எழுத்தாளர் ஐகாரஸ் பிரகாஷ், சென்னை
அன்புடன் இதயம் alias புகாரி யின் நுல்ல் வெளியீட்டிற்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம்!
கவிதைகளுடனான என்னுடைய உறவு அத்தனை சிலாக்கியமானதில்லை என்பதை என்னை நன்றாக அறிந்த நூறுக்கு குறைவான இணைய நண்பர்கள் அறிவார்கள். i hate poetry என்று என் நண்பர் சமீபத்தில் முன்னணி நாளிதழில் அறிக்கை விட்டு ஆபத்தில் சிக்கிக் கொண்டதைப் போலவே, நானும் என் லெவலுக்கு சிலரிடம் தர்ம அடிகள் வாங்கி இருக்கிறேன். இந்த சிக்கலுக்கு முழுக்காரணம், நல்ல கவிதைளிடம் என்னுடைய பரிச்சயம் இல்லாமைதான் என்று புரிந்தது.
அப்படிப் புரிய வைத்த பல கவிஞர்களுள் நண்பர் புகாரிக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது எனக்கு புகாரி என்றதும் நினைவுக்கு வருவது இரண்டு விஷயங்கள். ஒன்று மவுண்ட் ரோடு பிரியாணி. மற்றொன்று கனடா வாழ் நண்பர், கவிஞர் புகாரியின் கவிதைகள். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லைதான் என்றாலும், அவ்வாறு நினைப்பதை தடுக்க முடிவதில்லை. கவிஞர் தன்னுடைய வெளிச்ச அழைப்புக்கள் தொகுதியில் இருந்து கவிதைகளை இணையக் குழுக்களில் வெளியிட்டுக் கொண்டிருந்த போதுதான் அவருடன் எனக்குப் பழக்கம். அது தான் அவருடைய முதல் தொகுதி என்று தெரிந்த போது ஆச்சர்யம். மிகக் கொஞ்ச நாளிலேயே அவரது இரண்டாவது தொகுதியும் வெளிவந்தது என்பது தெரிந்தபோது மகிழ்ச்சி.
அன்புடன் இதயம் நூலை நான் வாசித்திருக்கிறேன். வாசித்த போது என்னுடைய முதல் ஆச்சர்யமே, பல ஆண்டுகளுக்கு முன்பே, புலம் பெயர்ந்து விட்டாலும், இன்றளவுக்கும், நமது மெயின் லாண்டு குறித்து இவ்வளவு அக்கறையும், கவலைகளும் கொண்டிருக்கிறாரே என்பதுதான். தஞ்சை மண்ணின் வாசம் நம் மூக்கைத் துளைப்பதை பல கவிதைகள் மூலமாக உணர்ந்தேன்.
பல கவிதைகளை வாசிக்கும் போது , அவரை வைரமுத்துவின் இளவல் என்று குறிப்பிடத் தோன்றுகிறது. ஆனால் அப்படி சொல்லப்போவதில்லை. ஏனெனில் நண்பர் புகாரி அதனைப் பாராட்டாக எடுத்துக் கொள்ளலாம். வேறு யாராவது அதை திரித்துப் படிக்க நேரிடலாம். தர்க்கவியலை ஆதாரமாக கொண்ட கணிணித்துறையிலே, பல்லாண்டுகளாக பணியாற்றி கொண்டிருந்தாலும், அதற்கு சிறிதும் தொடர்பில்லாத கவிதை எழுதுதல் குறித்த ஆர்வம் எவ்வாறு எழுந்திருக்க முடியும் என்று நினைத்துப்பார்க்கிறேன். இதற்கும் விடை கிடைக்கிறது, அவரது கவிதைகளின் மூலம். இணையக் குழு ஒன்றிலே வெளியான அவரது கவிதை பற்றிய விவாதம் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு கவிதை அசப்பில் வெண்பா போலவே காட்சியளித்தது. எனக்கு யாப்பு பற்றிய அறிவு போதாமையால், அதனை மரபுக் கவிதையா அல்லது புதுக்கவிதையா என்று இனம் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் அமைதியாக
இருக்க,
"என்ன கவிஞரே வெண்பா எழுதத் துவங்கி விட்டீர்கள் போலிருக்கிறதே ? " என்று நண்பர் ஒருத்தன் கேட்க, அதற்கு நம் கவிஞர், " இது வெண்பா அல்ல, என் பா " என்றார் கிண்டலாக. கவிஞர்களுக்கு நகைச்சுவை உணர்வு இருக்காது என்று யார் சொன்னது?
அந்த நூலின் முன்னுரையில், கவிமாமணி இலந்தையார் சொல்கிறார் " பழமையின் வீச்சும், புதுமையின் தாள லயமும் ஒருங்கே இருக்கின்றன இவர் கவிதைகளில்" என்று வாசித்துப் பார்த்தால் உண்மை புலப்படும். மனிதம் குறித்த கவலைகளும், நட்புகளின் உயர்வும், வாழ்க்கையின் பொது வான தன்மைகள் குறித்து இவர் கேட்கும் கேள்விகள், இவரை மற்ற கவிஞர்களிடம் இருந்து சற்றே தனிப்படுத்திக் காட்டுகின்றன என்று சொல்லலாம்.
காதலியின் பிரிவை சொல்லும் போது, ஆ... மற்றொரு காதல் கவிதை என்று ஒதுக்க முடியாமல்,
நிறுத்தாத பேச்சும்
நிமிடத்திற்கொரு முத்தமுமென
சுவர்க்க மத்தியில்தானே
மனங்கள்
மணக்க மணக்க
மல்லாந்து கிடந்தோம்
என்ற வரிகள் நம் முகத்தில் அறைகின்றன.
காதல், பிரிவு, போர்த்துயரம், கல்யாணம், இயற்கை வருணனை ( வேங்கூவர் ) , அம்மா பாசம் என்ற சம்பிரதாயமான பாடு பொருட்கள் இருந்தாலும், அவற்றை கற்பனை செய்த விதத்திலும், கவிதை மொழியாக்கிய விதத்திலும் , இவர் கவனிக்கப் படவேண்டியவர் என்ற எண்ண வைக்கிறார்.
அதிலும் குறிப்பாக, அம்மா வந்தாள் என்ற கவிதையிலே,
புது மணப்
பெண்ணவளோ
புரையேறி சிரித்திடுவாள்.
வட்ட
நிலவெடுத்து
வடுக்கள் அகற்றிவிட்டு
இட்ட
மேடை தனில்
இளமுகில் பாய்போட்டு
என்று சரம் சரமாய் நீளும் பாக்களில் இருக்கும் துள்ளலும், தாள லயமும் அருமை.
லேசாக புன்னகை செய்ய வைக்கும் ' ஐயா, இது அமெரிக்கா.. " என்ற கவிதை புதுக்கவிதையிலே ஒரு புது ரகம்.
சில கவிதைகளை படிக்கும் போது, நம் மனக்கண் முன்னே வைரமுத்து நிழலாடுகிறார். கவியரசு உருவாக்கியது கவிதைகளை மட்டுமல்ல. கவிஞர்களையும் தான் என்று புரிகிறது.
குறிப்பாக, வன்முறையை பற்றி சொல்லும், அழிவா வாழ்வா என்ற கவிதையில்,
உன்
உள்மூச்சடக்கித்
தவமிருந்து உனதாக்கு
வெட்டிகொண்டு சாவதை
வீரமரணம் என்று
முட்டாள் கோஷம் போடாதே
என்ற வரிகள், நம் கவிஞரை, கவியரசு எந்த அளவுக்கு பாதித்திருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடிகிறது.
இது ஒரு கவிதைக்கு பலமா அல்லது பலமின்மையா என்பதை கவிதா ரசிகர்கள் தான் முடிவு செய்ய வேண்டுமே அன்றி நானில்லை.
நிலவு, வான் , முகில் , மழை, மேகம், என்று அவ்வப்போது, தரையை விட்டு ஓரடி எவ்வி நின்றாலும், நுகர்பொருள் கலாசாரத்தின், கேடுகளை நையாண்டி செய்து சொல்லும் கடன் அட்டை பற்றிய புராணம் பாடும் அந்த அமெரிக்கா கவிதை நிகழ் காலத்தை
கண்முன்னே நிறுத்துகிறது.
முப்பது கவிதைகளில், சில நம்மை சிரிக்க வைக்கின்றன. சில சிந்திக்க வைக்கின்றன. சில அச்சமூட்டுகின்றன, சில வியப்பூட்டுகின்றன. கண்ணீரும் சில இடங்களில் கிடைக்கின்றன. சந்தத்துக்கு கவிதை எழுதுவது என்பது கொஞ்சம் சிரமமானது. அது எத்தனை எளிதாக இவருக்கு வருகிறது என்று எண்ணிப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இது போன்ற பல தொகுதிகளை அவர் வெளியிடவேண்டும். கூடவே தமிழுலகம், இது போன்ற இணைய வெளியீடு செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்.
நன்றி, வணக்கம்
அன்புடன் ஐகாரஸ் பிரகாஷ்
பேசி முடித்து திரும்பியதும் கவிஞர் புகாரி எழுந்து பிரகாஷை ஆரத் தழுவிக்கொண்டார்.
பிரகாஷ் பேசி முடித்ததும் கர ஒலி இணைய வானைப் பிளந்தது என்றால் அது மிகையில்லை......! நான் பிரகாஷ் அவர்களை அழைத்துக் கொண்டு தேனீர் அருந்தச் சென்றேன்.
No comments:
Post a Comment