Nadodi Tamilan
குர்-ஆனுக்கு ஏன் ஹதீதை இணைவைக்கிறார்கள் சிலர்? - முடியாது. குரானுக்கு முரண்படும் ஹதீதுகள் நிராகரிக்கப்படவேண்டும் என்பது ஹதீத் கலையின் விதிகளுள் தலையானது.
அவ்வளவுதான் அடிப்படைக் கருத்து.
இதை ஒத்துக்கொள்ள விரும்பாத ஹதீதுப் பிரியர்களை ஏராளமாகக் காண்கிறேன்.
ஹதீதுகள் நிராகரிக்கப்படக் கூடாது. உண்மை. மாற்றுக் கருத்தே இல்லை.
ஆனால் ஹதீது என்பதற்காகவே முரணானவைகளும் மூட நம்பிக்கைகளும் நம்ப முடியாத கதைகளும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடாது.
குர்-ஆன் தான் ஆதாரம். வேறு எதுவும் ஆதாரமாக ஆகமுடியாது. குர்-ஆனுக்கு விளக்கமாகவே ஆக முடியும்.
ஆதெண்டிக் - ஆதாரப் பூர்வமான என்ற ஒரு சொல்லை ஹதீதுக்கு பயன்படுத்துவார்கள்.
என் கேள்வி:
ஆதாரப் பூர்வமான வசனம் என்று எதையாவது குர்-ஆனில் சொல்வீர்களா?
எல்லாமே ஆதாரப் பூர்வமானதானே?
ஹதீதில் ஆதரப் பூர்வமான என்ற சொல் பயன்படுத்தப் பட்டுவிட்டாலே ஐயம் என்ற ஒரு சொல் அடிக்கடி ஊடாடத்தானே செய்யும்.
இது ஏன் பலருக்கும் புரிவதில்லை.
*
சகோதரரே....,
பொதுவாக சிம்பிள் ஆக எழுதிவிட்டீர்கள். நீங்கள் சொன்ன விதத்தில் குர்ஆனுக்கு முரன்படும் போது மறுப்பதில் என்ன தவறு.? என்று சாதாரண அறிவு உள்ளவர்களும் ஏற்றுக் கொள்வார்கள். நாம் ஹதீஸ்களை அனுகும்போது நிதானம் மிகவும் அவசியம். ஹதீஸ்களை தொகுத்த இமாம்களும் , அவைகளை அக்கு வேறு ஆணி வேறாக ஆராய்ந்த மார்க்க அறிஞர்களும் சஹீஹான ஹதீஸ்களையும் , லயீஃபான ஹதீஸ்களையும் தரம் பிரித்து அடையாளம் காட்டியுள்ளார்கள். ஹதீஸ்களின் ஆராய்ச்சி என்பது சாதாரணமானதல்ல. மிகவும் ஆழமானது. இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் சஹீஹான ஹதீஸ்கள் எக்காலத்திலும் குர்ஆனுக்கு முரன்படாது என்பதுதான். அப்படி முரன்படுவது போல் தெரிந்தால் அது நாம் புரிந்து கொள்வதில் உள்ள தவறாகத்தான் இருக்கும். இதை சொன்னது யார் தெரியுமா.? இப்போது ஹதீஸ்களை மறுத்துக் கொண்டிருக்கும் PJ , 90களில் காதியானிகளுக்கு சவால் விட்டு பேசியது. ஆனால் அந்த காதியானிகளின் நிலைக்கே அவர் மாறியது எதிர்பாராதது. வர வர ஆளாளுக்கு இஷ்டத்திற்கு தனது அறிவுக்கு ஒத்து வரவில்லை என்று ஹதீஸ்களை மறுக்கும் அளவுக்கு நிலமை ஆகி விட்டது. இவர்கள் மறுத்த அனைத்து ஹதீஸ்களுக்கும் தெளிவான பதில்கள் கொடுக்கப்பட்டு விட்டன.
அவைகள் உங்களுக்கு இணையத்தில் கிடைக்கும்.
-இக்பால் ஹசன்
>>>ஹதீஸ்களின் ஆராய்ச்சி என்பது சாதாரணமானதல்ல. மிகவும் ஆழமானது. <<<
உண்மை. நான் அதை வாசித்திருக்கிறேன். கடுமையான சட்டங்களை உருவாக்கிக்கொண்டு அதிலெல்லாம் தேர்ந்து வருகின்ற ஹதீதுகளைத்தான் ஏற்றுக்கொண்டார்கள். மற்றவற்றை மறுதளித்தார்கள். சிறப்பான சேவை. பாராட்டுக்குரிய சேவை
அப்படி கடுமையாகத் தேர்வு செய்ததால் இமாம் புகாரியின் ஹதீதுகள் மட்டும் 99% நீக்கப்பட்டன.
நான்கு லட்சம் ஹதீதுகளைத் தொகுத்து உலகெங்கும் பரப்பிக்கொண்டிருந்தார் இமாம் புகாரி. அவை அனைத்துமே ஆதண்டிக் என்று அவர் உறுதியாகச் சொல்லிக்கொண்டிருந்தார்
ஆனால் கடுந்தேர்வில் தேறிவந்தவை நூற்றில் ஒன்றுதான்.
அந்த ஒன்றும் மீண்டும் மீண்டும் சில இடங்களில் வரும், அதன் தொடர்ச்சி மற்றும் சொன்னவர் பெயர் காரணமாக.
முன்பு 4 லட்சம் ஹதீதுகளை வைத்துக்கொண்டு குர்-ஆனுக்கு முரணான என்று சொன்னால் இப்படித்தான் சொன்னார்கள். சண்டைக்கு வந்தார்கள்.
பின் கடுமையான தேர்வுக்குப் பின் சுமார் வெறும் நான்காயிரத்தை மட்டும் கொடுத்தபோது அவர்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
இறைவன் ஒருவருக்கு மேல் ஒருவரை அறிவில் உயர்வானவர்களாகவே படைக்கிறான் என்று குர்-ஆன் சொல்கிறது.
மனிதர்களால் தேர்வு செய்யப்பட்டவை எல்லாம் இந்த அறிவுத் தேர்வுக்கு ஆளாகக் கூடியவையே.
இறைவனால் அருளப்பட்ட குர்-ஆன் வரிகளைத் தவிர மற்ற எல்லாமும் எல்லாக்காலமும் ஆய்வுக்கு உள்ளாக்கப்படக் கூடியவையே
இதில் மிக முக்கியமாக இன்னொரு விடயமும் இருக்கிறது.
அன்றைய கடுந் தேர்வுக் குழுவில் இருந்த எல்லோருமே எல்லா ஹதீதையுமே முழுதாக ஏற்றுக்கொள்ளவில்லை.
ஓட்டெடுப்பு நடத்தி 50+% வாக்குகள் வாங்கிய ஹதீதுகளே ஏற்புடையன என்று ஏற்றுக்கொள்ளப்பட்டன என்று வரலாறு சொல்கிறது.
அன்றே தேர்வு அறிஞர்களால் ஐயம் கொண்ட ஹதீதுகள் உண்டு என்பதையும் நீங்கள் ஏற்க வேண்டும்.
இப்படி நான் எழுதுவதால் நான் ஹதீதுகளை மறுப்பதாக நீங்கள் எண்ண வேண்டாம்.
அன்புடன் புகாரி
புகாரி இமாம் மட்டுமல்ல. மற்ற இமாம்களும் லட்சக்கணக்கான ஹதீஸ்களை திரட்டி அவைகளை அவர்களே தரம் பிரித்து சில ஆயிரங்களையே நமக்குத் தந்தார்கள். அவர்களும் மனிதர்கள்தான். தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. தற்காலத்தில் வாழ்ந்து மறைந்த ஹதீஸ் கலை வல்லுனராகிய நாசிருத்தீன் அல்பானி அவர்களும் மிகவும் ஆராய்ந்து சில ஹதீஸ்களை லயீப் என்று அடையாளம் காட்டியுள்ளார்கள். ஆனால் அவர்கள் சுட்டிக் காட்டிய முறையில் கண்ணியம் இருந்தது. அவர்களது சமகாலத்தில் வாழ்ந்த மற்றொரு அறிஞரான ஷேக் பின் பாஸ் அவர்களுடன் சில விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்தாலும் கண்ணியத்துடன் கூடிய நட்புடன்தான் அவர்கள் பழகினார்கள். ஆனால் இப்போது இவர்கள் மறுக்கின்ற ஹதீஸ்கள் வேறுவிதமானவை. தங்கள் வார்த்தைகள் நிலைக்க வேண்டுமே என்பதற்காக மிகவும் ஆபாசமான முறையில் சித்தரிக்கின்றனர். அதை டி.வி.யில் ஒளிபரப்பி அனைவரும் பார்க்கும் வகையில் செய்தது மிகவும் வேதனையானது.
அரைகுறை அறிவுள்ள இளைஞர்கள் சஹாபாக்களையும் இமாம்களையும் எடுத்தெரிந்து பேசுகின்ற நிலமை ஆரோக்கியமானதல்ல.
அல்லாஹ் அனைவர்களையும் நேர்வழியில் செலுத்துவானாக.
-இக்பால் ஹசன்
>>>புகாரி இமாம் மட்டுமல்ல. மற்ற இமாம்களும் லட்சக்கணக்கான ஹதீஸ்களை திரட்டி அவைகளை அவர்களே தரம் பிரித்து சில ஆயிரங்களையே நமக்குத் தந்தார்கள்.<<<
இல்லை சகோ. லட்சங்களைச் சில ஆயிரங்களாய் மாற்றியவர்கள் பிறகு வந்தவர்கள். அவரின் மாணவர்கள். தேர்வுக் குழுவினர்.
இமாம் புகாரி தன் தொகுப்புகளை உலகெங்கும் எடுத்து அனைத்து மேடைகளிலும் உரையாற்றினார் என்ற குறிப்பைத்தான் நான் வாசித்தேன்.
மாற்றமான தகவல் இருந்தால் எனக்கு அதைத் தாருங்கள்.
>>>அவர்களும் மனிதர்கள்தான். தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல.<<<
இதையேதான் நானும் சொல்கிறேன் சகோ
ஹதீதுகளைத் தொகுத்தவர்களும் மனிதர்கள்தாம். தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்
ஹதீதுகளை ஆய்ந்து சீர்தூக்கிப் பார்த்து தேர்வு செய்து லட்சங்களை சில ஆயிரங்களாய் மாற்றியவர்களும் மனிதர்கள்தாம். தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்.
இது ஆதண்டிக் இது ஆதண்டிக் இல்லை என்று சொன்னவர்களும் மனிதர்கள்தாம். தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்.
குர்-ஆன் மட்டுமே இறைவாக்கு. அது ஒன்றே ஆதண்டிக். அது ஒன்றே யாரும் ஆதண்டிக் என்று குழு அமைத்துத் தீர்மானம் நிறைவேற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லாதது.
குர்-ஆன் சொல்வதுபோல ஒருவரைவிட அறிவில் சிறந்த இன்னொருவர் பிறந்துகொண்டேதான் இருப்பார்கள். அவர்களின் அலசல் மேலும் தரமானதாக இருக்கும் என்பது தெளிவு.
நான் ஹதீதுகளை வேண்டாம் என்று சொல்பவனல்ல. ஹதீது என்றால் என்ன என்று தெளிவாகத் தெரிந்துகொண்டு அதன் வழி செல்லவேண்டும் என்று சொல்பவன்.
*
>>>தற்காலத்தில் வாழ்ந்து மறைந்த ஹதீஸ் கலை வல்லுனராகிய நாசிருத்தீன் அல்பானி அவர்களும் மிகவும் ஆராய்ந்து சில ஹதீஸ்களை லயீப் என்று அடையாளம் காட்டியுள்ளார்கள். ஆனால் அவர்கள் சுட்டிக் காட்டிய முறையில் கண்ணியம் இருந்தது. அவர்களது சமகாலத்தில் வாழ்ந்த மற்றொரு அறிஞரான ஷேக் பின் பாஸ் அவர்களுடன் சில விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்தாலும் கண்ணியத்துடன் கூடிய நட்புடன்தான் அவர்கள் பழகினார்கள். <<<<
பாராட்டுக்குரியவர்கள்
*
பாராட்டுக்குரியவர்கள்
*
>>>ஆனால் இப்போது இவர்கள் மறுக்கின்ற ஹதீஸ்கள் வேறுவிதமானவை. தங்கள் வார்த்தைகள் நிலைக்க வேண்டுமே என்பதற்காக மிகவும் ஆபாசமான முறையில் சித்தரிக்கின்றனர். <<<
நான் அவர்களின் ஆதரவாளன் அல்லன். என் நிலைப்பாடுகள் என் சொந்த அலசல் ஆய்வு காரணமானது. அனுபவம் சார்ந்தது. நான் எந்த இறுதி முடிவையும் எவருக்கும் வலியுறுத்துவதும் இல்லை. என் கருத்தைச் சொல்லிப் போவேன் அவ்வளவுதான்
*
சகோதரரே..,
நீங்கள் ஹதீஸ் மறுப்பாளர்களின் ஆதரவாளர் இல்லை என்று சொன்னது குறித்து மகிழ்ச்சி. ஒரு ஹதீஸ் குர்ஆனுக்கு முரனாக இருந்தால் அதைப் பின்பற்ற வேண்டும் என்று எந்த அறிஞரும் சொன்னது இல்லை. அப்படியிருந்தால் அது லயீஃபான ஹதீஸாகத்தான் இருக்கும். சஹீஹான ஹதீஸ் குர்ஆனுக்கு முரன்படாது. ஹதீஸ்கள் விஷயத்தில் நாம் மேலும் நமதறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். மார்க்கத்திற்காக தங்களை அர்ப்பணித்த மறைந்த அறிஞர்களின் கூற்றுக்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
-இக்பால் ஹசன்
>>>ஒரு ஹதீஸ் குர்ஆனுக்கு முரனாக இருந்தால் அதைப் பின்பற்ற வேண்டும் என்று எந்த அறிஞரும் சொன்னது இல்லை<<<
அதைத்தான் நானும் சொல்கிறேன். அன்று தொகுத்தார்கள் என்பதற்காக ஏற்காமல் முரணாக இல்லை என்பதற்காக ஏற்போம்.
குர்-ஆனுக்கு முரண் என்பதை பல வழிகளில் உணரலாம்.
- அறம் சாராதது
- நம்ப முடியாத கதை
- மூட நம்பிக்கைக்கு வித்திடும் கருத்து
- அயலானை நேசிக்காதவை
இப்படியே அடுக்கிக்கொண்டு செல்லலாம்
>>>ஹதீஸ்கள் விஷயத்தில் நாம் மேலும் நமதறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். மார்க்கத்திற்காக தங்களை அர்ப்பணித்த மறைந்த அறிஞர்களின் கூற்றுக்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். <<<
மிகவும் சரி. நாம் நமதறிவை மேலும் வளர்த்துக்கொண்டு அதற்கேற்ப ஹதீதுகளை அனுகவேண்டும்.
நிச்சயமாக தங்கள் நேரங்களை அற்பணித்த மார்க்க அறிஞர்களை நாம் மதித்தல் வேண்டும்.
அனைத்துக்கும் மேலாக, இஸ்லாம் மூட நம்பிக்கைகள் அற்ற மார்க்கம் என்பதில் களங்கம் வரக்கூடாது
குர்-ஆன் கூறும் அறம் அப்பழுக்கற்றது என்பதில் ஐயம் வரக் கூடாது
*
அன்பினிய இக்பால் ஹசன், உங்களின் அக்கறையான அறிவுப் பூர்வமான பதில்கள் இதை ஒரு நல்ல கருத்தாடலாகக் கொண்டு செல்வதில் நான் மகிழ்வடைகிறேன்.
ஹதீதுகள் ஏன் குர்-ஆனைவிட அதிகம் பேசப்படுகினறன என்று என்றாவது சிந்தித்தீர்களா?
இஸ்லாம் பற்றிய உரைகள் நிகழ்த்தவரும் மார்க்க அறிஞர்களுள் பலர்.... ஏன் மேடைகளில் ஹதீதுகளைப் பற்றியே பேசுகிறார்கள். ஏன் குர்-ஆன் வரிகளை அத்தி பூத்தாற்போல் பேசுகிறார்கள் என்று சிந்தித்தீர்களா?
சியா சுன்னா பிளவுதான் அதற்கான காரணம்.
அவர்களுக்கும் இவர்களுக்கும் குர்-ஆன் தான் ஒரே நூல். அதை இருவரும் மறுப்பதே இல்லை. மறுக்கவும் முடியாது.
பிறகு எப்படித்தான் வேறுபாட்டைக் கொண்டுவருவது என்று மண்டையைப் பிய்த்துக்கொண்டு, உனக்கொரு ஹதீதுத் தொகுப்பு எனக்கொரு ஹதீது தொகுப்பு. நாம் வேறுபட்டவர்கள். நம் மத நம்பிக்கையே வேறு என்று ஓர் அரசியல் பிரிவுக்கு மதச் சாயம் பூசினார்கள்.
அவ்வளவுதான்!