இந்திய மொழிகளில் எந்த மொழிக்கும்
இந்தப் பெருமை இதுவரை சொந்தமில்லை.
அயல் மொழிகள் முயல்வதற்குள்
ஆரம்பித்து விட்டோம் நாம்.
தமிழ் என்பதாலே வாய்த்தது இந்தத் தகமை.
சென்ற தலைமுறைக்கு இந்தச் சிறப்பு இல்லை.
அடுத்த தலைமுறைக்கு இதை நாம்
அனுமதிக்கப் போவதில்லை.
கணினியும் காலமும் நம் கைகளில் தந்ததிது.
இப்போது சொல்லுங்கள்,
இது பொற்கணமா இல்லையா?
பூபாளம் இசைக்கின்ற புது விடியல் பொழுதல்லவா?"

என்ற வரிகளை நான் இங்கு அடிக்கோடிட்டுக் காட்ட விரும்புகின்றேன்.

மாலன் அவர்களை தொடர்புகொண்டு கேட்டபோது உடனடியாக, இது மகிழ்ச்சிக்குரிய குடும்பக் கடமை அல்லவா! நிச்சயம் பங்கேற்கிறேன், என்று
சொல்லி உடனடியாக ஒப்புதல் தர இரவோடிரவாக எல்லோருக்கும் மடலனுப்பி அவர்கள் ஒப்புதலையும் மறுநாளே பெற்று அழைப்பிதழ் தயாராகி
இதுதான் என்றபோது ஒரு அணுகுண்டு வெடித்தது! அண்ணன் பழனி அவர்கள் அவசரமாக ஆஸ்திரேலியா செல்லவேண்டிய நிர்ப்பந்தம்! எனக்கு
வலதுகரமாக இருந்த அவர் என்ன செய்வது தம்பி நான் பிப்.20ம்தேதி தான் திரும்ப முடியும்;

சமாளியுங்கள் என்று கூறிப் பறந்துவிட்டார். என் மனம் அவருக்குச் சங்கடத்தோடு விடைகொடுத்தது. அங்கிருந்து எப்படியும் நான் தொடர்புகொள்வேன்
என்றார். என்ன சூழலோ விழா முடியும் வரை அவரால் இதில் பங்கேற்க இயலாது போனது ஒரு வருத்தமான விசயம்தான்! நானோ, இரவுப் பணி
புரிபவன்! இரவுப் பணி செய்துவிட்டு உறக்கம் தொலைத்து கணினியோடு..உங்களோடு இந்த விழாவில் அய்க்கியப்படுத்திக் கொண்டு செயல்பட்டேன்;
இடையில் உடல்நலம் கெட்ட்து; சளி,காய்ச்சல், இருமல் என்று வாட்டியது;

சங்கமம் ஆசிரியர் அண்ணா, இதழ் வேலை அப்படியே கிடக்கிறது என்று அவர் ஒரு பக்கம் இடிக்க; உடம்பு கெட்டுப் போகும் ஓய்வெடுங்கள் என்று
எங்கள் வீட்டிலும் போர்க்கொடி; இதனால் சில விசயங்கள் எதிர்பார்த்தபடி செய்ய முடியாமற் போனது; அதனால் சிலரின் பங்களிப்பு பெறமுடியாதும்
போனது.

தமிழ் உலக விழாவில் பங்கெடுத்துச் சிறப்பிக்க ஆர்வத்தோடு கலந்து சிறப்பித்துத் தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்கள் சார்பாக கைகூப்புகள்!
உங்கள் கரமலர் ஒற்றி எம் நன்றியை காணிக்கையாக்குகிறோம்.

இந்த விழா ஒரு முடிவல்ல;
ஒரு தொடக்கம்தான்.
நன்றி. வணக்கம்.

அன்புடன்,
ஆல்பர்ட்,
பழனி,
மணியம்,
தமிழ் உலக மட்டுறுத்துனர்கள்
மற்றும்
விழா ஏற்பாட்டாளர்கள்.

கவிஞர் சிங்கை நம்பி
விழாக்குழுவின் சார்பில் கவிஞர் நம்பி நன்றியுரை நிகழ்த்துவார்- மணியம்

தமிழ் உலக மேடைபோட்டு
தரணி எங்கும் பந்தல் போட்டு
இணையத்தில் நடக்குது விழா
நினைவெல்லாம் நிறையுது அவா
சந்திரனை பிடித்து வைத்து
சூரியனை உதிக்க வைத்து
வின்மீனை ஒட்டி வைத்து
விழாக்கோலம் பூண்டிருக்கு
புன்முறுவலோடு தலைமை ஏற்ற
மாலனுக்கு சிறப்பு நன்றி.
வாழ்த்துரைத்த சான்றோர்க்கு
உளங்கனிந்த அன்பு நன்றி
ஓடியாடி உழைத்திட்ட
தமிழுலக மக்களுக்கு அன்பு நன்றி
வந்திருந்து சிறப்பித்த மக்களுக்கு
வாயார நன்றி சொல்லி
விடை பெறுகிறேன்.

சிங்கை மணியம்
அன்பினிய தமிழ் உலக நண்பர்களே!
வணக்கம்.
பழனி அவர்கள் இருந்து ஆற்ற வேண்டிய நன்றியுரையை நான் நிகழ்த்தவேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

தமிழ் உலக இணையவெளிப் பந்தலில், இணையத்தில் முதல் கவிதை நூல் வெளியீட்டு விழா! வெகுவிமரிசையாக கடந்த ஒருவாரமாக இரவும்
பகலும், பகலும் இரவுமாக நடந்து ஒரு புதிய வரலாறைப் படைத்திருக்கிறோம்.

இந்த முதல் விழா, நமது ஆஸ்தானக் கவிஞருக்கே விழா எடுத்ததும் மிகப் பெருமையான ஒன்று என்பதில் எள்ளளவும் அய்யமில்லை. உலகெங்கும்
இந்த விழாவை விழிகளில் நிறைத்துப் பார்த்தார்கள்; பரவசப்பட்டார்கள். வியந்தார்கள்;

இந்த வாய்ப்பு எனக்கு கிடைக்காமல் போய்விட்டதே என்று கூட சிலர் எங்களுக்குத் தூது விட்டனர். அவர்களுக்கும் உரிய நேரத்தில் விழா எடுக்க
தமிழ் உலகம் முன்வரும் என்று மட்டும் இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

இந்த இனிய விழாவிற்கு பல்வேறு பணிப்பளுவிற்கும் இடையே தலைமைதாங்கி சிறப்பாக நடத்தித் தந்த மாலன் அவர்களுக்கும், முன்னிலை வகித்த
நண்பர் லண்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் சிவா பிள்ளை அவர்களுக்கும், வாழ்த்துரை நல்கிய மும்பைக் கவிஞர்.மாதவி, கவிமாமணி.இலந்தை
இராமசாமி, கவிஞர்.சேவியர்,கவிஞர்.கற்பகம், கவிஞர் ஆசாத், கவிஞர்.சாபு, கவிஞர்.முத்துநிலவன், அய்யா இராமகி, எழுத்தாளர்.ஜெயந்தி சங்கர்
ஆகியோருக்கும்,
விழாவிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய கவிக்கோ.அப்துல்ரகுமான், கவிஞர்.இக்பால், கவிஞர்.யோகியார் வேதம் மற்றும் ரங்கராஜன் மற்றும் விழாவில்
சிறப்பு விருந்தினர்களாக உரைநிகழ்த்திய முனைவர் அனந்தநாராயணன், முனைவர்.பசுபதி, கவிஞர்.மதுமிதா,எழுத்தாளர்.பிரகாஷ், ஆசிப் மீரான்,
மரு.சுவாமிநாதன், நாக.இளங்கோவன் மற்றும் விழாவிற்கு உறுதுணையாக இருந்து விழாவைத் திறம்பட நடத்திச் சென்ற விழாக்குழு உறுப்பினர்கள்
இராமசந்திரன் உஷா, பாரத், அன்பு, பாண்டியன், கவிஞர் நம்பி ஆகியோருக்கும்,

பொற்கிழி வழங்கி புகாரியைக் கெளரவித்த எழில் நிலா மகேன் ஆகியோருக்கும் இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு
அவசரப் பயணமாக ஆஸ்திரேலியா சென்ற மட்டுறுத்துனர் பழனி, விழாவினை ஒருங்கிணைத்து என்னோடு நடத்திய மட்டுறுத்துனர் ஆல்பர்ட்
ஆகியோருக்கும் விழாவில் வாழ்த்துச் செய்திகளை வாசித்தளித்த கவிஞர்.உதய செல்வி ஆகியோருக்கும் விழாவில் பங்கு கொண்டு சிறப்பித்த வாசன்
பிள்ளை, குமார் குமரப்பன், புஸ்பா கிறிஸ்றி, கலைமணி, ஆங்காங் மரு.பிலிப், கீதா மற்றும் தமிழ் உலக உறுப்பினர்களுக்கும்

இன்னும் பெயர் குறிப்பிடமால் ஒத்துழைத்த அனைவருக்கும் தமிழ் உலகம் சார்பிலும் ஏற்புரை நிகழ்த்திய அன்புக் கவிஞர்.புகாரி அவர்களுக்கும்
(பெயர்கள் ஏதும் விடுபட்டிருந்தால் அருள் கூர்ந்து மன்னிக்கவும்),விழாவில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பலகுரல் மன்னனாக வந்து விழாவை
கலகலக்க வைத்த இளைஞருக்கும். நன்றியை தெரிவித்து விடைபெறுகிறேன்.

நன்றி.
வணக்கம்.
மணியம்


துபாய் பாரத்
இணையம் என்னும் அரங்கில் அன்புடன் இதயம் நூல் வெளியீட்டு விழாவிற்கு இணைந்த என் தமிழ் இதயங்களுக்கு முதல் வணக்கம்.

அமீரகத்தில் இருந்து வரவேற்புரையாற்றி அமர்ந்திருக்கும் என் உடன்பிறவா சகோதரன் அன்பு அவர்களுக்கும்

தலைமை தாங்கி இவ்விழாவை சிறப்பாக நடத்தித் தந்த அன்பிற்கினிய அண்ணன் திரு. மாலன் அவர்களுக்கும்

தாயகத்திலிருந்து வந்து இந்நூலை வெளியீட்டு சிறப்புரை ஆற்றிய என் அன்புச்சகோதரி புதிய மாதவிக்கும்,

கவிஞனை வாழ்த்த பல திசைகளிலிருந்து வந்து வாழ்த்துக் கவிகளை தூவி விட்டுச் சென்ற கவிஞர் பெருமக்களுக்கும்

இவ்விழாவிற்காக தன் குடும்பங்களோடு வந்து விழாவை சிறப்பித்த எனது சொந்தக்கார்களாகிய உங்கள் அனைவருக்கும் இவ்விழாக்குழுவின் சார்பாக
நெஞ்சார்ந்த நன்றியினை இந்நேரத்தில் சமர்ப்பிக்கின்றேன்.

என் அன்புச் சகோதரன் புகாரி அவர்களை இந்த தமிழ் சமுதாயமே வாழ்த்தும் போது ஓரத்தில் நின்று என் கண்களில் வந்த ஆனந்த கண்ணீரை அடக்க
முடியாமல்....

தோளோடு தோள் நின்று இவ்விழாவினைச் சிறப்பாக நடத்த இரவு, பகல் பாராது உழைத்த எல்லா நண்பர்களுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!

அன்பு
அன்பு நண்பர்களுக்கு
முதன் முறையாக இணையதளத்திலே ஒரு புத்தக வெளியீட்டு விழா.... இவ்விழாவிற்கு இங்கு கடல் அலையென திரண்டிருக்கும் தமிழ் நெஞ்சங்களே,
அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்.

உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் தமிழ் விழா, தமிழன் விழா என்ற எண்ணத்தோடு ஒவ்வொருவரும் அவரவர்க்குரிய பங்கினை சிறப்புற
செய்ததால்தான் இந்த 'அன்புடன் இதயம்' நூல் வெளியீட்டு விழா இத்தகைய வெற்றியினை பெற்றுள்ளது என்பதில் எவருக்கும் மாற்று கருத்து
இருக்காது.

மணிமகுடத்தில் பதித்த வைரமாய் அத்துனை அலுவல்களுக்கு மத்தியிலும் தமிழின்பால் கொண்டுள்ள பாசத்தின் பாங்கினை வெளிப்படுத்த நல்ல ஒரு
தருணம் என்றெண்ணி இவ்விழாவினை தலைமையேற்று அழகுற நடத்தி தந்த மாலன், அன்புடன் இதயத்தை வெளியிட்டு அழகு தமிழிலில்
வாழ்த்துரை வழங்கிய மாதவி, முன்னிலை வகித்து விழாவினை முன்னிற்கு இட்டுசென்ற பேராசிரியர் சிவாபிள்ளை போன்ற சான்றோர்களுக்கு
இவ்விழா வெற்றியினை நன்றியாக விழாக்குழுவினரின் சார்பிலும் கவிஞர் புகாரி அவர்களின் சார்பிலும் சமர்பிக்கிறேன்.

இந்த இனிய விழாவிற்கு எதிர்பராத விருந்தினராய் வந்து நம்மையெல்லாம் அழையா விருந்தாளியாக வந்தாலும் அனைவரது மனதிலும் அழுத்தமாக
இடம்பெற்று புயல் என்றாலும் தென்றலாய் வருடிச்சென்ற வைகோ அவர்களுக்கும், ஒப்பற்ற வரிகளால் மட்டுமின்றி அன்புடன் இதயத்தின் ஒவ்வொரு
வரிகளையும் தாலாட்டி சென்ற இளங்கோ, சாபு, மணியன், இளங்கவி ஆசாத், ஜெயந்தி, கற்பகம், முத்து நிலவன், மதுமிதா, கீதா, எழில் நிலா மகேன்,
குமார் குமரப்பன், வாசன் பிள்ளை, ஐயா ஞானவெட்டியான், நம்பி, குடும்பத்துயரிலும் விழாவில் கலந்து கொண்ட பிரகா0, ஆசீப்மீரான்,தோழர் தியாகு
இன்னும் எண்ணற்ற கவியுள்ளங்களுக்கு எவ்விதம் நன்றி நவில்வது? ஒவ்வொருவருமே அவரவர் வீட்டு நிகழ்வாக இதை எண்ணியதால் வந்த
குழப்பம்தான் இது? இருப்பினும் அந்த அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் விழாக்குழுவினரின் மனமார்ந்த நன்றிகள்.

இதெல்லாம் இருக்கட்டும் இப்படி ஒரு விழாவினை வெற்றியடைய செய்ய வேண்டுமெனில் ஓடியாடி உழைத்த நல்ல உள்ளங்கள் இருக்குமல்லவா?
ஆம் பாரத், பாண்டியன் .போன்ற உழைத்த களைத்த உள்ளங்களுக்கும் எங்களின் நன்றிகள்.

கோவில் என்றால் மூலவர் இல்லாமலா? இணைய தளத்திலேயே புத்தக வெளியீட்டு விழா நடத்திடலாமே என்ற எண்ணம் படைத்து அதனை திறம்பட
செயல்படுத்தி வெற்றியடைய செய்த விழா மூலவருக்கும் நாம் நன்றி சொல்ல வேண்டுமல்லவா? அவ்வழியில் இவ்விழாவினை திறம்பட நடத்தி
களைப்புடன் இருக்கும் ஆல்பர்ட் அவர்களுக்கும் இதயம் நிறைந்த நன்றிகளை இவ்விழாக்குழுவின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் இவ்விழா வெற்றியடைய உழைத்த அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும், பெருந்திரளாக இவ்விழாவில் கலந்து கொண்டு தமிழமுதம் பருகிய
உலகின் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் இவ்விழாக்குழுவினரின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டு அன்போடு
விடைபெறுகிறேன்.

வாழ்க தமிழ்!
தொடர்க கவிஞர் புகாரியின் தமிழ்ப்பணி!!

நன்றி வணக்கம்.

அன்புடன்,
அன்பு.

அன்புடன் திரு ஒட்டாவா கனடா
வணக்கம்
மழைவிட்டும் தூவானம் போகவில்லை!!!

அயராது உழைத்து
அதுவும் இத்தனை நாட்கள் தொடர்ந்து
விழாவைச் சிறப்பாக நடத்தியமைக்கு

விழாவின் உறுப்பினர்களுக்கு - குறிப்பாக நண்பர் ஆல்பர்ட்,
விழாவின் நாயகனுக்கும் மீண்டும் நன்றிகள்

நடுங்கும் பனியிலிருந்து

அன்புடன்
திரு

வணக்கம்

No comments: