நூல் வெளியீடு - ஆய்வுரை - நூல் பெறுதல்
தலைவர் மாலன் (நூல்வெளியீட்டு அழைப்பு)
பொதுவாக நூலுக்கு முன் பஞ்சு. ஆனால் இங்கு நூலுக்கு முன்னால் மஞ்சு (ரங்கநாதன்). மதுமிதா என்ற மஞ்சு பற்றி அவைக்கு ஒரு ரகசியத்தை அவசியம் சொல்ல வேண்டும். மதுமிதாவிற்குக் கவிதை தொட்டுவிடும் தூரம்தான். ஆண்டாளின் ஊருக்கு அடுத்த ஊர் அவருக்கு. அந்தக் கவிதை இனித்ததிலும் வியப்பில்லை. காரணம் அவர் மாம்பழத்து ஊர்க்காரர். கவிதையில் கம்பீரம் கால் வீசி நடந்ததையும் கண்டிருப்பீர்கள். காரணம்
அரசர்களின் பூமி அவரது ஊர். இன்னுமா தெரியவில்லை? அவருக்கு ஊர் ராஜபாளயம். பல மொழிகள் அறிந்தவர் பத்ருஹரியி ன் ஞானத்தைப் பகிர்ந்து கொன்டவர். நன்றி மதுமிதா.
காலணிந்த சிலம்பெடுத்து நியாயம் கேட்டார் கண்ணகி. மதுரை எரிந்தது, காப்பீடு கிடைக்கவில்லை, ஆனால் காவியம் கிடைத்தது! சரி கண்ணகியின் கோபத்தில் காவியம். பிறந்தது. மாதவிக்குக் கோபம் வந்தால் ?
நூலறிந்த நிமிர்வோடு இதோ வருகிறார், புதிய மாதவி. அரபிக் கடலோரப் புயல் அரங்கமேறுகிறது. ஆனால் அஞ்ச வேண்டாம். அது சகோதரியின் கோபம் அதனால் அது காயப்படுத்தாது. ஆனால் அது நியாயப்படுத்தும். அவரது கோபமும் நியாயமானதுதான்.
தமிழ் உலகின் தலை மகளே, தாமிரபரணி தந்த கலைமகளே வருக. இந்த இணைய வெளியில் இதயத்தை வெளியிட்டு இளவலை அன்புடன் வாழ்த்துக.
கவிஞர் புதியமாதவி, மும்பை (நூல் வெளியீடு)
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே நீ முழங்கு..!
என் அன்பினிய தமிழ் உறவுகளே...
வணக்கம்.
இன்று, இலக்கிய உலகின் ஒரு திருப்புமுனைநாள். இணைய உலகு தன் வலைப் பக்கங்களில் ஒரு சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கும் பொன்னாள்!
இதையும் தமிழனே செய்தான் என்று வரலாறு எழுதி வைக்கும் ..! இதை நினைக்கின்றபோது உங்களில் ஒருத்தியாக நானும் இருப்பதில் எல்லையற்ற
மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகின்றேன்.
சொல்லின் செல்வர்கள், அறிவியல் அறிஞர்கள், கவிதை உலகின் சிற்பிகள், கணினி உலகின் அற்புதங்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், அரசியலின் அறிவுஜீவிகள், இலக்கிய விமர்சக வித்தகர்கள், தத்துவக் களஞ்சியங்கள்.. இப்படியாக அனைத்து துறைகளிலும் உள்ள அறிஞர்கள் இருக்கும் அவையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நிகழ்ச்சியில் என்னை நூல் வெளியிடும்படி அன்புக்கட்டளை இட்டிருக்கின்றீர்கள்.
நானா? என்னையா? ஏன்? என்ன காரணம்? என்று அழைப்பிதழ் வந்த நாளிலிருந்து சிந்தித்து சிந்தித்துப் பார்க்கின்றேன்... இந்தத் தமிழுலகம் என்னைத் தன்னுடைய மூத்தமகளாக ஏற்றுக் கொண்டது மட்டுமேதான் காரணமாக இருக்க முடியும். இதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை ..
சிந்து நதிக்கரைக்கும் சிங்களத்தீவுக்கும் பாலம் அமைக்கச் சொன்னான் நம் மகாகவி. ஆனால் நாம் கடல்களைத் தாண்டி, மலைகளைத் தாண்டி அரசியல் புயல்களும் அசைக்க முடியாத தமிழ் இணையப் பாலத்தை அல்லவா படைத்துவிட்டோ ம்..
தமிழ் என்ன தந்தது நமக்கு என்று இனி யாரும் நம்மைப் பார்த்துக் கேட்க முடியாது. தமிழ் நமக்கு முகம் தந்துவிட்டது. தமிழ் நம் அனைவருக்கும் தமிழுலகம் என்ற ஒரே முகவரியைத் தந்துவிட்டது. ஏன் தமிழ் நமக்கு இன்று "அன்புடன் இதயம்" தந்துவிட்டது... !
கணினியைக் காதலித்து, கணினியில் கருக்கொண்டு, கணினி பலகையில் பிறந்து கணினி வலைகளில் தொட்டில் கட்டி, கணினியில் கவிதை விருந்துகள் படைத்த கணினிக் கவிஞன், என் நட்பு மண்டலத்தின் நட்சத்திரக் கவிஞன், தமிழுலகின் ஆஸ்தானக் கவிஞர், உயிரெழுத்தின் அகரம், கணினிக்கும் இணையத்திற்குமே காணிக்கையாக்கிய கவிதை நூலை அதே கணினி மேடையில் எட்டுத் திசைகளும் தமிழ்ப் பரப்புவது இனி இணையங்களே என்று பணிசெய்யும் இணையத்தள திசைகளின் ஆசிரியர் மதிப்பிற்குரிய மாலன் அவர்களின் தலைமையில், இலண்டன் பல்கலை கழகத்தின் பேராசிரியர் சிவாபிள்ளை அவர்களின் முன்னிலையில் உங்கள் அனைவரின் சார்பில் கவிஞர் புகாரியின் அன்புடன் இதயத்தை வெளியிடுகின்றேன்.
உங்கள் கரவொலி இணைய வானைப் பிளக்கிறது! இதயம் நிறைக்கும் இவ்விழாவில் நம் நிறைநாள் நேசர், அன்புக் கவிஞர் புகாரி அவர்களின் நூலை வெளியிட்டு இணைய வரலாற்றில் வைரவைடூரிய மகுடம் சூட்டிய சகோதரி மாதவி அவர்களுக்கு விழாக்குழுவின் சார்பில் நன்றி தெரிவிக்கப்படுகிறது
அன்புடன் இதயம் ஒரு பார்வை....புதியமாதவி, மும்பை
இனி, கவிஞர் புகாரியின் அன்புடன் இதயம் நம்முடைய அன்புடன் இதயம்... அன்புடன் இதயம்... கவிஞர் புகாரி.
எது இதயம்?.. அறிவியல் அறிந்த உண்மை. ஆனால் உளவியல் இன்னும் ஆழம் காணமுடியாத இடம். அந்த ஆழம் காணமுடியாத இடத்திலிருந்து பிறப்பதுதான் கவிதை. அதனாலேயே எது கவிதை என்று இதுவரை எவருமே சொல்லியதில்லை. சொல்ல முடிவதுமில்லை. கவிதை மரபு தமிழின் தொன்மம். ஆனால் "கவிதை பற்றிய ஆராய்ச்சி தமிழில் கிடையாது. கவிதையின் வடிவத்தைப் பற்றி நன்றாகவே ஆராய்ந்திருக்கின்றார்கள். ஆனால் கவிதை என்றால் என்ன என்பதைப் பற்றி தமிழன் ஆராயவே இல்லை" என்கிறார் புதுமைப்பித்தன்.
"கவிதை என்றால் அதற்கு வாசகனை வரவேற்கும் கதவுகள் அல்லது வாசகனை எட்டிப் பார்க்கத்தூண்டும் ஜன்னல்கள் இருக்க வேண்டும். இரண்டும் இல்லை என்றால் அந்தப் படைப்பைப் புறக்கணிக்க வாசகனுக்கு முழு உரிமை உண்டு" என்று ஒரு இலக்கணம் சொல்லுவார் கார்ல் டென்னிஸ். (practical gods கவிதை நூலுக்கு 2002 ல் புலிட்ஸர் விருது பெற்றவர்)
அப்படி எந்த வாசகனும் புறக்கணிக்க முடியாத அளவுக்கு அன்புடன் இதயத்தின் கவிதை நாளங்கள்..சில இடங்களில் பீறிட்டுக் கொண்டு நம்மைத் துடிக்க வைக்கின்றது. சில இடங்களில் தொட்டவுடன் நம்மை ஈரமாக்கி புகாரி என்ற கவிஞனின் ஈர இதயத்தில் நம்மை நனைத்து எடுக்கின்றது.
சில இடங்களில் வெறும் சந்தங்களிலும் ஓசைகளிலும் மாவு கட்டு போடப்பட்டு கவிதையே காயப்பட்டு தவிக்கின்றது. அன்புடன் இதயத்தில் இப்படி எல்லாமும் கலந்து இருப்பதே இதன் பலமும் பலகீனமும்.
"காதல் காதல் காதல்
காதல் போயின்
சாதல் சாதல் சாதல்"
என்று மகாகவி பாரதி சொல்லிவிட்டுப் போகட்டுமே. இந்த மனிதக் கவி சொல்லுகின்றான்.. காதல் தோல்விக்குப் பிறகு..
உன்னை மட்டுமா நான் இழந்தேன்..?
என்னையுமல்லவா இழந்துவிட்டேன்
கடந்துவிட்ட ரயிலுக்கும்
கைவிட்ட காதலுக்கும்..
வருந்தித் துருப்பிடித்துச்
சாவது
ஒருக்காலும் உசிதமல்ல..
நானும் போய்
காத்திருக்க வேண்டும்
என் பிரியக் காதலியே..
நீ வேண்டாம் இன்றெனக்கு
மீண்டும்
நான்தான் வேண்டும் எனக்கு...
(நான்தான் வேண்டும் எனக்கு, க.2/பக் 21)
காதலின் வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையை நிர்ணயிக்கும் சட்டங்கள் அல்ல. காதலில் ஒருவன் தன்னை இழப்பது இயற்கை. ஆனால் அந்தக் காதல் இழப்பில் வாழ்க்கையையே இழப்பது மானுடம் பாடும் கவிஞனின் இதயமாக இருக்கமுடியாது. காதலில் உச்சத்தைப் பாடி அதே நேரத்தில் வாழ்வின் யதார்த்தத்தையும் பாடி கவிஞன் தன் பாதங்களை கவிதை மண்ணில் அழிக்க முடியாத அடையாளமாக்கி இருக்கின்றான்.
அழகியலில் , உணர்வியலில் கருக்கொள்ளும் கவிதை இன்று அறிவியலுக்கும் ஆராதனைச் செய்கின்றது. தாள்களில் கவிதை எழுதும் கற்பனைக் கவிஞனல்ல இவன். கணினியே கைகளான அறிவியல் நூற்றாண்டின் கவிஞன் இவன். அதனால் தான்,
பிறப்புச் சூட்சமம்
உரைக்கும் நியதிப்படி..
மறுப்பவர்கள் அல்ல-ஆண்கள்
கொடுப்பவர்கள்தாம்...
ஓர்
உயிரைக் கருக்கொள்ள
பலகோடி உயிரணுக்களைக்
கணக்கின்றி
செலவிடுகிறான் ஆண்..
ஒற்றைக் கருமுட்டையோடு
சிக்கனமாய் நிற்கிறாள்
பெண்...
..இந்த அறிவியல் கருத்தை கவிதையாக்கியதாலேயே மிகச் சிறந்த இடத்தைப் பிடிக்க வேண்டிய இந்தக் கவிதை சமுதாய தளத்தில், கவிதைப் பேச வந்த பெண்ணியல் உரிமை/விடுதலையில் மிகவும் சிறுபிள்ளைத்தனமானத் தீர்வை முன்வைத்து தவிர்க்க முடியாமல் சரிந்து விழுகின்றது.
பெண்கள் கேட்பதில்லையாம், பெண்களின் விருப்பம் அறியாமலேயே ஆண்கள் ஓடிக்கொண்டிருக்கலாமாம்..பெண்கள் கேட்டால் ஆண்கள் உடனே கொடுத்து விடுவார்களாம்.. வரம் கேட்டு வாங்குவதெல்லாம் பெண்கள்.. அதைக் கொடுத்து விட்டு அல்லல் படுபவர்கள் ஆண்களாம்.. தன் கட்சிக்கு ஒரு தசரத மகராஜாவையும் கூட்டணி.சேர்த்திருக்கின்றார் கவிஞர்.
பெண்..
"காதல் பேசிய
விழிகளால் மட்டுமல்ல..
சம்மதம் சொன்ன
மொழிகளாலும்
உங்கள் தேவைகளைக்
கேளுங்கள்... " என்று.
அறிவியல் சிந்தனையுடன் கலந்து இப்படியும் ஓர் ஆணாதிக்க மரபுவழிச் சிந்தனையா? பெண் கேட்பது அவள் தேவைகளோ விருப்பங்களோ அல்ல கவிஞரே.. அவள் இன்று கேட்பது அவளுடைய உரிமைகள்..
"நீ பின்னுக்குப் போனால்
வாழ்க்கை
மண்ணாகிப் போகும்
உன்
கண்ணுக்கு முன்னே
போராடு...
என்று தோழியரைப் போராட அழைத்துவிட்டு.. ஆணிடம் கேட்டால் எல்லாம் கிடைத்துவிடும் என்று பாசாங்கு செய்து அதையே தீர்வாக்கி..
"தோழியரே
பெண்ணின் மீது இடப்பட்ட
அத்தனை விலங்குகளும்
பட்டுப் பட்டென்று
தெறித்துச் சிதறி
எங்கும்
சமத்துவமே துளிர்க்கும்..."
என்று சப்பைக் கட்டு கட்டியிருப்பதில் வருத்தம் ஏற்படுகின்றது என்பதைவிடக் கோபம் வருகின்றது என்பதுதான் உண்மை. அறிவியல் உண்மைகளை அறிந்த அளவுக்கு சமத்துவம், பெண்ணிய உரிமைகளை அறியவே மறுக்கும் ஓர் ஆணின் முரட்டுத்தனமான ஆதிக்கப் பார்வையாகவே இதைப் பதிவுச் செய்கின்றேன்.
(தோழியரே! தோழியரே! க.10/பக் 50..53)
கவிதைகளைக் காட்சிகளாக விரித்து கண்முன்னே கவிதைப் படமாக்குவதில் கவிஞரின் பார்வைக்கு ஆஸ்கார் விருது கட்டாயம் உண்டு.ஆமாம்.. இவருடைய "கல்யாணமாம் கல்யாணம்" அந்த வரிசையில் ஒரு விருது. இனம், மொழி,மட்டுமல்ல அவரவருக்கான சிறப்பு வட்டார/குடும்ப இயல்புகள் பதிவுச் செய்யப்படும்போது அந்தக் கவிதை வண்ணங்களே தேவையில்லாத துளசிச்செடிப் போல தனித்து தனித்துவத்துடன் கவிஞனின்
முகம் காட்டுகின்றது.
காதலைப் பற்றி, நட்பைப் பற்றி எல்லாம் எழுதாதக் கவிஞர்கள் இருக்க முடியும். ஆனால் அம்மாவைப் பற்றி எழுதாதப் படைப்பாளனே இருக்க முடியாது. அந்த தொப்புள்கொடி உறவைத் தொடுகின்றபோது உணர்வின் அலைகள் உணர்வுக் கடலிலிருந்து வெளியில் வந்து யதார்த்தக் கரைகளைத் தொடுவதும் ஆபூர்வம். அப்படி ஒரு உணர்வு போராட்டத்தை ஒவ்வொருவரும் "அம்மா" என்ற சொல்லில் உணர்கின்றோம்,. என்றால் கவிஞர்களுக்கு
கேட்கவா வேண்டும். ஆனால்..
"அம்மா
அடுத்த முத்தமுடன்
உன் முந்தானையில்
என் கண்துடைக்க
நீ எப்போது வருவாய்..?
என்று ஏங்கும் கவிஞர்..
"எனக்கு கணினி வேண்டாம்
உன் மடிதான் வேண்டும்
அமெரிக்கா வேண்டாம்
அப்பாதான் வேண்டும்.."
என்று உணர்வுச் சுழியில் தவிக்கும் கவிஞர்...இறுதியில் முடிக்கின்றார்... அவர் கவிதைகளின் மணிமகுடம்... இந்த வரிகள்...
"நீயே ஒத்துக்கொள்ளாத
இந்த உண்மையை
நான்
எங்கே போய்ச் சொல்ல..?"
(அம்மா வந்தாள். க.19/பக் 75..77)
உலகமயமாதல், பொருளாதர வீக்கம், நுகர்வோர் சந்தைகள், வியாபாரத் தந்திரங்கள் ...இப்படி ஆயிரமாயிரம் சிந்தனை வீச்சுக்களை அள்ளிக் கொட்டுவது இந்தக் கடைசி நான்கு வரிகள்...இந்த வரிகள் சொல்லும் நிதர்சனமான உண்மை, அந்த உண்மையின் வலி, அந்த வலிக்கான காரணம், தெரிந்தும் தெரிந்தும் அந்த வலியிலிருந்து மீள முடியாத மனிதச் சமூகம்.. இதில் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைந்துக் கொண்டிருக்கும் அடிப்படை உறவுகள்..இப்படி சிந்திக்க சிந்திக்க வலை விரியும் அதில் அன்புடன் இதயம் கண்ட புகாரியின் விசவரூபம் தெரியும்.
"எழுதக்கூடாத கடிதம்"
(க.24/பக்.90..94)
என்னைக் கவர்ந்தக் கவிதை. பொய்முகம் காட்டாத, ஒழுக்கவிதிகளில் ஒருமித்த உருவமாகத் தன்னைக் காட்டிக்கொள்ள விரும்பாத இயல்பு மனிதனின் இதயத்திலிருந்து அலங்காரமில்லாமல் வந்து ஒவ்வொரு வரிகளிலும் ஓராயிரம் சொல்லப்படாதக் கதைகளைச் மெளனத்தில் சொல்லிக் கொண்டிருக்கும் கவிதை. இந்தக் கவிதையின் ஒவ்வொரு வரியையும் எடுத்து உள்ளே உள்ளே சென்று எத்தனையோ விஷயங்களைச் சொல்ல முடியும். சில வரிகளை மட்டுமே இடுகின்றேன்.
மெளனமாகவே
என் வேர்களும் விழுதுகளும்
உன்னில் படர்ந்து
உன் நினைவுகளை
எனக்கெனவே
இன்னமும்
உறிஞ்சிக் கொண்டிருக்கும்
உண்மை....
எனக்குக் கேட்காததா..?
மெளனத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் காதல் இதயம் இங்கே
......
என்னை நான்
வார்த்தைகளால் உன்முன்
பிளந்ததே இல்லை.
மரபின் சங்கலியில் கட்டப்பட்டு தவிக்கின்ற இதயம் இங்கே
உயிரை எடுத்து
வாசலில் வைத்துக்கொண்டு
எனக்கெனவே தவமிருக்கும்
உன்னையே...
காதலிக்கும்...
உனக்குள்...
....அந்தத் தீ
எந்தக் காட்டை அழித்து
நாசம் செய்தாலும்
எனக்கு அக்கறையில்லைதான்
ஆனால்
உன்
சொந்தக் காட்டையே அல்லவா
அழித்து நாசம் செய்துவிடும்
......
தன்னைப் பற்றியக் கவலையின்றி நேசிப்பவளின் சமூக மதிப்பு, மரியாதை, குடும்பம், குலம், பெயர்... எல்லாவற்றையும் நெஞ்சில் நிறுத்தி இதுதான்
வாழ்க்கை என்பதை துயரத்துடன் ஏற்றுக்கொண்ட இதயம் இங்கே..
உயிரின்
உதடுகளால்கூட
உன் பெயரை
உச்சரிக்கிறேனடி...
கவிதை வெறும் சொறகளின் அர்த்தங்களையும் தாண்டி வாசகனை என்னவோ செய்யவேண்டும்.. இன்னும் சொல்லப்போனால் புரியாத மொழியின்
இசையில் மயங்கும் இதயம் போல கவிதையும் சில நேரங்களில் மனசை வருடும். ஆயிரமாயிரம் பன்னீர்ப்பூக்களைக் கொட்டியது போல வார்த்தைகள்
விழ வேண்டும். கவிதையின் இறுதியில்... காதலைச் சொல்லிவிட்டு கேட்கின்றார் கவிஞர்..
உண்மைதான்
இதுவும் தகாதுதான்
இதுவும் கூடாதுதான்
இதுவும் நியாயமல்லதான்
இருந்தும் அன்பே..
அந்த மரணமடையாத
மனத்துடிப்புகள்
என்னால்
விரட்டவே முடியாத
விசித்திரங்களாகி விட்டனவே
நான் என்ன செய்ய..?
என்று முடிக்கின்றார்.
இந்த வரிகளைப் படித்தவுடன் கவிஞர் அறிவுமதி ஆண்-பெண் உறவு பற்றி எழுதியிருக்கும் கீழ்கண்ட வரிகள் ஒப்பிட்டு நினைவுகூரத் தக்கன.
" தண்ணீருக்குள் நெருப்பாய்.. நெருப்புக்குள் தண்ணீராய் காமம் (காதல்) நுழைந்து வெளியேறாத உடல் இல்லை, உயிர் இல்லை. மனித உடல்களில், உயிர்களில் மட்டும்தான் காமமும் காதலும் உள்நுழையவும் திணறி.. நுழைந்தாலும் வெளியேற முடியாமல் சிக்கிச் சீரழிகின்றன. இயல்புத் தொன்மம் செயற்கைத் தொன்மமாய் ஆக்கப்படுகின்றபோது இந்தக் சிக்கல் எழும். இணைவின் வலியுணர்ந்து உயிரை உள்விழுங்கிக்கிறங்க வேண்டிய வாழ்க்கை
இணைய முடியாததன் வலியைக் கூவிக் கூவிக் கத்துதலால் சிதறிப்போகின்றது.
அந்த தவிப்புகளின் வெளிப்பாடுகளாய்தாம் இந்தக் காதல் கவிதைகள்"
"என் குடும்பம் "
க.28 /பக் 105,106
இந்தக் கவிதையைப் படிக்கும்போது கவிஞர் பழமலய் அவர்களின் சனங்களில்கதையில் இடம்பெறும் உறவுகளின் நினைவு எட்டிப் பார்ப்பதைத் தவிர்க்க முடியாது. ஒவ்வொரு உறவுகளுக்கும் தனி ஆவர்த்தனம் செய்திருக்க வேண்டும். ஆனால் அன்புடன் இதயம் தந்திருப்பது குடும்ப புகைப்படம்... சின்ன சின்னதாய்த் தெரிகின்றது முகங்கள்..
பஞ்சபூதங்களில் ஒரு சிலக் கண்ணிகள் கவிதையிலிருந்து தனியே எடுத்து வாசித்தால் மிகச் சிறந்த துளிப்பாக்களாகிவிடும் . இதுமட்டுமே இதற்கானச் சிறப்பு.
'ஐயா, இது அமெரிக்கா!" ( க.16/பக் 65..67)
கவிஞரின் வாழ்க்கைப் பின்புலத்தில் அதிகமாக எதிர்பார்க்க வைக்கும் தலைப்பு வெறும் கடன் அட்டையாகவும் கழுத்துப் பட்டையாகவும் காட்சி தருவது அவலம்தான்.
அழிவில் வாழ்வா? .. க.4/பக் 24..33
சில குழப்பமானச் சித்தாந்தங்கள்..
அரிவாள்கள்
அறிவில்லாதவனுக்கே வேண்டும்
இந்தக்
கேடயங்களல்லவா
உனக்கு வேண்டும்.
ஆமாம்.. அரிவாள்களும் கேடயங்களும் ஒன்றுடன் ஒன்று சார்ந்தவைதானே. அரிவாள்களின் கதைகளை முடிக்க கேடயங்கள் மட்டுமே போதுமானவை அல்ல.. கேடயங்கள் கேடயங்களாகவே இருந்தால் அரிவாள்களும் அரிவாள்களாகவே தொடரும் என்பதுதான் உலகச் சரித்திரம்.
சிலக் கவிதைகளில் கவிதைகளுக்கு முன்னால் கவிஞர் கொடுக்கும் இடம்சுட்டி பொருள் விளக்கம் கட்டாயம் நீக்கப்படவேண்டும்.
கவிதைகளுக்கான புகைப்படங்கள் கணினியின் வலைத் தளங்களிலிருந்து எடுக்கப் பட்டிருக்கின்றது. எல்லோரும் அதைத்தான் செய்கின்றார்கள். விளைவு... நிறைய புகைப்படங்கள் சமகாலத்திய எல்லா கவிஞர்களின் கவிதைகளிலும் முகங்காட்டுகின்றது. வாய்ப்பும் வசதியிமுள்ள கவிஞர் புகாரி போன்றவர்கள் உருக்கவர் பெட்டியை தனியாக சுமந்து தனித்துவமான புகைப்படங்களைத் தரமுடியும்.
கவிஞர் என்றால் கட்டாயம் தமிழ்- சித்திரை பற்றி எல்லாம் கவிதை எழுதியே ஆகவேண்டுமா என்பதைக் கவிஞர் சிந்திக்க வேண்டும்.
கவிஞர் புகாரியின் முதல் கவிதை தொகுப்பு வெளிச்ச அழைப்புகள். அங்கே அவர் கவிதைகள் அருவி.. அன்புடன் இதயம் அந்த அருவியின் வாய்க்கால். கால ஒட்டத்தில், கணினி உலகமும் சந்தக் கவிதை அரங்கங்களும் இந்த அருவி நீரில் கலந்துவிட்டது தெரிகின்றது. எல்லாக் கவிஞர்களுக்கும் இவை எல்லாம் தவிர்க்க முடியாதவைதான்.
திசைகள் இணைய இதழ் ஆசிரியர் மாலன் அவர்கள் கவிதைகளைப் பற்றிச் சொல்லும்போது
"வெறும் வார்த்தைகளாக முடிந்து போகிற கவிதைகள் உண்டு. வார்த்தைகளுக்கு வசப்படாமல் மிஞ்சி நிற்கிற கவிதை அனுபவங்கள் உண்டு" என்பார். அவர் சொல்லும் இரண்டுமே அன்புடன் இதயத்தில் உண்டு. மேலும் கவிதையை எப்படி அணுக வேண்டும் என்பதையும் அவர் சொல்லுவார்.
"அகங்காரம் கூடாது, துதிபாடல் உதவாது.புரிந்து கொள்ளும் விருப்பம் வேண்டும். புரியாவிட்டாலும் நெருங்கிவந்து நேசம் குறித்து நெஞ்சம் மகிழ வேண்டும். வார்த்தைகளுக்கு இடையே வந்து விழும் மெளனத்தை வாசிக்கும் திறம் வேண்டும். ஒப்பனைகளை அலட்சியம் செய்யவும் உண்மைகளை தரிசனம் செய்யவும் உள்ளே ஒரு திடம் வேண்டும்:" என்பார்.
நானும் என் நட்பு மண்டலத்தின் நட்சத்திரக் கவிஞனை அப்படித்தான் பார்க்க முயற்சி செய்திருக்கின்றேன்.அது மட்டுமல்ல அன்புடன் இதயத்தின் அன்புடன் இதயம் சொன்ன வரிகள்...
சரியா..? நூறுசதம்..!
அழகா..?அற்புதம்..!
என்னும்
இதய மலர்வு வார்த்தைகளும்...
சரியா..?ம்ஹூம்!
அழகா..?மாற்று!
என்னும் அக்கறை
விமரிசனங்களும் தந்தருள....
..
கவிஞனே உன் வார்த்தைகளின் சத்தியத்தை என் பார்வைகளில் பாசாங்கு இல்லாமல் பதிவு செய்திருக்கின்றேன். கணினி மேடைக்கும் இணைய தேவதைக்கும் ... காணிக்கையாக்கப்பட்ட அன்புடன் இதயம்.. இணையத்தில் வெளியிடப்படும் முதல் கவிதைநூல்... இந்தச் சிறப்பினைச் செய்யும் தமிழுலகத்திற்கு என் வாழ்த்துக்களும் .. நன்றியும்...
No comments:
Post a Comment