யாமறிந்த மொழிகளிலே


கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் ஐந்தாமாண்டு இயல்விருது விழா

ஜூன் 24, 2006: தமிழ் இலக்கியத் தோட்டம் பூக்களால் நிரம்பி வழிந்தது. இன்றெல்லாம் டொராண்டோ என்றாலே தமிழர் விழாக்களின் கூடாரம் என்றாகிவிட்டது. அதிலும் வேனிற்காலமென்றால் சொல்லவே வேண்டாம். முண்டியடித்துக்கொண்டு பெருகும் விழாக்களின் மத்தியில் முத்தான விழாக்கள் சில கௌரவமாய்க் கைகூப்பி நிற்கும். அவற்றுள் ஒன்றுதான் தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் இயல்விருது விழா.

தமிழ் என்றாலே நரம்புகளெங்கும் இன்பம் பரவும் பலருக்கு. தமிழ் வளர்க்கும் விரல்கள் என்றால் அவற்றைப் பிடித்து முத்தமிடத் தோன்றாத பொழுதுகள் இருப்பதில்லை சிலருக்கு. அப்படியான விரல்கள் பல ஒன்றுகூடி ஒன்றையொன்று கோத்துக்கொண்டு கொண்டாடும் இன்ப விழாவாகக் கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விழா அமைவது வழக்கம். டொராண்டோ பல்கலைக்கழக அரங்கில் ஐந்தாம் முறையாகவும் இவ்விழா அப்படியே அமைந்தது.

உலகளாவிய ஆலோசனைக் குழு ஒன்றின் பரிந்துரையில் வருடம்தோறும் ஓர் சிறந்த தமிழ் இலக்கியச் சேவையாளரை டொராண்டோவுக்கு அழைத்து அவருக்குப் பாராட்டுக் கேடயமும், 1500 டாலர்கள் பணமுடிப்பும் தந்து வாழ்நாள் விருதான இயல்விருது வழங்கி கௌரவிப்பதே தமிழ் இலக்கியத் தோட்டத்தின் முதன்மை நோக்கம். அதோடு கட்டுரை மற்றும் புனைவு இலக்கியத்திற்காக மேலும் இரு விருதுகள் வழங்குவதை இந்த ஆண்டுமுதல் அது வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.

உலகம் முழுவதும் பல தமிழ்ச்சேவை இயக்கங்கள் அதனதன் வட்டங்களில் நின்று தமிழ் இலக்கியவாதிகளுக்கும் கலைஞர்களுக்கும் பரிசுகள் பல வழங்கி வருகின்றனதாம். ஆனால், கனடா தமிழ் இலக்கியத் தோட்டமோ உலகம் மொத்தத்தையும் ஒரு குடையின்கீழ் கொண்டுவந்து தமிழர், தமிழரல்லாதோர், தன் நாட்டவர், பிற நாட்டவர் போன்ற எந்தப் பாகுபாடுமின்றி அகில உலகம் மொத்தத்திற்கும் பொதுவான ஓர் அமைப்பாக இயங்கி வருகிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதற்கான உண்மையான பொருளை உயர்த்திப் பிடித்துச் சிறப்பாக இயங்கும் கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் சேவையைப் பாராட்டாமல் இருப்பது எவருக்கும் இயலாத காரியம் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.

தமிழ் இலக்கியத் தோட்டம் தனக்கென இவ்வாண்டு ஓர் புதிய 'லோகோ' ஒன்றினைத் தயாரித்துள்ளது. 'அ' என்ற உயிர் முதலெழுத்தை ஓர் அழகிய கிண்ணமாகவும் அதனுள் செர்ரி பழம் சிவந்து கிடப்பதைப்போல மெய்யெழுத்தின் புள்ளியையும் அதன்மேல் பனிக்குழைவு அமுதமாய்க் கொட்டி வைத்திருப்பதைப் போல ஆய்த எழுத்தும் அமைக்கப்பட்டு மிகவும் கவர்ச்சியாகக் காணப்படுகிறது.

தமிழ் இலக்கியத் தோட்டம் ஈராயிரத்து ஓராம் ஆண்டு எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களின் முயற்சியினால் தன் நண்பர்களின் துணையுடன் கனடாவில் தொடங்கப்பட்டது. இவர் ஓர் இலங்கைத் தமிழர். இந்தியாவிலும் இலங்கையிலும் இவரின் சிறுகதைத் தொகுதிகள் அனைத்தும் பல பரிசுகளை வென்றிருக்கின்றன. 1937ம் ஆண்டு கொக்குவில் கிராமத்தில் பிறந்த இவர் 1960 தொடக்கம் சிறுகதைகள் எழுதி பரிசுகளும் பெற்றவர். 1964 முதல் தொடங்கிய இருபதாண்டுகால பணிவாசத்திற்குப்பின் 1995ல் தன் தமிழ்மன உள்நெருப்பு உந்த, மீண்டும் எழுதத் தொடங்கினார். மீண்டும் எழுதத் தொடங்கிய முதல் மூன்றாண்டுகளிலேயே மூன்று சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டு அனைத்திற்கும் பரிசுகளைக் குவித்த இவர் தற்போது டொராண்டோவில் வாழ்ந்துவருகிறார்.

2001ம் ஆண்டிற்கான இலக்கியத் தோட்டத்தின் இயல்விருது கவிதை, நாவல், சிறுகதை, கட்டுரை, விமரிசனம் என்று ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் இலக்கியத் தொண்டாற்றி வந்த அமரர் திரு சுந்தர ராமசாமி அவர்களுக்கு வழங்கப்பட்டது. 2002ம் ஆண்டிற்கான இயல்விருது, மணிக்கொடி பரம்பரையைச் சேர்ந்த மூத்த இலக்கியவாதியும், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர தமிழ்த் தொண்டாற்றி வருபவருமான திரு கே. கணேஷ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 2003ம் ஆண்டிற்கான விருது, தமிழ் இலக்கியம், நாடகம், இசை, சினிமா, சிற்பம், ஓவியம் என்று பல துறைகளிலும் கடந்த 40 ஆண்டுகாலமாகத் தமிழ்த் தொண்டாற்றி வரும் திரு வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 2004ம் ஆண்டிற்கான இயல்விருது கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் நூற்பதிப்பில் தன்னலமற்ற சேவையாற்றிவரும் திரு பத்மநாப ஐயர் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

2005ம் ஆண்டிற்கான இயல்விருது கலிஃபோர்னியா பல்கலைக் கழக தமிழ்ப் பேராசிரியர் ஜார்ஜ் எல். ஹார்ட் அவர்களுக்கு இவ்வாண்டு வழங்கப்பட்டது. அந்த நிகழ்வைப்பற்றித்தான் இப்போது நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள். ஒரு தமிழச்சிக்குப் பிறவாமல் ஆனால் தமிழை ஆர்வத்துடன் பயின்று தமிழ்ப் பேராசிரியராகவே வாழும் ஓர் ஆங்கிலேயருக்கு இந்தமுறை இவ்விருது வழங்கப்பட்டது தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்ப்பதாய் அமைந்தது.

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் 1942ல் பிறந்த திரு ஹார்ட் சிறுவயதிலேயே, மொழிகளின் பால் தீராத ஈர்ப்பு கொண்டிருந்தார். லத்தீன் மொழியை முன்பே கற்றிருந்த இவர் தன் ஒன்பதாம் வயதில் ரஷ்ய மொழியையும் பயின்றார். அதோடு பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளிலும் தேர்ச்சி பெற்றார். ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் வேதியியலும் இயற்பியலும் பயிலச்சென்ற இவர் தன் அறைத் தோழனின் ஆர்வத்தால் உந்தப்பட்டு சமஸ்கிருதம் பயின்றார். பின் இந்தியாவில் அதனினும் மேன்மையான இன்னொரு செம்மொழியும் உண்டு என்றறிந்து அதையும் பயிலும் ஆர்வம் கொண்டார். அம்மொழிதான் நம் இன்பத் தமிழ் மொழி.

தன் இருபத்துமூன்றாம் வயதில் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் தமிழைத் தொட்டுப்பார்த்தவர் அப்படியே அதில் ஒட்டிக்கொண்டுவிட்டார். இன்றுவரை அதன் பிடியிலிருந்து தன்னை மீட்டுக்கொள்ள இயலாமல் காதலால் கட்டுண்டு கிடக்கிறார். அந்த அமுதத் தமிழ் அழைத்து வந்த மதுரை தமிழ்ப்பெண்ணான கௌசல்யா அவர்களைக் காதல்மணமும் செய்து கொண்டார். பேராசிரியர் ஏ.கே. ராமானுஜன் அவர்கள்தான் இவரின் இளைய இதய நிலங்களில் இயற்கையாய் தமிழ்ப்பயிர் வளர்த்த பெருமைக்குரியவர். பின் இந்தியாவில் ஓராண்டு தங்கி, திரு இராம சுப்ரமணியம் அவர்களிடம் சங்க இலக்கியப் பாடல்களை மிகுந்த சுவையுடன் பயின்றார்.

1969ல் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பேராசிரியராக இருந்தார். 1975ம் ஆண்டிலிருந்து கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் அந்த ஆண்டுதான் பலராலும் பெரிதும் விவாதிக்கப்பட்ட The Poems of Ancient Tamil என்ற நூலை எழுதினார். 1979ல் The Poems of the Tamil Anthologies என்ற மொழிபெயர்ப்பு நூல் The American Book Awardக்குப் பரிந்துரைக்கப்பட்டது. 1996ல் இவரின் முயற்சியால் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பீடம் ஒன்று நிறுவப்பட்டது. அதன் தலைவராகவும் இவரே செயல்படுகிறார். 1998ல் கம்பராமாயணத்தின் ஆரண்ய காண்டத்தை The Forest Book of the Ramayana of Kampan என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். 1999ல் The Four Hundred Songs of War and Wisdom என்ற தலைப்பில் புறநானூற்றை மொழிபெயர்த்தார். அது ஏ.கே.ராமானுஜன் பரிசினைப் பெற்றது. 2000ல் தமிழ் செம்மொழி என்று உறுதிபட இவர் பேராசிரியர் மறைமலை அவர்களுக்குக் கடிதம் எழுதினார்.

புகைப்படங்களில் மட்டுமே கண்ட இவரை நேரில் கண்டு உரையாடும் வாய்ப்பினை இயல்விருது விழாவிலும் அதனைத் தொடர்ந்த மறுநாளும் நான் பெற்றேன். மென்மையாகவும் அழுத்தமாகவும் இவர் தரும் கருத்துக்களும் விளக்கங்களும் எவரையும் இவரின் ரசிகனாக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

மாலை ஏழு மணிக்குத் தொடங்குவதாய்த் திட்டமிடப்பட்ட விழா பலரும் முன்பே அரங்கத்துக்கு வந்துவிட்டபடியால், அதனினும் முன்பாகவே தொடங்கிவிட்டது. விழா ஏற்பாட்டின்படி, கைகுலுக்கல்களாலும் அறிமுகப் படலங்களாலும் சிற்றுண்டிச் சுவைகளாலும் அது பூரித்துச் சிரித்துக் கொண்டிருந்தபோது, பேராசிரியர் செல்வ கனகநாயகம் ஒலிபெருக்கியால், மனமின்றி அவற்றுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து அன்பர்களின் அறிமுகத்தையும் அளவளாவுவதையும் நிறுத்திக்கொண்டு அரங்க மேடையை நோக்க அன்புடன் அழைப்பு விடுத்தார். செப்டம்பர் 2006 முதல் டொராண்டோ பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பாடம் துவங்கப்பட்ட இனிப்புச் செய்தியையும் தெரிவித்து கைதட்டல்களைக் கணிசமாகப் பெற்றுக்கொண்டார். திருமதி பார்வதி கந்தசாமி, விழா நாயகர் திரு ஜார்ஜ் எல். ஹார்ட் அவர்களை நிறைவாய் அறிமுகம் செய்துவைத்தார். தன் அறிமுக உரையின் இறுதியில் தமிழிலும் சில சொற்கள் என்று அவர் கூறி அதுவரை ஆங்கிலத்தில் பயணித்த பாய்மரக் கப்பலில் தமிழ்க் காற்று வீசி தானும் மகிழ்ந்து அவையோரையும் மகிழ்வித்தார்.


அறிமுக உரையைத் தொடர்ந்து அழகு தமிழில் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் தன் விழா நாயகன் உரையைத் தொடங்கினார். ஆங்கில மேகம் தமிழ்மழையைப் பொழியப்பொழிய தலை துவட்டிக்கொள்ளும் எண்ணமே இல்லாமல் அரங்கம் ஆனந்தமாய் நனைந்துகொண்டிருந்தது. தமிழால் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்டுக்குப் பெருமையா ஜார்ஜ் ஹார்டால் தமிழுக்குப் பெருமையா என்று என்னைப் போல அன்று எண்ணியோர் பலர் இருக்கக்கூடும். தமிழின் மேன்மையைப் புகழ்ந்து பேசினார். தமிழருக்குத்தான் தமிழைப்பற்றித் தெரியாது என்று தற்காலத் தமிழர்களின் நிலையை நகைச்சுவையோடு சாடினார். சமஸ்கிருதம் ஒரு லாஜிக் இல்லாத மொழி, செயற்கைத்தன்மை அதிகம் கொண்டது என்ற தகவலைத் தந்தார்.

செம்மொழி என்றால் என்னவென்று விவரிப்பது எளிதான காரியமல்ல, செம்மொழி என்றாலே அது சிறப்புச் சக்திகள் வாய்ந்ததாய் இருக்கவேண்டும். அப்படியான சிறப்புச் சக்திகள் அதிகம் பெற்ற மொழி இந்தியாவில் தமிழ் தான் என்று அடித்துச் சொன்னார். ஆங்கிலத்தில் பேசினால் எனக்கு வசதியாக இருக்கும்தான், ஆனாலும் இம்மேடையில் தமிழில் பேசுவதையே நான் பெரிதும் விரும்புகிறேன் என்று அவர் கூறியபோது, அவை அப்படியே நெகிழ்ந்துபோனது. மேடையிலேயே பழந்தமிழ்ப் பாடல்களை உணர்ச்சி பொங்க வாசிக்கும்போதே பலர் முன்னிலையில் உணர்வோடு ரசித்து இன்புற்றார்.

நாற்பதாண்டுகாலமாக மீண்டும் மீண்டும் புறநானூற்றை வாசிப்பதாகவும் ஒவ்வொரு முறையும் புதிய புதிய விசயங்களைக் காண்பதாகவும் கூறி ஆச்சரியப்பட்டார். எத்தனை முறை வாசித்தாலும் அயர்வோ அலுப்போ சலிப்போ வருவதில்லை என்று அதிசயித்தார்.

நாடா கொன்றோ! காடா கொன்றோ!
அவலா கொன்றோ! மிசையா கொன்றோ!
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை; வாழிய நிலனே!

என்ற ஔவையின் பாடலை உரக்கப்பாடி இது எவருக்கேனும் புரியவில்லையா என்று கேட்டார். ஈராயிரம் வருடப் பழந்தமிழ் இன்று வாழும் நமக்குப் புரிகிறது என்றாலே அது தமிழ் செம்மொழி என்பதற்கான ஒரு சான்றாக அமைகிறது என்று கூறினார்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது வேறெங்கும் காணோம் என்றான் பாரதி. இவரோ "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் செம்மொழி வேறில்லை" என்று கூறுவதுபோல் இருந்தது இவரின் சொற்பொழிவு. ஓர் ஆங்கில இதயம் தமிழில் தங்கி குதித்தாடுவதைக் காணக்காண தமிழர்களின் தமிழ்ப்பற்று குப்பென்று பற்றியெரியத்தான் செய்தது. மூக்குக் கண்ணாடி அணிந்துகொள்ளாமல் அளவான வெளிச்சமே உள்ள விழா மேடையிலிருந்து சுலபமாகப் பழந்தமிழ்ப் பாடல்களை வாசித்தது அதிசயிக்கவைத்தது.

பிற்காலத்தில் வந்த அடுக்குமொழி தமிழைக் காட்டிலும் சில சொற்களிலேயே சிறப்பான பொருள் தரும் பழந்தமிழ்ப் பாடல்கள் தன்னைப் பெரிதும் ஈர்ப்பவை என்றார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரிகளைக் கூறி எத்தனை அற்புதம் என்று இயல்பாக வியந்தார். மேடையில் அவர் சுவைகூட்டிப் பேசப்பேச, கேட்டுக்கொண்டே இருக்கலாம் போன்ற ஆர்வம் எழுந்தது. பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் உரை நிகழ்ந்த வந்தபோதும், இயல்விருது பெற்றுக்கொண்டபோதும் அரங்கம் அப்படியே எழுந்து நின்று உரக்கக் கைகள் தட்டி ஆனந்தப்பட்டது.

திருமதி கௌசல்யா ஹார்ட் அவர்களும் இயல்விருது விழாவிற்கு வந்திருந்தார். மிக இனிமையாகப் பழகும் இவரும் பேராசிரியர் ஏ. கே. ராமானுஜம் அவர்களின் மாணவியாவார். ஆரம்ப காலம்தொட்டே பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்களின் தமிழ்ச்சேவையில் பெரிதும் உறுதுணையாக இருந்து வருகிறார். அவரின் சேவையையும் தமிழ் நெஞ்சங்கள் மனதாரப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு சிறந்த கட்டுரை இலக்கியத்திற்காக "க்ரியாவின் தற்கால அகராதி' யைத் தந்த எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கியது. எனக்கு மிகவும் பிடித்த அகராதி இது என்பதால், சரியான தேர்வு என்று வாய்விட்டுக் கூறினேன். சிறந்த புனைவு இலக்கியத்திற்காக, "கூகை" என்ற நாவலுக்காக திரு சோ. தர்மன் என்ற எழுத்தாளருக்கு வழங்கப்பட்டது. அதோடு, டொராண்டோ பல்கலைக்கழக மாணவர்கள் நடித்து அரங்கேற்றிய, தமிழின் தேவையை உணர்த்தும் வண்ணமாய் அமைந்த ஒரு சிறு நாடகமும் அனைவரையும் கவர்ந்தது.

தமிழ் இலக்கியத் தோட்டத்தின் தயவால் நிகழ்ந்த இந்த அருமையான விழா ஓர் முக்கிய காரணத்திற்காக என் இதயத்தின் தனிப் பாராட்டுக்குரியதாய் இருக்கிறது. விழாக்களுக்குச் சென்றுவருவது வெறும் கேளிக்கைக்காக அல்ல என்று இதுபோன்ற விழாக்கள்தாம் நமக்குச் சொல்லித்தருகின்றன. ஒரு நல்ல விழாவுக்குச் சென்று வந்தால் அது நமக்குள் பல உன்னதமான உணர்வுகளை ஊட்டிவிட்டிருக்க வேண்டும். அப்படியான உணர்வுகளைத் தராத எந்த விழாவையும் நல்ல விழா என்று எப்படி அழைப்பது? இந்த விழா அப்படி எதை நமக்குள் ஊட்டியது என்று சற்றும் யோசிக்காமல் சொல்லிவிடலாம். இதோ என் உணர்வுகள்...

தமிழர்கள் அதிகம் இல்லாத நிலையிலும், சுமார் அரை மில்லியன் டாலர்களைச் சேகரித்து பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பீடம் தொடங்கினார். நாமோ கனடாவில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமாய் வாழ்கிறோம். ஏன் தமிழ் நாட்டின் தமிழ்ப் பல்கலைக்கழகங்களுக்கு இணையாக ஓர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை கனடாவில் தொடங்கக்கூடாது?

தமிழ் கற்காத ஒரு தமிழ் இளைஞரும் கனடாவில் இருத்தல் கூடாது என்ற நிலைக்கு நாம் உயரவேண்டும். பிறமொழிக்காரர்களையும் தமிழ் கற்க அழைக்க வேண்டும். தமிழுக்குத் தனி நூலகங்கள் பல அமைத்தல் வேண்டும். தமிழ் இலக்கியக் கூட்டங்கள் தொடர்ந்து நடக்க இலவச தமிழரங்கங்கள் பல உருவாக்குதல் வேண்டும். தமிழ் நூல்களைக் குறைந்த விலையில் வெளியிடும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தமிழ் நூல் வெளியிடுவோரை ஊக்கப்படுத்துதல் வேண்டும். தரமான தமிழிலக்கிய இதழ்கள் பல கனடாவில் வெளிவரவேண்டும். நவீன தமிழ் அகராதிகள், இலக்கண நூல்கள், மொழிபெயர்ப்புகள் என்று நூல்கள் பலவும் செய்திடல் வேண்டும். உலகத் தரத்திற்குச் சவாலான தமிழ் இலக்கியங்கள் இங்கிருந்து பெருகவேண்டும். கம்பன்களும், பாரதிகளும், கண்ணதாசன்களும் கனடாவில் உருவாகுதல் வேண்டும். அன்றைய மதுரை முத்தமிழ்ச்சங்கம் நவீன முகத்துடன் இன்று இங்கே கனடா முத்தமிழ்ச் சங்கமாய் மீண்டும் பிறக்கவேண்டும்.

இத்தனை உணர்வுகளையும் நம் உயிர்வரைக்கும் ஊட்டும் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் மேலும் பல நல்ல தமிழ் வளர்ச்சிக் காரியங்களைச் செய்து சிறப்பாக வளரவேண்டும் என்று தமிழன்னையே பாராட்டுவதாக என் செவிகள் உணர்ந்தன.

1 comment:

cheena (சீனா) said...

கனடா தமமிழ் இலக்கியத் தோட்டத்தின் ஐந்தாம் ஆண்டு இயல் விருது விழா சிறப்புற நடந்தமையை, அழகுற நேரடி ஒளிபரப்பாக, பலப்பல செய்திகளைத் தொகுத்து ஒரு சிறந்த கட்டுரையாக வழங்கியதற்கு பாராட்டுகள். தமிழ் இலக்கியத் தோட்டத்தின் சேவை மேன்மேலும் தொடர நல் வாழ்த்துகள். அயலகத்தில் தமிழ்ப் பெருமை பாடும் தமிழ் நண்பர்களுக்கும், அயலக நண்பர்களுக்கும், மேன்மேலும் சிறந்து செம்மொழியாம் தமிழைப் பரப்ப, நல்வாழ்த்துகள். பிறப்பால் அயல்நாட்டவர்-உள்ளத்தால் தமிழர் உயர்திரு ஜார்ஜ் எல்.ஹார்ட் அவர்களையும், அருமை மனைவி மதுரை மண்ணின் தமிழ்ப் புதல்வி, திருமதி கௌசல்யா ஹார்ட் அவர்களையும், மேன்மேலும் தமிழ்த் தொண்டாற்ற, இறைவன் எல்லா நலனையும் அளித்து, ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்.