உலகமுதல் இணையநூல் வெளியீடு 6


விமரிசனங்கள் - வாழ்த்துரைகள்

தலைவர் மாலன்: இலந்தையாருக்கு அழைப்பு
வடதுருவத்துக் குயிலுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகின்றன. கவிக்கோ அப்தூல் ரகுமான் தம்பி புகாரியின் தமிழ் மணம் பற்றிச் சொன்னார். அடுத்து வருகிறார் கவிமாமணி. இலட்சிய நோக்காலும், இனிக்கும் தமிழாலும் எல்லோர் நெஞ்சத்திலும் இடம் பிடித்த இலந்தையார் சந்தக் கவிஞர் புகாரியின் சமூக நோக்குப் பற்றி சான்றுரைக்க வருகிறார். எழுந்து நின்று வரவேற்போம்

வாழ்த்துரை கவிமாமணி இலந்தை சு. ராமசாமி
ஈண்டு குழுமியுள்ள தமிழ் சான்றோரே! தமிழ் ஆர்வலர்களே!! எல்லோருக்கும் என் வணக்கம்!

பழமையின் லயமும் புதுமையின் வீச்சும்
பளிச்சிடும் அன்புடன் இதயம்
உழுததோர் வயலில் உரச்செழிப்போடே
உயர்ந்திடும் பயிரெனக் கண்டேன்
அழகிய முறையில் அதைவெளியிட்டே
அரும்பணி செய் தமிழுலகம்
செழுமைகொள் இணையச் செயல்வரலாற்றில்
சிறப்பிடம் தான்பெறுகிறது
எனது நல்வாழ்த்துகள்.


புகாரியின் "அன்புடன் இதயம்" தொகுப்பில் நான் விரும்பும் கவிதைகளில் ஒன்று "அழிவில் வாழ்வா?'..

கவிதை என்ற அளவுகோல் கொண்டு பார்க்கும் போது அதைவிடச் சிறந்தவை வேறு இந்தத் தொகுதியில் உண்டு. ஆனால் சமுதாய அக்கறையோடும் மனிதாபி மனத்தோடும் மனோதத்துவ முறையில் அமைக்கப் பட்டிருக்கும் கவிதை இது.

வெறி கொண்டிருக்கும் ஒருவனை,அவனைக் குற்றம் சாட்டும் முறையில் அணுகினால் அவனது வெறி அதிகமாகும்.

எனவே அவனிடம் "நீ செய்வது சரிதான்," என்று சொல்லி அணுகினால் வாளைக் கீழே வைத்துவிட்டுக் கேட்பான்.

'தவறொன்றும் செய்யாமலேயே
தரையோடு தரையாக
இரத்தச் சகதியாய்
சிதைந்து கிடக்கும் சகோதரா"


என்று சொல்லும் போது சற்றே நிமிர்ந்து பார்க்கிறான்.

"என் கருணைக் கரங்களை
உன் கண்ணீர் துடைக்கவே
நீட்டுகிறேன்"


என்னும்போது அவனுக்கு நம்பிக்கை பிறக்கிறது.

அடுத்து
நீ வெறி கொள்வதில் நிச்சயம்
நியாயம் இருக்கத்தான் செய்கிறது"


என்கையில் அவன் காதுகளும் நெஞ்சமும் திறக்கின்றன. இப்படிப் படிப்படியாகச் சென்று

" இன்று தப்பலாம் உன்தலை,
அது என்றும் தப்புமா"


என்னும் போது சிந்திக்கத் தொடங்குகிறான்.

"கையரிவாள்களைக் கண்தொடாக்
குழியில் வீசிக் கடாசிவிட்டு
உன்மனோபலத்துடன் மீண்டும் வா"


என்று சொல்லும் போது படுத்துக்கிடந்தவன் எழுந்து உட்காருகிறான்

"பொருளாதார மேன்மை .....
பூரண அரண்கள் உனக்கு"


ஓ, இதுதான் வழியா எனச் சிந்திக்க அவனுக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது. பிரச்சினைகளை மட்டும் சொல்லாமல் இங்கே தீர்வும் சொல்லப்படுகிறதே என நிமிர்கிறான்.

அவனின் காயத்தை வருடுவதற்காக அவன் எதிரி எனக் கருதுபவனை "மூடர்" என்று சொல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது. வரலாற்றுச் சான்றுகள் பேசப்படுகின்றன.

'அந்த அறிவு வெளிச்சம்
உன்னுள் பட்டுத் தெறிக்க
சின்னதாக ஒரு தீ
மொட்டையேனும் பூக்க வை "


என்று கவிஞர் சொல்லுகிறார்.

அழிவுக்கும் 'த'ணதான்
ஆக்கத்துக்கும்' தீ 'தான்.


கவிதை இன்னும் சற்றுச் செதுக்கப்பட்டிருக்கலாம்.

தமிழ் உலகத் தளத்தின் முயற்சி வெல்க! மற்றக் கவிஞர்களும் இவ்வாய்ப்புப் பெறுவார்களாக!

No comments: