1998301 தீ மூச்சைத் தூதுவிடு


அவன்
அவளைச் சந்தித்தான்

அந்தச் சந்திப்பு
சிந்திப்பை முந்திக்கொண்டு
இதுதான் பந்தம்
இருவரும் சொந்தம் என்று
சந்தம் கட்டிச்
சிந்து பாடச் சொன்னது

அந்தி விரித்த
அரையிருள் பந்தியில்
இவன் இமைகள்
அவள் விழிகளிலும்
அவள் இமைகள்
இவன் விழிகளிலும்
பட படவென்று தட்டும்
தந்தித் தகவல்களால்
சிலிர்ப்புகளையும்
சிலிர்க்க வைத்துக்கொண்டன

இதய அருவிகள்
நிலவுக்குள் விழுந்து
கனவுக்குள் புரண்டோடி
நினைவுகளை ஈரமாக்கி
அவர்களின் சிந்தையைப்
பேதலிக்கச் செய்தன

ஆம்
அவர்கள் காதலித்தார்கள்

அவர்கள் மட்டுமே வாசிக்கும்
தனி ஏடுகளில் மட்டுமே
அழகழகாய்த் தட்டச்சேறியது
அவர்களின் காதல்

சில நாட்கள் நழுவி
காலத்துக்குள் விழுந்து
காணாமல் போனபின்
அவள் மனம்
அவசரமாய் நிதானமானது

மூச்சு முட்டிச் செத்தாலும்
முடிவெடுக்கும் முயற்சியின்
மன ஊஞ்சல் ஓயாது
பெண்களில் சிலருக்கு

கல்லூரிப் படிக்கட்டுகளை
கணிசமாகவே
தேய்த்துவிட்டிருந்தாலும்
அவளும் அந்தச்
சிலரில் ஒருத்தி என்னும்
விதிக்குள் சிக்குண்டாள்

காதல் வேறு
கல்யாணம் வேறு என்று
செழித்து வளர்ந்த
சமுதாயப் பாழ்மரத்தின்
ஆணிவேர் இதில்தானே
ஊட்டச்சத்தே உண்கிறது

பிறகென்ன
அவளுக்கே அர்த்தம் விளங்காத
போராட்டங்கள் அவளுக்குள்
மீண்டும் மீண்டும்
புதுப் புது வர்ணங்களில்
நாள்தோறும்
அவதாரம் எடுத்தவண்ணமாய்
இருக்கின்றன

எல்லா நிறங்களும்
முடிவில் கறுப்பாய்த் திரிவதுதான்
அவளுக்குப் புரியவே இல்லை

விளைவாய்
அவன்முன் அவள்
தன் மௌனத் தாவணியால்
முழு முக்காடு போட்டுக்கொண்டு
உள்ளுக்குள் அழுகிறாள்

அவனோ
கண்ணீர் அலை அடிக்கும்
அவன்
கண்களின் கரைகளில் நின்று
அவளின்
மெல்லிய இதயத்தின் காதுகளில்
மிகவும்
துல்லியமாய்ப் பாடுகின்றான்

O

நீ
ஈரங்கள் நீராடும் மேகம்
என்னோடு ஏனிந்த மௌனம்

கோழை மனக் காதல்
நாளும் நிறம் மாறும்
மாறாது என்னுள்ளமே

தேனோடையின் காற்றானவன்
உனைச் சேரவே புயலாகிறேன்

தீ மூச்சைத் தூதுவிடு
மணத் தேர்ஏறத் தேதி கொடு

வானம் மலர் தூவும்
வற்றாத குற்றாலம் வாழ்வாகும்

உனை எண்ணியே உயிர் வாழ்கிறேன்
தேன் முல்லையே மொழியாததேன்

ஈரேழு ஜென்மங்கள்
நாம் வேறல்ல ஓருயிரே

நாளும் வழிமேலே
விழியல்ல
உயிர் வைத்தேன் இளமானே

2 comments:

சேதுக்கரசி said...

முதல் பாதி (கதை) பரிச்சயமான ஒன்றாகத் தெரிகிறது!

அவன் பாடுவது ஏதாவதொரு குறிப்பிட்ட பாடல் மெட்டுக்கு எழுதப்பட்டதா?

Unknown said...

ஆமாம் சேதுக்கரசி,
நானாக நானில்லை தாயே என்ற திரையிசைப்பாடலின் மெட்டில் அமைந்திருக்கிறது இந்தப் பாடல்!