விமரிசனம் - மதுமிதா - சரணமென்றேன்


காதல் என்றால் சரணடைதலே இன்பம்....

காதல் என்றால் சரணடைதலே இன்பம். கவிஞர் புகாரி கவிதையில் சரணடைந்தவர். கவிதையை தன் எழுத்துக்கு சரணடையச் செய்தவர். காதலில் சரணடைந்த அவரின் சரணமென்றேன் தொகுப்பு காதல் மனங்களுக்கான பரிசு.

மழையை எழுதாத கவிஞர்கள் கிடையாது. மழையை எழுதாத காதல் வசப்பட்ட கவிஞனும் கிடையாது. முதல் கவிதையே மழையும், காதலும், காதலியின் முகமும், நினைவும் குறித்ததே.

மழையின் மயக்கத்தோடு, காதல் மயக்கமும் இன்னும் தீரவில்லை கவிஞருக்கு.
அடுத்த கவிதையிலும் மழையின் தொடர்ச்சி,

மழைவிழுந்த மண்வீசும்
வாசனைபோல் - என்
மனமெங்கும் நீவிழுந்த
வாசமடி


இதற்கு ஏதாவது எதிர் கருத்தும் சொல்லவியலுமோ?
கவிதை முழுவதும் தமிழும், காதலும் கலந்து விளையாடுகின்றன. வாசகரை
வலைவிரித்துப் பிடிக்கும் லாவகம் தெரிகிறது.

மீன் பிடிக்கும் வலை, கொசுவினை அண்டவிடாமல் தடுக்க வலை, வஞ்சகர்களை வலை
விரித்துப் பிடித்தல்..... என பல வலை வகைகளைப் பார்த்திருக்கிறோம்; கேள்விப்பட்டிருக்கிறோம். இக் கவிதையில் அவர் குறிப்பிடும் வலையைப் பாருங்கள். இதை என்ன வார்த்தை சொல்லி பாராட்டுவது.

தலைகொதித்தே வெடித்தாலும்
விடுவதில்லை - உன்
தீயிதழால் நீவிரிக்கும்
முத்தவலை


வார்த்தைப் பிரயோகங்கள் புதியதாய், இனியதாய், ஈடில்லாததாய் செதுக்கலில் வழுக்கியபடி வந்து விழுகின்றன.

உயிரெடுத்து உயிருக்குள்
ஊட்டுகின்றாய்


அடுத்தும் ஒரு வலை. முழுக்க முழுக்க கணினியின் வருகைக்குப் பிறகான கவிதை மட்டுமே, காதல் மனம் மட்டுமே இப்படி பொழிய இயலும். மின் மடல்கள், வலைத்தளங்கள், கணிச்சாளரங்கள், இணையம் எல்லாமே எதைச் சொல்கின்றன பாருங்கள். நல்ல தவம் கவிஞர் புரிவது. ஜாக்கிரதையாய் இருங்கள் கவிஞரே!

சின்ன இதழ்களோ
மின் மடல்கள் - சுற்றும் இரு
வண்ண விழிகளோ
வலைத்தளங்கள்

பெண்ணே உன்
புன்னகை மென்கணிச்
சாளரங்கள் - கண்டதும்
உன் மன இணையமே
என் தவங்கள்


என்ன சொல்லி என்ன. மீட்சி இனியில்லை உங்களுக்கு கவிஞரே. வசமாக மாட்டிக் கொண்டாகி விட்டது. அதுவும் வலியச் சென்று விரும்பிச் சிக்கினால் மீட்பு சாத்தியப்படுமா?

தபால்காரன் தெய்வமாய் தெரிந்த காலம் இப்போது மாறிவிட்டதே. கணினி நினைத்த நேரத்தில், கொடுத்த நேரத்தில் மடல்களைக் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டே இருக்கிறதே.

மடல் எழுதும்போதும் படபடப்பு,

தடதடக்கும்
தட்டச்சுப் பலகை
அதன்.... தாளலயம்
வெல்லுமிந்த உலகை

படபடக்கும்
நெஞ்சங்கள் பேசும்
அந்தப்.... பரவசத்தில்
நரம்புகளும் கூசும்


பதில் மடல் வருவதற்குள் படும்பாடும் எழுத வார்த்தைகள் இல்லையே. அதைதான் கவிஞர் அற்புதமாய் பதிவு செய்கிறார் இக்கவிதையில். இதிலும் வலை வருகிறது. ஆக கவிஞர் எல்லா வலையிலும் சிக்கிக்கொண்டு நம்மையும் அவர் சொல்லும் வலைக் கவிதையில் சிக்க வைத்து விடுகிறார்.

அகங்கண்டு
இணைகின்ற உள்ளம்
அது.... அண்டவெளி
ஈர்ப்பினையும் வெல்லும்

நானிங்கே
உலகிலொரு முனையில்
அவள்.... நாணமுடன்
சிலிர்ப்பது மறு முனையில்

வானந்தான்
எல்லையிந்த உறவில்
அவள்.... வாசனையோ
இணையப் பெரு வெளியில்

கூடுவிட்டு
கூடுபாயும் வித்தை
அவள்.... கணினிக்குள்
விழுந்துவிட்ட தத்தை

தேடுபொருள்
கிடைப்பதில்லை வாழ்வில்
என்.... தேவதையைத்
தந்தவலை வாழ்க


காதல் என்றால் என்ன? காதல் குறித்து எத்தனை பேர் எழுதியிருப்பார்கள்? காதல் எத்தனை பேரால் வரையறை கொடுக்கப்பட்டிருக்கும்? மனமும் மனமும் இணைவதற்கு சாட்சியங்கள் தேவையா என்ன? சட்ட திட்டங்களால் காதலைக் கட்டி நிறுத்தி வைக்க இயலுமோ? அதுவும் ஒருதலைக் காதலாய் இல்லாமல், இருமனம் இணைந்த காதலானால் எப்படி இருக்கும்?

இதோ கவிஞர் கூறுகிறார் பாருங்கள் புது விளக்கம். இங்கும் ஒரு வலை வந்து சேர்கிறது. ஆமாம். காதலும் உயிரைப் பிணைக்கு உணர்வு வலைதானே!

நெகிழ்வான பொழுதுகளில்
இயல்பாகக் கழன்றுவிழும்
மிக மெல்லிய
உயிர் இழைகளால்
சாட்சியங்களோ
சட்டதிட்டங்களோ
இல்லாமல்
சுவாரசியமாய்ப்
பின்னப்படும்
ஓர் உறுதியான
உணர்வுவலை


காதல் கொள்வதும்கூட ஒரு நோய்தான். காதல் வசப்பட்டவரின் நோய்க்கான மருந்தோ காதலிப்பவரிடம் இருக்கிறது. ஆனால் அவர் அறிந்தாலல்லவோ மருந்தை அளிக்க இயலும். அறிந்துவிட்டாலோ மருந்தே நோய் தீர்த்து அமிர்தமாகிவிடுமல்லவா?

நோயெனில் நூதன நோயானேன்
நீள்விழிப் பூவே நீயறிவாய்


பெண்ணின் காதலாய் சில கவிதைகள். பெண் உருவாய் கூடுபாய்ந்து உருகி உருகி எழுதியுள்ளார்.

நாற்பது கவிதைகள் காவ்யா வெளியீடாய்.

தனது உரையாக எழுதுகிறார். இதயத்தின் அத்தனை வலிகளிலிருந்தும் அழுத்தும் பாரங்களிலிருந்தும் காதல் என்னும் புனிதமே விடுதலை தருகின்றது காதல் இல்லாவிட்டால், புல்லும் பூண்டும் கூட சுவாசிக்க முடியாது. உயிர்களைப் புதுப்பிக்க காதலேயன்றி வேறு நூதனமில்லை. உலகை இனிப்பாக்க காதலேயன்றி வேறு சாதனமில்லை போன்ற புகாரியின் வரிகள் காதல் உண்மையை பறைசாட்டுகின்றன.

காதலும், காதலில் சரணடைதலும் உயிர்க்கச்செய்பவை. உணர்ந்தவர்களாலேயே உணர முடியும். உணர்வதற்கும் ஒரு ரசனையுள்ள மனம் வேண்டும். அதை படைப்பில் கொடுக்கும் நுட்பம் தெரிய வேண்டும். அந்த நுட்பம் புகாரிக்கு கைவந்திருக்கிறது.

சரணமென்றேன் - காதலில் சரணடையும் கவிதைகள்.

அன்புடன்
மதுமிதா

ஜனவரி 2008

1 comment:

மதுமிதா said...

எழுதி அளித்த தேதியும் கொடுங்களேன் புகாரி
மறுபடி வாசிக்கையில் மகிழ்வாயிருக்கிறது

பிப்ரவரி மாதம் வருகையில் வலைப்பூவில் வலைக்கவிதையா
வாழ்த்துகள்