அன்புடன் இதயம் நூல் வெளியீடு - பிரகாஷ் விமரிசனம்
மாப்பிள்ளை இல்லாமலே பாகிஸ்தானில் கல்யாணம் ஒன்று நடந்தது என்று புகாரி ஒருமுறை சொன்னார். அதே போல, நூலாசிரியர் இல்லாமலேயே, புத்தக வெளியீடு ஒன்று நடந்து முடிந்தது, சென்னை மயிலாப்பூரில்.
ஆனாலும், கவிஞர் புகாரிக்கு எந்த ஒரு மனக்குறையும் ஏற்படா வண்ணம் விழா நேர்த்தியாகவே நடந்து முடிந்தது.
இதை ஒரு இலக்கியக்கூட்டம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. ஒரு சைபர் புத்தகக் கடைக்கு என்ன விதமாக விழா செய்தால் பேசப்படுமோ, அதை நேர்த்தியாக செய்து, இணையத்துக்கு வர்த்தகத்துக்கு மிக முக்கியமான eyeball pull லுக்கு வழி செய்த விதத்தில், நிகழ்ச்சி பொறுப்பாளர் பா.ராகவனின் சாதுரியம் தெரிகிறது,
வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களின் ப்ரொஃபைலும் அதை உறுதிப் படுத்துகின்றன.
விழா நடந்தது, வழக்கமாக சங்கீதக் கச்சேரிகள் நடக்கும் ராகசுதா அரங்கம்.
கடவுள் வாழ்த்து பாடியவர், கல்யாணி மேனன். அவரேதான், ராஜீவ் மேனனின் தாயார்.
குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கியவர், மானசரோவர் நிறுவனத்தின் தலைவர் திரு,சசிகுமார் நாயர் அவர்களின் துணைவியார்.
இது ஒரு இரட்டை விழா. மானசரோவர் இணையத்தளத்தை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றியவர், பத்திரிக்கையாளர் மதன். புத்தகங்களை வெளியிட்டு சிறப்புரை ஆற்றியவர் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குனர் , ஏ. நடராஜன். இந்த இரு விழாக்களுக்கும் தலைமை உரை ஆற்றியவர் மூத்த எழுத்தாளர் விக்கிரமன் அவர்கள்.
விக்கிரமன் வழக்கம் போல, சுத்தத் தமிழில் பேசி, கூட்டத்தினரை நெளியவைக்காமல் கலோக்கியலாக பேசி கைத்தட்டலை அள்ளினார். முடிக்குமுன்னரே சிலர் கைதட்டியதை அவர் கண்டு கொள்ளவில்லை. இருந்திருந்தால், சற்று விரைவாகவே பேச்சை முடித்திருப்பார்.
அடுத்து இணையத்தளத்தை துவக்கி வைத்து பேசிய மதன், இணையத்தில் , புத்தகங்கள் விற்கும் சாத்தியத்தை பற்றி பேசினார். அவரது வழக்கமான தனி முத்திரை இதிலும் இருந்தது.ஏற்கனவே இருக்கும் பல இணையத்தளங்களுக்கு மாற்றாக இது அமைந்தால், இது பலத்த வெற்றியை தரும் என்று சொன்னவர், ஒரு பத்திரிக்கையாளன் என்ற முறையிலேதான் அதற்கு ஏதாவது உதவி செய்ய முடியுமானால், செய்யத் தயார் என்று சொன்னது குறிப்பிடத்தக்கது. மேடையில் அமர்ந்திருந்த . பா. ராகவன் அதை உன்னிப்பாக கவனி த்துக்கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. யாருக்கு தெரியும் எந்த புற்றில் எந்த பாம்போ ? :-)
புத்தகங்களை பற்றி பேசியவர், விழாக்களுக்கு செல்வதில் கைதேர்ந்த ஏ. நடராஜன். சங்கீத விழாவானாலும் சரி, புத்தக வெளியீடானாலும் சரி, ஐந்து நிமிடப்பேச்சானாலும் சரி, ஐம்பது நிமிடப் பேச்சானாலும் சரி, அதற்கு ஏற்றார் போல, மிகவும் எளிமையாகவும் அதே சமயம் கருத்துக்களுடனும் பேச தன்னால், இயலும் என்று அவர் மீண்டும் ஒரு முறை நிரூபித்தார். குறிப்பாக, அவர் ஆறு புத்தகங்களை பற்றியும் சொன்ன ஒரிருவரி கமெண்ட்டுகள் அருமை.
நடராஜன் புத்தகங்களை வெளியிட, அதை பெற்றுக்கொண்டவர்கள், ஒளிப்பதிவாளர் கோபி நாத்,யுகபாரதி, ஆண்டாள் பிரிய தர்சினி, சின்னத்திரை இயக்குனர் விக்ரமாதியன், ரங்கராஜன் ( வண்ணராயர்),
எழுதிய எழுத்தாளர்களுக்கும் , சால்வை நினைவுப்பரிசு அளித்து கௌரவம் செய்தார்கள், பெற்று கொண்ட நாகூர் ரூமி, சொக்கன், வெங்கடேஷ் தவிர்த்து, இரா, முருகனுக்காக பரிசை ஏற்றவர் அவரது துணைவியார். சேவியரின் சார்பில், அவரது சகோதரர் மரியாதையை ஏற்றார்.
வாழ்த்துரை வழங்கியவர்கள், இயக்குனர் வசந்த், திருப்பூர் கிருஷ்ணன், அகிலன் கண்ணன் போன்றவர்கள்.வசந்த் ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாகவே, பேச்சை முடித்து விட்டு கிளம்பி விட்டார், எனக்கு தெரிந்து வசந்த் இப்போது ஏதும் படம் செய்து கொண்டிருப்பதாக தெரியவில்லை, சினிமாகாரவுக என்றா கொஞ்சமாவது பந்தா வேண்டாமா? :-) . அடுத்து பேசிய, அகிலன் கண்ணன், அனைத்து நூல்களின் ஆசிரியர்கள் பற்றியும் விரிவாக பேசினார். அவர் புகாரி மற்றும் சேவியரை பற்றி பேசும் போது, அவர்கள் நூலில் இருந்த கவிதையை மேற்கோள் காட்டி பேசும் போது, அவர்கள் அந்த புத்தகத்தை படித்திருந்தார்கள் என்று தெரியவந்தது.
வாழ்த்துரையில் இறுதியாக பேசிய திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் உரை, நிகழ்ச்சியின் ஹைலட்டாக அமைந்தது. தெள்ளத்தெளிவாகவும், தன் அனுபவச்சாறின் சில துளிகளை கலந்து, மிக யதார்த்தமாகவும், சற்றே நகைச்சுவை உணர்வுடனும் அமைந்த இவரது பேச்சு, இவர் ஒரு பத்திரிக்கையாளர், விமர்சகர் மட்டுமல்லர், ஒரு திறமையான பேச்சாளர் என்பதையும் காட்டியது.
என் சொக்கன், ஆர். வெங்கடேஷ், மற்றும் ரூமி, அவர்களின் ஏற்புரை நிகழ்ந்ததுக்கு பின்னால், மானசரொவரின் துணை ஆசிரியர் நாகராஜகுமாரின், நன்றியுரையுடன், விழா இனிதே நிறைவுற்றது.
இந்த விழாவினை தொகுத்து அளித்த பத்திரிக்கையாளர் சந்திரமவுலிக்கும் சால்வை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது.
கண்ணில் பட்ட, காதில் விழுந்த சில சுவாரசியங்கள்.
* விழாவுக்கு வந்திருந்த மற்ற சில பிரபலங்கள், மாலன், லேனா தமிழ்வாணன், பிரபஞ்சன், எஸ்.ஷங்கரநாராயணன், களந்தை பீர் முகம்மது, வானதி திருநாவுக்கரசு, அல்லையன் பதிப்பகத்தார், மவே சிவக்குமார், இன்னும் பல பிரபலங்கள்.
* எனக்கு முன் சீட்டில் அமர்ந்திருந்த பிரபஞ்சனின் எளிமையான பேச்சும், gestureஉம், சின்னப்பையன் போல இருந்து கொண்டு, மேடையில் காதல் பிசாசை பற்றி ரூமி சொன்ன போது, சற்றே கூச்சத்தில் நெளிந்த யுகபாரதியும். எதேச்சையாக மாட்டிய போனஸ்கள்.
* எழுத மட்டும் அல்ல, நன்றாக பேசவும் வரும் என்று நிரூபித்த நாகூர் ரூமி, சொக்கன், வெங்கடேஷ் அவர்களின் பேச்சுக்கள்.
* புத்தகம் வெளியாகும் போதே, மேடையில் வைத்து எழுத்தாளர்களுக்கு கொடுக்கப்பட்ட ராயல்டி செக், சபரி பப்ளிகேஷன் துவங்கி வைத்த ஒரு புதிய நடைமுறை
* தன் பேச்சுக்கிடையில் , திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள், ஏன் .என் சிவராமனைப் பற்றியும், அ.ச.ஞா பற்றியும் சொன்ன ஒரு தகவல்.
* திசைகளை இணையத்தில் படியுங்கள், என்று கூவி அழைக்கும் பிட்நோட்டீஸ்களை வினியோகம் செய்து கொண்டிருந்த ஒரு இளம் பெண்.
அன்பன்
ப்ரகாஷ்,சென்னை
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
விழா நிகழ்ச்சிகளின் தொகுப்பு அருமை.
Post a Comment