உலகமுதல் இணையநூல் வெளியீடு 9


பேராசிரியர் பசுபதி
தமிழ் உலக அன்பர்களே!

'தொராந்தோ'வில் அண்மையில் நடந்த புகாரியின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டவன் என்ற முறையில், மீண்டும் இங்கு வந்து கவிஞர் புகாரிக்கு என் நல்லாசிகளை வழங்குவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

அவரைப் பற்றிய என் எண்ணங்களை, என் உரைநடையை விட என் கவிதையே நன்றாய்ச் சொல்லும் என்று நினைக்கிறேன்!

மின்னிணைய மேகத்தில் மின்னலென எம்பி
. மின்சார மெல்லோசை மீட்டுமென்றன் தம்பி
'அன்புடனே இதய'த்தை அளித்தகவி மாரி
. அறுசுவைப் பாச்சமையல் ஆக்கும்பு காரி

முன்னோரின் பைந்தமிழோ முக்கனியாய் விஞ்சும்
. மூவிரண்டு பூதங்கள் முன்வந்து கொஞ்சும்
நன்னெறிகள் நமக்குரைக்கும் நம்பிக்கைப் பேரி
. நல்லிணைய வாசகர்கள் நாடும்பு காரி

ஊடல்கள் கூடல்கள் தேடல்கள் பாடி
. உலகத்து நிகழ்வுகளை உன்னும்கண் ணாடி
பாடலிலே துள்ளிவரும் பலசந்த மாரி
. பழமைக்கும் புதுமைக்கும் பாலம்பு காரி


பசுபதி

கவிஞர் புஷ்பா கிறிஸ்ரி
அன்பு பசுபதி ஐயா,
உங்களுக்கு இந்தப் பாக்கியம் கிட்டியது மகிழ்ச்சி.

நான் பாவி. உள்ளூரிலிருந்தும் வரமுடியவில்லை. அன்றைக்கென்று என் மக்களுக்கு ஒரு tae kwan do நிகழ்வு.

இருந்தாலும் இன்று இந்த அவையில் என் அன்புச் சோதரனை வாழ்த்த வரம் தந்த இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன். கூடவே அவர் முதுகெலும்பாக இருந்து, அவரை ஊக்குவிக்கும் அவர் அன்புத் துணைவிக்கும் என் வாழ்த்துக்கள்..

அடிக்கடி இப்பக்கம் வரமுடியவில்லை. வேலைப் பழுதான்.. (தாய் தானே அம்.. என்னும் குழந்தைக்கு அம்..மா.. என்று சொல்லித் தந்து வழி நடத்தி அப்பாவை அறி முகம் செய்து வைக்க வேண்டும்) தொடர்கிறது கடமைகள்.

அன்புச் சோதரி புஷ்பா கிறிஸ்ரி

சிலம்பு நாக.இளங்கோவன்
அன்பின் நண்பர்களே,
நண்பர் புகாரியின் பஞ்சபூதக் கவிதைகளில் மற்றொன்றான "தண்ணீர்" அருமையான கவிதை.

அதில் எனக்கு சிறு விளக்கம் தேவை.

"கண்ணீரும் தண்ணீர்தான் " என்கிறார் கவிஞர்.

தண் + நீர் = தண்ணீர். தண் = குளிர்ச்சி குளிர்ச்சியான பண்பு கொண்ட நீர் "தண் நீர்" எனப்படுகிறது.

தண்மை = குளிர்ச்சி; வெம்மை = வெப்பம்/சூடு.

சுட வைத்த நீரை "வெந்நீர்" என்கிறோம்.

நடைமுறையில் அதைப் பலர் "சுடு தண்ணீர்" என்கிறார்கள் :-) பலர் வெந்நீர் என்கின்றனர்.

சுட வைக்காமல், வெயிலில் கிடந்ததால் சூடாக இருந்தாலும் அதை வெந்நீர் என்று சொல்லாமல் "தண்ணீர் சூடாயிருச்சி" என்கிறோம்
:)

தமிழ்ச் சொற்கள் விதுமையான பெயர்களை இழந்து வருகின்றன என்று இராம.கி அய்யா அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறோம்.

வழக்கில், உரையில், இருப்பன ஒரு புறமிருக்கட்டும்.

கவிதைகளில், செய்யுள்களில் அந்த விதுமை குறையாமல் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சரியானதா?

"கண்ணீர்" வெதுவெது என்று இருக்கும். குளிர்ச்சியாக இருக்காது.

"கண்ணீரும் தண்ணீர்தான்" என்று சொல்லப்படும்போது அந்தத் "தண்மை" கண்ணீரின் பண்புக்கு முரணாக இருக்கிறது என்று
கருதுகிறேன். இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அன்புடன்
நாக.இளங்கோவன்

கவிஞர் புதியமாதவி
இங்கே சொல்லப்படுவது தண்ணீரின் இயல்பு நிலைக்குரிய ஒப்பீடு அல்ல. அப்படிப்
பார்த்தால் h2+ O உள்ள திரவங்களை மட்டுமே தண்ணீருக்கு ஓப்பிடமுடியும். கவிதையில்
திரவ நிலையில் உள்ள எல்லாவற்றுக்குமே தண்ணீரே தாய்/மூத்தவள் என்ற திரவ நிலை
ஒப்பீடு மட்டுமே இருப்பதாக நான் நினைக்கின்றேன். கவிஞர் என்ன நினைத்து
எழுதினாரோ..?

அன்புடன் ஞானவெட்டியான்
அடிப்படையில் தண்ணீராய்த்தான் உள்ளது. கண்கள் வழியே உணர்ச்சிப் பெருக்கால்
வெளிவரும்போது உராய்வுகளால் வெதுமையடைகிறது என்பது எமது புரிதல் தம்பி

முனைவர் அனந்த்
தண்மை என்ற சொல்லுக்குக் குளிர்ச்சி என்ற பொருளைத் தவிர, எளிமை, இன்பம், சாந்தம்,
மென்மை என்ற பொருள்களையும் அகரமுதலி தரும். ஆதலால், நீரின் தன்மை தன்னை
எளியதாக்கிக்கொண்டு நமக்கு இன்பமும் நன்மையும் பயக்கும் தண்மை; வெப்பமானி
வெதுவெதுப்பைக் காட்டும்போதும் அதன் தன்மை அவ்வாறே என்று கொள்ளலாம்.

கவிஞர் இக்பால் சிங்கை
அன்பு நண்பர் நாக.இளங்கோவன்: ஆற்று நீரும் அருவி நீரும் நம் அழுக்கை அப்புறப்
படுத்துபோல இந்தக் கண்ணீரும் நம் மன அழுக்கை - சோக அழுக்கை அப்புறப் படுத்தி
விடுகிறது. அழுக்கெடுப்பை நினைத்தால் தண்ணீர்தான் முதலில் ஞாபகத்திற்கு வருகிறது.

முனைவர் நா. கணேசன் அமெரிக்கா
கண்ணீர் வரும்போது உடனிருப்பவர்கள் மனத்தை நெகிழச் செய்வதால் அதனைத் தண்மை
(உருவாக்கும்) நீர் என்று கவிஞர் குறிப்பிடுகிறார்.
என் புரிபாடு.

No comments: